இன்றைக்கு நமது குழுவில் ஒரு புதிய நபர் வருகை / சேர்கை – ஒரு கலை ஆர்வலர் – இன்று தன் ரசனையை நம்முடன் முதன்முறையாக பகிர்கிறார். திரு சதிஷ் குமார் அருணாசலம் அவர்கள், தற்போது அமெரிக்காவில் கணிபொறி நிபுணராக பணிபுரயும் இவர் தான் புள்ளமங்கை சென்ற அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார். இனி திரு சதீஷ் அவர்கள்
இதுவரை விஜய் அவர்களின் படைப்புகளை படித்தவர்களுக்கு, புள்ளமங்கை கோயில் நன்கு பரிச்சயமாகி இருக்கும். புள்ளமங்கை ஒரு கலைப்பெட்டகம். 1000 ஆண்டுகளுக்கு முன் சிற்பிகள் உளியை கொண்டு செதுக்கிய அற்புத ஓவியங்கள். நம் கை விரல்களை அகட்டினால், கட்டை விரல் நுனியிலிருந்து சுண்டு விரல் நுனி வரை உள்ள அளவில் பல அற்புத சிற்பங்களை தன்னகத்தே கொண்டுள்ள புள்ளமங்கை கோயில் பார்க்கப் பார்க்க திகட்டாதது.
புள்ளமங்கையை நினைவுக்கு கொண்டுவர – கீழே உள்ளவரை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள்.
இங்குள்ள கை அளவு சிற்பங்கள் சிறப்பு மிக்கவை என்றாலும், இந்த தரவில் விமானத்தின் மீதுள்ள ஒரு அழகோவியத்தைப் பார்ப்போம்.
தாயே மூகாம்பிகே என்ற படத்தில் இளையராஜா அவர்கள் பாடிய ஜனனி ஜனனி பாடல், எனக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. அதில் வரும் வரிகள் –
“சதுர்வேதங்களும், பஞ்ச பூதங்களும், ஷண்மார்க்கங்களும், சப்த தீர்த்தங்களும், கொண்ட நாயகனின், குளிர் தேகத்திலே, நின்ற நாயகியே, இட பாகத்திலே.”
திருஞானசம்பந்தர், திருச்சிராப்பள்ளியில் அருளிய பதிகத்தில்,
“நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே” (தேவரம் 1.98.1)
(நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனை, தீயது ஒன்றேனும் இல்லாதவனை, மிக வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனை, பார்வதியை ஒரு பாகமாக உடையவனை, அவனது அருளாலன்றிச் சென்றடைய முடியாத வீடுபேறாகிய செல்வத்தை உடையவனை, சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளி யுள்ளவனைப் போற்ற என் உள்ளம் குளிரும். – நன்றி – www.thevaaram.org)
என்றும்,
அப்பர், திருகோடிகாவில் ஈசனை,
“பூணர வாரத் தானே புலியுரி யரையி னானே
காணில்வெண் கோவ ணம்முங் கையிலோர் கபால மேந்தி
ஊணுமோர் பிச்சை யானே யுமையொரு பாகத் தானே
கோணல்வெண் பிறையி னானே கோடிகா வுடைய கோவே” (4.51.5)
(கோடிகா உடைய தலைவன், வளைந்த பாம்பை மாலையாகப் பூண்டு புலித்தோலை இடையில் உடுத்து வெண்கோவணம் தரித்து, கையில் மண்டையோட்டை ஏந்தி, தாருகாவனத்துப் பெண்களைத் திருத்த உணவு கேட்டு பிச்சாண்டியாய் – பிச்சாண்டிவந்தவனை பார்வதிபாகனாய் குறுகிய வெள்ளிய பிறையைச் சூடியவனாய் உள்ளான். நன்றி – www.thevaaram.org )
என்றும் பாடுகிறார்கள். இப்படி பலரும் பாடிய ஈசனின், ஒரு அழகிய கோலத்தைத்தான் இப்பொழுது நாம் பார்க்கப் போகிறோம்.
என்ன கோலம் என்று ஊகித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆம், அர்த்தநாரீஸ்வரன் என்றும், அம்மையப்பன் என்றும், உமை ஒரு பாகன் என்றும், பல பெயர்களில் அழைக்கப்படும் கோலம்தான் அது.
ஒரு பாதி ஆண், மறு பாதி பெண் என்று தன் உடம்பில் சரி பாதியை உமைக்கு கொடுத்த ஈசனின் கோலம்தான் உமை ஒரு பாகன். இதன் புராணத்தை அறிய, இந்த சுட்டியை பாருங்கள்
இப்பொழுது, சிற்பத்தைப் பார்ப்போம்.
இடது பக்கம் பார்த்தால், பெண்மையின் மிளிர்வு.
வலது புறம் பார்தால், ஆண்மையின் கம்பீரம். ஒரே முகத்தில், இப்படி பெண்மையையும், ஆண்மையையும் ஒரு சேர கொணர்ந்த அந்த சிற்பியை என்னவென்று பாராட்டுவது?
டாக்டர் கலைக்கோவன் அவர்கள், ‘சோழ சிற்பிகள், உடல் கூறுகளை
(anatomy) நன்கு அறிந்தவர்கள்’ என கூறக்கேட்டிருக்கிறேன். இந்த சிற்பமும் அதற்கு சான்று.
அம்மையின் சிற்றிடையும், ஒய்யாரமாய் நிற்கும் பாங்கும், அப்பனின் திண்தோள்களும், கம்பீரமாய் ரிஷபத்தில் மீது சாய்ந்திருக்கும் கோலமும் ஒருங்கே நம் கண் முன் கொண்டு வந்த சிற்பி மறைந்த பின்னும், அவன் விட்டு சென்ற கலைப்பொக்கிஷம் இன்றும் நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது.
இந்த கலைப்பெட்டகத்தை வரலாறு (www.varalaaru.com) குழுமத்துடன் பார்க்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிட்டியது. விமானத்தின் மீது ஏறி அர்த்தநாரீஸ்வரனை பார்க்க, அங்கு இருந்த ஒரு கோயில் பெரியவர் ஏணி தந்து உதவினார். அவரே, நாங்கள் சிற்பங்களை ஆவலாய் பார்ப்ப்தை கவனித்துவிட்டு, விமானத்தின் மீதுள்ள சிற்பத்தை பார்க்க ஏணி கொண்டு வந்து கொடுத்தார். இருட்டும் வரை பார்த்து மகிழ்ந்துவிட்டு, இரயிலுக்கு நேரமாகிவிட்டதால் புறப்படும் பொழுது, அவருக்கு மனமார நன்றி கூறிவிட்டு அவரிடம் அவர் பெயரைக் கேட்டோம். அவர் பெயர் ஏற்படுத்திய புல்லரிப்பு, இரவு இரயில் புறப்பட்ட பின்பும் குறைய வில்லை. ஏனெனில் அவ்ர் தன் பெயர் ‘அம்மையப்பன்’ என்று கூறினார்.