ராமனுக்கு உதவிய கவந்தனின் கதை – பரம்பணன்

நேற்று தற்செயலாக பொன்னியின் செல்வன் குழும நண்பர் திரு சக்திஸ் அவர்களை சந்தித்தேன். அவர் அலுவல் பணியில் ஜகார்தா சென்று திரும்பினேன் என்றும் அங்கு நண்பர் ஒருவர் பரம்பணன் ராமாயண சிற்பங்கள் பற்றி கூறியதாகவும் சொன்னார். உடனே வெகு நாட்களாக முடிவு பெறாமல் இருந்த ஒரு பதிவை எப்படியாவது முடித்து உங்களுக்கு தரவேண்டும் என்று முடிவு செய்தேன். பரம்பணன் கோயில், அருமையான சிற்பங்கள் கொண்டது, நில நடுக்கத்தால் சிதைந்த இந்த கோயிலின் மராமத்து வேலைகள் செவ்வனே நடந்து வருகின்றன. இதோ அங்கு இருக்கும் ஒரு அற்புத ராமாயண சிற்பம். மிகவும் சுவாரசியமான கதை, இதை அங்கு எப்படி வடித்தார்கள் என்று நம்மை விந்தையில் ஆற்றும் கதை. ராமனும் லக்ஷ்மணனும் வெட்டியான் வேலை பார்த்த கதை என்று இணையத்தில் படித்தேன். வேடிக்கையாக சொன்னாலும் அது அப்படி இல்லை, ஒரு முக்கியமான தருணத்தில் மிகவும் தெளிவான அறிவுடைய பூதம் செயல்பட்ட கதை . ஆம்! ‘கவந்தனின்’ கதை.

முதலில் கதை – ராமயணத்தின் விறுவிறுப்பான படலம். மாரிச்சனை வதைத்து விட்டு, ராமனும் லக்ஷ்மணனும் திரும்புகின்றனர். சீதையைக் காணவில்லை. எங்கும் தேடி பயன் இல்லை. எவருக்கும் தெரியவில்லை. அப்போது …

ஒரு அடர்ந்த காட்டுக்குள் நுழைகின்றனர். எங்கும் மயான அமைதி. ஒரு உயிர் பிராணி கூட கண்ணில் பட வில்லை.

திடீரேனே எதிரே ஒரு பூதம்.

அதுவும் எப்படி பட்ட பூதம். கம்ப ராமாயணத்தில், லக்ஷ்மணன் ராமனிடம் கேட்கிறான்.

நீர் புகும் நெடுங் கடல் அடங்கும், நேமி சூழ்
பார் புகும், நெடும் பகு வாயைப் பார்த்தனர்;
‘சூர் புகல் அரியது ஓர் அரக்கர் தொல் மதில்
ஊர் புகு வாயிலோ இது?’ என்று, உன்னினார். 20

அவ் வழி, இளையவன் அமர்ந்து நோக்கியே,
‘வௌ;வியது ஒரு பெரும் பூதம், வில் வலாய்,
வவ்விய தன் கையின் வளைத்து, வாய்ப் பெயும்;
செய்வது என் இவண்?’ என, செம்மல் சொல்லுவான்:

‘ஊர் புகு வாயிலோ ‘இது – ஆஹா , அரக்கனின் வாய்க்கு என்ன ஒரு உவமையைக் கம்பன் தருகிறார்!

மேலும் கவந்தனின் தோற்றம்

இரு புடையும் வாங்கலின்,
நீண்டன கிடந்தென நிமிர்ந்த கையினான்
எயிற்று இடைக்கு இடை இரு காதம்; ஈண்டிய
வயிற்றிடை வாய் எனும் மகர வேலையான்

இப்போது சிற்பத்தை பாருங்கள்

கவந்தனை எதிர்த்து இராம இலக்குவர் போர் புரிதல்

‘அழிந்துளார் அலர்; இகழ்ந்தனர் என்னை’ என்று அழன்றான்;
பொழிந்த கோபத்தன்; புதுப் பொறி மயிர்ப்புறம் பொடிப்ப,
‘விழுங்குவேன்’ என வீங்கலும், விண் உற, வீரர்,
எழுந்த தோள்களை வாள்களால் அரிந்தனர், இட்டார். 36

கைகள் அற்று வெங் குருதி ஆறு ஒழுகிய கவந்தன்
மெய்யின், மேற்கோடு கிழக்கு உறுப் பெரு நதி விரவும்,
சைய மா நெடுந் தாழ் வரைத் தனி வரைதன்னோடு
ஐயம் நீங்கிய, பேர் எழில் உவமையன் ஆனான்.

உடனே அவர்களை ராம லக்ஷ்மணர் என்று அடையாளம் கண்டு கொண்டது கவந்த பூதம். அவர்களை வணங்குகிறது!

மூலமே இல்லா முதல்வனே! நீ முயலும்
கோலமோ, யார்க்கும் தெரிவு அரிய கொள்கையவால்;
ஆலமோ? ஆலின் அடையோ? அடைக் கிடந்த
பாலனோ? வேலைப் பரப்போ? பகராயே! 41

‘காண்பார்க்கும் காணப்படு பொருட்கும் கண் ஆகி,
பூண்பாய்போல் நிற்றியால், யாது ஒன்றும் பூணாதாய்,
மாண்பால் உலகை வயிற்று ஒளித்து வாங்குதியால்;
ஆண்பாலோ? பெண்பாலோ? அப்பாலோ? எப்பாலோ? 42

‘ஆதிப் பிரமனும் நீ; ஆதிப் பரமனும் நீ!
ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ!
“சோதிச் சுடர்ப் பிழம்பு நீ!” என்று சொல்லுகின்ற
வேதம் உரைசெய்தால், வெள்காரோ வேறு உள்ளார்? 43

‘எண் திசையும் திண் சுவரா, ஏழ் ஏழ் நிலை வகுத்த
அண்டப் பெருங் கோயிற்கு எல்லாம் அழகுடைய
மண்டலங்கள் மூன்றின்மேல், என்றும் மலராத
புண்டரிக மோட்டின் பொகுட்டே புரை; அம்மா! 44

‘மண்பால்-அமரர் வரம்பு ஆரும் காணாத
எண்பால் உயர்ந்த, எரி ஓங்கும் நல் வேள்வி
உண்பாய் நீ; ஊட்டுவாய் நீ; இரண்டும் ஒக்கின்ற
பண்பு ஆர் அறிவார்? பகராய், பரமேட்டி! 45

‘நிற்கும் நெடு நீத்த நீரில் முளைத்தெழுந்த
மொக்குளே போல, முரண் இற்ற அண்டங்கள்
ஒக்க உயர்ந்து, உன்னுளே தோன்றி ஒளிக்கின்ற
பக்கம் அறிதற்கு எளிதோ? பரம்பரனே! 46

‘நின் செய்கை கண்டு நினைந்தனவோ, நீள் மறைகள்?
உன் செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ?
என் செய்தேன் முன்னம்? மறம் செய்கை எய்தினார்-
பின் செல்வது இல்லாப் பெருஞ் செல்வம் நீ தந்தாய்! 47

‘மாயப் பிறவி மயல் நீக்கி மாசு இலாக்
காயத்தை நல்கி, துயரின் கரை ஏற்றி,
பேய் ஒத்தேன் பேதைப் பிணக்கு அறுத்த எம் பெருமான்!
நாய் ஒத்தேன்; என்ன நலன் இழைத்தேன் நான்?’ என்றான். 48

உடனே லக்ஷ்மணன் நீ யார் என்று கேட்கிறான்

என்று, ஆங்கு, இனிது இயம்பி, ‘இன்று அறியக் கூறுவெனேல்,
ஒன்றாது, தேவர் உறுதிக்கு’ என உன்னா,
தன் தாயைக் கண்ணுற்ற கன்று அனைய தன்மையன் ஆய்,
நின்றானைக் கண்டான்,-நெறி நின்றார் நேர் நின்றான். 49

‘பாராய் இளையவனே! பட்ட இவன், வேறே ஓர்
பேராளன் தானாய், ஒளி ஓங்கும் பெற்றியனாய்,
நேர், ஆகாயத்தின் மிசை நிற்கின்றான்; நீ இவனை
ஆராய்!’ என, அவனும், ‘ஆர்கொலோ நீ?’ என்றான்.

‘சந்தப் பூண் அலங்கல் வீர! தனு எனும் நாமத்தேன்; ஓர்
கந்தர்ப்பன்; சாபத்தால், இக் கடைப்படு பிறவி கண்டேன்;
வந்துற்றீர் மலர்க்கை தீண்ட, முன்னுடை வடிவம் பெற்றேன்,
எந்தைக்கும் எந்தை நீர்; யான் இசைப்பது கேண்மின்’ என்றான். 51

இப்போது இந்த சாபத்தை பற்றி இன்னும் தெரிந்துக்கொள்ள , நாம் வால்மிகியை நாட வேண்டி உள்ளது. தனு என்னும் கந்தர்வனின் மகன், அவன் பெயரும் தனு. பிரம்மனிடம் பெற்ற சாகா’ வரத்தினால் கர்வம் கொண்டு பூதமென உருக் கொண்டு அனைவரையும் துன்புறுத்தினான். அப்போது அவனை ‘ஸ்தூலசிர’ ( பெரிய தலை ?) என்ற முனிவர் அப்படியே பூத உடலுடன் இருக்கக் கடவது என்று சபிக்க தன் தவறை உணர்த்து சுய சௌந்தர்ய கந்தர்வ உருவம் பெற விமோசனம் என்ன என்று அவன் கேட்கிறான். முனிவர், ராம லக்ஷ்மணர் வந்து அவன் பூத உடலை தீக்கு இறை ஆக்கினால் மட்டுமே விமோசனம் என்று கூறுகிறார். அவ்வாறு பூதமாக அலைந்த அவன், அந்த கொடுமை போதாதென்று தேவேந்திரனிடத்திலும் சண்டை இட்டு, கொடுமையிலும் கொடுமையாக வஜ்ராயுதத்தின் தாக்கத்தில் தலை உடம்பினுள் சென்று, கை கால்கள் வெட்டப்பட்டு முண்டமாக மாறிவிட்டான். இந்திரனிடம் தான் எப்படி உயிர் வாழ்வது என்று கேட்க, இந்திரன் அவனின் வயிற்றில் ஒரு பெரிய வாய் ஒன்றை ஒருவாக்கி, யோஜன அளவில் நீண்ட பாம்பை போன்ற கரங்களையும் தருகிறான்.

( இங்கே சிற்பத்தில் சில தவறுகள் – சிற்பத்தில் தலை, கை , கால் உள்ளன. எனினும் வயிற்றில் பெரிய வாய், பாம்பு கரங்கள் – அதிலும் ஒன்று அருகில் இருக்கும் தவளை பார்க்கிறது )

இவ்வாறு, கதை நகர, தன பூத உடலை தீக்கு இரையாக்கும் படி வேண்டுகிறான் தனு, அப்படி செய்தால் சீதை இருக்கும் இடம் மற்றும் எப்படி மீட்பது என்பதற்கும் வழி கூறுவேன் என்கிறான். ராமருக்கு நம்பிக்கை இல்லை. சுய காந்தர்வ உரு பெற்றவுடன் கொடுத்த வாக்கை மறந்து விட்டால், அதனால் முதலில் தகவலை கூறுமாறு கேட்கிறார். சாமானிய பூதம் இல்லை, முதலில் தன் காரியம் ஆகவேண்டும் என்கிறது. ராமனும், லக்ஷ்மணனும் அவ்வாறே சென்று விறகு கொண்டு தீ மூட்டி, பூத உடலை அதில் இடுகிறார்கள்.

சாப விமோசனம் பெரும் தனு, தான் கொடுத்த வாக்குப்படி, சீதையை ராவணன் கொண்டு சென்றதையும், அவனை எதிர்க்க ராமனுக்கு வானர சேனையின் உதவி தேவை என்றும்,. அதற்்கு சரியான யுக்தி , சுக்ரீவனை நண்பனாக்கிக் கொள்வதுதான் என்றும், அவனுக்கு வாலியை அழிக்க உதவி செய்து அவனை தனக்கு கடமை பட்டவனாக ஆக்கி கொள்ள வேண்டும் என்கிறான்.

‘கணை உலாம் சிலையினீரைக் காக்குநர் இன்மையேனும்
இணை இலாள்தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும்;
புணை இலாதவற்கு வேலை போக்கு அரிது; அன்னதேபோல்,
துணை இலாதவருக்கு இன்னா, பகைப் புலம் தொலைத்து நீக்கல். 52

‘பழிப்பு அறு நிலைமை ஆண்மை பகர்வது என்? பதும பீடத்து
உழிப் பெருந்தகைமை சான்ற அந்தணன் உயிர்த்த எல்லாம்
அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும், அறிதிர் அன்றே,
ஒழிப்ப அருந் திறல் பல் பூத கணத்தொடும் உறையும் உண்மை? 53

‘ஆயது செய்கை என்பது, அறத் துறை நெறியின் எண்ணி,
தீயவர்ச் சேர்க்கிலாது, செவ்வியோர்ச் சேர்ந்து, செய்தல்;
தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியைத் தலைப்பட்டு, அன்னாள்
ஏயது ஓர் நெறியின் எய்தி, இரலையின் குன்றம் ஏறி. 54

‘கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை
எதிர் எதிர் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து, அவனின் ஈண்ட,
வெதிர் பொரும் தோளினானை நாடுதல் விழுமிது’ என்றான்,
அதிர் கழல் வீரர்தாமும், அன்னதே அமைவது ஆனார். 55

கதைப்படி தனுபூதம் மிகவும் அறிவு கூர்மையான கந்தர்வன், ராமனுடன் தன சுய நிலை பெற பேரம் பேசும்போதும், சுக்ரீவனை தன வசம் இழுக்க சொல்லி ஆலோசனை தந்ததும் அபாரம். வாலி மிகவும் பல சாலி, ( நாம் முன்னரே ராவணனை தன வாலில் கட்டி போட்ட வாலியின் சிற்பத்தை பார்த்தோமே ) ஆனால் இப்போது அவர்கள் இருவரும் நண்பர்கள். என்னதான் ராமனுக்கு உதவி செய்ய வாலிக்கு எந்த நிர்ப்பந்தமும் கிடையாது என்றாலும் வாலியின் நட்பை விட சுக்ரீவன் நட்பே ராமனுக்கு விவேகமானது என்று நினைத்து அவ்வாறே ராமனிடம் கூறியது..

அற்புத கதை, அபாரமான சிற்பம்.

ஓவியம் நன்றி :
http://www.seasite.niu.edu/Indonesian/ramayana/rama23fs.htm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *