வாயிற்காப்போன் தொடரில் இன்று மேலும் பயணிக்கிறோம். காஞ்சிபுரத்தில் நவீன கட்டுமானங்களுக்கு நடுவில் மறைந்துக் கிடக்கும் ஒரு பொக்கிஷம். நண்பர் திரு அர்விந்த் மிகவும் தேடி கண்டுபிடித்து நமக்காக படங்களை கொடுத்து உதவுகிறார். அவருக்கு மீண்டும் ஒரு நன்றி. மாதங்கேசுவரர் ஆலயம் ( அதன் உடன்பிறப்பு முக்தேஷ்வரா ஆலயத்தையும் விரைவில் காண்போம் )

இந்த ஆலயத்தின் காலம் சரியாக தெரியவில்லை , அதை பற்றி நாம் முக்தேஷ்வரா படங்களையும் பார்த்துவிட்டு அலசுவோம்.
இப்போதைக்கு CE 700 – 800 – இரண்டாம் நந்திவர்மன் காலம் என வைத்துக்கொள்வோம். மிகவும் சுவாரசீயமான காலம் – அரசனின் அரியணை ஏறுவது முதலே பல சம்பவங்கள், நடுவில் சாளுக்கியரிடம் தோற்றல், அக்யாதவாசம், மீண்டும் அரியணை ஏறல் – பின்னர் முடிவில் தனது பேரில் ஒரு கலம்பகம் !!
வேறு எங்கோ போகிறது பதிவு, மீண்டும் சிற்பத்துக்கு வருவோம்.

சிங்க தூண்கள் மறைக்கின்றனவே . சரி இன்னும் அருகில் செல்வோம். .
கொஞ்சம் கொடூரமாக தான் இருக்காங்க. இதுவரைக்கும் ஆஜானபாகுவாக இருந்தாலும் ஒரு நக்கல் பார்வை தான் இருந்தது.நீங்களே பாருங்களேன் – முற்கால பல்லவ வாயிற்காப்போன்களை ஒப்பிட்டு பார்ப்போம்.
மண்டகப்பட்டு
தளவானூர்
இன்னும் உன்னிப்பாக மாதங்கேசுவரர் ஆலயம் வாயிற்காப்போன்களை பார்ப்போம்.
இடது புறம்
இங்கே கொம்பு போல தான் உள்ளன ( சூல வடிவத்தின் நடு கம்பி கண்ணுக்கு தெரியவில்லை )
வலது புறம்
இங்கே ஒரு மாற்றம் காண்கிறோமா? மழு முன்னர் செங்குத்தாக நெடுக்க இருந்தது – எங்கோ மாறி குறுக்காக உள்ளதே?. இது மழு தானா?
முக்கியமான வேறுபாடு -இருவருக்கும் மேலும் இரண்டு கைகள் -மொத்தம் நான்கு கைகள்.
இப்போது தான் கடினமான புதிர் வருகிறது. சாளுக்கிய இரண்டாம் விக்ரமாதித்யன் காஞ்சியை 745 இல் வென்றான், கைலாசநாதர் ஆலயத்தை கண்டு பிரமிப்பு அடைந்து, அதன் சிற்பிகளை கையேடு கூட்டிச்சென்று பட்டடக்கல் ஆலயங்கள் அமைத்தான். சூலம் அல்லது கொம்பு உள்ள வாயிற்காப்போன்கள் பல்லவர் சிற்பங்களில் முன்னவே இருந்தன. ஆனால் இந்த கூடுதல் கைகள் யாரால் ஏற்பட்ட மாற்றம். அதற்கு நாம் இதே காலத்தை ஒட்டிய காஞ்சி வைகுந்த பெருமாள் ஆலயத்தை ஒப்பிட வேண்டும். செய்வோமா?