குகைக்குள் மறைந்திருக்கும் பல்லவர் சிற்பம்

சென்ற வருடம் டிசம்பர் மாதம் நண்பர் அர்விந்த் அவர்களுடன் ஐந்து நாட்கள் பாண்டிய நாட்டு பக்கம் பயணம் மேற்கொண்ட​போது பல இனிய அனுபவங்கள். டீ ஷர்ட், அரை டிரௌசர், கேமரா என்று எங்களைப் பார்த்தவுடனே அந்தக் கார் டிரைவருக்கு சந்தோஷம் தான். அதைவிட ஐந்து நாட்கள் புக்கிங் என்றவுடன் அவருக்கு ஒரே எதிர்ப்பார்ப்பு, நல்ல சவாரி என்று. “சார், நான் பன்னிரண்டு வருடங்கள் இங்கே தான் ஓட்டறேன். நீங்க எங்க போகணும் சொல்லுங்க” என்று முதல் நாள் விறுவிறுப்பாக கிளம்பியவர், ஐந்தாவது நாள் இரவு எங்களை நெல்லை ரயில்வே நிலையத்தில் டாட்டா கட்டி விடை அனுப்பும்​போது விட்ட பெருமூச்சு…அந்த ஐந்து நாட்கள் அவர் நாங்கள் கொடுத்த பட்டியலில் உள்ள இடங்களுக்கு வழி கேட்டு கேட்டு சலித்துவிட்டார் !! அதைவிட அவருக்கு பெரிய குறை – ஒரு சின்ன குகையை வளைத்து வளைத்து ஐந்து மணி நேரம் படம் எடுக்கும் நாங்கள் பெரிய ஆலயங்களில் வாசலில் விட்டுவிட்டு டீ சாப்பிட்டுவிட்டு வருவதற்குள்ளே வெளியில் வந்து விடுகிறோமே என்ற குழப்பம் தான்!! எங்களது ரசனை என்னவென்பது பாவம் அவருக்கு கடைசி வரை புரியவேயில்லை.

அந்த மாதிரி செய்தால் தானே இன்றைக்கு நாம் பார்க்கவிருக்கும் அற்புத வடிவங்களை உங்களுக்கு எடுத்துத் தர இயலும். பனைமலை – நாம் ஏற்கனவே அங்குள்ள அற்புத உமை பல்லவ ஓவியத்தை பார்த்து விட்டோம். அங்குள்ள சிதைந்த சிவபெருமானின் ஆடல் காட்சியை ஓவியமாக உயிர்ப்பிக்கும் முயற்சி இன்னும் நிறைபெறவில்லை. எனினும் அங்கேயே இன்னும் ஒரு பொக்கிஷம் உள்ளது.

மலை மேலே இருக்கும் கோவிலுக்கே யாரும் செல்வதில்லை. அப்படியிருக்க நாம் இன்று பார்க்கப் போகும் அதிசயம் – மலையடிவாரத்தில் உள்ளது. எங்களுக்கு இது தெரியாது. மலை ஏறிய களைப்பில் நிறைய தண்ணீர் குடித்துவிட்டோம் – அதனால் இறங்கியதும் இயற்கை வேலையை காட்டியது – மரம் வளர்க்க அருகில் சென்றபோது – ஒரு பக்கம் ஒரு ஆட்டுப் பாதை… அதில் ஒரு இயற்கை குகை. நண்பர் அசோக் அவர்கள் ஒரு புகைப்பட வித்துவான் என்றே சொல்ல வேண்டும். எப்படியோ உள்ளே புகுந்து எங்களுக்கு படங்களை அருமையாக எடுத்து விடுவார்.

மகிஷாசுரமர்தினி சிலை – தாய் பாறையில் ராஜசிம்ம பல்லவனின் சிற்பிகளின் கைவண்ணம்.

ராஜசிம்மனுக்கு சிம்மம் என்றால் ஒரு தனி ஈர்ப்பு. அந்த சிங்கத்தின் வலிமையை எப்படி செதுக்கி உள்ளனர்!

எட்டுக் கைகளுடன் அவளின் அழகு அருமை, ஒரு காலை மடித்து சிங்கத்தின் முதுகில் ஊன்றி, அந்த வில்லை கையில் பிடித்து நிற்கும் பாணியில் ஒரு யதார்த்தம் !! அருமை. அவள் அணிந்திருக்கும் உடை, ஆபரணங்கள் – பல்லவர் பாணியில் பிரயோக சக்கரம், கனமான வாள். கவனிக்க வேண்டிய ஒன்று வலது கையில் மூன்று தலை நாகம் ஒன்று உள்ளது. இதுவரை நாம் கண்ட பல்லவ துர்க்கை வடிவங்களில் இதை நாம் பார்த்தில்லை. அதே போல பல்லவர் சிற்பங்களில் வாளை இடுப்பில் வைக்காமல் முதுகில் வைப்பது வழக்கம் போல உள்ளதே? முதுகில் இருபக்கம் கூடு உள்ளது. ஒரு பக்கம் அம்புக்கூடு என கருதலாம். காஞ்சி கைலாசநாதர் ஆலயத்து கிராட அர்ஜுனம் சிற்பத்திலும் இதே போல இருப்பதை நாம் காணலாம்.

ராஜசிம்மன் நம்மை போல கலை ஆர்வலர்களுக்கு மட்டும் அல்லாமல் வரலாற்று ஆர்வலர்களுக்கும் மிகவும் நல்லவன் போல. பிற்காலத்தில் யார் இவற்றை எடுப்பித்தனர் என்ற சர்ச்சை வர வாய்ப்பே கொடுக்காமல் (காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் ஒன்றுக்கு அடியில் ஒன்றாய் நான்கு முறை தனது 244 பெயர்களை பிருடா பட்டப்பெயர்களை – செதுக்கிய அரசன் அல்லவோ!) இந்த சிறு சிற்பத்தையும் விட்டுவைக்கவில்லை – ஸ்ரீபர மற்றும் ரணஜெயா என்ற தனது பெயர்களை செதுக்கி விட்டு இது என்னுடையதே என்று சந்தேகத்துக்கு இடமே இல்லாமல் செதுக்கி விட்டான்.

வாசகர்களுக்கு ஒரு கேள்வி. மேலே பார்த்தப் படங்களில் ஒன்றை விட்டு விட்டோம். என்னவென்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்?

படங்களுக்கு நன்றி : திரு அசோக் கிருஷ்ணசுவாமி மற்றும் திரு சாஸ்வத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *