சித்தன்னவாசல் – ஓவியக்கலையின் சிகரம்

சித்தன்னவாசல் என்றதுமே பலருக்கு பலவிதமான சிந்தனைகள் தோன்றும். நமது திரைப்பட கவிஞர்கள் தங்கள் கதாநாயகிகளை வர்ணிக்க பொதுவாக சித்தன்னவாசல் ஓவியம் என்று எழுதுவார்கள். அதில் எத்தனை பேர் அங்கே சென்று அந்த ஓவியங்களை பார்த்துவிட்டு ஏற்பட்ட தாக்கத்தினால் அப்படி எழு்தினார்களா என்று தெரியவில்லை. ஏனெனில் அப்படி அவர்கள் அங்கு சென்று இருந்தால் , இன்றைக்கு அந்த அற்புத ஓவியங்கள் படும் பாட்டை பாட்டாக பாடி இருப்பார்கள். பாவம் அவை, தெரியாமல் நம் நாட்டில் உள்ளன. அங்கே இருப்பதில் நூற்றுக்கு ஒரு சதவிதம் வேறு ஒரு நாட்டில் இருந்தாலும் அவை அந்த நாட்டின் தலை சிறந்த கலை பொக்கிஷம் என கொண்டாடப்படும்.

நாம் முன்னரே இரு பதிவுகளில் அங்கு இருக்கும் அற்புத நடன மாந்தர்களை பார்த்துவிட்டோம். அவை இருக்கும் இன்றைய அவல நிலையை கண்டு நம் மனம் கதறுகிறது. இன்றைக்கு, நண்பர் அசோக் கிருஷ்ணசுவாமி அவர்களின் உதவியுடன் நாம் முக்கியமான ஓவியங்களை பார்க்கப் போகிறோம் (அவர் இந்த அற்புதங்களை சரியான விதத்தில் வெளிக் கொணரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் ) இந்தப் பதிவில் இருக்கும் படங்கள் அனைத்தும் அவரது கைவண்ணம் இல்லை கேமராவண்ணம். கேட்டவுடன் பெருந்தன்மையுடன் நமக்காக பகிர்ந்துக்கொண்டார். அவருக்கு அனைவரின் சார்பாக ஒரு பெரிய நன்றி. மின்னாக்கம் என்பது இவற்றை பாதுகாக்கவும், தற்போதைய நிலையை எடுத்துரைக்கவும், மேலும் சிதைவில் இருந்து இவற்றை காக்கவும் உதவும் என்பதே இந்தப் பதிவின் நோக்கம். ( இந்த சமண குடைவரையும் அதில் உள்ள ஓவியங்களையும் திரு S. ராதாகிருஷ்ண ஐயர் அவர்கள் 1916
கண்டுபிடித்தார் )

முதன் முதலில் முனைவர் திரு சுவாமிநாதன் அவர்கள் தான் சித்தன்னவாசல் ஓவியங்களை எனக்கு அறிமுகம் செய்தார். ஒரு மணிநேரம் பிரமித்து அவரது உரையை உள்வாங்கினோம். அதை இன்னும் படங்களுடன் மெருகு சேர்த்து ஒரு பெரிய பதிவை இடவேண்டும் என்று பல நாள் ஆசை. நண்பர் அர்விந்த் அவர்களுடன் சென்ற டிசம்பர் மாதம் இந்தியா வந்தபோது படம் எடுக்க முயற்சி செய்தோம். முடியவில்லை. எனினும் அதற்கேற்ற காலத்தை அதுவே நிர்ணயம் செய்தது போல – படம் பிடிப்பதில் கைதேர்ந்த வல்லுநர் திரு அசோக் அவர்களது படங்களுடன் தான் பதிவு அமைய வேண்டும் என்று காத்து இருந்தது போல.

சித்தன்னவாசல் நோக்கி – வெறும் பாறை இல்லை. அதற்கு மேலும் கீழும் சரித்திரம் உள்ளது. மேலே என்ன வென்று பிறகு பார்ப்போம்.

குடைவரை அடைந்தவுடன் எதிரில் தோன்றிய தூண்கள் சற்று நெருடலாக இருந்தன. இவை மிகவும் சமீபத்தில் கட்டியவை.

குடைவரையின் காலம் ஏழாம் நூற்றாண்டு என்று அங்கே இருக்கும் தடிமன் பெருமான் தூண்கள் ( மகேந்திரர் காலத்து தூண்கள் போல ) இருப்பதால் நாம் கருதலாம் , பின்னர் ஒன்பதாம் நூற்றாண்டில் செப்பனிடப் பட்டது. இதனை குடைவரை தூணில் இருக்கும் ஒன்பதாம் நூற்றாண்டு கல்வெட்டு சொல்கிறது. சிறிமாறன் ஸ்ரீவல்லபன் ( பாண்டிய அரசன் (815 – 862 AD) காலத்தில், இலன் கௌதமன் என்னும் சமணனால் அர்த்த மண்டபம் செப்பனிடப்பட்டது

நாம் முன்பு பார்த்த பதிவில் வெளிக் குடைவரை தூண்களில் உள்ள நடன மாதர் ஓவியங்களை பார்த்தோம். இப்போது உள்ளே செல்கிறோம் – மண்டபத்தின் மேலே பார்த்துக்கொண்டே..

ஆம்! மேல் சுவரில் தான் உள்ளது அந்த தாமரை பூத்த தடாகம்.

முதலில் சுவரில் பூச்சு அடித்து அது காய்ந்த பின்னர் ஓவியத்தை வரையும் முறை இங்கு காணப்படுகிறது. இதனை ஃபிரெஸ்கோ செக்கோ என்பார்கள்.

http://en.wikipedia.org/wiki/Fresco-secco

யோசிக்கும் போதே , தலை சுற்றுகிறது. இப்படி சாரம் கட்டி, மல்லாக்க பார்க்க படுத்துக்கொண்டு, எப்படித்தான் ஓவியக் கலவை , தூரிகையை கொண்டு கையாண்டார்களோ.

சரி, இன்னமும் உங்கள் பொறுமையை சோதிக்க மாட்டேன். இதோ ஓவியம்.

அப்படி என்ன இந்த ஓவியத்தில் என்று கேட்கிறீர்களா. பொறுமை, இந்த ஓவியப் பயணத்தை படங்களுடனே தொடருவோம். நீங்கள் கவனிக்க வேண்டிய பகுதிகள். ஆமாம்
ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஒளிந்துக் கொண்டிருக்கிறது இந்த ஓவியத்தின் பெருமிதம்.

இப்படி போட்டுக் காட்டினால் எளிதாக உள்ளதா?. தாமரை பூத்துக் குலுங்கும் தடாகத்தில் மீன்கள் பல துள்ளி விளையாடுகின்றன .

மீன்களை சிரிக்கும் வண்ணம் வரைந்தானோ ஓவியன்.இன்னும் பல தடாகத்தில் ஒளிந்துக்கொண்டு இருக்கின்றன. நன்றாக தேடிப் பாருங்கள்.

இது ஒரு பெரிய தடாகம். மீன்கள் மட்டும் அல்ல – உள்ளே ஒரு காட்டெருமை குடும்பம், ஒரு எருமை மாடு, ஏன் ஒரு யானை குடும்பம் , எட்டு நாரை பறவைகள் உள்ளன, என்றால் நம்புவீர்களா ?


உண்மை தான். முதலில் கஜங்கள். உற்று பாருங்கள். அதில் ஒன்று தனது துதிக்கையை கொண்டு ஒரு தாமரை மலர்க் கொத்தை சுற்றி இழுப்பதும், அதன் அடியில் ஒரு குட்டி யானை ( சற்று கடினம் தான் – என்ன செய்வது ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன )

இப்போது மாடுகள். காட்டெருமை நம்மை வெறுப்புடன் திரும்பிப் பார்ப்பது தெரிகிறதா. அதன் பின் அதன் துணை போல

மாடுகளின் கொம்புகளில் உள்ள வித்தியாசத்தை காட்டும் ஓவியனின் கலை அபாரம்.


இன்னொரு விதமான எருமை. இது நம்ப ஊரு எருமை போல உள்ளது. ( என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பெயர் எருமை – என் பெயரை விட அவர் என்னை கூப்பிட உபயோகித்த பெயர் அதுதான் )


இங்கே மிகவும் சிதைந்த நிலையில் ஒரு பிராணி உள்ளது. குதிரையாக இருக்கலாம்.

இவை அனைத்துக்கும் நடுவில் கூட்டம் கூட்டமாக நாரைகள். எதையோ கண்டு மிரண்டு பறக்க இருக்கின்றன.

கண்களில் ஒரு மிரட்சி தெரிகிறதா ?


அவை மிரள காரணம் என்ன. ஓவியத்தை மீண்டும் பாருங்கள். அவை எதை பார்த்து மிரளுகின்றன.

அடியில் இருக்கும் நாரைகளை தவிர ( அவை அருகில் இருக்கும் யானையை கண்டு மிரளுகின்றன ) மற்ற பறவைகள் அனைத்தும் பார்ப்பது…..

ஆம், குளத்தின் நடுவில் இரு மனிதர்கள் தண்ணீரில் இடுப்பு வரை இறங்கி பூக்களை பறிக்கிறார்கள். இது சாமவ சரண என்னும் சமண சடங்கில் வரும் காட்சி.


சற்று மாநிறமாக இருப்பவர், எட்டி ஒரு தாமரையை பறிக்க தண்டை பிடித்து இழுக்கிறார். மற்றொரு கையில் ஒரு பின்னிய கூடையில் பிரித்த மலர்கள். ஓவியன் அவர் இழுப்பிற்கு வளையும் வண்ணம் தண்டை வரைந்துள்ளான் பாருங்கள்.

அவருக்கு பின்னால் இன்னும் ஒரு இளம் துறவி. இவர் சற்று நல்ல சிகப்பு நிறம் போல. முகத்தில் என்ன ஒரு தேஜஸ். அந்த கையில் தான் என்ன ஒரு நளினம், தன நண்பனுக்கு அடுத்த பூவை சுட்டிக்காட்டும் பாவம் அருமை.

அவருக்கு பின்னல் இருக்கும் பூ தண்டுகளை கவனமாக பாருங்கள். நடுவில் இருப்பது அல்லி , இருபுறமும் தாமரை. அல்லித் தண்டு வழவழ வென இருக்கும், தாமரை சற்று சொர சொரவென இருக்கும்.(அல்லித் தண்டு காலெடுத்து அடிமேல் அடிவைத்து என்று கவியரசர் எழுதினாரே..)

என்னமாய் நுண்ணி்ய அளவில் ஒரு தடாகத்தை கூர்ந்து கவனித்து நமக்கென வரைந்துள்ளான் அந்த அற்புத ஓவியன். இவனல்லவா உலகிலேயே மிகச் சிறந்த ஓவியன்.. இன்னும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தடாகத்தில் உள்ள மலர்கள் மொட்டில் இருந்து முழுவதுமாக மலரும் வரை எத்தனை விதமாக மலருமோ , அவ்வளவும் உள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன்னரே திரு சிவராமமூர்த்தி அவர்கள் எடுத்த பிரதி உதவுகிறது.

இருங்கள், இதுவரை பாதி தடாகம் தான் முடிந்தது. அடுத்த பக்கம் இதன் மறுபாதியைக் காண்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *