யார் படைப்பாளி , யார் படைப்பு

இன்றைக்கு நாம் மீண்டும் புள்ளமங்கை பிரம்ம புரீஸ்வரர் ஆலயம் செல்கிறோம். சிற்ப புதையல்கள் நிறைந்த ஆலயம், ஒவ்வொரு முக்கிலும் சிற்பம். எங்கும் சிற்பம், எதிலும் சிற்பம். சுற்றி சுற்றி நம்மை திணற வைக்கும் கலை பெட்டகம் . அவற்றில் ஒரு அற்புத சிற்பக் கொத்தை நாம் இன்று சதீஷின் உதவியுடன் பார்க்கிறோம். ஒரு படைப்பாளி தன்னை படைத்தவனை படைக்கும் போது – யார் படைப்பாளி யார் படைப்பு. புரியவில்லையா . மேலும் படியுங்கள்.

லிங்கோத்பாவர் சிற்பம். சைவ ஆலயங்களில் ஆகமங்களில் முக்கிய இடம் பெற்று விமானத்தின் பின்னால் இடம் பிடித்த சிற்பம்.

அதற்கு முன்னர், யாரையும் புண்படுத்த இந்த பதிவை இடவில்லை, சிற்பத்தை சிற்பமாக பார்ப்பதே எங்கள் நோக்கம். அதற்கு எவ்வளவு தூரம் கதை வேண்டுமோ அதை மட்டுமே இங்கு இடுகிறோம்

இந்த சிற்பக் கொத்தில் பார்க்க நிறைய உள்ளது

அவற்றை முறையே பிரித்து ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

முதலில் லிங்கோத்பாவர்

ஒருநாள் நான்முகனுக்கும் ( அப்போது அவருக்கு ஐந்து முகங்கள் ) திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வினா எழுந்தது. நான்முகன், “நானே படைக்கிறேன்; ஆகவே நான் தான் பெரியவன்” என்றார். திருமால், “நான் காக்கிறேன்; ஆகவே நான் பெரியவன்” என்றார். இவ்வாறு அவர்கள் வாதமிட, அங்கே தீ பிழம்பாகிய ஜோதி வடிவம் ஒன்று எழுந்தது. அதன் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என்று ஒரு அசரீரி வானத்தில் கூறியது. பிரம்மா அதன் முடியைக் காண அன்னமாகி மேலே பறந்து சென்றார் . திருமாலும் வராக(பன்றி) வடிவில் பூமிக்குள் சென்று அடியை தேடினார். மிகவும் முயன்றும் பல காலம் கழிந்தும் இருவருக்கும் எந்த பலனும் கிட்டவில்லை . பறந்து சென்ற பிரம்மா வழியில் ஒரு தாழம்பூ விழுவதைக் கண்டு அது எங்கிருந்து வருகிறது என வினவ, அத்தாழம்பூ உச்சியிலிருந்து தான் புறப்பட்டு பல காலமாகக் கீழ் நோக்கி வந்து கொண்டிருப்பதாக கூறியது. உடனே போட்டியில் ஜெயிக்க குறுக்கு வழி வகுத்த பிரம்மா தாழம்பூவைத் தன் திட்டத்தில் சேர்த்துக் கொண்டு, தம்பத்தின் உச்சியைத் தான் கண்டு விட்டதாகவும் அதற்குத் தாழம்பூவே சாட்சி எனக் கூறினார். திருமால் பலகாலம் முயன்றும் அடியைக் கண்டறிய முடியவில்லை என ஒப்புக் கொண்டார்.

அப்போது அதில் இருந்து வெளி வந்தார் சிவன், தங்கள் அகந்தையால் எதிரில் இருப்பது ஈசன் என்றும், அவன் ஆதி அந்தன் என்பதையும் உணராதது பிழை என்று ஒப்புக்கொண்டனர். எனினும் பொய் சொன்ன பிரம்மாவின் தலையை கொய்தான் ஈசன். மேலும் அவருக்கு இனி தனி வழிபாடு இல்லை என்றும், தாழம் பூ இனி தெய்வ வழிபாட்டிற்கு உகந்த பூவல்ல என்றும் கூறினார். அவ்விருவர் அகந்தையையும் போக்கி சிவபெருமான் உலகிற்குத் தன் பேரொளி வடிவத்தைக் காட்டிய கோலமே இலிங்கோற்பவ மூர்த்தியாகும்.

இரண்டாம் திருமுறை – பாடல் எண் – 9

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=2&Song_idField=2025009&padhi=025

மாலும் நான்முகன் தானும் வார்கழற்
சீல மும்முடி தேட நீண்டெரி
போலும் மேனியன் பூம்பு கலியுட்
பால தாடிய பண்பன் நல்லனே.

திருமால் நான்முகன் ஆகியோர் நீண்ட திருவடிப் பெருமையையும், திருமுடியையும் தேட எரிபோலும் மேனியனாய் நீண்டவனும், அழகிய புகலியுள் பால் முதலியவற்றை ஆடி உறைபவனும் ஆகிய பண்பினன் நமக்கு நன்மைகள் செய்பவன்.

சரி, இப்போது சிற்பம்.

மேலே பறக்கும் பிரம்மா , கிழே பூமியை குடையும் வராஹம். நடுவில் சிவன் ( மிகவும் சிதைந்த நிலையில்) பிளந்துக்கொண்டு வெளி வருகிறார்.

இந்த சிற்பத்தின் இரு புறமும் பிரம்மன் மற்றும் திருமாலின் அற்புத சிற்ப வடிவங்கள்

கதையில் சற்று தாழ்ந்தாலும், பிரம்மனின் முகத் தோற்றம் அப்பப்பா அபாரம். ஒரு படைப்பாளி தன்னை படைத்தவனை படைக்கும் பொது – யார் படைப்பாளி யார் படைப்பு. தலைப்பு புரிந்ததா .

பொறுங்கள், இது ஒன்றும் நாடகம் அல்ல, தலைப்பு வந்தவுடன் முடிய, இன்னும் உள்ளது.

மிக அரிய சிறிய சிற்பங்கள்.

நாம் முன்னரே கங்கை கொண்ட சோழபுரத்தில் சண்டேச அநுகிரஹ முர்த்தி வடிவம் பார்த்தோம். இப்போது அதன் எறும்பு அளவு சிற்பம். ஈசன் அன்புடன் சண்டேசரின் தலையில் பூ சுற்றும் காட்சி.


அடுத்து, ஆதி சேஷனின் மடியில் துயிலும் திருமால், தேவி மற்றும் ஒருவர்.

அடுத்து, சிவன் பார்வதி – பார்ப்பதற்கு கங்காதரா வடிவம் போல உள்ளது
அடுத்து மூன்று பேர், யார் இவர்கள்.

அடுத்து மிக அற்புத மகா சதாசிவ வடிவம் ( இல்லை பிரம்மனா)

முடிவில் ( இல்லை இன்னும் யாளி வரிசை உள்ளது – அடுத்த பதிவில் பார்ப்போம் ) –

ஆஹா , அம்மை அப்பன் , கீழே ஒரு பூத கணம், எப்படி தான் உயிரோட்டத்துடன் வடித்தார்களோ, அம்மை அப்பன் அமர்ந்திருக்கும் ( ஒரு காலை மடித்து ) தோரணை அபாரம். இந்த சிற்பங்களை இன்னும் போற்ற முடிவில் சதீஷ் டச்

அருகில் இன்னொரு சிற்பம் – அதன் அளவை குறிக்க கார் சாவி …

படங்கள்: திரு சதீஷ், மற்றும் வரலாறு.காம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *