தமிழகத்தை விட்டு இன்று கர்நாடகம் செல்கிறோம். அங்கே ஹோய்சாளர் அவர்களின் உன்னத கலைப் படைப்பு – ஹலெபேடு ஹோய்சாலேஸ்வரர் ஆலயத்தில் காதணி அல்லது குண்டலங்களை பற்றி ஒரு சிறு பதிவு. முதலில் இருபுறமும் கம்பீர வாயிற்காப்போர்களைக் கொண்ட மகேசனை தரிசிப்போம்.
பல்லவ குடைவரைகளில் உருள்தடி பிடித்த உருவங்கள் முதல் சோழர் காலத்து பிரம்மாண்ட உருவங்களைப் பார்த்த நமக்கு ஹோய்சாளர் வாயிற்காப்போர்கள் வேறு தினுசாக தெரிகிறார்கள். அங்கே நல்ல வருமானம் கிடைத்ததோ என்னமோ – உடை, அலங்காரம் என்று பவனி வருகிறார்கள் இருவரும்.
நாம் முன்னர் பார்த்த போலவே இங்கு வாயிற்காப்போனும் இரு காதுகளிலும் வெவ்வேறு காதணி அணிந்துள்ளான்.
இடது காதில் மிக அற்புதமாக வடிக்கப்பட்டுள்ள மகர குண்டலம். முன்னர் திரு உமாபதி ஆச்சார்யா அவர்கள் நமக்கு மகரம் என்ற உன்னத படைப்பை விளக்கினார்..
ஆனால் இன்று நாம் காண இருப்பது வலது காதில் உள்ள அணி. திரு கோபிநாத் ராவ் அவர்களின் ”Elements of Hindu Iconography” என்ற நூலில் குண்டலங்களில் ஐந்து வகை என்றும், அவை பத்ர குண்டலம் (பனை ஓலை சுருட்டி இருப்பது போல – பின்னலில் அதே பாணியில் தங்கத் தகடில் வார்த்து அணிந்தார்கள்), நகர குண்டலம் (மகர குண்டலம் தான்), சங்கபத்ர குண்டலம் (சங்கை பக்கவாட்டில் வெட்டியவாறு), ரத்ன குண்டலம் மற்றும் சர்ப்ப குண்டலம் என்று விவரிக்கிறார்.
இதில் கடைசியாக வரும் வகை, பொதுவாக காதில் ஒரு நல்ல பாம்பு படம் எடுப்பது போல இருக்கும். இதோ பேலூர் கோயிலில் உள்ள கருடனின் காதுகளில் பாருங்கள். .
ஆனால், ஹலெபேடு வாயிற்காவலனின் காதில் இருப்பதோ பல தலை நாகம்
என்ன அருமையான வேலைப்பாடு, நம்மை பார்த்து அந்த நாகம் சிரிப்பது போல இருக்கிறது.
வேலைப்பாட்டை பற்றி சொல்லும் பொது, அந்த தலையில் உள்ள மண்டை ஓடுகளை பற்றி சொல்ல வேண்டும்.
அபாரமான வேலை, இந்த சிறிய இடத்தில, உள்பக்கம் உள்ள கல்லையும் குடைந்து உள்ள நுணுக்கம் அபாரம்.