இன்று ஒரு ஓவியம் பிறக்கும் கதையை பார்க்கிறோம். ஒரு ஓவியன் – அவனும் பிறக்கிறான் , உண்மையான கலைக்கு அழிவு என்பதே இல்லை. ஒரு கலைஞனின் தாகம் அவனுள் என்றைக்கும் ஒரு ஏக்கத்தை உருவாக்கும். அந்த வலி அவனை ஒரு தேடலில் ஈடு பட வைக்கும் – இந்த தேடல் மொழி, கலாசாரம் , கால வட்டம் என்று அனைத்து தடைகளையும் உடைத்து எரியும்.
இதை போல ஒரு ஓவியத்தை இன்று நாம் பார்க்க போகிறோம். சிற்ப கலை – அதன் தூண்டலால் உருவான ஒரு சிற்பம் – அதன் தாக்கத்தால் உண்டான ஓவியம். அந்த ஓவியத்தின் தாக்கத்தால் உருவாகும் ஓவியன்.
ஸ்ரீ வைகுந்தம் தூண் சிற்பம். அப்பப்பா – அந்த வீரபத்ரர் சிலையில் தான் என்ன ஒரு உயிர்ரோட்டம் – சிலையே உயிர் பெற்று எழுந்து ஆடுவது போல உள்ளது. ஓவியர் சில்பி அவர்கள் இதை போல ஒரு தூணை பார்த்தல் – கேட்க வேண்டுமா – கரும்பு கடிக்க கூலி வேண்டுமா . அவரும் அந்த சிற்பத்தில் உள்ள பிரம்மாண்டம் , வீரம், அனைத்தையும் உள்ளே இழுத்து – ஒரு அற்புத ஓவியத்தை படைத்தார் ( நன்றி திரு பசுபதி மற்றும் வரலாறு .காம் நண்பர்கள் ) அமரர் சில்பி அவர்களின் தனி சிறப்பே ஒரு சிற்ப்பத்தை சிற்பம் போலவே வரைவது, கல்லிலே கலைவண்ணம் – அதை தன் கை வண்ணத்தால் வெளி கொணர்ந்த அற்புத கலைஞர் அவர்.
சரி , இப்போது கதை வரலாற்று காலத்தை விட்டு , சென்ற வாரத்திற்கு நகர்கிறது. நண்பர் திரு பிரசாத் அவரது விடுமுறை நாட்களில் ஓவியம் தீட்ட நல்ல படம் கேட்டார். நானும் பல படங்களை கொடுத்து, அதில் மேலே குறிப்பிட்ட ஸ்ரீ வைகுந்தம் சிற்பம் மற்றும் சில்பி அவர்களின் ஓவியத்தை இணைத்தேன். பார்த்தவுடன் , இதை நான் வரைய முயற்சிக்கிறேன் என்றார். சற்று தயக்கத்துடன் இத்தனை கடினமான ஓவியம் ஆயிற்றே – என்று நிறைய எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தேன்.
இரண்டு நாட்கள் கடந்தன – பிரசாத் எப்படி உள்ளது முதல் கோடுகள் என்று ஒரு படத்தை அனுப்பினார். கண்டவுடன் காதல் கொண்டேன். அமரர் சில்பி அவர்களின் கலை அழியவில்லை – அடுத்த தலைமுறையில் அவரது கலையை இட்டு செல்ல ஒரு அற்புத ஓவியன் பிறந்துவிட்டான் என்று எண்ணி பூரிப்பு அடைந்தேன்
( சிற்ப புகைபடத்தில் வாள் உடைந்து உள்ளது – அமரர் சில்பி அவர்கள் வரைந்த போதே அதில் விரிசல் விழுந்துள்ளதை அவர் கவனித்து அதையும் அவர் வரைந்துள்ளதை பாருங்கள் )
அருமை பிரசாத் – வீரபத்ரர் அற்புதம். சிற்பத்தில் மற்றும் சில்பி ஓவியத்தில் உள்ள அற்புத திறனை அப்படியே கொண்டு வந்துள்ளீர் – வாழ்க வளமுடன், இது போல இன்னும் பல படைப்புகளை உருவாக்க எங்கள் வாழ்த்துக்கள்.
308930993085
திரு பிரசாத் அவர்களின் மற்ற ஓவியங்களை பார்க்க
பிரசாத் ஓவியக்கூடம்