என்னை போன்றவர்களுக்கு இணையம் ஒரு வரப்பிரசாதம் ! ஒரு பெரியவர் நாற்காலி ஆராய்ச்சியாளர் என்று பட்டம் கூட சூட்டினார் ! அப்படி ஒரு ஆராய்ச்சி தான் இது.
புகழ் பெற்ற ராஜ சிம்ஹ பல்லவரது கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க எடுத்த முயற்சியின் பொது பல கடினமான இடங்களை சந்தித்தோம்.
குறிப்பாக மிகவும் சிதைந்த அடி பாகத்தில் இருந்த இரு உருவங்களை அடையாளம் கண்டுகொள்ள பல படங்களை ஆராய்ந்தோம்.
முடிந்தவரை இவை அந்நாளில் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து அதன்படி படங்களை வடித்தோம். எனினும் இந்த இரு குள்ள கணங்கள் அங்கே இருப்பதே ஒரு ஆச்சரியமாக இருந்தது.
அந்த பெண் வடிவ குள்ள கணம் – உமையவளின் தோழியா ? இலக்கணத்தில் இவர்களை பற்றி ஏதாவது குறிப்பு உள்ளதா? இப்படி எல்லாம் அப்போது தோணவே இல்லை.
பல காலம் கழிந்து நண்பர் அரவிந்த் அவர்கள் தான் லால்குடி சென்ற பொது எடுத்த படங்களை சுட்டியை அனுப்பி வைத்தார்.
அங்கே உள்ள கதை சொல்லும் புடிப்புச் சிற்ப்பங்களை ஆராய்வதே எங்கள் நோக்கம் என்றாலும் அதில் இன்னொரு வடிவம் கவனத்தை ஈர்த்தது.
எதையோ நினைவூட்டியது.
இங்கேயும் அரியணையில் அம்மையப்பன் வடிவம் என்றாலும் முருகன் இல்லை. வலது புறம் அடியவர் ஒருவரும் – மேலே இருபுறமும் இரு முகங்கள் தெரிகின்றன. அவற்றில் நான்முகன், பெருமாள் வடிவங்கள் உள்ளனவா என்பது சரியாகத் தெரியவில்லை. நம் கவனத்தை ஈர்த்தப் பகுதி அரியணைக்கு அடியில் இருக்கும் இரு கணங்கள் தான்….
இந்த சிலையின் காலத்தை சரியாக கணிப்பது கடினம் என்றாலும் சுவாரசியம் என்னவெனில் பல்லவ ஓவியன் தீட்டிய அதே பாணியில் அந்த இரு குள்ள கணங்களும் இங்கே இருப்பது தான்!! இவர்கள் யாராக இருக்கக்கூடும் ?