எனது நண்பர் திரு பழனியப்பன் வைரம் அவர்கள், அவர் பெயர் போலவே ஒரு நிஜ வைரம். அவர் எடுத்திருக்கும் துறை மிகவும் அரியது. பலரும் அதன் ஆழ்ந்த கருத்துகள் மற்றும் மொழியின் நுணுக்கத்தால் படிக்க மறுக்கும் துறை. சங்க இலக்கியம் மற்றும் பக்தி இலக்கியங்கள்.
அவர் இந்த பணியை துவக்கும் தருவாயில் இணையத்தில் ஒரு தேடலில் தற்செயலாக நான் அவருடைய தளத்திற்கு சென்றேன். அதில் இருந்த ஆழ்ந்த கருத்து, சீரிய சிந்தனை என்னை மிகவும் ஈர்த்தது. தினமும் தொடர்பு கொண்டு எங்கள் நட்பு வளர்ந்தது. சமீபத்தில் அவரது இந்த இடுகை என்னை மிகவும் ஈர்த்தது. கம்பன் மிக அழகாக இட்ட வரிகளுக்கு இந்தோனேசியா பரம்பணன் கோயில் சிற்பத்தில் வடிவம் அதையே இங்கு இடலாம் என்று அவரை அழைக்கிறேன். இதோ வைரம்.
இன்று கம்பனது ராமாவதாரத்தில் ஒரு நிகழ்வு .
கலைமான் முதல் ஆயின கண்ட எலாம்,
அலை மானுறும் ஆசையின், வந்தனவால்
– நிலையா மன, வஞ்சனை, நேயம் இலா
விலை மாதர்கண் யாரும் விழுந்தெனவே.
கதை : மாரிசன், ராவணனின் மாமன், தங்க மானாக மாறி ,ராமனையும் லக்குவனையும் சீதையை விட்டு பிரித்து, ராவணன் சீதையை அபகரிக்க வழி வகுத்த கதை.
கம்பனின் அழகிய உவமை : ஒரு தங்க மான் தோன்றிய உடன் அந்த காட்டில் உள்ள அனைத்து மான்களும் , அந்த அழகினை கண்டு கடல் போல் பெரிய ஆசை கொண்டு அதன் அருகே சென்று நிற்கின்றன. இங்கே கம்பன் தன் கவி திறனை ஒரு உவமையின் மூலம் நமக்குக் காட்டுகிறார், அக்காலத்தில் ஆண்கள் மணமான பின்னும் விலை மாந்தர் உடன் உறவு கொள்வது உண்டு , இந்த மாந்தர் ஒரு ஆணை சுகப்படுத்தும் அனைத்துக் கலையும் அறிந்தவர்கள் . இவர்கள் தொழிலோ தங்கள் கற்ற கலையை பயன்படுத்தி ஆண்களை வசியப்படுத்தி , நல்ல சுகமான வாழ்க்கையை தாம் பெறுவதற்குதான். இவர்களை நம்பி அனைத்து சொத்தையும் இழக்கும் ஆண்களுக்கோ அவர்கள் தங்களை காதலிக்க வில்லை, தங்கள் மாய அழகை கொண்டு வெறும் வசியம் மட்டுமே செய்கிறாகள் என்பது புரிவதில்லை . இதை போல் மனிதன் பல நேரம் வசியம் செய்யும் மாய அழகிற்கு அடிமையாகிறான் . ராமாயணத்தில் தோன்றும் அந்த தங்க மானுக்கு வசியம் செய்யும் மாய அழகு இருந்ததாம் , இந்த வசியம் செய்யும் அழகிற்கு எல்லாம் அறிந்த ராமனே அடிமை ஆனான் என்பதை கம்பன் அழகாக நமக்கு காட்டுகிறார் . சுட்டெரிக்கும் விளக்கின் ஒலி சுண்டி இழுக்கும் விட்டில் பூச்சிகளுக்கு எப்படியோ அப்படி.
இதோ இந்தோனேசியா பரம்பணன் கோயில் சிற்பம். மாய மான், ராமன், அவன் விடுத்த அம்பு – சாகும் தருவாயில் தன் சுயரூபம் பெற்ற மாரீசன்.
வைரம்
(source:http://www.mountainelm.com/in-rama1.JPG)