திருவிடந்தை கோஷ்ட வடிவங்கள் – ஒரு பார்வை

ஒரு இனிய மாலைபொழுது கிடைத்ததும் கடற்கரை சாலையில் ஒரு ரைடு – அப்படியே ஒரு பழைய (ரொம்ப நாள் பார்க்கவேண்டும் என்று குறித்து வைத்த) ஆலயத்தையும் பார்த்துவிடலாமே என்று ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்! அப்படி போனது தான் திருவிடந்தை. டிசம்பர் மாதம் விடுமுறை ஆரம்பித்து இருந்தும் சாலையில் அவ்வளவு கூட்டம் இல்லை. சில கார்கள் மட்டுமே நாற்பது கிலோ மீட்டர் என்ற அந்த காமெடி ஸ்பீட் லிமிட்டை சட்டை செய்யாமல் பறந்துக்கொண்டு இருந்தன. அப்படி பலரும் அவமதித்த லிமிட்டின் லிமிட் ஆங்காங்கே சிதறி கிடந்த கார் கண்ணாடிகள் விளம்பரப்படுத்திக்கொண்டிருந்தன. சற்று தொலைவில் இடது புறம் சவுக்கு மரத்து காடுகள் வர துவங்கியவுடனே வேகத்தை குறைத்து வலதுபுறம் திருவிடந்தை நோக்கி திரும்பினோம். சூப்பர் ஸ்டார் அவர்கள் திருவண்ணாமலையை பிரபலப் படுத்தும் முன்னர் இந்த ஆலயத்தை சற்று பிரபல படுத்தி விட்டார். அதன் பின்னர் ஆகவேண்டியவற்றை அதன் ஸ்பெஷல் ஸ்தல புராணம் பார்த்துக்கொண்டது. அது என்ன ஸ்பெஷல் ஸ்தல புராணம் ? மேலே படியுங்கள்.

ஆலயம் கண்ணில் பட்டவுடன் ரோடோரத்தில் வண்டியை நிறுத்தினோம். அதிசமாக வேறு ஒரு கார், மாக்சி-காப் ஒரு டெம்போ / ஆட்டோ கூட இல்லை ! பூ கடை அம்மா நம்மை பார்த்தவுடன் ’சிக்கினாண்டா ஒருத்தன்’ என்று முகம் மலர – பூ கூடையுடன் இரண்டு மாலையுடன் ஓடோடி வந்தாள். (அது என்ன இரண்டு மாலை ! மேலே படியுங்கள் ) . அந்த அம்மா கிட்ட நாம் சிற்பம் பாக்க வந்திருக்கிறேன் என்று சொல்லி புரியவைப்பதை விட நமக்கு பத்து வயதில் ஜூனியர் இருக்கிறான் என்று சொல்லிவிட்டு தப்பினேன்.

வெளியே அழகே இல்லாத நாயகர் கால மண்டபம் மற்றும் வாயில் கோபுரத்தை கடந்து உள்ளே சென்றோம். மிகவும் கம்மியான வெளிச்சத்துக்கு கண்கள் பழக்கப்பட எதிரே பல்லவர் கலை – வராஹர் சுதை வடிவம் ! அதற்குள் படம் எடுக்க தடை அறிக்கை !! வேண்டும் என்றால் வெளியே ’வரை-படம்’ உள்ளது வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள் ! என்ன அழகு வடிவம் , எட்டாம் நூற்றாண்டுச் சிற்பங்களாயிற்றே

அதற்குள் பலர் சேர்ந்து விட்டனர். அவரது ஸ்தல புராணம் தந்த வரலாறு. அதன்படி வாலிபர் ஒருவர், இரு இளம் பெண்கள் – அனைவர் கையிலும் இரண்டு இரண்டு மாலைகள். ஒரு மலையை தாங்களே மாட்டிக்கொண்டு கோவிலை சுற்றி வர வேண்டும். மற்றொரு மாலை ? அது பெருமாளின் கை வண்ணம். அப்படி செய்த ஒரே வருடத்தில் திருமணம் நடந்து விடும்…பின்னே – முனிவர் மகள்கள் 365 பேரை நாளைக்கு ஒன்று என்று வருடம் முழுதாக மணக்கோலத்தில் இருந்து மணந்தவர் …நித்ய கல்யாண பெருமாள் – பயங்கர பவர் ! மணமாக நண்பர்கள் இருவர் ஆலயத்துக்குள்ளே என்ன ஊருக்குள்ளே கூட வர பயந்து ஓடி விட்டனர்.

சரி! இதெல்லாம் போதும். சிற்பத்துக்கு வருவோம். பல்லவர் கால வைணவ ஸ்தலம் – கோஷ்டங்களில் யார் இருப்பார்கள் என்ற ஆவலுடன் விரைந்தோம். முதலிலேயே ஒரு அதிர்ச்சி. ஆனைமுகன் தான் , அதுவும் சரியான இஅடதில் தான் – ஆனால் பட்டைக்கு பதில் நாமம் – மேலே பெயர்….

மல்லை மற்றும் காஞ்சி கைலாசநாதர் வடிவங்களுடன் ஒப்பிடும் பொது ராஜசிம்ம பல்லவ காலத்து பிள்ளையார் போல இல்லாவிட்டாலும் பழைய சிலை தான்.


வல்லம் விநாயகர் போலும் இல்லை.

இது எந்த காலத்து சிலை? மற்ற கோஷ்ட சிலைகளை பாத்துவிட்டு மீண்டும் இந்த கேள்விக்கு வருவோம். அடுத்து வருவது – சத்யன். ஆஹா ,பல்லவர் கைவண்ணம் தாம் – கண்டிப்பாக சொல்லி விடலாம் – கையில் அழகிய பிரயோக சக்கரம் உள்ளதே.

அடுத்த கோஷ்டம் – அச்யுதன். மீண்டும் சற்று குழப்பம். இங்கே சற்று வித்யாசமாக சக்கரம் பிரயோகத்தில் இல்லை.

அடுத்து – அநிருத்தன் – ஆஹா, இங்கே மீண்டும் பிரயோக சக்கரம். !

முடிவாக விஷ்ணு துர்க்கை வரும் கோஷ்டத்தில் வைஷ்ணவி – அடுத்த முறை சரியான ஆட்களை கூட்டிச்சென்று காலுக்கு அடியில் எருமை தலை இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்., எனினும் கையில் பிரயோக சக்கரம் உள்ளது.

இவற்றை கொண்டு கோஷ்ட வடிவங்கள் பல்லவர் காலத்திலேயே அமைக்கப்பட்டவை என்று ஓரளவிற்கு முடிவாகவே சொல்லி விடலாம். மூலவர் சுதை உருவம் என்பதாலும் கருவறை கருங்கல் திருப்பணி என்பதாலும் – மூலவர் நிறுவி ( எட்டாம் நூற்றாண்டு ) ஒரு நூறு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த கோஷ்ட வடிவங்கள் வடிக்கப்பட்டு இங்கே பொருந்த பெற்றன என்று நாம் தெரிந்துகொள்ளலாம். இவை கண்டிப்பாக பத்தாம் நூற்றாண்டு சோழ வேலைப்பாடு அல்ல.

கணேஷ , சத்யன்
அச்யுதன்
அநிருத்தன், வைஷ்ணவி .

இப்படி உள்ள அமைப்பில் கணேஷ வடிவம் கோஷ்ட தெய்வமாக கடை பல்லவ வைணவ ஆலயத்தில் இடம்பெற்று விட்டமையை நாம் அறியலாம். பின்னர் நடந்த மாற்றங்களாலும் பிரிவுகளினாலும் பிளவுகளை ஏற்படுத்த – அவற்றை மறைக்க ஒட்டு போடவே அவருக்கு வேறு பெயரிட்டு வேறு அடையாளத்தையும் சூட்டி இருப்பது தெளிவாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *