“கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு” , “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” இவை அனைத்தும் பள்ளியில் படித்தவுடனே மறந்துவிடவேண்டும் போல உள்ளது இன்றைய தமிழ் நாட்டில் வழக்கு. இதை முழுவதுமாக சென்ற இரண்டு மாத சம்பவங்கள் உறுதி படுத்தின.
லண்டன் செல்ல தற்செயலாக ஒரு வாய்ப்பு கிடைத்தது. உடனே அங்கே உள்ள புகழ் பெற்ற அருங்காட்சியகங்களில் உள்ள செப்புத் திருமேனிகளை தரிசிக்க ஆவல் கொண்டு ஒரு தினத்தை ஒதுக்கினேன். இதுவரை அவற்றை பற்றி படித்த கொஞ்ச நஞ்சத்தில் தெரிந்தது – சிறிய அளவாக இருந்தால் அவை காலத்தால் முற்பட்டு இருக்கும் – மதிப்பு டாலரில் மட்டும் அல்ல, அவை அதனுள் அடக்கும் விஷயங்களும் தான்.
சட்டென கண்ணில் பட்டது ஒரு விஷ்ணு சிலை – காலம் 9 C CE. கொள்ளை அழகு, சிலை மட்டும் அல்ல, அதனை அவர்கள் காட்சிக்கு வைத்திருந்த பாணியும் அருமை – ’மதிப்பதற்கு முடியாத’ அளவில் பெருமைமிக்க பொக்கிஷத்தை அதற்கே உரிய மரியாதையுடன் வைத்திருக்கிறார்கள்.
அருமையான சிற்பம், வலது மார்பில் ஸ்ரீவத்சம், யக்நோபவீதம் என்று பல அம்சங்கள் இதன் காலம் கடை பல்லவ அல்லது ஆரம்ப சோழர் காலமாக இருக்கலாம் என்று கருத உதவுகின்றன. ஆரம்ப சோழர் காலம் ஏன், என்ற கேள்விக்கு சுலபமாக பதில் கூறலாம். சிற்பத்தின் சிறிய அளவு, பிரயோக சக்கரம். கடை பல்லவர் காலம் ஏன் என்பதற்கு கொஞ்சம் ஆராய வேண்டும்.
அதை பற்றி மேலும் படிக்க திரு ஸ்ரீனிவாசன் அவர்களின் 1963 ஆம் ஆண்டு நூல் Bronzes of South India – P.R. Srinivasan, உதவி செய்தது. தென் இந்திய செப்புத் திருமேனிகளில் மிகவும் தொன்மையானவை பல்லவ விஷ்ணு திருமேனிகளே – மாயவரம் அருகே பெருந்தோட்டம் என்ற ஊரில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்கள்.
இதுவே அந்த திருமேனி காலம் – 8th C CE முற்பகுதி
அடுத்து 8th C CE பிற்பகுதி.
இவை இரண்டும் மிகவும் முக்கியமான பொக்கிஷங்கள். இவற்றை விவரிக்க ஐந்து பக்கங்களை திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் எடுத்துகொள்வதை கொண்டே இவற்றின் அருமையை நாம் அறியலாம். தற்போதைய இடம் தஞ்சை கலைக் கூடம் என்ற குறிப்பை கண்டதும் ஒரு சிறு குழப்பம். அங்கே இப்படி ஒரு பொக்கிஷம் இருக்கும் குறிப்பே இல்லையே. நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தேன். கணினியில் படங்களை அலசினேன். எங்கும் வரலாற்று சிறப்பு மிக்க இந்தத் திருமேனிகளை காணவில்லை. நண்பர் சதீஷ் அவர்களது படங்களை பார்க்கும்போது – விடியற்காலை மணி சுமார் நாலு இருக்கும், ஆஹா, அதோ அதோ …
ஆமாம், பெயர் பலகை கூட இல்லாத அலமாரியில், பத்தோடு பதினொன்றாய் ஒரு ஓரத்தில் கிடக்கின்றன இவை.
நிஜமாகவே இவை தான் அந்த விலை மதிக்க முடியாத திருமேனிகள் என்ற ஐயம் எழ மீண்டும் ஒரு முறை நண்பர்களிடம் உதவி நாடினேன். சதீஷ் மீண்டும் ஒரு முறை இதற்காகவே தஞ்சை சென்று படங்களை பிடித்தார். ஆனால் நிலைமை மாறவில்லை – மேலும் மோசமாக – அலமாரியில் உடைந்த பிளாஸ்டிக் பொருள் இறைந்து கிடக்க காண்கிறோம். ஆனால் சந்தேகமே இல்லை – இவை தான் தென்னாட்டில் மிகவும் தொன்மையான செப்புத் திருமேனிகள்.
இவற்றின் மதிப்பு அறிந்துமா இப்படி வைத்துள்ளனர்? திரு ஸ்ரீனிவாசன் அவர்களின் நூல் சென்னை அருங்காட்சியகத்தில் இன்றும் விலைக்கு விற்கப்படும் நூல். அந்த நூலின்படி முதல் இந்து சிற்பங்கள் இவை இரண்டும் தான். தஞ்சையில் அதிகாரிகளை தெரிந்த யாராவது இந்த நிலைமையை மாற்றி இவற்றுக்கு உரிய மரியாதை மதிப்புடன் ஒரு தனி காட்சிப் பெட்டி அமைத்துத் தர வேண்டுகிறேன்.
சரி, இந்த சிலைகளை மேலும் நாம் ஆராயும் முன்னர், நமக்கு தெரிந்த பல்லவ கால சிலைகளை உங்களுக்கு முதலில் காட்டுகிறேன். மல்லைத் தவக் காட்சியில் வரும் விஷ்ணு, ஆதி வராஹா மண்டபத்தில் உள்ள விஷ்ணு, தர்மராஜா ரதத்தில் இருக்கும் ஹரிஹர வடிவம் (படங்களுக்கு நன்றி சௌராப்), கில்மாவிலங்கை (நன்றி சாஸ்வத்)
நமக்கும் கடை பெஞ்சுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு…இந்த இரு நண்பர்களையும் அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
தொடரும் ….