திருவட்டதுறை – சிற்ப அதிசயம் – சாமரங்களும் மூர்த்திகளும்

வாசகர்கள் அனைவருக்கும் சுதந்திர தினத்திருநாள் வாழ்த்துக்கள்

இன்றைக்கு மிஸ். லீய்ஸ்​பெத் பங்கஜ ​பென்னிங்க் இன்னும் ஒரு அற்புத பதிவை நம்முடன் பகிர்கிறார்.

திருவட்டதுறையில் உள்ள திரு ஆரட்டதுறைநாதர் திருக்கோவிலை பற்றி முன்பே இரு கதைகளை கூறியுள்ளேன். 19 ஏப்ரல் 2011 அன்று “தெய்வக்குழந்தைக்கு தெய்வம் தரச்சொன்ன பரிசு” என்ற பதிவில், பாலகனாகிய புலவரும் சிறந்த பக்திமானும் ஆகிய திருஞானசம்பந்தர் இக்கோவிலுக்கு வருகை தந்து பாடல் இயற்றுகையில் சிவபெருமானே அவரை கௌரவிக்கும் வகையில் பல்லக்கும் குடையும் அளித்ததை கண்டோம். 7 ஜூன் 2011 அன்று “திருவட்டதுறை ஒரு ஆலயத்தின் ஜீவநாடி – சிற்பம் மற்றும் புராணம்” என்னும் பதிவில் சிற்ப நிரல் பற்றி கண்டோம். பக்தர்கள் கோவில் பிரஹாரத்தை சுற்றி பிரதட்சிணம் செய்யும்போது அவர்கள் கண்டுணர சிவபெருமானின் வெவ்வேறு வடிவங்களை பழங்கால ஸ்தபதிகள் எவ்வாறு அமைத்தனர் என்று கண்டோம்.

இன்றைய பதிவில் சிற்ப நிரலின் விவரங்களை பற்றிய ஒரு கதையை கூறப்போகிறேன். இந்த கோவிலில் சிவனின் வடிவங்கள் மிக அற்புதமான வேலைப்பாடுடயவை. அவற்றின் அழகும் பாவமும் தனித்தன்மை கொண்டவை. இந்த வடிவங்களின் ஒரு சில லக்ஷணங்கள் தனித்துவம் வாய்ந்ததும் ஆர்வத்தை தூண்டுவதும் ஆகும். கோவில் மாடங்களில் உள்ள மூர்த்திகளுடன் கூடிய சாமரங்களே அவை.

நான் இது வரை கண்ட கோவில்கள், தென்னிந்தியாவின் மொத்த கோவில்களில் ஒரு மிகச்சிறிய விழுக்காடே என்றாலும், அவற்றிலும் ஒரு சில கோவில்களை காண முடிந்தது எனது அதிர்ஷ்டமே ஆகும். எந்த கோவிலாக இருந்தாலும், ஒவ்வொரு முறை செல்லும்போதும், புதிய விளக்கங்கள், புதிய புரிதல், புதிய அழகு தென்படுகிறது. திருவட்டதுறையில் உள்ள சிவாலயம் ஒரு பொக்கிஷம் மட்டுமல்ல, மறைபொருள் கொண்டதாகவும் விளங்குகிறது. இன்றைய காலகட்டத்தில் மிகச் சிறியதும், அதிகம் பேர் அறிந்திராததுமாக விளங்கும் இக்கோவிலின் சிற்பங்களின் அபூர்வமான அழகே இதை ஒரு பொக்கிஷம் என எடுத்துக் காட்டுகிறது. மறைபொருள் கொண்டது என நான் கூறுவதற்கு காரணம் இங்கு சில மூர்த்திகளுடன் காணப்படும் சாமரங்கள் ஆகும்.

சாமரம் என்பது கவரிமானின் வால்முடியால் செய்யப்பட்டு வெள்ளி கைப்பிடி பொருத்திய ஒரு விசிறி ஆகும். தெய்வ வழிப்பாட்டில் அளிக்கப்படும் ஒரு முக்கிய உபசாரமாக இது கருதப்படுகிறது. மேலும் அரசர்களுக்கும் உயர் பதவி வகிப்போருக்கும் அளிக்கப்படும் மரியாதையாகவும் விளங்குகிறது. சரித்திர கதைகள் கொண்ட திரைப்படங்களில் அழகிய பெண்கள் அரசரின் ஆசனத்திற்கு பக்கங்களில் நின்று கொண்டு இத்தகைய சாமரங்களை வீசுவதை கண்டிருக்கிறோம். இன்றும் பல கோவில்களில் வழிபாட்டிலும், திருவிழாக்களின் போதும் சாமரங்கள் வீசப்படுவதை காண்கிறோம். எனவே, ஒரு தெய்வத்தின் சிற்பத்தில் சாமரம் இருப்பது ஆச்சரியம் அளிக்கக்கூடிய விஷயம் இல்லை. மேலும் அவை கதை சொல்லும் சிற்பங்களில், அதாவது ஒரு கதையையோ அல்லது நிகழ்ச்சியையோ விளக்கும் சிற்பங்களில் காணப்படுவது வழக்கம். ஆனால் கோவிலின் மாடங்களில் செதுக்கியுள்ள சிற்பங்களில் இத்தகைய சாமரங்களை நான் இதுவரை கண்டதாக என் நினைவில் இல்லை.


இங்கே திருவட்டதுறையில் இரு மூர்த்திகளில் மிகத் தெளிவாக சாமரங்கள் காணப்படுகின்றன. தெற்கு அர்த்தமண்டப சுவற்றில் உள்ள நடராஜரின் சிற்பம் அழகிய இரண்டு சாமரங்களால் கௌரவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் வடக்கு முகமாய் உள்ள மாடத்தில் உள்ள பிரம்மாவிற்கும் அவ்வாறே இரண்டு சாமரங்கள் உள்ளன. வழக்கமாக உபயோகப்படுத்தும் வகையில் இல்லாது, இந்த சாமரங்கள் சிரசின் பக்கங்களில் தொங்குவது போல் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றின் கைப்பிடிகள் கவரிமான் இறகுகளின் மீது ஒரு விதமாக மடிக்கப்பட்டுள்ளது போல் செதுக்கப்பட்டுள்ளன. நடராஜர் மற்றும் பிரம்மாவின் அருகில் உள்ள சாமரங்களின் கைப்பிடிகள் வேறுபட்டிருக்கின்றன. மேலும் அந்த மூர்த்திகளின் நிலையில் அவற்றின் அமைப்பும் சற்றே மாறுபட்டுள்ளன.

தெற்கு அர்த்தமண்டப சுவற்றில் உள்ள விநாயகர் சிற்பமும் சிற்பிகளால் குடை மற்றும் ஒரு ஜோடி சாமரங்கள் செதுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளன. மேலும் பிக்ஷாடனரின் பின்பும் மேலேயும் இரண்டு சாமரங்களின் வடிவம் மங்கிய கோடாக தெரிகின்றது. இந்த சாமரங்களின் முழுமையான விவரங்கள் தெரியவில்லை. இவை முழுமையாக செதுக்கப்படாமல் பாதியில் கைவிடப்பட்டவை போல் தோன்றுகின்றன. இவற்றின் மீது எண்ணெயும் தடவவில்லை.

மேற்கு சுவற்றில் உள்ள மாடத்தில் உள்ள லிங்கோத்பவருக்கு மேலேயும் பின்புறமும் ஒரு ஜோடி சாமரங்கள் காணப்படுகின்றன. இதுவும் எண்ணெய் தடவாமல் முழுமை பெறாமல் உள்ளது.

