சம்பா ( வியட்நாம்) சிற்பங்கள் – பாகம் 2 – இராவணன்


ஹோ சி மின்ஹ் அருங்காட்சியகத்தில் சம்பா சிற்பங்களிடம் மனதைப் பறிகொடுத்த
நாள் முதலே மிசோன் கோயில்களுக்கும் தனாங் சம்பா சிற்பங்கள் அருகாட்சியகத்துக்கும் போக வேண்டும் என்ற ஆவல் மனதை ஆட்கொண்டு விட்டது. அதிர்ஷ்டவசமாக சென்ற வாரம் அந்த நெடுநாள் ஆசையும் நிறைவேறியது. மறக்க முடியாத இரண்டு நாட்கள்…

உதயகாலையில் ஆதவனின் கிரணங்களில் மிசோன் காண முடிவு செய்து விடியற் காலை நாலரை மணிக்கே அலாரம் வைத்து புறப்பட்டேன். தங்கியது தானங் அருகே ஹோய் ஆன் என்ற அழகிய இடத்தில – அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரம் பயணம் – கோடை காலம் என்பதால் அதற்குள் நல்ல வெய்யிலே வந்து விட்டது. எனினும் ஆள் நடமாட்டமே இல்லை – அழகிய புல் தரை கொண்ட சைட் – மலை அடிவாரத்திலேயே காரை நிறுத்த வேண்டும். கொஞ்சம் மலை ஏறி இறங்கினால் ……

இந்த செங்கல் கோயில்களை பற்றிய பதிவிற்கு இன்னும் கொஞ்ச காலம் நீங்கள் காக்க வேண்டும். இன்னும் நிறைய வேலை பாக்கி உள்ளது – படிக்க பல விஷயங்கள் உள்ளன. எனினும் என் கண்ணிற்கு மிகவும் பிடாத சிற்பம் ஒன்றை இன்றைக்கு உங்களுக்கு படைக்கிறேன்.

அங்குள்ள கோயில்களில் உள்ளேயே ஒரு தற்காலிக அருங்காட்சி போல வைத்துள்ளனர் – வெளியில் பெரிதவலில் ஒரு அருங்காட்சிகம் உருவாகிக்கொண்டிருக்கிறது. எனினும் இன்றைக்கு நாம் காணும் சிற்பம் தரையில் ஒரு பெயர் பலகை கூட இல்லாமல் இருக்கிறது. எத்தனை பேருக்கு இந்த அருமை தெரியுமோ?

ஆம் இது ஒரு அற்புத புடைப்புச் சிற்பம். ராவண அனுக்ரஹ மூர்த்தி. பத்தாம் நூற்றாண்டு என நான் கணிக்கிறேன். இதனைப் பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஒரே ஒரு குறிப்பு கிடைத்தது. ஆனால் அருமையான குறிப்பு.

Champa and the Archaeology of Mỹ Sơn (Vietnam) என்ற நூலில் இந்த வடிவம் கண்டெடுக்கப்பட்ட பொது எடுத்த படம்.

நூலில் உள்ள ஆங்கில குறிப்பு : Tympanum depicting Ravana shaking Mt. Kailash. Recovered at My Son. Present location unknown ( photograph Musee Guimet Archive, undated)

நண்பர் ஓவியர் திரு முரளிதரன் உதவியுடன் இதனை மேலும் ரசிக்க ஒரு முயற்சி. இன்றைய நிலையில் சிற்பமாக வடிவமைக்கப்பட்ட இறைவனின் உடல் பாதிக்கு மேல் சிதைந்து விட்டது.

இந்த வடிவத்தில் பிள்ளையார் வருவது கவனிக்க வேண்டிய ஒன்று. அருமையான நந்தி. கம்போடியா சிற்பம் முன்னர் நாம் பார்த்த போதும் அங்கேயும் பிள்ளையார் இருந்தார்.

இந்த சம்பா சிற்பத்தில் ஒரு விமானம் முழுமையாக இருப்பது வினோதமான ஒரு அம்சம். அதற்கு அடியில் ஒரு பெரிய யானை உள்ளது. மேலே காட்டு மிருகங்கள் உள்ளன ( ஒன்று குகையில் இருப்பது போலவும் உள்ளது )

இராவணனின் வலிமையை மிகவும் அருமையாக விவரிக்கப்பட்டுள்ளது. ஏதோ பறவை ஒன்று இறக்கையை விரிப்பது போல விரியும் கைகள் உள்ளன. காலை மாற்றி மாற்றி கயிலையை தூக்க முயற்சிக்கும் காட்சியை காட்ட அவனுக்கு மூன்று கால்கள் போல வடித்தாலும் – அவை இரு விதமாக அவன் திரும்பத் திரும்ப முயற்சிப்பதாக அமைக்கப்பட்டிருக்கும் காட்சியே !

முகம் உள்புறம் திரும்பி இருக்கும் வண்ணம் வடிப்பது மிகவும் கடினம். இதை நாம் எல்லோரா காட்சியுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.

ஆனால் சம்பா சிற்பியின் முழு திறமையை காண இராவணின் பத்து தலைகளை காட்ட அவன் உபயோகித்த பாணி தான் இந்த சிற்பத்தின் உன்னதம்.

இவ்வாறு அதுவும் புடைப்புச் சிற்பத்தில் வடிப்பது மிகவும் கடினம் – பத்து தலை சிற்பத்தில் கட்டுவது மிகும் கடினம். அதனை புகழ் பெற்ற மல்லை ராஜசிம்ஹா பல்லவனின் சிற்பிகளே ஓலக்கநெஸ்வர ஆலயத்தில் சரியாக செய்யவில்லை என்று தான் நான் சொல்வேன்.

சம்பா சிற்பிக்கு தலை வணங்குகிறேன். இந்த பதிவை முடிக்கும் தருணத்தில் நண்பர் முரளி ஓவியத்தையும் முடித்து விட்டார் ….கலை என்றும் அழிவதில்லை….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *