கம்போடியா ( Khao Preah Vihear) கோவில் சிற்பம் சிலவற்றை நாம் முன்பு பார்த்தோம். அவ்வாறே இன்றும் ஒரு அறிய சிற்பம்.
தொலைவில் இருந்து பார்க்கும் போது நடராஜர் மட்டுமே தெரிந்தார். அழகிய ஆடும் கோலம் – பத்து கைகளும் ஒரே கை வேகமாய் ஆடுவது போல அழகே உள்ளது.
கொஞ்சம் கீழே பார்த்தால் அனந்தசயனன், காலை அன்பாய் பிடித்து விடும் லக்ஷ்மி ( சிற்பம் சிதைந்து விட்டது ) நாபிக்கமலத்தின் மேல் பிரம்மன். அவர்களை அடுத்து இரு கிளிகள் – அதற்கு மேல் ஒரு யாழி – யாழியின் மேல் இருப்பவர் யார் என்று தெரியவில்லை – அதை அடுத்து இரு குரங்குகள் !!
சரி அத்துடன் விட்டு விடலாம் என்று பார்த்தால் ஆடல் வல்லானின் அற்புத நடனத்தை ரசிக்கும் இருவர் ( தலைகள் சிதைந்து விட்டன ) – ஆனால் வலது புறம் இருப்பது ஒரு பெண்மணி – அவர்களின் அங்க குறிப்புகளை சோழர் கால காரைக்கால் அமையின் சிலையுடன் ஒப்பிடும் போது அப்படியே ஒத்து உள்ளது. (சுருங்கிய மார்பகம்) ஒருவேளை தன்னை பேய் போல ஆக்குக என அம்மை இறைவனை வேண்டிக்கொண்டதால் இளமை மாறியதோ. அம்மையின் முழு கதையை வரும் மடல்களில் பார்ப்போம்
(அம்மை தாம் அருளிய அந்தாதியில்)
பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீது
உறினும் உறாதொழியுமேனும் – சிறிதுணர்த்தி
மற்றொரு கண் நெற்றிமேல் வைத்தான் தன் பேயாய
நற்கணத்தில் ஒன்றாய நாம்
எனக் குறித்தருள்கிறார். இதனால் பேய் வடிவம் என்பது சிவகணங் களில் ஒன்றான பேய்வடிவம் என்பதை அறியலாம்.
காரைக்கால் அம்மை பெரும் பாலும் தென் இந்திய இலக்கியங்களிலேயே வருபவர், பல தமிழருக்கே தெரியாத ஒருவர். அவர் எங்கே அங்கே சென்றார் ? தமிழக சிற்பிகள் அல்லது அவர்களது வழி தோன்றல்கள் இல்லை அவர்களிடம் கலை பயின்றவர்கள் இதை வடித்து இருக்கலாம். ஏனெனில் சிலையில் தமிழ் / சோழ கலை தெரிய வில்லை , பெரும்பாலும் தென் கிழக்கு ஆசிய சாயலே தெரிகிறது.
images courtesy
http://www.sundial.thai-isan-lao.com/phanom_rung.html