சோழர்கள் பற்றி பல தகவல்கள் புதைந்து இருந்த கோவில் – எசாலம்-இரண்டாம் பாகம்

பல நேரங்களில் நம் கண் முன்னே, நாம் பலமுறை பார்த்த, பொருள்களில் உள்ள நுணுக்கங்களை ஏனோ கேள்வில்களை எழுப்புவதில்லை. ஆனால் அதை யாரவது கை காட்டியதும் ” அடடே – ஆமாம் இதுவா ” என்று நம்மை சிந்திக்க வைக்கும். அது போலவே இன்று நண்பர் சாஸ்வத் வீணையின் நுனியில் இருக்கும் யாளியை நமக்கு காட்டுகிறார்.

இந்து நாளிதழில் இவ்வாறு சிங்க தலை என்று உள்ளது ! இது சிங்க தலையா ??

கண்டிப்பாக இல்லை. யாளி தான். …மேலும் விவரிக்கிறார் சாஸ்வத் – எசாலம், இரண்டாம் பாகம்

முதல் பகுதியில் இந்த அற்புத டக்ஷினமுர்த்தி வடிவம் என்ற குறிப்பை மட்டுமே சொல்லி அது இருக்கும் இடத்தை மட்டும் சொலிவிட்டு அடுத்த சிற்பங்களுக்கு சென்றுவிட்டேன் . இன்று இந்த அற்புத வீணாதார வடிவத்தை அருகில் சென்று காண்போம்.

தக்ஷினமுர்த்தி வடிவம் எனபது சிவன் குருவாக இருப்பது. சாதாரண குரு அல்ல குருவுக்கு எல்லன் குரு. திரு கோபிநாத் ராவ் ( பல சிற்பக்கலை மாணவர்களுக்கு முதல் குரு இவர்) இவ்வாறு தனது நூலில் இந்த வடிவத்தை பற்றி சொல்கிறார்.

“சிவன் – யோக கலை, சங்கீதம், நாட்டியம் என்று பலவற்றில் வல்லுநர். இவ்வாறு அவற்றை நமக்கு கற்றுக்கொடுக்கும் வடிவமே தக்ஷினமுர்த்தி வடிவம் . இந்த வடிவத்தையே இக்கலைகளை பயில துவங்கும் மாணவர்கள் முதலில் வழிபட வேண்டும்.”

மேலும் – இந்த வடிவம் நான்கு அம்சங்களை கொண்டது – யோக குரு, வினை மீட்டும் கலை, ஞானத்தை – சாஸ்திரங்களை விளக்கும் – வியாக்யானமூர்த்தி. இந்த வடிவத்தை தான் பெரும்பாலும் ஆலயங்களில் தெற்கு திசையில் காண முடியும்.”

இங்கேயும் அதே திசையில் தான் அவர் இருக்கிறார்.

துரதிருஷ்ட வசமாக சிலை சேதம் அடைந்துவிட்டதால் யாரோ அதற்கு முன்னர் புதிதாக ஒரு சிலையை நிறுவி உள்ளனர். நமது பார்வைக்கு சோழர் கால சிலையை அது மறைத்து விடுகிறது.

வீணாதார தக்ஷிணாமூர்த்தி – சங்கீத குரு – இது இன்னும் சற்று அரிய வடிவம். எனினும் பல ஆலயங்களில் இவரையும் நாம் காணலாம். கங்கைகொண்ட​சோழபுரத்தில் இதோ ..

இன்னும் சற்று பழமையான சிலை – கீழையூர்

நிற்கும் பாணியில் உள்ள வடிவங்கள் – கொடும்பாளூர் மற்றும் லால்குடி

இதோ எசாலத்தில்

சிற்ப ஆகமங்களின்படி பார்த்தால் வியாக்யான வடிவத்திற்கும் வீணாதார வடிவத்திற்கும் வீணை தான் வித்தியாசம்! அதுவும் அந்த குடம் வலது ​தொடைமேலே இருப்பது. ஜடா முடி, தலையில் ஊமத்தம்பூ, கபாலம், பிறை, கையில் அக்ஷரமாலை, பாம்பு, தீ, மான் என்று எல்லாம் இருக்கும் – ஆனால் குரு என்பதால் ஆயுதம் தரிப்பது இல்லை போல!

முதல் பாகத்தில் பார்த்த மாதிரி – வியாக்யான வடிவத்திற்கு மேலே விமானத்தில் வீணாதார வடிவம் உள்ளது. அந்த உயரத்தில் பலவற்றை காண முடியவில்லை. இருந்தாலும் அந்த முகமும் வீணையும் என்னை ஈர்த்தது.

பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல. அதன் அழகை பற்றி என்ன எழுதுவது !!

தலைப்பட்டி அழகாக சிரத்தில் – காற்றில் சடா முடி பறந்து முகத்தில் விழாமல் இருக்கவோ ? காதில் அணிகலன், தலையில் வலது புறம் பிறை சூடி …

கழுத்தில் பல்வேறு அணிகலன்கள் – யக்​​ஞோபவீதம் என்று அந்த உயரத்திலும் சிற்பி ஒன்றை கூட விடாமல் செதுக்கிய அழகு அபாரம். ஒருநாள் சாரம் கட்டி மேலே ஏறி இடுப்பில் சிங்கமுகப் பட்டி இருக்கிறதா என்று பார்த்துவிட வேண்டும். அவ்வளவு உயரத்தில் சென்று யாரடா பார்க்கப் போகிறார்கள் என்று விட்டு விடாமல் ​செதுக்கிய அந்தக் காலத்து கலைஞனின் கடமை உணர்ச்சியை எப்படி பாராட்டுவது ?

சரி, வீணைக்கு வருவோம். வலது புறம் குடம் ​தொ​டையில் நிற்கிறது. சற்றே வெளியில் வந்த வண்ணம் – ஆகமங்கள் அப்படித் தான் இருக்க வேண்டும் என்று சொல்கின்றன – வலது கரம் மீட்டும் வண்ணம் அருமை.

இடது புறம் வீணையின் முகத்தில் – இன்று உள்ள வடிவம் போல வளைத்து இல்லாவிட்டாலும் – அங்கே யாளி முகம் தெளிவாக தெரிகிறது.

இந்த வடிவத்தின் காலம் – ராஜேந்திர சோழர் காலம் – அதற்கு அவர் பல சான்றுகளை விட்டுச்சென்றுள்ளார். இதுவும் கங்கைகொண்ட சோழபுரமும் சம காலமாக இருக்க வேண்டும்.

இரண்டையும் சிற்ப வடிவங்களை கொண்டு தெளிவாக குறிக்க இயலும்.

ஒரே போல இருக்கின்றன அல்லவா? இப்போது முதலில் பார்த்த வடிவங்களை கொண்டு ஒப்பிடுங்கள்.

இவை காலத்தால் சற்றே முந்தைய வடிவங்கள் – ஆதித்ய சோழர் காலம் – சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் வடித்த வடிவங்கள். இன்னும் காலத்தில் பின்னால் சென்றாலும் இந்த வடிவத்தை நாம் காணாலாம் – ராஜசிம்ஹா பல்லவர் காலம் – காஞ்சி கைலாசநாதர் ஆலயத்து வடிவம் இதோ.

கர்நாடகத்தில் உள்ள நரசமன்கலம் சிற்பம்.

இந்த வடிவங்களில் குடம் இடம் மாறி உள்ளது – நாம் முன்னர் கண்ட பதிவில் இது போன்ற பல வடிவங்களில் குடம் மேல் பக்கம் இருக்கும் வண்ணம் உள்ளன.
அப்படியானால் வீணைகள் முதலில் குடம் மேலே இருக்கும் படி வடிக்கப்பட்டு – பின்னர் அந்த பழக்கம் மாறியதா? இல்லை இரண்டு வடிவங்களுமே அந்நாளில் இருந்தனவா? அப்படி என்றால் எதற்காக ராஜேந்திர சோழர் காலத்தில் எல்லா சிற்பங்களிலும் ஒரு சேர குடத்தை கீழ்ப்பக்கம் வைக்கத் துவங்கினார்?

இப்படி ஒரு ஆராய்ச்சி செய்தால் இசையும் சிற்பமும் மேலும் சங்கமிக்கும் என்பது உறுதி ! குரு இன்னும் நமக்கு ஏதோ சொல்லித்தருகிறார் போல!

இன்னும் இருக்கிறது. முன்னர் இந்த வடிவத்தை கீழிருந்து காண்பது கடினம் என்று சொன்னேன் அல்லவா – பின்னர் எப்படி படம் எடுத்தேன் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த ஆலயம் மணற்மேட்டில் புதையுண்டு இருந்தது. அதாவது காலப்போக்கில் அருகில் உள்ள கிராமம் வளர வளர தரையின் சமன் மேலே ஏறி விட்டது. அதனால் அருகில் உள்ள மேட்டில் ஏறி இந்த சிற்பத்தைப் பார்த்து விடலாம்.

அப்படி நாங்கள் சென்ற ​போது இன்னும் ஓரிரண்டு ஆச்சரியங்கள் எங்களுக்கு தென்பட்டன. மிகவும் பழமை வாய்ந்த கிராம தெய்வ வடிவங்கள் அவை. அவற்றைப் பற்றி ……தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *