மகாவிஷ்ணுவின் மார்பை அலங்கரிக்கும் மறு – ஸ்ரீவத்சம்

நண்பர்களே , நாம் இன்றைக்கு ஒரு வெண்கலச் சிலையை பார்க்கப் போகிறோம். இது ஒரு சாதாரண சிலை அல்ல, கண்ட உடன் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சோழர் கால சிலை. அது என்ன சோழர் கால சிலைக்கு உலகெங்கும் அப்படி ஒரு தனிப் பெருமை! வாருங்கள் காண்போம்.

நுண்ணிய வேலைப்பாடா? சிற்பியின் கலைத் திறனா? முக பாவங்களா? அங்க அமைப்புகளா? இவை அனைத்தும் ஒருங்கே அமைந்திருந்தாலும் அதற்கு மேலும் ஏதோ ஒரு கவர்ச்சி. அந்த ஏதோ ஒன்று என்ன? இந்த பதிவை படித்த பின்னர் நான் எதை குறிப்பிடுகிறேன் என்று தங்களால் அறிந்து கொள்ள முடிகிறதா என்று பார்ப்போம்.

தில்லி அருங்காட்சியகத்தில் அழகாய் வீற்றிருக்கும் சிலையை முதலில் பார்ப்போம்…

மஹா விஷ்ணு, ஆபத்பாந்தவன் . நாம் இதுவரை ஏராளமான கற்சிலைகளை பார்த்துள்ளோம், ஆனால் உலோகக் சிலைகள் மிகவும் நேர்த்தியானவை, காரணம் உலோகத்தில் வேலை செய்வது கல்லை விட சற்று எளிது, அதனால் கலைஞன் இன்னும் நேர்த்தியாக வேலை செய்யலாம். நம்முடைய முந்தைய ‘சிங்கை’ உமை சிற்பம் பற்றிய பதிவில் சோழர்கள் வெண்கலச் சிலைகளை எப்படி வடித்தார்கள் ( லாஸ்ட் வாக்ஸ் முறை ) என்பது பற்றி விரிவாக பார்த்தோம். இன்று அதே முறை குறித்து கோதை நாச்சியார் தம் அழகு தமிழில் மனம் உருகி பாடிய பாட்டை கேட்டு நாமும் ரசிப்போம்… ( வழக்கம் போல் சரியான பாசுரத்தை தேடித் தந்த திரு திவாகர் அவர்களுக்கு நன்றி )

மழையே மழையே மண்புறம் பூசியுள்ளாய் நின்ற
மெழுகூற்றினாற்போல் ஊற்றுநல்வேன்கடத்துள்நின்ற
அழகப் பிரானார் தம்மையென் நெஞ்சத்தகப்படத்
தழுவநின்று, என்னைத் ததற்றிக் கொண்டூற்றவும் வல்லையே

என்ன அருமையான வரிகள்! மெழுகுச் சிலை ( மோல்ட்) அதனை அணைக்கும் களிமண், சுளையில் வைத்து சுடும்போது உள்ளே இருக்கும் மெழுகை உருக வைக்கும் . அதே போல திருவேங்கடவன் தன்னை வெளியில் அணைத்து உள்ளே உருக வைக்கின்றான் என்கிறாள்.

அனைத்து ஜீவராசிகளையும் காக்கும் அவனது சுந்தர வடிவத்தை வடிக்கும் போது, அவன் கருணை முகம் எப்படி இருக்க வேண்டும். ஒருமுறை பார்த்தாலே உள்ளத்தை உருக்கி அவன் அன்பில் சரண் புக செய்யும் சுந்தர மதி வதன முகம் அல்லவே அது.

அது மட்டுமா, அவன் அலங்காரப் பிரியன்.

அழகைப் பார்த்தோம், இப்போது நுண்ணிய வேலைப்பாடை பார்ப்போம். ( தலைப்புக்கு வர வேண்டுமே )

கவனமாக பாருங்கள் – மீண்டும் உங்களுக்கு ஒரு பரீட்சை.

என்ன கண்டுபிடிக்க முடியவில்லையா? சரி, உங்களுக்கு ஒரு சிறு குறிப்பு தருகிறேன் முயன்று பாருங்கள். வலது மார்புக்கு சற்று மேலே பாருங்கள்.

என்ன அது. சிலை வடிக்கும் பொழுது ஏதாவது ஒட்டிக்கொண்டதா ? இல்லை – அது ஒரு “மறு” (மச்சம்) – இதைத்தான் கலித்தொகையில் “திரு மறு மார்பன் போல்” என்று பாடினரோ!

– நன்றி கீதா அம்மா – சமஸ்கிருத வரிகளை படியுங்கள்

durdAntha daithya visikha ksahtha-பத்ரபாங்கம்

துர்தாந்த தைத்ய விஷிக்ஹ க்ஸாஹ்த – பத்ரபாங்கம்

veerasya tE VibudhanAyaka baahumadhyam |

வீரஸ்ய தே விபுதாநாயக பாஹுமட்ஹ்யம் |

SrIvathsa Kousthubha RamA வணமளிகங்கம்

ஸ்ரீவத்ச கௌஸ்துபா ராம வணமளிகங்கம்

chinthAnubhUya labhathE charithArTathAm na: ||

சிந்தானுபூய லபதே ச்சரித்தார் ததாம் ந:||

( தமிழாக்கம் நன்றி முனைவர் கண்ணன் அவர்கள் )

ஓ! தெய்வ நாயகா!

பொல்லா அசுரர் உன்னுடன் போர் புரிந்த போது பட்ட விழுப்புண்கள் உன்
மார்பில் கணிதக் கோடுகளாக இங்குமங்கும் பரவி உன்னை அளக்கின்றன.
அப்போர்களில் நீர் கண்ட வெற்றியின் சின்னமே போல் இவ்விழுப்புண்கள் உன்
மார்பை அலங்கரிக்கின்றன.

உன்னோடு பிறந்த ஸ்ரீவத்சமெனும் மருவும், கௌஸ்துபம் எனும் செம்மணியும்
இதனுடன் பொலிவுடன் திகழ்கிறது.

பூமித்தாய் மகிழ்வுடன் கோர்த்தளித்த காட்டுப்பூக்கள் சேர்ந்த அழகிய
வனமாலை உன் அழகிற்கு அழகு சேர்கிறது.

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல், அன்னை ஸ்ரீதேவி
‘அகலகில்லேன்’ என உன் திருமார்பை அலங்கரிக்கிறாள். அவளது திருவழகு
“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்’ எனும்படியாக உன் வடிவழகிற்கும்,
சுபாவத்திற்கும் போட்டியாய் அமைந்துள்ளது.

இத்தனையும் அசுரர் தந்த விழுப்புண்ணில் பிரதிபலித்து வண்ணக்கோலமாக உன்
நெஞ்சை மாற்றுகின்றன.

இத்தனையும் கண்டு என் உள்ளம் பூரிக்கிறது. இதுவல்லவோ சேவை! ஒரு
சேதனனுக்கு கிடைக்கும் அரிய சொத்து.

என்ன அன்பர்களே சோழர்களின் வெண்கலச் சிலையின் மகத்துவத்தை அனுபவித்தீர்களா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *