வாயிற்காப்போன்களை இந்நாளிலேயே எவரும் மதிப்பதில்லை. முடிந்தால் அவர்களை சிலையாக நிற்க வைத்து ஏளனம் செய்கிறார்கள். அப்படி இருக்க, ஆலயங்களில் உள்ள சிற்ப வாயிற்காப்போன்களின் கதி – அதோகதி தான். நானும் நண்பர்கள் சிலர் மட்டுமே இவைகளை பற்றி பேசுவது உண்டு என்று நினைத்தபோது ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இன்னொரு புத்தகத்தின் பெயரை பார்த்தேன் THE CULT OF WEAPONS. THE ICONOGRAPHY OF AYUDHA PURUSHAS, by Sri. V. R Mani.
வாயிற்காப்போன்களை பற்றி நிறைய பதிவுகள் இடவேண்டும் என்று ஆசை வெகுநாட்களாக இருந்தது. அதனால் உடனே வாங்கிவிட்டோம் ( நண்பர் சதீஷ் மற்றும் அர்விந்த்) – இணையத்தில் வாங்கியதால் புத்தகம் பார்த்தவுடன் ஒரு சிறு வருத்தம். மொத்தமே நாற்பத்து ஐந்து பக்கங்கள் தான் இருந்தது – சிறு புத்தகம். எனினும் அளவில் சிறியது என்றாலும் எடுத்தாண்டுள்ள சிற்பங்களும் முறையும் நன்றாக இருந்தது.
படிக்கும் போதே சட்டேன்று கண்ணில் பட்டது ஒரு சிற்பம். பட்டடக்கல் சாளுக்கிய வாயிற்காப்போன். முன்னர் நாம் திரு கிபிட் சிரோமனி அவர்களின் பதிவை ஒட்டிய பல்லவர் கால திரிசூலநாதர் வடிவங்களை பார்த்த போது – அந்த வடிவங்கள் கொம்புடைய வாயிற்காப்போன்களா என்ற வாதம் தொடர்ந்தது. ஆனால் இந்த சிற்பத்தில் சந்தேகத்திற்கு இடமே இல்லை. ( படத்திற்கு நன்றி தோழி காதி )
மிகவும் அருமையாக ஒரு காலை மடக்கி, தனது (G)கதையின் மேல் பாரத்தை வைத்து ஒய்யாரமாக சாய்ந்து நிற்கும் அழகு, அந்த கதையை சுற்றி இருக்கும் படம் எடுக்கும் பாம்பு – எல்லாம் மிக அருமை.
சற்று அருகில் சென்று தலை அலங்காரத்தை பார்ப்போம்.
நான்கு கைகளை கொண்ட சிற்பம் ( முற்கால பல்லவ வாயிற்காப்போன் சிற்பங்கள் இரு கைகளுடன் மட்டுமே உள்ளன – அதன் பின்னரே மேலும் இரண்டு கைகள் வருகின்றன – இதை ஒட்டி ஒரு பதிவு போட வேண்டும் – திரு அர்விந்த் அவர்களின் காஞ்சி படங்கள் !) – இந்த சிற்பத்தில் மேல் வலது கரத்தில் என்ன உள்ளது என்று சரியாக தெரியவில்லை. இடது மேல் கரத்தில் தன்னையே ( சூலத்தையே ) பிடித்துள்ளார். மற்ற இரண்டு கைகளில் என்ன ஒரு ஸ்டைல் ( கை முத்திரைகள் பற்றியும் விரிவாக ஒரு பதிவு போட வேண்டும் )
சரி, நமக்கு வேண்டியதை பார்ப்போம்.அவரது விசித்திர தலை ஆபரணம் . ஆம் கண்டிப்பாக சூலம் தான்.
ஆனால் இதை பற்றி அந்த புத்தகத்தில் வரும் குறிப்பு சரியா ? நாம் விவாதிக்க வேண்டும்
” இடது மேல்புறக் கையருகே திரிசூலத்தை வைத்துக்கொண்டு, தலையில் சூலத்தை வைத்து இவர் தான் திரிசூலபுருஷன் அல்லது திரிசூலநாதன் என்று நாம் தெளிவாக கூற முடிகிறது. இந்த தனிப்பட்ட பாணி வாயிற்காப்போன் சிலைக்கு சாளுக்கியரின் தனித்தன்மை என்று கூற முடியும்.இதற்கு பின்னரே சலுக்யர் மற்றும் தெற்கு பகுதிகளில் இந்த முறை பின்பற்றப்பட்டு மேலும் மெருகு அடைகிறது “
இது சரியான கருத்தா? இந்த புத்தகத்தில் பொதுவாக முற்கால பல்லவர் சிலைகளை ஆய்வு செய்ய படவில்லை. பட்டடக்கள் இரண்டாம் விக்ரமாதித்யன் பல்லவர் மீது அடைந்த வெற்றியை கொண்டாடவே கட்டப்பட்டது. அதிலும் அந்த வெற்றியின் பொது ( ( CE 732 – 742 ), அவன் காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தின் கலை திறனை கண்டு மிகவும் கவரப்பட்டு ( அதை ஒன்றும் செய்யாமல் சிதைக்காமல் ) அதை போலவே பட்டடக்கல் ஆலயங்களை அவனும் அவனது ராணிகளும் அமைத்தனர். இதன் அடிப்படையில், நாம் ஏற்கனவே பதித்த முற்கால பல்லவ சிற்பங்கள் ( இரண்டு கைகளுடன் சூலநாதர் ) , வைத்துப் பார்க்கும் பொது ஒரு வேலை இதே சிற்பிகளை தான் சாளுக்கிய மன்னன் எடுத்துச் சென்று அங்கே உபயோகித்தானோ என்ற கேள்வி மிக பலமாக எழுகிறது.
உங்கள் கருத்து என்ன. ?