திருக்கோவிலின் மாடங்களில் உள்ள மற்ற மூன்று மூர்த்திகளாகிய தக்ஷிணாமூர்த்தி, கங்காவதாரனார், அர்த்தநாரீஸ்வரர் ஆகியவைகளுக்கு சாமரங்கள் அளிக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. துர்கையின் பின்புறம் உள்ள இடம் சரியாக தெரியவில்லை, இருப்பினும் அங்கே இரு சாமரங்கள் அமைப்பதற்குரிய இடவசதி இல்லை. அவ்வாறே முகமண்டபத்தின் சுவற்றில் உள்ள பைரவருக்கும் சாமரங்கள் அளிக்கப்படவில்லை.


இந்த விவரத்தை பற்றி இவளுக்கு ஏன் இத்தனை அக்கறை என்று வாசகர்களுக்கு மனதில் ஒரு கேள்வி தோன்றலாம். சாமரங்கள் அழகானவை. மேலும் இந்தக் கோவிலின் சிற்பங்களை மிக சிறப்பானவையாக எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் இவற்றின் நோக்கம் என்ன? சாமரங்கள் சில சிற்பங்களில் இருப்பதற்கும் சிலவற்றில் இல்லாதிருப்பதற்கும் காரணம் ஒரு வேளை இவை இந்த கோவிலின் கலை சரித்திரத்தை நமக்கு எடுத்துரைக்கின்றனவோ என்று எனக்கு தோன்றுகிறது.

முந்தைய பதிவில் நாம் கண்டபடி, அர்த்தமண்டப சுவற்றில் உள்ள ஆறு மாடங்களில் நான்கு வெட்டப்பட்ட மாடங்களாகும், உண்மையான தேவகோஷ்டங்கள் அல்ல. விநாயகரும் துர்கையுமே தேவகோஷ்டங்களில் அமர்ந்துள்ளனர். விநாயகருக்கு ஒரு குடையும் இரு சாமரங்களும் உள்ளன. ஆனால் இவை முற்று பெறாமல் உள்ளன. துர்கைக்கோ சாமரங்கள் அளிக்கப்படவில்லை. மறுபடி விநாயகர் சிற்பத்தை காணுங்கள். விநாயகர் மூர்த்திக்கு சரிவர இடம் தருவதற்காக குடை மற்றும் சாமரங்கள் ஒரு துளி வெட்டப்பட்டு உள்ளன.

தக்ஷிணாமூர்த்தி இருப்பது ஒரு ஆழமில்லாத, வெட்டப்பட்ட மாடத்தில் ஆகும். அதிலும் ஒரு கருங்கல் பலகையில் அமைக்கப்பட்டு ஒரு மாடத்தில் சேர்க்கப்பட்டதாகும். நடராஜரும் அவ்வாறே. ஆனால் இங்கே சாமரங்கள் நடராஜரின் சிற்பத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. லிங்கோத்பவருக்கும் சாமரங்கள் உள்ளன. ஆனால் அவை மாடத்தின் பின்புல சுவற்றின் ஒரு பகுதியாக உள்ளன. பிரம்மாவின் சாமரங்களும் அந்த சிற்பத்திலேயே உள்ளன, பிறகு அந்த சிற்பத்தை சுவற்றின் மாடத்தில் பொருத்தியுள்ளனர். மற்ற நான்கு சிற்பங்களுக்கும் சாமரங்கள் இல்லை.

மேலும் சிற்பங்களின் தோற்ற வடிவமைப்பை காணும்போது பல வித்தியாசங்களை காண முடிகிறது. பிரம்மாவிற்கு அரைக்கச்சு கொக்கியாக அழகுற வடிவமைக்கப்பட்டுள்ள கீர்த்திமுகம் உள்ளது. லிங்கோத்பவரின் அரைக்கச்சு கொக்கியோ சோழரின் தொன்மை வாய்ந்த சிற்பங்களில் காணப்படும் கீர்த்திமுகம் போன்று இல்லை. கங்காவதாரனார் மற்றும் அர்த்தநாரீஸ்வரரின் அரைக்கச்சு கொக்கிகள் முற்றிலும் வேறுபட்டவையாக உள்ளன. மேலும் இந்த மூர்த்திகளின் யக்ஞ்யோபவீதமும் மாறுபட்டுள்ளன. அவற்றில் உள்ள முடிச்சும், அவை உடலின் குறுக்கே தொங்கும் விதமும் வெவ்வேறாக உள்ளன. மேலும் இந்த நான்கு மூர்த்திகளையும் ஒப்பிட்டு பார்த்தோமேயானால், அவைகளின் இடுப்பில் கட்டப்பட்டுள்ள இடுப்பாடையின் அமைப்பிலும் அவற்றின் ஆழத்திலும் வித்தியாசத்தை காணலாம். லிங்கோத்பவர் மற்றும் கங்காவதாரனாரின் இடுப்பாடைகள் சற்றே ஆழமாக உள்ளன. ஆனால் பிரம்மா மற்றும் அர்த்தநாரீஸ்வரரின் இடுப்பாடைகள் ஒரே விதமாக உள்ளன. ஒரு வேளை கலையின் பரிணாம வளர்ச்சியை இங்கே காண்கிறோமா? அல்லது வெவ்வேறு சிற்பிகள் வடித்த சிற்பங்களை காண்கிறோமா? இரண்டு வகை அரைக்கச்சுகள், இரண்டு வகை இடுப்பாடைகள் என வித்தியாசம் ஏன்?
ஆக, இதன் மூலம் நாம் அறியும் விஷயம் என்ன? அர்த்தமண்டபத்தின் சுவற்றில் நான்கு மாடங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதன் பொருள் என்னவென்றால், மொத்தம் உள்ள ஆறு மாடங்களில் நான்கு இக்கோவிலின் அசல் வடிவமைப்பில் இல்லை. இரண்டு மூர்த்திகளின் சிற்பத்திலேயே இரண்டிரண்டு சாமரங்கள் உள்ளன. மூன்று மூர்த்திகளில், சிற்பத்திற்கு வெளியே, மாடத்தின் சுவற்றில் முடிவுறாத நிலையில் சாமரங்கள் காணப்படுகின்றன.

இந்த மூர்த்திகளின் தோற்ற வடிவமைப்பில் உள்ள வித்தியாசங்கள், மேலும் சிற்பத்தில் காணப்படும் அல்லது காணப்படாதிருக்கும் சாமரங்கள், ஆகியவற்றையும் வைத்து பார்க்கும்போது, இந்த மூர்த்திகள் பிற கோவில்களிலிருந்து இங்கு வந்து சேர்ந்திருக்க கூடியவையாக இருக்கக் கூடும். மேலும் காலத்தின் வெவ்வேறு சமயங்களில் அமைக்கப்பட்டதாகவும், இந்த கோவிலுக்கு வெவ்வேறு காலக்கட்டங்களில் வந்து சேர்ந்திருக்க கூடியதாவும் இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. ஒரு குழுவாக இந்த சிற்பங்கள் தரத்தையும் அழகிய அமைப்பையும் கொண்டுள்ளன.

துர்க்கை மற்றும் விநாயகர் சிற்பங்கள் அர்த்தமண்டப சுவற்றின் நாடு நாயகமாக உள்ள மாடங்களில் உள்ளன. இந்த மாடங்கள் சற்றே குறுகலாகவும், உயரமாகவும் இருக்க, இந்த மூர்த்திகள் அவற்றில் சரியாக பொருந்தி உள்ளன. இருப்பினும் விநாயகர் உள்ள மாடத்தின் சுவர் அந்த சிற்பம் சரியாக பொருந்த சற்றே வெட்டப்பட்டுள்ளது. இதுவே இந்த சிற்பம் இந்த மாடத்திற்காக வடிவமைக்கப்பட்டது அல்ல என்பதற்கு ஒரு அறிகுறி ஆகும். பிக்ஷாடனர், நடராஜர், கங்காவதாரனார் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் வெட்டப்பட்டுள்ள மாடங்களில் உள்ளனர். இந்த கோவில் கட்டப்பட்ட பின்பு இந்த மூர்த்திகள் வேறு எங்கிருந்தாவது கொண்டு வரப்பட்டு இங்கே பொருத்தப்பட்டனவா? அல்லது இந்த கோவிலின் தலைமை சிற்பி கட்டுமானம் பாதி நடந்துகொண்டிருந்த வேளையில் தன் மனதை மாற்றி கொண்டு அமைத்ததா? அரசியல் மற்றும் பொருளாதார மாறுபாடுகள், அல்லது, சமய நம்பிக்கைகளில் எழுந்த மாறுபாடுகள் அல்லது ரசிப்புத்தன்மையில் ஏற்பட்ட மாறுபாடுகளின் சான்றாக இவை காட்சி அளிக்கின்றனவா?

பிரம்மாவிற்கு அவருடைய சிற்பத்திலேயே சாமரங்கள் உள்ளன. விமானத்தின் சுவற்றில் உள்ள ஒரு மாடத்தில் அவர் அமைக்கப்பட்டுள்ளார். வெட்டப்பட்டுள்ள ஒரு மாடத்தில் அமைந்துள்ள நடராஜருக்கும் சாமரங்கள் உள்ளன. ஆனால் அவை இரண்டுமே அமைக்கப்பட்டுள்ள விதத்திலும் நிலையிலும் மாறுபட்டு உள்ளன. வடக்கு மாடத்தில் உள்ள லிங்கோத்பவருக்கு மாடத்தில் சுவற்றில் சாமரங்கள் உள்ளன. ஆனால் தெற்கு மாடத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்திக்கு அவ்வாறு சாமரங்கள் இல்லை. இந்த மூர்த்தி மாடத்தின் முழு இடத்தையும் கொண்டுள்ளது மட்டுமல்லாமல், அதிஷ்டானத்தில் இருந்து சிறிது வெளியிலும் முன்புறம் துருத்திக் கொண்டவாறு ஆசனத்தில் அமர்ந்து ஒரு அசுரன் மீது கால் வைத்திருப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆக, இங்கே நாம் அறிந்துகொள்ள ஒரு சிறிய மர்மம் அல்லது மாயம் உள்ளது. ஒன்றிரண்டு சிற்பிகள் மூர்த்திகளுடன் கூடவே சாமரங்களையும் சேர்த்து வடித்துள்ளனர். இவ்வாறு செய்யும் எண்ணம் ஏன் எழுந்தது என்று தெரியாத போதிலும், இதை தொடங்கிய விரைவிலேயே இவை கைவிடப்பட்டதும் புலனாகிறது. ஏன் துவங்கினர், எப்போது இவை கைவிடப்பட்டன என்பதற்கு நான் சரியான காரணங்களை தற்சமயம் வழங்க இயலாது. அதன் காரணங்களை அறிய நமக்கு மேலும் தகவல்கள் வேண்டும். கல்வெட்டுகள், நமது தொன்றுதொட்ட பழக்கங்கள், அல்லது புராணங்களில் இருந்து இவற்றுக்கு விடை கிடைக்கக்கூடும். அல்லது மற்ற கோவில்களின் சிற்பங்களுடன் இந்த கோவிலின் சிற்பங்களை ஒப்பீடு செய்வது மூலமும் விடை கிடைக்கலாம். இருப்பினும் மொத்தத்தில், இவை அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு என்ன நிகழ்ந்திருக்கக்கூடும் என்ற ஆர்வத்தை நம்மிடையே தூண்டுகின்றன என்பதில் ஐயமில்லை.

மொழிபெயர்ப்பு : தோழி திருமதி பர்வத வர்தினி முரளி கிருஷ்ணன்
படங்கள் : பதிவு ஆசிரியர் மற்றும் நண்பர் திரு சேகர் அவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *