சேரன்மாதேவி ராமஸ்வாமி கோயில் .. ஒரு கம்பத்தில் உயிர்பிழைத்து நிற்கும் அவலம்

அளவுக்கு மீறினால் அமிர்தமும் கெடுதிதான்…ஒருவேளை நமது நாட்டின் கலை பொக்கிஷங்களின் அவல நிலைக்கும் இது தான் காரணமோ? வேறெப்படி தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நின்றும் இன்றோ நாளையோ என்று தத்தளிக்கும் சேரன்மாதேவி ராமஸ்வாமி கோயிலின் நிலையை சொல்வது? நிகரிலி சோழ விண்ணகர் – இணையற்ற விண்ணகர் என்ற பெயர்கொண்ட இந்த அற்புத ஆலயம் கூடிய விரைவில் இடிந்து விழுந்தது என்ற செய்தியை பதிப்பிக்க பல நாளேடுகள் போட்டி போடும், பலர் தங்கள் ஆதங்கத்தை ஊடகங்களில் வெளிப்படுத்துவார்கள், அரசாங்கம் ஒரு குழு அமைக்கும் ….ஒரு வாரத்திலோ ஒரு மாதத்திலோ வழக்கப்படி எல்லோரும் எல்லாம் மறந்து மீண்டும் வெற்றி நடிகனின் நூறாவது படம், நடிகையின் கிசு கிசு என்று ” இயல்பான ” வாழ்க்கைக்கு திரும்பிவிடுவோம். இழப்பு யாருக்கு ? வரும் சந்ததியினரின் சொத்து இது, சிதைய விட யார் நமக்கு உரிமையை கொடுத்தது ?

வெளியில் அனுமனின் சிலை, வாய்பொத்தி அண்ணலின் அணைப்பின் பூரிப்பில் நின்றது. எனினும் உள்ளே போனபோது வெறும் சிலை வடிவமாக பார்த்த எங்களுக்கு வெளியில் வரும்போது சிலை வேறு விதமாக பேசியது.

உள்ளே நுழைந்தவுடன் வெளி பிரஹாரம் ஒன்றும் விசேஷமாக இல்லை, பல ஆலயங்களில் பார்த்த காட்சி போல தான் இருந்தது.

உள்ளே செல்லச் செல்ல, கண் முன்னே தோன்றிய காட்சிகள் பிரமிக்க வைத்தன.


தினம் தினம் காணும் காட்சி அல்லவே – பத்தாம் நூற்றாண்டிற்கும் முந்தைய பாண்டிய விமானம் எந்த வித பின்னாளைய ” புதிப்பிப்பும் ” அல்லாமல் பார்ப்பது மிகவும் கடினம்.

நண்பர் பிரதீப் முன்னரே உதவியதால் எவைகளைப் பார்க்கவேண்டும் என்பதும், மற்றும் அங்கே ஊர் நபர்களின் உதவியும் எளிதில் கிடைத்தது.

அஷ்டாங்க விமானம் – ஒரு சிலவே தமிழ் நாட்டில் உள்ளன. பெருமாள் நின்ற கோலம், அமர்த்த கோலம், கிடந்த கோலம் என்று காட்சி அளிக்கும் மூன்று தள விமானம்.

நின்ற கோலம் மட்டுமே இன்று வழிபாட்டில் உள்ளது. அங்கே அற்புத செப்புத்திருமேனிகளை தரிசித்தோம்.

மேலே செல்கிறீர்களா என்று சற்று தயக்கத்தோடு கேள்வி வந்ததன் அர்த்தம், குறுகிய படி , மற்றும் சட சட வென படையெடுத்த வவ்வால்களின் கூட்டம் புரிய வைத்தது.

வீட்டு மாடியிலும் நவீன உணவகங்களிலும் உயரத்தே பார்த்த தோட்டம் நமக்கு இங்கே விமானத்தில் உள்ள தோட்டத்தை பார்த்து பகீர் என்றது

உள்ளே இன்னும் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது

மேலே உள்ள முக்கிய தூண் உடைந்து அதன் பாரத்தை ஒரு மரத் தூண் தாங்கி நின்றது. அது உடைந்தால் என்ன நடக்குமோ ?

ஆனால் இதை அனைத்தையும் பொருட்படுத்தாமல் உள்ளே அமைதியாக தம்பதிகள் சமேத அமர்ந்திருந்த சுதையாலான சுவாமி- ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சிலைகளை கண்டு மிரண்டு தான் போனோம். ( சுதை – எளிதாக சரி செய்து விடலாம் – யாராவது உதவ முன்வர வேண்டுமே )

என்ன அருமையான வேலைப்பாடு, வண்ணம் மிக்க சுதை வடிவங்கள்.

இன்னும் ஒரு தளம் மேலே ஏறினோம். ஆஹா, இங்கு ஆனந்தமாக பள்ளிகொண்ட பெருமாள். தேவிகள் இருவர் முகத்தில் மட்டும் எதோ ஒரு கவலை தெரிந்தது ?

திரும்ப வெளியில் வரும்போது மறுபடியும் ஹனுமனை பார்க்கும்போது – ஏதாவது செய்யுங்கள் என்று தன அண்ணலுக்கு தெரியாமல் சொல்வது போல ஒரு எண்ணம். எதற்காக அப்படி …அவர் காதில் விழுந்தால் பதில் …” எனக்கு உலகமடா !!” என்றல்லவோ இருக்கும்.

ஒரு குடைவரை – அதில் சிதைந்த ஓவியமும் உடையார் ராஜ ராஜ சோழர் பிறந்த நட்சத்திரமும் – திரு நந்திக்கரை

நண்பர் திரு. ஷங்கர் பல மாதங்களுக்கு முன் தான் குடைவரையில் பார்த்த ஒரு ஓவியத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவர் பெரிய அளவு படத்தை நேர்த்தியாக எடுத்து அனுப்பி வைத்திருந்தாலும் என்ன காரணத்தினாலோ அதை எடுத்துப் பார்க்க நேரம் அமையவே இல்லை. ஆனால் அதற்கு இப்படி ஒரு வேளை வரும் என்று நான் சற்றும் எதிர்ப்பாக்கவில்லை.

நண்பர் திரு. ராமன் அவர்கள் பழைய புத்தகக் கடை ஒன்றில் பழைய புகைப்படங்கள் இருப்பதாகவும், அவற்றைப் பார்த்தால் எனக்கு உதவும் போல தெரிகிறது என்றும் கூறினார். அது மட்டும் அல்லாமல் அதில் ஒன்றிரண்டை வருடி (ஸ்கான்) செய்தும் அனுப்பிவைத்தார். அதிலே ஒன்று அழகிய செப்புத் திருமேனி, மற்றொன்று புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் ஓவியப் படம், இரண்டுமே சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டவை!! இவற்றைப் பார்த்தவுடன் நிச்சயம் நமக்கு தேவை என்று அவரிடம் தெரிவித்தேன்.

சென்னை சென்ற சமயம் நானும், நண்பர் அரவிந்தும் அவற்றை ஒவ்வொன்றாக பார்த்து வந்த பொழுது, சில படங்களின் பின்புறத்தில் திரு நந்திக்கரை என்று பென்சிலால் எழுதிய எழுத்துக்கள் கண்ணில் பட்டன.

உடனே ஷங்கரை தொடர்பு கொண்டு சமீபத்தில் அவர் சென்ற பொழுது அவர் எடுத்து வந்த அத்தனைப் படங்களையும் கேட்டேன். அவரும் உடனே அனுப்பிவைத்தார். ( திரு நந்திக்கரை – கன்னியாக்குமரி மாவட்டம் – திருவட்டாரில் இருந்த சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவு – நாகர்கோயிலில் இருந்து நாற்பது கிலோமீட்டர் )

குடைவரையில் தற்போதைய உட்புறத் தோற்றம். (முதல் முறை அவர் படம் அனுப்பிய பொழுது பார்க்க முடியாததன் காரணம் இனி உங்களுக்கு புரியும்)

குடைவரையின் காலம் 8th CE ( அபிஷேக நீர் வெளியேறும் அமைப்பைக் கொண்டு இதன் காலம் நிர்ணயிக்கப்படுகிறது )

கைவசம் இருந்தும் நான் முதல் முறை காணத்தவறிய சுவர் ஓவியம்

பழைய புத்தகக் கடையில் கிடைத்தப் படங்களை பார்த்தவுடன் திறந்தன என் விழிகள்

அழகான விநாயகர் ஓவியம், மேலே ஒரு அருமையான கணம் ( பார்த்தால் காஞ்சி கைலாசநாதர் ஓவியங்களின் பாணியிலேயே உள்ளது ) இருந்தும் சுமார் அரை நூற்றாண்டு காலத்தில் நாம் இழந்திருப்பது …

மற்றுமொரு ஓவியம் இருந்தது, அதற்கான பொருத்தத்தையும் தேட கிடைத்தது…

இப்பொழுது படங்களை பாருங்கள்..

என்ன அழகான அருமையான ஓவியங்கள். இந்த பொக்கிஷங்களை முறையாக பாதுகாக்காமல் இப்படி அழிய விட்டு விட்டோமே!

மேலும் இரண்டு ஓவியங்கள் படங்களில் உள்ளன. அனால் தற்போது குடைவரையில் காணக் கிடைக்கவில்லை.

இங்கே சித்தரிக்கப்பட்டுள்ள காட்சி என்னவென்று தெரியவில்லை.

இந்த குடைவரையில் மேலும் ஒரு சரித்திர நிகழ்வின் முக்கிய தடயமும் உள்ளது.

உடையார் ஸ்ரீ இராஜ ராஜ சோழர் பிறந்தது ஐப்பசி சதயமா அல்லது சித்திரை சதயமா என்ற விவாதம் சில காலமாக உலவிக் கொண்டிருக்கிறது.

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள், தங்கள் திருவாரூர் நூலில் திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் உள்ள ஒரு கல்வெட்டைக் கொண்டு இதனை தெளிவு படுத்தி உள்ளார். அது திரு இராஜேந்திர சோழரின் கல்வெட்டு, அதில்

” நாம் பிறந்த ஆடி திருவாதிரையும்
நம் அய்யன் பிறந்தருளிய ஐப்பசி சதயமும் .. ”

10034
10031

என்று வருகிறது.

இந்த திரு நந்திக்கரை குடவரையில் உள்ள திரு ராஜ ராஜரின் கல்வெட்டு


185. On the east wall of the rock-cut iva shrine. Belongs to
the eighteenth year of Rajaraja I and records grant to the temple
for the celebration of a festival in Aippasi, Satabhisha, the birth-
day of the king. See Trav. Arch. Ser. t Vol. I, pp. 291-2.”

தான் பிறந்தது ஐப்பசி தான் என்று தெளிவு பட எடுத்துக் கூறுகிறது.

இந்த ஓவியத்தின் புகைப்படங்களுக்கு உரியவர் யார்? அவை எப்படி பழைய புத்தகக் கடைக்கு சென்றன என்பது தெரியவில்லை. யாரேனும் அறிந்திருந்தால் நிச்சயம் தொடர்பு கொள்ளவும்.

சேரன்மாதேவியில் உள்ள சோழ பாண்டிய ஆலயமும் அதன் ரகசியமும் – பாகம் 1

சேரன்மாதேவி – நண்பர் பிரதீப் சக்ரவர்த்தி கண்டிப்பாக நீங்கள் அங்கே போக வேண்டும் என்று சொல்லும்போதே எதிர்பார்ப்புகள் அதிகமாயின. திருநெல்வேலி என்றதுமே வறண்ட பிரதேசம் என்ற நினைப்பு பொய்யாகும் அளவிற்கு டிசம்பர் மாதத்தில் சாலையின் இரு புறங்களிலும் பச்சைக் கம்பளம் அதில் வளைந்து வளைந்து சாலையுடன் போட்டியிட்டது தாமிரபரணி. சிறிய சிறிய கிராமங்கள் – மனிதனின் ஓட்டத்தையும் மீறி அப்படியே ஸ்தம்பித்த நிலையில் (நல்லதா கெட்டதா?) வெள்ளந்தி மனிதர்கள் , முதியோர் சிறார் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் முகத்தில் கள்ளங் கபடமற்ற அந்த சிரிப்பு – கால வெள்ளத்தில் பின்னோக்கி பயணம் செய்வது போன்ற உணர்வு.

ஊரை நெருங்கியதும் ஒரு புதிய பாலம் வந்தது . அண்மையில் அமைக்கப்பட்டதால் ஆற்றங்கரை கோயிலுக்கு அதன் மேலே சென்று ஊருக்குள் புகுந்து தான் வழி பிரிய வேண்டும் என்றனர். சிறிய கிராமம், நடுவில் பெரிய கோவில் ஒன்று இருந்தும் முதலில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பக்தவத்சல பெருமாள் கோயிலை பார்த்துவிட்டு வருவோம் என்று நண்பர் அரவிந்த் கூறினார். வழி கேட்டுக்கொண்டே சென்றோம் – ஒன்று இரண்டு இடங்களில் வழிப் பலகைகள் வைத்திருந்தால் உதவியாக இருந்திருக்கும், பாதை குறுகியது, இருபக்கமும் கருவேல முட்செடிகள், நமது கிராமங்களில் சுகாதார முறைகள் பற்றி படமும் கூடவே காற்றில் வந்தது. முடிவில் ஆற்றங்கரை ஓரத்தில் பெரிய மதில் சுவர் தெரிந்தது. நமக்கு மிகவும் பரிச்சயமான தொல்லியல் துறையின் நீல அறிவிப்புப் பலகையை காணவில்லை. அதன் இடத்தில அழகிய அறிவிப்புப் பலகை இருந்தது.

வெளிக் கோபுரம் மொட்டை கோபுரம் தான், எனினும் அழகாக இருந்தது.

பல கல்வெட்டுகள் இருந்தும் அறிவிப்புப் பலகை கூறிய படி ராஜேந்திர சோழரின் கல்வெட்டு முக்கியமானது. சோழர் ஆதிக்கம் இது வரையிலும் இருந்ததற்கு சான்று. சற்றே அதிகமாக இருந்தாலும் அழகாகவே இருந்தன வெளி மண்டபத்து சிற்ப வேலைப்பாடுகள்.




அதிலும் இந்த சிம்மத் தூண் மிக அருமை.

இன்னொரு சிறப்பான சிற்பம் இந்த நரசிம்ம வடிவம் – அமர்ந்த கோலத்தில் தலையில் ஆதிசேஷன் அழகாக குடை பிடிப்பது அருமை.

உள்ளே சென்றோம். ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் நின்ற கோலத்தில் …


பாண்டிய நாட்டு கோயில்களை பற்றி மேலும் பார்த்து தெரிந்துக்கொள்ள அர்த்த மண்டபத்தின் மேலே ஏறி விமானத்தை பார்க்க வேண்டும் என்றோம். வெளியே அழைத்துச் சென்று அங்கேயா என்றார்கள். குறைவாக எடை போட்டு விட்டோம் , மண்டபத்தின் உயரம் மிக அதிகம், அவர்களிடம் இருந்த இரும்பு ஏணி செங்குத்தாக நின்றால் தான் மேல் தளத்தை தொட்டது. என்ன செய்வது என்று சுற்றி முற்றி பார்த்தால் கூட வந்த அரவிந்தை காணவில்லை, தொல்லியல் துறை நண்பரையும் காணவில்லை. கருங்கல் மண்டபத்தில் எப்படி மாயமாக மறைந்தார்கள் என்று வியந்து நின்றபோது மேலும் ஒரு அதிர்ச்சி. தரையின் அடியில் இருந்து குரல்கள் – சுற்றி பார்த்தால் ரகசியம் தெரிந்தது..

தொடரும் …

ஆதி தம்பதியினரிடையே இருந்த பரஸ்பரம்

முதலில் கொட்டும் மழையின் நடுவில் லண்டன் பேருந்து ஓட்டுனரிடம் அருங்காட்சியகம் போக வழி கேட்டது பெரிய தவறு. அன்றோ ஏதோ சாலையில் மராமத்துப் பணி நடக்கின்றதால் (அங்கும் !!!) பல சாலைகள் டைவேர்சண் வேறு – கூடவே சுமைதாங்கி போல முதுகில் புதிதாக வாங்கிய கிரிக்கெட் மட்டை வேறு. நட்ட நடு காட்டில் கண்ணை கட்டி விட்டது போல எங்கோ ஒரு இடத்தில இறக்கி விட்டுவிட்டு பேருந்து தன பாதையில் சென்று விட்டது. இங்கும் அங்கும் சுற்றி நாலு பேரிடம் வழி கேட்டு அவர்கள் தங்கள் பங்குக்கு நாலு பக்கம் வழி காட்டினர். முடிவில் செலவை பார்க்காமல் கைபேசியின் ஜி பி எஸ் மூலம் பார்த்து சென்றால் அது வேறொரு அருங்காட்சியகம் (Museum of London)!! நான் செல்ல வேண்டியது – British Museum!!.

மீண்டும் பேருந்து மற்றும் ரயில் பயணம் . முடிவில் பிரம்மாண்ட தோற்றத்துடன் இருந்த அருங்காட்சியகத்தை அடைந்தேன். வாயிலிலேயே தொல்லை – வாயிற் காப்போன் முதுகில் ”அது என்ன” என்று கேட்டான். முடிவில் தனது இத்தனை வருட சர்வீசில் பல வினோத மனிதர்களை பார்த்ததாகவும் ஆனால் இன்று தான் கிரிக்கெட் மட்டையுடன் அருங்காட்சியகம் வந்த ஒருவரை சந்திப்பதாக கூறி உள்ளே செல்ல அனுமதி கொடுத்தான். ஆனால் அன்று அவர்களுடன் எனது மோதலுக்கு இது ஒரு துவக்கம் தான். நாள் முழுவதும் அரைமணிக்கு ஒரு முறை அருங்காட்சியக காப்பாளருடன் சண்டை. எதற்கு…மேலே படியுங்கள்.

செப்புத் திருமேனிகள் நிறைந்த அறை என்றவுடன் அங்கேயே உட்கார்ந்து விட்டேன். அதுவும் இந்த சிற்பம்..

shiva+parvathi

பெயர் பலகை 11th C CE என்றது , அதுவும் சிவ பார்வதி கல்யாணம் – அதாவது கல்யாண சுந்தர மூர்த்தி என்றது. நாம் முன்னரே இந்த காலத்து சோழ கல்யாண சுந்தர முர்த்தி பார்த்தோம். நீங்களே ஒப்பிட்டு பாருங்கள்.

முதலில் இந்த சிற்பம் சோழர் சிற்பத்தில் மூன்றில் ஒரு பங்கு தான் உயரம், உடல் தோற்ற்றம், முக பாவம் அனைத்தும் பதினோராம் நூற்றாண்டு சோழர் சிலைகளை போல நறுக்கென்று இல்லாமல் இருப்பது தெரிகிறது. புகழ் பெற்ற பல்லவர் கால வடக்களத்தூர் கல்யாண சுந்தர மூர்த்தி சிலையின் நல்ல படங்கள் கிடைத்தால் நன்றாக ஒப்பிடலாம். என்னை பொறுத்த மட்டில் இந்த சிலை கண்டிப்பாக 9th C CE இருக்க வேண்டும்.

பார்வதியின் கழுத்தில் இருக்கும் தாலி போன்ற அணியை நாம் இதுவரை பார்த்ததில்லை. மேலும் கல்யாண சுந்தர மூர்த்தி வடிவங்களுக்கே உரியதான ’கைப் பிடித்தல்’ இல்லாததால் இதனை நாம் ஆலிங்கன முர்த்தி என்றே அழைக்க முடியும்.

செப்புத்திருமேனியின் அழகை முழுவதும் ரசிக்க முன்னழகு மட்டும் அல்ல, பின்னழகும் பார்க்க வேண்டும் என்று கூறுவார். அருங்காட்சியகங்கள் இதை மனதில் கொண்டு சிலைகளை பார்வையாளர் சுற்றி வந்து பார்க்கும் வண்ணம் அமைக்க வேண்டும். இந்த சிலையின் பின்னழகை படம் பிடிக்க நான் பட்ட பாடு…..


தற்செயலாக கண்ணாடியின் மீது சாய்ந்துவிட்டேன், உடனே அலாரம் மணி அடிக்க , மீண்டும் காவலர்களுடன் போராட்டம் – சிலையின் பின் புறம் எதற்கு படம் பிடிக்கிறாய் என்று பல கேள்விகள்.

ஆனால் அதற்க்கு கிடைத்த பலன்…ஆஹா.

முன்னழகைக் காணில் முனிவர்தாம் தவம் செய்வரோ
பின்னழகைக் காணில் பிரமன் தான் தவம் செய்வனோ (மாணிக்கவாசகர்)

பொதுவாக சிவன் உமையை அணைத்து பிடிப்பதே ஆலிங்கன மூர்த்தி என்பர் , எனினும் இங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு தம்பதியினரிடையே இருந்த பரஸ்பரம் – அன்யோன்னியம் , இன்று நம் இளைய காதல் ஜோடிகள் பாணியில் , என்னே அந்த கலைஞனின் திறன் !!

பதவியில் இருப்பவர் பழைய ஆட்சியின் ஆணையை ஆளும் விதம்

தற்போதைய அரசியல் சூழலில் ஆட்சி மாறியதுமே முந்தைய ஆட்சியின் பொது அமலாக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் தடு ( தடம்) மாறும் ஏளனத்தை தினம் தினம் நாம் பார்க்கின்றோம். ஆனால் அந்தக் காலத்து மன்னர் ஆட்சியில் இது எப்படி இருந்தது என்ற கேள்வி எழுகிறது ..இன்றோ மக்கள் ஆட்சி. மக்கள் பிரதி நிதி நடைமுறை பற்றிய திட்டங்களே இவை என்ற கருதும் பொது அன்றைய மன்னர் ஆட்சியில் மன்னன் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று இருந்திருக்க வேண்டும். அவர் கூறினால் எதிர் மறை விவாதம் கிடையாது. எனினும் அவர்கள் எப்படி நடந்துக்கொண்டனர் என்பதை தெரிந்துக்கொள்ள மீண்டும் திருகழுகுன்றம் செல்ல வேண்டும். பலரும் சென்ற இடம் என்றாலும் அங்கு பலருக்கு தெரியாத ஒரு அற்புதம் இருக்கிறது. நாம் முன்னரே பார்த்த மலை மேல் உள்ள ஆலயத்துக்கு செல்லும் வழியில் உள்ள பல்லவர் காலத்து குடவரைக் கோயில்.

பாதி வழி ஏறியபின் மூச்சிரைக்க மேலே போகலாமா வேண்டாமா என்று சற்று நம்மை ஆசுவாசப் படுத்த நிற்கும் இடம் – மேலே செங்குத்தான அடுத்த வரிசை புதிய வழியில் படிக்கட்டு கண்ணை கட்ட, மலையை சுற்றி பழைய பாதை ஒன்றும் இருக்கிறது. அதில் சென்று திரும்பியதும் இடது புறம் மலையில் குடையப்பட்ட அற்புத ஒரு கல் மண்டபம் தெரிகிறது.

தொல்லியல் துறை பாதுகாப்பில் இருக்கிறது என்றாலும் எப்போதுமே பூட்டப்பட்டே இருக்கிறது – இது நல்லதா கெட்டதா என்று சொல்ல முடியவில்லை.

குடைவரை தூண்கள் மற்றும் சில அம்சங்களை வைத்து இது மகேந்திர பல்லவரின் காலத்திற்கு அடுத்து என்று கருதப்படுகிறது. ( 630 CE பின்னர் ) . குடைவரை அமைப்பு இதோ.


உள்ளே கருவறையில் அருமையான லிங்கம் உள்ளது. ( பின் சுவரில் சோமாஸ்கந்தர் வடிவம் இல்லை )

அடுத்து இருபுறமும் கருவறை காவலர்கள் ( புடைப்புச் சிற்பம் )
.

தூண்கள் நாம் இதுவரை கண்ட மகேந்திர குடைவரைகளை விட சற்றே மெலிந்து காட்சி அளிக்கின்றன. மேலும் கருவறைக்கு இருபுறமும் நான்முகன் மற்றும் பெருமாளின் சிற்ப்பங்கள் வருகின்றன.


முக மண்டபத்தில் இரு பக்கமும் தேவர்கள் இருவர் உள்ளனர். இவர்கள் யார் என்று அடையாளம் காண முடியவில்லை.

சரி இப்போது கல்வெட்டுக்கு வருவோம் ( Epigraphica Indica Vol 3 )
363 பக்கம்

ஸ்வஸ்திஸ்ரீ கோவி ராஜகேஸரிபரம்மர்க்கு யாண்டு இருபத்தி ஏழாவது
களத்தூர் கோட்டத்துட்டன் கூற்று திருக்கழுக்குன்றத்து ஸ்ரீமூலஸ்தானத்துப் பெருமான் அடிகளுக்கு இறையிலியாக ஸ்கந்தசிஷ்யன் குடுத்தமையப்படியே பாதாவிகொண்ட நரசிங்கப்பொட்டரையரும் அப்பரிசே ரக்‌ஷித்தமையில் ஆண்டுரையான் குணவான் மகன் புட்டன் (புத்தன்) விண்ணப்பித்தினால் பூர்வராஜாக்கள் வைத்தபடியே வைத்தேன் இராஜகேசரிபரம்மன் இத்தர்மம் ரக்‌ஷித்தான் அடி என் முடி மேலினே

அதாவது ” போற்றி! வளம் பெருகட்டும்!! அரசர் ராஜகேசரிவர்மரின் 27ஆம் ஆண்டுக் காலம், ஸ்கந்தசிஷ்யன் இந்த நிலங்களை கொடையாகவும், களத்தூர் கோட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் உள்ள மூலத்தானவருக்கு பாத காணிக்கையாக அளிக்கப்பட்டதால் புனிதமான இந்த நிலத்துக்கு வரிப்பணம் செலுத்த தேவையின்றியும் ஏற்கனவே பூர்வ ராஜாக்களாலும், வாதாபியை வென்ற நரசிங்க பொட்டரையர் உறுதி செய்ததாலும், ராஜகேசரி வர்மனாகிய நானும் ஆந்துரையைச் சேர்ந்த குணவான் மகனாகிய புத்தன் வேண்டுகோளுக்கிணங்க உறுதி செய்கிறேன்.இந்தக் கொடையை பாதுகாக்கும் ஒவ்வொருவர் பாதமும் என் சிரத்திலும் பதியட்டும்.

ஸ்கந்தசிஷ்யன் கொடுத்த கொடையை , நரசிம்ம பல்லவர் உறுதி செய்ய ( 630 CE) , இருநூற்றி அறுபத்தி எழு ஆண்டுகள் பின்னர் வந்த சோழ அரசன் 897 CE யில் என்ன ஒரு பெருந்தன்மையுடன் முன்னர்வர்களை மதிப்புடன் வாதாபி கொண்டான் என்ற அடைமொழியை கூட விடாமல் கல்வெட்டாக செதுக்கி உறுதி செய்கிறான் !!! அதுவும் இத்தர்மத்தை பாதுகாப்போர் கால் பாதங்களை தன் தலையினில் பதித்துக் கொள்வதாக கல்வெட்டில் எழுதியுள்ள பணிவும்.. ஆகா.. ! அரசர் போற்றி! ஆண்டான் போற்றி!!

கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு கல்யாணசுந்தர வடிவம்

போகும் வழி எல்லாம் நல்ல மழை, ஆனால் கங்கை கொண்ட சோழபுரம் அடைந்ததுமே சரியாக நமக்கென்றே நின்று ஆதவன் பளீர் என்று தனது ஆதிக்கத்தை செலுத்த துவங்கினான். மழையில் நனைந்த வரலாற்றுச் சின்னம் கண்முன்னே பளீர் என்று ஜொலித்தது.

ஆரம்பமே அங்கு இருந்த ‘ அதிகாரிகளுடன்’ வாக்கு வாதத்தோடுதான். கருவறையை படம் பிடிக்க மாட்டோம், நாங்கள் செய்யும் பணி இது என்று என்ன சொன்னாலும் அவர்கள் கேட்க வில்லை, தொல்லியல் துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்த இடத்திலும் புகைப்படம் எடுக்கலாம், பணம் கட்ட தேவை இல்லை என்று அதட்டியதும் சிட்டாய்ப் பறந்து விட்டனர். வெளியில் எடுத்து முடித்த பின்னர், மீண்டும் அவர்களது தொல்லை துவங்கியது. இம்முறையும் தோல்விதானோ என்று மனம் தளரும் தருவாயில் ஒரு அதிர்ச்சி. உள்ளே ஏதோ ஒரு பெரிய நிகழ்ச்சி, ஒரே கூட்டம், வீடியோ படமே எடுத்துக் கொண்டு இருந்தது அந்தக் கூட்டம். அவர்கள் எடுக்கும் பொது நாங்கள் ஏன் எடுக்கக் கூடாது என்று சத்தம் போட்டு, அவர்களையும் மீறி படம் எடுக்க துவங்கினோம். அப்போது பார்த்து மின் தடை !!

முடிந்த வரை எது எதுவெனப் பார்த்துப் பார்த்துத் தடவி தடவி படங்களை எடுத்தோம். ஆஹா அந்த வாயிற் காவலர்கள் தான் என்ன ஒரு கம்பீரம். இவர்கள் இங்கே இருக்க ”அவர்கள்” அங்கே எதற்கு என்று தோன்றியது.

அப்பப்பா ! எத்தனை பெரிய சிலை

கால்களுக்கு அடியில் கருப்பாக தெரிகிறதே ? அது என்ன ?

ஆம், நமது கேமராவின் மூடி…

இவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தோம் – சுவரின் அந்த பக்கம் இன்னும் ஒரு சிற்பம் – புடைப்புச் சிற்பம். ஆனால் இரண்டிற்கும் உள்ள அளவு வித்யாசமமானது அதை வடித்த கலைஞனின் திறமையை வெளிப்படுத்தியது. பொதுவாக வரையறுக்கப்பட்ட அளவிற்கு வரைவதோ வடிப்பதோ சுலபம். அதையே மிகவும் பெரிது படுத்தியோ அல்லது சிறிது படுத்துவதோ கடினம் – அங்க அமைப்பு சரியாக வராது.

மின்தடையின் காரணமாக வெளிச்சம் குறைவு. முக்கியமான இடம் சரியாக படம் எடுக்க முடியவில்லை.
எனினும் கதை விளங்கியது. பல முனிவர்கள் முன்னிலையிலும், பிரம்மன் முன்னிலையிலும் மீனாக்ஷி திருக்கல்யாணம நடக்கிறது.

கல்யாண சுந்தரராக சிவன், மணப்பெண்ணுக்கே உரித்தான வெட்கத்துடன் மீனாக்ஷி, பெண்ணை தாரை வாற்றுக் கொடுக்கும் பெருமாள் மற்றும் லக்ஷ்மி

உடனே நினைவுக்கு வந்தது நாம் முன்னரே பார்த்த செப்புத் திருமேனி.

இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை அபாரம்


லட்சுமி நிற்கும் பாணி.

பெருமாள் சற்றே முன்ப்பக்கம் குனிந்து இருப்பது போல உள்ளது

ஆனால் மீனாட்சியின் அந்த இடது கை, சற்றே வெட்கத்துடன் கலந்த புன்முறுவல்


இன்னும் அபாரம் பெருமாளின் கடி வஸ்திரம் ( சிவனுக்கு அப்படி இல்லை !)

நாம் சென்ற பதிவில் பார்த்தது போல

செப்புத்திருமேனியுடன் ஒப்பிட்டு பாருங்கள்.

ஒன்று கல் புடைப்புச் சிற்பம், மற்றொன்று செப்புத்திருமேனி , இருந்தும் இரண்டிலும் கலைஞன் தனக்கே உரிய கலையுணர்ச்சியில் சிற்ப விதிகளை வெளிகொணர்ந்த விதம் அருமை.

அங்கதம் தேடி – வானர இளவரசன் அல்ல

ஆபரணங்களின் மீது மனிதனுக்கு உண்டான தீவிர பிடிப்பு எப்போது துவங்கியது என கடவுள் நன்கு அறிவார். கிளிஞ்சல் ஓடுகளில் துவங்கி, மணிகளிலிருந்து, பனையோட்டு காதணிகள் என நிலையான வளர்ச்சி அடைந்து தங்கம் எனும் பசுமஞ்சள் உலோகத்தில் உயர்ந்த கற்கள் பதிக்கப்பெற்ற ஆபரணங்கள் வரை படிப்படியாக முன்னேறியது. அதன் பின்னர் என்ன சொல்வது…ஒரே ஓட்டம் தான்..தங்க ஓட்டம். எனினும் இன்று நாம் சற்றே காலத்தை பின்னோக்கி கடந்து செல்ல இருக்கிறோம். அரசர்கள் தங்கத்தை வாரி வாரி கொடையாக அளித்த காலங்களில், அவற்றை வைத்து எவ்வாறு இறைவனை அலங்கரித்தார்கள் என காணப் போகிறோம். ஏன் இந்த திடீர் தேடல் என நீங்கள் கேட்பது புரிகிறது. நமது நோக்கமே ஒரு அபூர்வமான ஆபரணத்தை அடையாளம் காண்பதே. அதன் பெயரோ விந்தையாக நாம் மிகவும் அறிந்த கிஷ்கிந்தையின் இளவரசனாகிய அங்கதனின் பெயராகவே உள்ளது.

நம்முடைய தேடலில் நமக்கு உதவியது இரண்டு அற்புதமான சோழர் கால வெண்கல சிற்பங்கள். இரண்டுமே நியூயோர்க்கில் உள்ளன. ஒன்று மெட்ரோபோலிடன் அருங்காட்சியகத்திலும் மற்றது ப்ரூக்ளின் அருங்காட்சியகத்திலும் உள்ளன.

இவை இரண்டுமே கி.பி. 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. சந்திரசேகர வடிவம் கொண்ட சிவனும் மற்றும் விஷ்ணுவும் – இருவருமே சமபங்க நிலையில் (நேரான தோற்றம்) தங்களது மேல்கரங்களில் வழக்கமான ஆயுதங்களுடன் காட்சி அளிக்கின்றனர் – சிவனது கைகளில் மானும், மழுவும் ஏந்தி உள்ளார். விஷ்ணு சங்கு சக்கரம் ஏந்தி உள்ளார்.

ப்ரூக்ளின் அருங்காட்சியகத்தில் இந்த அற்புத வெண்கல சிலை வந்து சேர்ந்த விதம் மிகவும் சுவையானது. (இந்த இணைப்பிலிருந்து கிடைத்த படங்களுக்கு நன்றி)

மெட்ரோபோலிடன் மியூசியத்தை சேர்ந்த விஷ்ணுவின் சிலையில் இருந்து நாம் துவங்குவோம்.

கிரீடம் மிகவும் அழகாக உள்ளது. மேலும் ஒரு சிறிய பட்டை அதன் அடி வரை செல்கிறது. இதற்கு பட்டிகை என்று பெயர். அது சேர்ந்திருக்கும் பொருளின் தன்மையை பொருத்து அதன் பெயரும் மாறுபடும். உதாரணத்திற்கு இரத்தின பட்டிகை.

கி.பி. பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சோழர் கால வெண்கல சிலையில் (970 CE – எப்படி இத்தனை உறுதியாக இதற்க்கான காலத்தை கணக்கிட்டார்கள் என தெரியவில்லை),புரிநூல் நேராக மார்பில் இருந்து இடுப்பிற்கு வருகிறது. (தொன்மையான விஷ்ணு திருமேனிகள் பதிவில் நாம் கண்டது புரிநூல் மூன்றாக பிரிந்து ஒன்று வலது முன்கையில் மேலே செல்வது போல இருக்கும் – இவ்வாறு அணிவதை நிவீத முறை என கூறுவர்)

அடுத்து வயிற்றில் உள்ள பட்டை – இது இடுப்பாடையை இறுக்கியிருக்கும் பட்டையாக இல்லாமல், அலங்காரத்திற்கு அணியும் உதர பந்தனத்தை போன்றதொரு அணியாகவே உள்ளது. இந்த பட்டைக்கு பெயர் கடி பந்தனமாகும்.

அடுத்து கைகளில் அந்த அணிகலன் உள்ளத என்று பாப்போம். இந்த கைப்பட்டைக்கு கேயூரம் என்று பெயர்.

ராஜேஷ் மற்றும் கார்த்திக் அவர்களுக்கு மிக்க நன்றி. அவர்களது வலைதளமாகிய ஆக்ருதியில் சிற்பத்தின் பாகங்களை அருமையாக விளக்கி உள்ளனர். அதன் மூலம் நாம் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.

நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பட்டையின் கொக்கி சிம்ம முகம் மேலும் மிகவும் அழகுற தொங்கிகொண்டிருக்கும் யூ வடிவ ஆடை கடி வஸ்திரம் ஆகும்.

வலது கரம் பாதுகாக்கும் அபாய ஹஸ்தமாக உள்ளதை கவனிக்கவும்.

இடது கையோ மிகவும் அனாயசமாக இடது புற இடுப்பில் வைத்திருப்பதாக உள்ளது. இதற்கு கட்யவலம்பிதா நிலை என்று பெயர். இவ்வாறு இடுப்பில் இருக்கும் கரத்திற்கு கடி ஹஸ்தம் என்று பெயர்.

இன்னும் அங்கதம் காணவில்லையே.

சந்திர சேகர வெண்கல சிலையில் இதனை காண முடிகிறதா என்று பாப்போம்.

விஷ்ணுவின் சிலை போன்றே வலது கரம் அபாய ஹஸ்தம் கொண்டுள்ளது. ஆனால் இடது கை வேறுபட்டுள்ளது.

ஒரே போன்று தொன்று இரண்டு நிலைகள் உள்ளன. கடக ஹஸ்தம் மற்றும் சிம்ம கர்ண ஹஸ்தம்.

இவை இரண்டிலும் பெரிய வித்தியாசம் இல்லை. இருப்பினும், சிம்ம கரணத்தில் நடுவிரல் சிறிது விரிந்திருக்கும். பொதுவாக கடக ஹஸ்தம் பல்வேறு பெண் தெய்வ திருமேனிகளில் கரத்திலே ஒரு பூவை தாங்கி இருக்கும் விதமாகக் காணப்படும். (மலர்ந்த மலர்களை இறைவியின் கரத்தில் வைப்பது வழக்கம்). ஆக, நாம் இதை ஆராய்ந்து பார்க்கும்போது, நடுவிரல் சிறிது விரிந்திருக்கவே, இது சிம்ம காரணமாக இருக்க கூடும். (திரு. கோபிநாத் அவர்களின் Elements of Hindu Iconography -இல் இரண்டு முத்திரைகளும் ஒன்று போலவே கருதப்படுகின்றன. இவற்றை மேலும் தெளிவாக ஆராய மேலும் பலரின் புத்தகங்களை தேட வேண்டும்)

இப்போது நமது கண்களுக்கு வித்தை காட்டும் அந்த அங்கதம் – இது ஒரு கை அணி ஆகும். ஆனால் இது வரை நாம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் அது நன்றாக மறைந்துள்ளது. அதை காண்பதற்கும் நாம் சிலையின் பின்புறம் சென்று பார்க்க வேண்டும்.

இப்போது தெரிகிறதா? ஆம். இது தான் அங்கதம் – தோள்வளை என்ற மேல் கை ஆபரணம் இது.

படங்களுக்கு நன்றி : ஆக்ருதி , ப்ரூக்ளின் மற்றும் மெட்ரோபோலிடன் அருங்காட்சியகம் .

விரல் வித்தை

கை நீட்டுவது, விரல் நீட்டுவது என்பதே சற்று சர்ச்சைக்குரிய விஷயம், அதுவும் கற்சிற்பம் கை நீட்டி எதை உணர்த்துவது என்பதை புரிந்துக் கொள்வது எவ்வளவு கடினம் என்பதை இன்று பார்க்கப் போகிறோம். ஆமாம், தோழி காத்தி அவர்களுடன் விளையாட்டாக நடந்த விவாதத்தில் தக்கோலம் வாயிற்காப்போன் விரல் வித்தை பற்றிய கேள்வி எழுந்தது ( படங்களுக்கு நன்றி நண்பர் அரவிந்த் and மற்றும் வரலாறு.காம் மற்றும் திருமதி சுபாஷினி அவர்கள் சட்டென வரைந்து கொடுத்த ஓவியங்கள்).

முதலில் படங்களை பாருங்கள்


பல கை முத்திரைகள் இருந்தும் இன்று நாம் பார்க்க இருப்பவை ஒரே போல இருக்கும் இரு முத்திரைகள். ஒன்று ஸூசி ஹஸ்தம், இன்னொன்று தர்ஜனி ஹஸ்தம்.

விடை தேடி திரு கோபிநாத் ராவ் அவர்களது ” Elements of Hindu Iconography ‘ நூலை நாடினேன்.

“Suchi-hasta has been misunderstood by some Sanskrit scholars to mean the hand that carries a suchl or needle. ……………………….. But, like the Tarjani hasta, the Suchl-hasta, also denotes a hand-pose, in which the projected forefinger points to an object below, whereas in the tarjani-hasta the forefinger has to point upwards, as if the owner of the hand is warning or scolding another”

அதாவது ” ஸூசி ஹஸ்தம் என்பது சில வடமொழி ஆய்வாளர்களால் தவறுதலாக கையில் ஊசி பிடித்து இருப்பது என்று பொருள்கொள்ளப்படுகிறது ……………………. ஆனால் தர்ஜனி ஹஸ்தம் போல ஸூசி ஹஸ்தமும் ஒரு கை முத்திரை. அதில் ஆள்காட்டி விரல் கீழே இருக்கும் பொருளை சுட்டிக்காட்டுகிறது, தர்ஜனி முத்திரை ஆள் காட்டி விரல் மேல்நோக்கி, எதிரில் இருப்பவரை எச்சரிக்கும் வண்ணமோ, கண்டிக்கும் வண்ணமோ இருக்கும்”

மீண்டும் ஒருமுறை தக்கோலம் வாயிற்காப்போன்களின் கை முத்திரையை அருகில் சென்று பாருங்கள்.

இந்த அற்புத சிற்பங்களை நன்றாகத் துடைத்துப் பாதுகாக்க நம்மால் முடியவில்லையே என்று வருத்தமாக உள்ளது. ஒருவர் நமக்கு தன் அவல நிலையை காட்டுவது போலவும், இன்னொருவரோ என் நிலைமையை பார்க்காதீர்கள் என்று வேறு பக்கம் கை காட்டுவது போலவும் உள்ளது.

கண்டிப்பாக இரண்டுமே தர்ஜனி ஹஸ்தம் தான்

அடுத்து தஞ்சை பெரிய கோயில் செல்வோம். அங்கே என்ன முத்திரை?

இங்கே சற்று சிக்கலாக தான் உள்ளது.

இவர்கள் எச்சரிக்கை செய்கிறார்களா இல்லை அவர் மிக பெரியவர் என்பதை காட்டுகிறார்களா?

மீண்டும் ஒருமுறை திரு கோபிநாத் ராவ் அவர்கள் சொன்னதை கேட்போம். ஸூசி ஹஸ்தம் கீழே உள்ள பொருளை நோக்கி கை கட்டுவது என்றாரே.

இது போன்ற சிலைகளை பார்ப்போமா?

கொடும்பாளூர் மூவர் கோயில் காலசம்ஹார மூர்த்தி

கண்டிப்பாக ஸூசி ஹஸ்தம் தான்.

அடுத்து தாராசுரம் யானை உரி போர்த்திய முர்த்தி

இங்கேயும் ஸூசி தான்!

அடுத்து இரண்டு என்ன வகை?

இருவருமே கண்டிப்பாக கண்டிக்கும் பாவத்தில் இல்லை. திரும்ப ஒரு முறை திரு கோபிநாத் ராவ் வேறொரு இடத்தில என்ன சொல்கிறார் என்று பாருங்கள். எல்லோரா உமாசஹிதர் பற்றி அவர் கூறும் பொது


“Siva is herein holding in one of his left hands the upper part of the garment of his consort and keeps one of his right hands in the suchi pose and the other appears to be carrying a book. He is evidently giving out to Uma one of the puranas…….”

அதாவது ” சிவன் தனது இடது கையில் உமையின் மேலாடையை பிடித்துக் கொண்டு, மேல் வலக் கையை ஸூசி முத்திரையிலும் கீழ் வலக்கையில் ஒரு நூலை பிடிப்பது போல உள்ளது. உமையம்மைக்கு ஏதோ புராணத்தை பற்றிய விளக்கத்தை …..”
இங்கே விரல் மேல் நோக்கி தான் உள்ளது. அப்போது மகேசன் உமையை கண்டிக்கிறாரா? கவனி என்று அதட்டுகிறாரா? இங்கும் அங்கும் பார்த்தால் மேலாடையை பிடித்து கவனம் இங்கே இருக்கட்டும் என்று …..

பனைமலை பல்லவகால ஓவியம் உயிர் பெறுகின்றது. பாகம் 2

அனைவரும் சென்ற பதிவை பார்த்து பரவசமடைந்து அடுத்த பதிவுக்காக ஆவலாக எதிர்பார்த்து காத்து நிற்பது தெரிகிறது. ஆனால் அதற்கு முன்னர் நண்பர்திரு ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி. பதிவைப் படித்தவுடன் தன்னிடத்தில் இருந்த குறிப்பு ஒன்றில் இந்த அற்புத ஓவியத்தை கண்டுபிடித்தவரின் வர்ணனை இருப்பதை சுட்டிக்காட்டி நகல் எடுத்து எனக்கு அனுப்பி உள்ளார். ‘Art I Adore’ என்ற ஸ்ரீ அமல் கோஸ் அவர்களது நூலில் – ‘A book on art based on interviews with K. Ramamurty’ என்ற குறிப்பை படித்தவுடன் மெய் சிலிர்த்தது. நீங்களும் படியுங்கள்.

ஆரம்பமே படு சுவாரசீயம் – ஒரு ரசீது. இந்தியா சுதந்திரம் அடைந்து நான்கு ஆண்டுகள் பிறகு ஒரு தேதியில் – ஒரு அருமையான சுவரோவியத்தை முதல் முதலில் நகல் எடுத்து வேலை இல்லாத ஓவியனின் ரசீது.

” This is to certify that his Museum purchased from Shri K. Ramamurti, artist, a copy of the mural painting of the Pallava period from the temple at Panamalai. Mr. Ramamurti was the very first artist to copy this interesting mural.- Superintendent, Government Museum, Madras ”

ஆஹா. மேலும் தொடர்ந்தது அவரது வர்ணனை.

திரு ராமமூர்த்தி அவர்கள் ஒருநாள் ‘தி ஹிந்து ‘ நாளேட்டில், புதுச்சேரி ஆசிரமத்தில் தங்கி இருந்த அயல்நாட்டவர் ஒருவர் தான் பனைமலை மலையில் ஒரு கோயில் சுவரில் கண்ட சில கோடுகள் சிதைந்த பிரெச்கோ ஓவியமாக இருக்கக் கூடும், என்ற தகவலை படித்தார்.

உடனே ஆர்வம் அடைந்த அவர், தான் இதை வெளிக் கொணர்ந்தால் சரித்திரத்தில் இடம் பிடிக்கும் அபார கண்டுபிடிப்பாக இருக்கும் என்று எண்ணி உடனே புறப்பட தயார் ஆனார். எனினும் பயணத்துக்கு போதுமான பணம் அவரிடத்தில் இல்லை. தன மனைவியின் நகைகளை அடமானம் வைத்து பணம் திரட்டி அடுத்த நாள் காலை பனைமலைக்கு புறப்பட்டார்.

அங்கு சென்றதும் முதலில் ஒன்றுமே கிடைக்கவில்லை. சுற்றி சுற்றித் தேடியும் ஓவியச் சுவடுகள் எங்குமே தென்படவில்லை. ஆலய பூசாரிகளுக்கும் அப்படி ஒரு ஓவியம் அங்கு இருப்பதாக தெரியவில்லை. எனினும் ராமமூர்த்தி அவர்கள் மனம் தளராது தேடினார். இரவு அங்கேயே படுத்து காலையில் எழுந்து அடியடியாக தேடினார்.

பதினைந்து நாட்கள் தேடிய பின்னர், ஒரு செவிரில் சில எச்சங்கள் தெரிந்தன. அவற்றை உற்றுப் பார்க்கும் பொது ஒரு முகம் காட்சி தந்தது. சுதை பூச்சால் மறைந்து இருந்த கோடுகளை வெளிக்கொணர கவனமாக அவற்றை விலக்கினார். உள்ளே பனைமலை பார்வதி (உமையம்மை).

தனது குருநாதர் தேவிபிரசாத் அவர்கள் கற்றுக் கொடுத்த பாணியில், அப்படியே நகல் எடுத்தார். என்றும் காலத்தை வென்று அது நிற்க வேண்டும் என்று அதனை சென்னை அருகாட்சியகத்துக்க்கு கொடுத்தார்.

இந்த நூலிற்காக அவரைப் பேட்டி கண்டு அந்த கண்டுபிடிப்பு பற்றி வேறு ஏதாவது நினைவுக்கு வருகிறதா என்று கேட்ட பொது.

” அன்று நான் அந்த பனைமலை ஓவியத்தை கண்ட பொது அடைந்த, அந்த கணத்தில், நான் அடைந்த மகிழ்ச்சியை தவிர வேறு ஒன்றுமே நினைவில் இல்லை” என்றாராம்.

இன்று அவர் எடுத்த நகல் இன்னும் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால் கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

மேலே செல்வதற்கு முன்னர், அந்த பல்லவ ஓவியனின் அபார கலை திறமையை நீங்கள் ஒரு ஓவியனின் கண்ணோட்டத்தில் ரசிக்க சில படங்கள். முகத்தின் வட்ட வடிவை கட்ட அவன் அந்த பச்சை நிறத்தை உபயோகிப்பதும் , நெற்றியிலிருந்து வளரும் மூக்கின் வடிவத்தை உணர்த்த வர்ணத்தை நீக்கி – அப்பப்பா அபாரம.

ஓவியத்தை வரைந்த ஓவியரை, ஆயிரம் ஆண்டுகள் பிறகு அதனை மீண்டும் வெளி கொண்டு வந்த நகல் எடுத்த ஓவியருக்கும் ஒரு பெரிய நன்றி கூறி, நமது தொடர்பணியை ஓவியர் திருமதி சுபாசினி அவர்களுடன் ஒப்படைக்கிறோம்.

அவர் கூறுகிறார்.

”பனைமலை உமையம்மையை வரைவது மிகவும் அருமையான அனுபவம். நமக்கு கிடைத்த மிச்சங்களை வைத்து அழிந்து போன பாகங்களைக் கற்பனை செய்து வரைவது மகிழ்ச்சிகரமாக இருந்தது. அதுவும் திரு விஜய் அவர்களின் உதவியுடன் இதற்கான மிக நேர்த்தியான புகைப் படங்கள் கிடைந்தன. அனைத்தையும் ஒன்று சேர்த்து உங்களுக்கு முழு ஓவியமாகப் படைக்கிறேன்.

அப்படி முழுதாக வரைந்த பின்னர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதை எடுத்துரைக்கவும் வார்த்தைகள் வரவில்லை.

அதில் மிகவும் பிடித்தது முதல் முதலில் வரைந்த கோடுகள். இந்த முறை அக்ரிலிக் வண்ணங்களை கொண்டு முயற்சி செய்தேன். படிப்படியாக வண்ணங்களைத் தீட்டி ஓவியத்தை வெளிக்கொண்டு வருவது பரிசுப் பொருளை பிரிப்பது போன்ற ஆர்வம் மற்றும் அனுபவம்.

ஒவ்வொரு கோடும் ஒரு புது அனுபவம், ஒரு கண்டுபிடிப்பு – சில கற்பனை. அவை அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து வந்த வடிவத்தை பல்லவ சுவரோவியம் போலவே முடிக்கவேண்டும் என்பது பெரும் சவாலாக இருந்தது.


ஓவியத்தை தீட்டும்போது படிப்படியாக படம் எடுத்து ரசித்தோம். நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

இதோ நிறைவு பெற்ற ஓவியம்.

காளிங்க நர்த்தனம்- அற்புத வெண்கலச் சிலை

திரு. பிரசாத் அவர்கள் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர் தான். அவரது உயர்ந்த கலைத் திறனை நமது பதிவுகளில் ஏற்கனவே கண்டிருக்கிறோம். ஆனால் இன்று நாம் காணப்போவது அவரது மற்றுமொரு புதிய அவதாரம். கண்ணனின் பிறந்தநாளாகிய ஜன்மாஷ்டமியன்று ஒரு அற்புத வெண்கலச் சிலையின் அருமையான படங்களை நமக்கு அளித்திருக்கும் திரு. அசோக்குடன் இணைந்து, புகழ் பெற்ற ஊத்துக்காடு காளிங்க நர்த்தனம் பற்றி நமக்காக ஒரு பதிவு இடுகிறார்.

சோழக் கைவினைஞரின் உயர்ந்த மேலான திறமைக்கு அறிமுகம் தேவை இல்லை. எனது அனுபவத்தின் சாரத்தை வார்த்தைகளால் வெளியிடுவது இயலாத ஒன்று என்று நன்கு அறிந்திருக்கிறேன். எனவே, அந்த தெய்வீக அனுபவத்தை வாசகர்களே பெறுவதற்கு முயற்சிக்கிறேன். இன்று நான், இந்த உயர்ந்த செல்வதை நீங்கள் அதிக ஆர்வத்துடன் கண்டு களிக்க, எனக்கு தெரிந்த அளவில் அதனை விவரிக்கவும், எண்ணங்களை பகிர்ந்துகொள்ளவும் விழைகிறேன். இதனை துவங்குகையில் எல்லாம் வல்ல இறைவனிடம் இந்த அற்புதத்தை விவரிக்கும் சக்தியை எனக்கு அளிக்க பிரார்த்தனை செய்கிறேன், ஏனெனில் சில அற்புதங்களை விவரிப்பதை விட சுயமாக அனுபவிப்பதே மேலானது என்று கருதுகிறேன்.

இன்று நாம், அகந்தை கொண்ட நாகத்தை அடக்கிய அற்புத நடனத்தை மிக நேர்த்தியாக உலோகத்தில் செதுக்கப்பட்டுள்ள சிற்பம் – காளிங்க மர்தன கிருஷ்ணனின் சிற்பத்தைக் காண்போம்.

முதலில் சிற்பத்தை முழுமையாகக் காண்போம். கொடுமையே உருவாக இருக்கும் நாகமாகிய காளிங்கனுக்கு பாடம் கற்று கொடுக்கவும், அதே நேரத்தில் தான் யார் என்று உலகிற்கே எடுத்துக்காட்டவும், காளிங்கனின் தலை மீது தெய்வீக நடனம் ஆடும் விதமாக இந்த சிற்பம் அமைந்துள்ளது. ஒரு செயலின் ஓட்டம், அழகு, அதன் வேகம், மேலும் அச்செயல் சொல்லும் கதை இவற்றை சிற்பத்திலே அற்புதமாய் கொண்டு வருவதில் சோழ சிற்பிகளுக்கு நிகர் அவர்களே! ஒரு முறை சிற்பத்தைக் கண்ட உடனேயே அதன் தொடர்ச்சியான நிகழ்வுகள் நினைவில் நின்று மனதில் பதியும் வண்ணம் சிற்பத்தை செதுக்கிவிடுகின்றனர்.

கண்ணனின் வலது பாதத்திலிருந்து துவங்கி இடஞ்சுழியாக அவனது அற்புத சிற்பத்தின் தோற்ற அமைப்பை காண்போம். இது ஒரு நிலையான வடிவம் அல்ல என்பதை சிற்பத்தை கண்டதுமே உணருமாறு வடித்த சிற்பியின் கலை நுணுக்கத்தை வியக்காமல் இருக்க முடியாது. இது தொடரும் நிகழ்வுகளின் ஒரு பகுதி மட்டுமே. மேலும் அந்த நொடியின் வேகம் மிகச் சிறப்பாக காண்பிக்கப்பட்டுள்ளது.

தூக்கிய வலது திருவடியை பாருங்கள். இன்னும் சில வினாடிகளில் இந்த பாதம் எவ்வாறு நாகத்தின் தலையில் இறங்கும் என்று கற்பனை செய்ய முடிகிறதா? அந்த பாதத்தின் அழுத்தத்தை உணர முடிகிறதா? அந்த கொடிய நாகத்திற்கு அது மரண அடியாக இருக்காது. இருப்பினும் அதற்கு ஒரு திடமான செய்தி நிச்சயம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


அநேகமாக இப்படி தான் பாம்பின் தலையில் பாதம் இறங்கும்.

இந்த தனித்துவம் வாய்ந்த வெண்கலச் சிலையை கவனித்து பார்த்தோமானால், இடது பாதத்திற்கும் நாகத்தின் தலைக்கும் இடையே ஒரு சிறிய இடைவெளி இருப்பதை காணலாம் – ஆக, கிருஷ்ணரின் எடை முழுவதும் பாம்பின் வாலைப் பற்றி இருக்கும் கரம் தாங்கும் விதமாக உள்ளது – இந்த சிற்பியும் அவனது அற்புத கலைத்திறனும் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

இப்போது கண்ணனின் இடது கரத்தை பார்ப்போம். மிக நளினமாக பாம்பின் வாலை பற்றியிருக்கிறார். சற்றே சிந்தித்து பாருங்கள். உங்கள் கரத்தில், உங்கள் தோள் உயரத்திற்கு உள்ள எடை அதிகமான ஏதேனும் ஒன்றை பற்றியிருந்தால், அதிலும், அது நிலை கொள்ளாமல் நெளிந்து கொண்டிருக்கும்போது, உங்கள் கைகள் எத்தனை வலுவாக அதை பற்றியிருக்கும்? மேலும் தசைகள் எத்தனை திடமாக அதை இறுக்கி பிடித்திருக்கும்? எத்தனை அசௌகரியமாக இருந்திருக்கும்? ஆனால், இங்கு நாம் பார்ப்பது என்ன?

வளைந்த கரம், பாம்பின் வாலை ஒரு பட்டுத் துணியை பிடித்திருப்பது போன்று பற்றியிருக்கிறது. இதை பார்க்கும்போதே இது ஒரு சிறு பிள்ளையின் விளையாட்டு என்று தெரிகிறது. அவனுக்கு இந்த நாகம் ஒரு பெரிய விஷயமே அல்ல. ஒரு பெரும் நாகத்தின் வாலை ஒரு சிறிய துணியை பற்றியிருப்பது போல் பற்றியிருக்கிறான். இருப்பினும், இந்த முழு வடிவத்தையும் வைத்துப் பார்க்கும்போது, இத்தகைய தோற்றம் அமைப்பதில் உள்ள சிக்கல் விளங்கும்.

அடுத்து நாம் கண்ணனின் முகத்தை காண்போம். அவனது மந்திரப்புன்னகையே அவன் அந்த நாகத்திற்கு ஆபத்து விளைவிக்க விரும்பவில்லை என்று காட்டுகிறது. மேலும் முகத்திலோ ஒரு துளி கோபமோ, செருக்கோ, வலியோ, பெருமையோ ஒன்றும் தெரியவில்லை. அங்கே தெரிவதெல்லாம் ஒரு சிறிய குழந்தையின் அப்பழுக்கில்லாத மகிழ்ச்சி. மேலும் கூர்ந்து கவனியுங்கள். அவன் அந்த நாகத்தை பார்க்கவில்லை, யாரையும் எதனையும் குறிப்பாக பார்க்கவில்லை. அவனது பார்வை, இந்த முழு பிரபஞ்சத்தையே காண்கிறது. அவனது முகம் சற்றே சாய்வாக உள்ளது. இங்கே நாம் மறுபடியும் அவனது நடனத்தின் வேகத்தை நினைத்து பார்க்கவேண்டும். பாம்பின் தலை மீது தனது பாதத்தை வைக்கும் முன்பு அவனது தலை நளினமாக அசைகிறது.

இங்கே நாட்டியமாடுபவரின் தலை, நடனத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு அசைகிறது பாருங்கள்.

இப்போது அவரது அபய ஹஸ்தத்தை காண்போம். காண்பவரின் எண்ணத்திற்கு ஏற்ற மாதிரியே காட்சிகளின் பொருளும் வேறுபடும் என்று சொல்வர். அவனது இடையர்குல நண்பர்களுக்கு, கவலை வேண்டாம் என்று கூறுவது போல் உள்ளது. எண்ணிலடங்கா முனிவர்களுக்கும், தேவர்களுக்கும், காப்பதற்கு தாம் இருப்பதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. இறுமாப்பு கொண்ட நாகதிற்கும், அமைதியை அழிக்க நினைக்கும் மற்றவருக்கும், எச்சரிக்கை செய்வது போல் உள்ளது. நாக குடும்பத்திற்கோ, அவர்களது இறைஞ்சலை தான் செவிமடுத்து அருள் புரிவதாக சொல்வது போல் உள்ளது. இன்னும் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களை கொண்டதாக அவனது அபய ஹஸ்தம் காட்சி அளிக்கிறது. அவை அனைத்தையும் எடுத்துக்கூறும் திறன் எனக்கு இல்லை.

இந்த சிற்பத்தைக் கண்டதும் நான் அனுபவித்த ஆனந்தத்தை ஓரளவிற்கேனும் உங்களிடையே சேர்க்க முடிந்தது என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன். மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வாசகர்கள் அனைவருக்கும் ஒரு விண்ணப்பம் செய்து கொள்ள விரும்புகிறேன். நமது பாரம்பரியம் விலை மதிக்க முடியாதது. பற்பல படையெடுப்புகள், மனிதரின் பேராசைகள் மற்றும் இயற்கை சீற்றங்களையும் தாண்டி அவை இன்றும் இருப்பதே மிகப் பெரிய அதிசயம் ஆகும். எனவே, இனி நீங்கள் காணும் சிற்பங்கள் மற்றும் சிலைகளை புதிய கோணத்தில் காணுங்கள் என்று வாசகர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு சிற்பமும் தனக்குள் பல விஷயங்களை அடக்கியுள்ளன. ஒவ்வொரு சிற்பம் உருவாவதற்கு பின்பும் நமது பண்டைய சிற்பிகளின் கலை உணர்ச்சி, சக்தி, வலி மற்றும் உழைப்பு அடங்கியுள்ளது. அவற்றை பாதுகாப்பது நமது பொறுப்பு மட்டுமல்ல, நமது புனிதமான கடமையும் ஆகும்.
இந்த காலத்தைக் கடந்த கலைச்செல்வங்களை உயர்த்துங்கள். இவை நமது முன்னோர்கள் நமக்கு அளித்துச் சென்ற பரிசு அல்ல. இவை நம் குழந்தைகள் நமக்கு அளித்துள்ள கடன் என்பதை நினைவில் வைத்திருங்கள். நமது வருங்கால சந்ததியினருக்கு இவற்றை நாம் திருப்பி அளிக்க வேண்டும், அதுவும் வட்டியுடன். 🙂

படங்களை உபயோகிக்க அனுமதி தந்த திரு. அசோக் அவர்களுக்கும் செல்வி. நீரஜா ஸ்ரீனிவாசன் (நடனமாடுபவர்) அவர்களுக்கும் மிக்க நன்றி.

மேலும் நமக்கு ஒரு விருந்து படைக்கிறார் அசோக்

மேலே உள்ள அனைத்து கருத்துகளும் எழுதியவரின் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டதே ஆகும். சிற்ப சாஸ்திரத்தின் படியோ அல்லது விஞ்ஞான ரீதியான பொருளின்படியோ பொருந்தியோ பொருந்தாமலோ போகும் வாய்ப்பு உள்ளது. இந்த பதிவில் காணப்படும் தவறுகளுக்கு மன்னிக்கும்படி எழுதியவர் வேண்டுகோள் வைக்கிறார். மேலும், இவை தனது சொந்த கருத்துக்களே என்றும் அறியாமையால் தவறுகள் ஏற்பட்டிருக்கும் என்றும் தெளிவுபடுத்துகிறார். எனது எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க வாய்ப்பு வழங்கிய திரு. விஜய் அவர்களுக்கு நன்றிகள் பலப்பல. மேலும் நமது அரிய பாரம்பரியத்தை முன்னிறுத்த அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். இந்த முயற்சி பெரும் புரட்சியாக மாற வாழ்த்துகள்! வணக்கம்.