சிதைந்த பல்லவர் கால ஓவியங்களை அவற்றின் புராதன வசீகரத்துடன் வெளிக்காட்டும் முயற்சியில் இன்று மீண்டும் ஒரு பயணம். காஞ்சி கைலாசநாதர் ஆலயத்து சோமாஸ்கந்தர் ஓவிய பதிவுகளுக்கு – – பதிவு 1, பதிவு 2,. பதிவு 3, தாங்கள் அனைவரும் கொடுத்த வரவேற்பும் உற்சாகமும் எங்களை அடுத்து மீண்டும் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியம் ( ஓவியர் திரு மணியம் மற்றும் திரு மணியம் செல்வன் அவர்களின் வழித்தோன்றல் என்றால் சும்மாவா?) அவர்களின் உதவியுடன் இன்னும் ஒரு கடினமான அதே சமயத்தில் ஆனந்தமான பணியை மேற்கொண்டு உங்கள் முன் வருகிறோம்.
பொன்னியின் செல்வன் குழும நண்பர்களுடன் பனைமலை சென்று இரண்டு வருடங்கள் ஆகி விட்டன. எனினும் இன்றுவரை அதை பற்றிய பதிவை நான் இடவில்லை. சிற்பங்களை அவைகளுள் இருக்கும் அற்புத வடிவத்தை கண்டிப்பாக சரியான முறையில் வெளிக்காட்டினால் தான் முறையாக இருக்கும் என காத்திருந்தேன். ஆனால் இன்றும் பசுமையான நினைவுகள். செஞ்சி அருகே ஒரு சிறிய மலைதான் பனை மலை.

ஆஹா, மேலே ஏறும் போதே ராஜ சிம்ஹாபல்லவரின் ஆலயம் – தாளகிரீசுவரர்’.

ராஜ சிம்மர் என்றாலே விமானங்களின் அழகுதான் முதலில் நம்மை ஈர்க்கும். காலத்தை வெல்லும் கொள்ளை அழகு
அனால் இந்த பொக்கிஷம் முத்துச் சிப்பியை போல உள்ளே ஒரு அரிய முத்தை உள்ளடக்கி வைத்துள்ளது.
ராஜ சிம்மர் தனது காலத்தில் தனது படைப்புகளான ஆலயங்கள் அனைத்தையும் தலைமுதல் கால் வரை
ஓவியங்களை கொண்டு அழகுக்கு அழகு சேர்த்தார். இதனை நாம் முன்னரே காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் பார்த்தோம். இங்கேயும் அதே போல ஒரு காலத்தில் இருந்திருக்க வேண்டும். நமது துரதிஷ்டம், இன்று எங்கோ இங்கும் அங்கும் ஒரு சில இடங்களில் மட்டும் எச்சங்களே மிஞ்சி உள்ளன. ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல – தூரிகையின் ஒரு சில கோடுகளிலேயே பல்லவ ஓவியனின் கைத்திறன் நம்மை சொக்க வைக்கின்றது
விமானத்தின் உட்புறமோ, கருவரையிலோ இன்று ஓவியங்கள் எவையும் பிழைக்க வில்லை. எனினும், விமானத்தை சுற்றி வரும் பொது, வலது புறம் தரையில் இருந்து சுமார் நான்கு அடி உயரத்தில் சிவலிங்கத்தை கொண்ட ஒரு சிறு சன்னதி உள்ளது. மேலே ஏறுவதற்கு கொஞ்சம் கஷ்டப் பட வேண்டும். ஆனால் அதைக் கண்டும், அஞ்சி ஏறவில்லை என்றால் போச்சு!….அதனுள் தான் புதையல் உள்ளது.

ஏறிவிட்டீர்களா ? முதல் பார்வையில் ஒன்றுமே இல்லையே என்று நினைக்க வேண்டாம். வலது புறம் சுவற்றை நன்றாக பாருங்கள். கண்டிப்பாக தெனிந்தியாவில் இவளை போன்ற அழகி வேறெங்கும் இல்லை.
இன்னும் நன்றாக அருகில் சென்று பாருங்கள்.
உமை அம்மை – பார்த்த கணத்தில் நம்மை சொக்கி அடிக்கும் மதி வதனம். மேலே வர்ணிக்க வார்த்தைகள் வராது.
காலத்தின் கோலத்தில் பல இடங்களில் உடைந்தும் அழிந்தும் போன நிலையிலும், அந்த ஓவியனின் தூரிகை தீட்டிய கோடுகள், வண்ணங்கள் – அவை ஒன்று சேர்ந்து உமையின் முகத்தில் வெளிக்கொணரும் உணர்வு அலை, நிற்கும் நளினம். .
மிகவும் சிதைந்த நிலையில் இருப்பதால், ஓவியத்தில் பல இடங்களில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை – மேலே வண்ண குடை தவிர , இன்னொரு பக்கம் இருப்பது ஒரு பல்லவக் குடைவரைக் கோயிலின் தூண் போல தெரிகிறது.
வலது புறம் உமை இருக்க, நடு சுவரில் மிகவும் மெல்லிய ஓவியச் சுவடுகள் தெரிகின்றன.
அருகில் சென்று ஆராயும்போது அவை சிவபெருமான் முப்புரம் எரித்த பின்னர், மகிழ்ச்சியில் ஆடிய ஆளிதன்றிட (Alidhanrita) நடனம் என்று தெரிந்துக் கொண்டோம். இதை அடுத்த பதிவில் மேலும் காண்போம். ஆனால் இந்த வடிவம் ராஜ சிம்ஹரின் பல சிற்பங்களில் நாம் பார்க்க முடியும், காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் இதே போல சிவன் அவர் ஆட உமை பார்க்கும் காட்சி இருக்கிறது – “திரிபுராந்தகி சமேத திரிபுராந்தகாய நமஹ”
உமை ( திரிபுராந்தகி) இங்கும் பனை மலை போல இருப்பது நமக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
இவை அனைத்தையும் மனதில் கொண்டு, இந்த ஓவியத்தை சுபாஷினி வரையத் துவங்கினார்.
வண்ணங்கள் மெதுவாக தோன்றின.
போன முறை ஜகதீஷ் படங்களை தந்து உதவியது போலவே, இம்முறை திரு பிரான்க் ரோந்டோட் என்பவர் உதவினார். வெகு நாள் வரை பனைமலை ஓவியத்தின் நல்ல புகைப்படம் இணையத்தில் இல்லை, அப்போது திரு பிரான்க் அவர்களின் தலத்தில் நல்ல படங்களை கண்டு, நமது முந்தைய பதிவையும் என்ன செய்ய இந்த படங்கள் தேவை என்றும் விளக்கினேன். அவரும் உடனே படங்களை நமக்கு தந்து உதவினார். இவை நமக்கு மிகவும் உதவின – ஏனெனில், இவை பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படங்கள் – அதற்கு பின்னர் சில இடங்களில் ஓவியம் சிதைவு அடைந்துள்ளது !!
மேலும் பொன்னியின் செல்வன் குழு நண்பர்கள் சௌராப் , சாஸ்வத் , ஸ்ரீராம் , ஸ்ரீ என்று பலரும் தங்கள் படங்களை கொடுத்து உதவினர்.
மெதுவாக ஓவியம் வளர்ந்தது…
தொடரும்