ஸ்ரீதேவிக்கும் பூதேவிக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது ?

பரிட்சைகளில் சில கேள்விகள் பார்ப்பதற்கு கடினமாக இருக்கும், ஆனால் விடை தெரிந்த பின்னர், அட இவ்வளவுதானா என்று தோன்றும். அது போலத்தான் நான் இன்று விடை தேடும் கேள்வியின் பதில். இரு தேவியருடன் இருக்கும் நமது மூர்த்திகளில் எப்படி வித்தியாசம் காண்பது? உதாரணத்திற்கு ஸ்ரீதேவிக்கும் பூதேவிக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது ? எதற்காக தெரியவேண்டும் என்று சிலர் கேட்கலாம் – இருவரை வேண்டினால் கிடைக்கும் பலன்கள் வெவ்வேறாயிற்றே !

அதேபோல பூமியில் புதையுண்டு கிடைக்கும் மூர்த்தி சிலைகள் தனியாக கிடைக்கின்றன. அப்போது இந்த கேள்வியின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. அதன் விடை மிகவும் எளியது. சிற்ப சாஸ்திர முறைப்படி ஸ்ரீதேவி மார்க்கச்சை அணிந்தும் பூதேவி அணியாமலும் வடிக்கப்பட வேண்டும்.

சோதித்துப் பார்ப்போமா ? மலையடிப்பட்டி ஒளிபாதி விஷ்ணு க்ரிஹம் குடவரைக்கோயிலில் உள்ள இந்த பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சிற்பத்தை பார்ப்போம்.

அருகில் சென்று இரு தேவியரின் உடை அலங்காரத்தை பார்ப்போம்.

இருவருக்கும் உள்ள வேற்றுமை தெரிகிறதா ? இந்த மார்க்கச்சை குச்சபந்தம் என்று அழைக்கப்படுகிறது.

அதே போல லண்டன் அருங்காட்சியகத்தில் இருக்கும் 10 ஆம் நூற்றாண்டு செப்புத் திருமேனிகளை பாருங்கள்.

பெருமாள் திருமேனி பற்றியும் அதன் வளர்ச்சி இதை விட காலத்தால் பிந்தைய சில வடிவங்களை கொண்டு விரைவில் படிப்போம். தற்போது தேவியரை மட்டும் பார்ப்போம்.

ஸ்ரீதேவியின் அருகில் சென்று பார்ப்போம்.

கச்சை / குச்சபந்தம் தெளிவாக தெரிகிறது.

அடுத்து பூதேவி. மார்க்கச்சை இல்லை.

இங்கு லண்டன் அருகாட்சியகக் குறிப்பில் உள்ள ஒரு சிறு தவறை சுட்டிக்காட்ட வேண்டும் . பெயர் குறிப்பில் பூதேவி என்று சொல்லிவிட்டு ” இங்கு அவர்கள் மார்க்கச்சை / குச்சபந்தம் அணிந்துள்ளார் ” என்று தவறாக குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த செப்புச் சிலையில் மட்டும் அல்ல சிற்ப சாஸ்திர முறைப்படி அவர் அணிவதில்லை.

இதை தக்க முறையில் லண்டன் அருங்காட்சியக அதிகாரிகளின் பார்வைக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *