பக்தியை எப்படி வர்ணிப்பது – சிலையில் ?

ஆடவல்லானின் ஆடல் கோலத்தை பலரும் பாடியுள்ளனர், விழா எடுத்துக் கொண்டாடியுள்ளனர். தத்துவபூர்வமான விளக்கங்கள் பல வெளிவந்துள்ளன. அவைகளின் சிறப்பை நாம் எளிதில் உணர்ந்து அனுபவிக்க, அந்த அற்புத நடனத்தை இன்றும் நாம் கொண்டாட, அவரை கல்லில் செதுக்கியும் உலோகத்தில் வார்த்தும் சிறப்பித்த சிற்பிகளும் ஒரு முக்கியக் காரணம்.

அவர்களின் அற்புத கலையின் சிறப்பைப் போற்றி பெருமைப்படவே இந்த பதிவு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள், அந்த அழகை உலோகத்திலும் உயிர் பெற செய்யும் தன்மையை நாம் புரிந்துக்கொள்ள இன்றைய பதிவு.

நண்பர் அர்விந்த் அவர்களின் படங்கள் இல்லையென்றால் கண்டிப்பாக இப்படி ஒரு பதிவை எழுத முடியாது. அலங்கரிக்கப்பட்ட ஆடல் வல்லானின் அழகுக் கோலம், அருங்காட்சியக சூழலில் அல்ல, ஆலயத்தில்! சுழன்று ஆடுவதைப்போல் காணப்படும் இந்த தோற்றத்தை எதிரில் நின்று பார்க்கும் நமக்கு ஏற்படும் அனுபவங்கள் அதிசயம்தான்! அந்த அழகு வதனத்தின் தேஜஸ் மற்றும் அந்த முத்திரைக் காட்டும் கையை பார்க்கும் பொழுது அலைபாயும் நம் மனதிற்குள் ஒரு அதீத அமைதி உருவாகிறது.

ஜோதி ஸ்வரூபமாய் அவன் ஜொலி ஜொலிக்க, அருகில் சிவகாமி அம்மை தன் மணாளன் ஆடும் அழகை கண்கொட்டாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறாள்.

அம்மையின் முகத்தில் புன்சிரிப்பு, வெறும் சிரிப்பல்ல பெண்மைக்கே உரியான ஒரு பெருமித சிரிப்பு! நிற்கும் கோலத்தில் என்ன ஒரு நளினம்!

இருவரோடு முடியவில்லை, இன்னும் ஒருவர் இருக்கிறார்!

இது நம் காரைக்கால் அம்மை.

நாம் முன்னரே பலமுறை அவர்களை கல்லில் பார்த்துள்ளோம். ஆனால் செப்பு சிலைகளில் இதுவரை ஒன்றிரண்டு அருகாட்சியகங்களில் தான் பார்த்ததுண்டு.


படங்கள்: இணையத்தில் இருந்து.

இந்த சிலைகள் அம்மையாரின்வாழ்கையை விளக்குகின்றன , ஆனால் ஏதோ ஒரு குறை, அது அம்மையாரின் பக்தி! அதை எப்படி சிலையில் காட்டமுடியும்?

பக்தி என்பது ஒரு சாதாரண உணர்வோ உணர்ச்சியோ அல்லவே! அது ஒரு நிலை! பிறப்பு, வாழ்வு, இறப்பு என்ற சுழற்சியை விட்டு ஜீவன் வெளியே வந்து, உடல் என்னும் கூடு, ஆவி என்ற ஒரு அடையாளம் என்று இரண்டையும் தாண்டி , இறைவன் என்ற பரம்பொருளிடம் ஐக்கியம் ஆகும் நிலை. இதை சிலையில் எப்படி காட்டுவது? இந்த நிலையை எழுத்தில் வர்ணிக்கவே கடினமாக இருக்கிறது. அம்மையின் பாடலையே விளக்கமாக இடுகிறேன்

இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன்
அடியின்கீழ் இருக்க என்றார்.

– என்றும் கெடுதலில்லாத இன்ப அன்பினை வேண்டிப் பின்னும் வேண்டுவாராய், `இனிப் பிறவாதிருக்கும் வரம் வேண்டும், மீண்டும் பிறவி உளதாயின் உன்னை என்றும் மறவாது இருக்கும் வரம் வேண்டும், இவற்றோடு இன்னும் ஒன்று வேண்டும், அது, அறவா! நீ ஆடும்போது, நான் மகிழ்ந்துபாடி உன் அடியின்கீழ் இருக்கவும் வேண்டும்` என்று வேண்டினார்.

இப்போது மீண்டும் அம்மையை பாருங்கள்.

புடவை சுற்றப்பட்டாலும், வெளியில் தெரியும் தாளம் போடும் கைகள் மற்றும் முகத்தை வைத்தே அந்த கலைஞனின் அற்புத திறனை நாம் உணர முடிகிறது. அம்மையின் கைகள் தாளம் போடும் போதே, சற்றே வளைந்து அவன் ஆட்டத்தில் லயித்து இருப்பது தெரிகிறது. தான் வேண்டிய வரத்தை அளித்த மகேசனின் மீதான அவரது அன்பு, அதனுடன் மேலே பார்க்கும் வண்ணம் கழுத்து நேராக நீண்டு, நாசிகள் சற்றே விரிந்து, அந்த முகத்தில் தெரிவது பக்தியா?

இல்லை இல்லை பக்திப் பரவசம் !!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஆதி தம்பதியினரிடையே இருந்த பரஸ்பரம்

முதலில் கொட்டும் மழையின் நடுவில் லண்டன் பேருந்து ஓட்டுனரிடம் அருங்காட்சியகம் போக வழி கேட்டது பெரிய தவறு. அன்றோ ஏதோ சாலையில் மராமத்துப் பணி நடக்கின்றதால் (அங்கும் !!!) பல சாலைகள் டைவேர்சண் வேறு – கூடவே சுமைதாங்கி போல முதுகில் புதிதாக வாங்கிய கிரிக்கெட் மட்டை வேறு. நட்ட நடு காட்டில் கண்ணை கட்டி விட்டது போல எங்கோ ஒரு இடத்தில இறக்கி விட்டுவிட்டு பேருந்து தன பாதையில் சென்று விட்டது. இங்கும் அங்கும் சுற்றி நாலு பேரிடம் வழி கேட்டு அவர்கள் தங்கள் பங்குக்கு நாலு பக்கம் வழி காட்டினர். முடிவில் செலவை பார்க்காமல் கைபேசியின் ஜி பி எஸ் மூலம் பார்த்து சென்றால் அது வேறொரு அருங்காட்சியகம் (Museum of London)!! நான் செல்ல வேண்டியது – British Museum!!.

மீண்டும் பேருந்து மற்றும் ரயில் பயணம் . முடிவில் பிரம்மாண்ட தோற்றத்துடன் இருந்த அருங்காட்சியகத்தை அடைந்தேன். வாயிலிலேயே தொல்லை – வாயிற் காப்போன் முதுகில் ”அது என்ன” என்று கேட்டான். முடிவில் தனது இத்தனை வருட சர்வீசில் பல வினோத மனிதர்களை பார்த்ததாகவும் ஆனால் இன்று தான் கிரிக்கெட் மட்டையுடன் அருங்காட்சியகம் வந்த ஒருவரை சந்திப்பதாக கூறி உள்ளே செல்ல அனுமதி கொடுத்தான். ஆனால் அன்று அவர்களுடன் எனது மோதலுக்கு இது ஒரு துவக்கம் தான். நாள் முழுவதும் அரைமணிக்கு ஒரு முறை அருங்காட்சியக காப்பாளருடன் சண்டை. எதற்கு…மேலே படியுங்கள்.

செப்புத் திருமேனிகள் நிறைந்த அறை என்றவுடன் அங்கேயே உட்கார்ந்து விட்டேன். அதுவும் இந்த சிற்பம்..

shiva+parvathi

பெயர் பலகை 11th C CE என்றது , அதுவும் சிவ பார்வதி கல்யாணம் – அதாவது கல்யாண சுந்தர மூர்த்தி என்றது. நாம் முன்னரே இந்த காலத்து சோழ கல்யாண சுந்தர முர்த்தி பார்த்தோம். நீங்களே ஒப்பிட்டு பாருங்கள்.

முதலில் இந்த சிற்பம் சோழர் சிற்பத்தில் மூன்றில் ஒரு பங்கு தான் உயரம், உடல் தோற்ற்றம், முக பாவம் அனைத்தும் பதினோராம் நூற்றாண்டு சோழர் சிலைகளை போல நறுக்கென்று இல்லாமல் இருப்பது தெரிகிறது. புகழ் பெற்ற பல்லவர் கால வடக்களத்தூர் கல்யாண சுந்தர மூர்த்தி சிலையின் நல்ல படங்கள் கிடைத்தால் நன்றாக ஒப்பிடலாம். என்னை பொறுத்த மட்டில் இந்த சிலை கண்டிப்பாக 9th C CE இருக்க வேண்டும்.

பார்வதியின் கழுத்தில் இருக்கும் தாலி போன்ற அணியை நாம் இதுவரை பார்த்ததில்லை. மேலும் கல்யாண சுந்தர மூர்த்தி வடிவங்களுக்கே உரியதான ’கைப் பிடித்தல்’ இல்லாததால் இதனை நாம் ஆலிங்கன முர்த்தி என்றே அழைக்க முடியும்.

செப்புத்திருமேனியின் அழகை முழுவதும் ரசிக்க முன்னழகு மட்டும் அல்ல, பின்னழகும் பார்க்க வேண்டும் என்று கூறுவார். அருங்காட்சியகங்கள் இதை மனதில் கொண்டு சிலைகளை பார்வையாளர் சுற்றி வந்து பார்க்கும் வண்ணம் அமைக்க வேண்டும். இந்த சிலையின் பின்னழகை படம் பிடிக்க நான் பட்ட பாடு…..


தற்செயலாக கண்ணாடியின் மீது சாய்ந்துவிட்டேன், உடனே அலாரம் மணி அடிக்க , மீண்டும் காவலர்களுடன் போராட்டம் – சிலையின் பின் புறம் எதற்கு படம் பிடிக்கிறாய் என்று பல கேள்விகள்.

ஆனால் அதற்க்கு கிடைத்த பலன்…ஆஹா.

முன்னழகைக் காணில் முனிவர்தாம் தவம் செய்வரோ
பின்னழகைக் காணில் பிரமன் தான் தவம் செய்வனோ (மாணிக்கவாசகர்)

பொதுவாக சிவன் உமையை அணைத்து பிடிப்பதே ஆலிங்கன மூர்த்தி என்பர் , எனினும் இங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு தம்பதியினரிடையே இருந்த பரஸ்பரம் – அன்யோன்னியம் , இன்று நம் இளைய காதல் ஜோடிகள் பாணியில் , என்னே அந்த கலைஞனின் திறன் !!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு கல்யாணசுந்தர வடிவம்

போகும் வழி எல்லாம் நல்ல மழை, ஆனால் கங்கை கொண்ட சோழபுரம் அடைந்ததுமே சரியாக நமக்கென்றே நின்று ஆதவன் பளீர் என்று தனது ஆதிக்கத்தை செலுத்த துவங்கினான். மழையில் நனைந்த வரலாற்றுச் சின்னம் கண்முன்னே பளீர் என்று ஜொலித்தது.

ஆரம்பமே அங்கு இருந்த ‘ அதிகாரிகளுடன்’ வாக்கு வாதத்தோடுதான். கருவறையை படம் பிடிக்க மாட்டோம், நாங்கள் செய்யும் பணி இது என்று என்ன சொன்னாலும் அவர்கள் கேட்க வில்லை, தொல்லியல் துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்த இடத்திலும் புகைப்படம் எடுக்கலாம், பணம் கட்ட தேவை இல்லை என்று அதட்டியதும் சிட்டாய்ப் பறந்து விட்டனர். வெளியில் எடுத்து முடித்த பின்னர், மீண்டும் அவர்களது தொல்லை துவங்கியது. இம்முறையும் தோல்விதானோ என்று மனம் தளரும் தருவாயில் ஒரு அதிர்ச்சி. உள்ளே ஏதோ ஒரு பெரிய நிகழ்ச்சி, ஒரே கூட்டம், வீடியோ படமே எடுத்துக் கொண்டு இருந்தது அந்தக் கூட்டம். அவர்கள் எடுக்கும் பொது நாங்கள் ஏன் எடுக்கக் கூடாது என்று சத்தம் போட்டு, அவர்களையும் மீறி படம் எடுக்க துவங்கினோம். அப்போது பார்த்து மின் தடை !!

முடிந்த வரை எது எதுவெனப் பார்த்துப் பார்த்துத் தடவி தடவி படங்களை எடுத்தோம். ஆஹா அந்த வாயிற் காவலர்கள் தான் என்ன ஒரு கம்பீரம். இவர்கள் இங்கே இருக்க ”அவர்கள்” அங்கே எதற்கு என்று தோன்றியது.

அப்பப்பா ! எத்தனை பெரிய சிலை

கால்களுக்கு அடியில் கருப்பாக தெரிகிறதே ? அது என்ன ?

ஆம், நமது கேமராவின் மூடி…

இவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தோம் – சுவரின் அந்த பக்கம் இன்னும் ஒரு சிற்பம் – புடைப்புச் சிற்பம். ஆனால் இரண்டிற்கும் உள்ள அளவு வித்யாசமமானது அதை வடித்த கலைஞனின் திறமையை வெளிப்படுத்தியது. பொதுவாக வரையறுக்கப்பட்ட அளவிற்கு வரைவதோ வடிப்பதோ சுலபம். அதையே மிகவும் பெரிது படுத்தியோ அல்லது சிறிது படுத்துவதோ கடினம் – அங்க அமைப்பு சரியாக வராது.

மின்தடையின் காரணமாக வெளிச்சம் குறைவு. முக்கியமான இடம் சரியாக படம் எடுக்க முடியவில்லை.
எனினும் கதை விளங்கியது. பல முனிவர்கள் முன்னிலையிலும், பிரம்மன் முன்னிலையிலும் மீனாக்ஷி திருக்கல்யாணம நடக்கிறது.

கல்யாண சுந்தரராக சிவன், மணப்பெண்ணுக்கே உரித்தான வெட்கத்துடன் மீனாக்ஷி, பெண்ணை தாரை வாற்றுக் கொடுக்கும் பெருமாள் மற்றும் லக்ஷ்மி

உடனே நினைவுக்கு வந்தது நாம் முன்னரே பார்த்த செப்புத் திருமேனி.

இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை அபாரம்


லட்சுமி நிற்கும் பாணி.

பெருமாள் சற்றே முன்ப்பக்கம் குனிந்து இருப்பது போல உள்ளது

ஆனால் மீனாட்சியின் அந்த இடது கை, சற்றே வெட்கத்துடன் கலந்த புன்முறுவல்


இன்னும் அபாரம் பெருமாளின் கடி வஸ்திரம் ( சிவனுக்கு அப்படி இல்லை !)

நாம் சென்ற பதிவில் பார்த்தது போல

செப்புத்திருமேனியுடன் ஒப்பிட்டு பாருங்கள்.

ஒன்று கல் புடைப்புச் சிற்பம், மற்றொன்று செப்புத்திருமேனி , இருந்தும் இரண்டிலும் கலைஞன் தனக்கே உரிய கலையுணர்ச்சியில் சிற்ப விதிகளை வெளிகொணர்ந்த விதம் அருமை.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

அங்கதம் தேடி – வானர இளவரசன் அல்ல

ஆபரணங்களின் மீது மனிதனுக்கு உண்டான தீவிர பிடிப்பு எப்போது துவங்கியது என கடவுள் நன்கு அறிவார். கிளிஞ்சல் ஓடுகளில் துவங்கி, மணிகளிலிருந்து, பனையோட்டு காதணிகள் என நிலையான வளர்ச்சி அடைந்து தங்கம் எனும் பசுமஞ்சள் உலோகத்தில் உயர்ந்த கற்கள் பதிக்கப்பெற்ற ஆபரணங்கள் வரை படிப்படியாக முன்னேறியது. அதன் பின்னர் என்ன சொல்வது…ஒரே ஓட்டம் தான்..தங்க ஓட்டம். எனினும் இன்று நாம் சற்றே காலத்தை பின்னோக்கி கடந்து செல்ல இருக்கிறோம். அரசர்கள் தங்கத்தை வாரி வாரி கொடையாக அளித்த காலங்களில், அவற்றை வைத்து எவ்வாறு இறைவனை அலங்கரித்தார்கள் என காணப் போகிறோம். ஏன் இந்த திடீர் தேடல் என நீங்கள் கேட்பது புரிகிறது. நமது நோக்கமே ஒரு அபூர்வமான ஆபரணத்தை அடையாளம் காண்பதே. அதன் பெயரோ விந்தையாக நாம் மிகவும் அறிந்த கிஷ்கிந்தையின் இளவரசனாகிய அங்கதனின் பெயராகவே உள்ளது.

நம்முடைய தேடலில் நமக்கு உதவியது இரண்டு அற்புதமான சோழர் கால வெண்கல சிற்பங்கள். இரண்டுமே நியூயோர்க்கில் உள்ளன. ஒன்று மெட்ரோபோலிடன் அருங்காட்சியகத்திலும் மற்றது ப்ரூக்ளின் அருங்காட்சியகத்திலும் உள்ளன.

இவை இரண்டுமே கி.பி. 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. சந்திரசேகர வடிவம் கொண்ட சிவனும் மற்றும் விஷ்ணுவும் – இருவருமே சமபங்க நிலையில் (நேரான தோற்றம்) தங்களது மேல்கரங்களில் வழக்கமான ஆயுதங்களுடன் காட்சி அளிக்கின்றனர் – சிவனது கைகளில் மானும், மழுவும் ஏந்தி உள்ளார். விஷ்ணு சங்கு சக்கரம் ஏந்தி உள்ளார்.

ப்ரூக்ளின் அருங்காட்சியகத்தில் இந்த அற்புத வெண்கல சிலை வந்து சேர்ந்த விதம் மிகவும் சுவையானது. (இந்த இணைப்பிலிருந்து கிடைத்த படங்களுக்கு நன்றி)

மெட்ரோபோலிடன் மியூசியத்தை சேர்ந்த விஷ்ணுவின் சிலையில் இருந்து நாம் துவங்குவோம்.

கிரீடம் மிகவும் அழகாக உள்ளது. மேலும் ஒரு சிறிய பட்டை அதன் அடி வரை செல்கிறது. இதற்கு பட்டிகை என்று பெயர். அது சேர்ந்திருக்கும் பொருளின் தன்மையை பொருத்து அதன் பெயரும் மாறுபடும். உதாரணத்திற்கு இரத்தின பட்டிகை.

கி.பி. பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சோழர் கால வெண்கல சிலையில் (970 CE – எப்படி இத்தனை உறுதியாக இதற்க்கான காலத்தை கணக்கிட்டார்கள் என தெரியவில்லை),புரிநூல் நேராக மார்பில் இருந்து இடுப்பிற்கு வருகிறது. (தொன்மையான விஷ்ணு திருமேனிகள் பதிவில் நாம் கண்டது புரிநூல் மூன்றாக பிரிந்து ஒன்று வலது முன்கையில் மேலே செல்வது போல இருக்கும் – இவ்வாறு அணிவதை நிவீத முறை என கூறுவர்)

அடுத்து வயிற்றில் உள்ள பட்டை – இது இடுப்பாடையை இறுக்கியிருக்கும் பட்டையாக இல்லாமல், அலங்காரத்திற்கு அணியும் உதர பந்தனத்தை போன்றதொரு அணியாகவே உள்ளது. இந்த பட்டைக்கு பெயர் கடி பந்தனமாகும்.

அடுத்து கைகளில் அந்த அணிகலன் உள்ளத என்று பாப்போம். இந்த கைப்பட்டைக்கு கேயூரம் என்று பெயர்.

ராஜேஷ் மற்றும் கார்த்திக் அவர்களுக்கு மிக்க நன்றி. அவர்களது வலைதளமாகிய ஆக்ருதியில் சிற்பத்தின் பாகங்களை அருமையாக விளக்கி உள்ளனர். அதன் மூலம் நாம் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.

நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பட்டையின் கொக்கி சிம்ம முகம் மேலும் மிகவும் அழகுற தொங்கிகொண்டிருக்கும் யூ வடிவ ஆடை கடி வஸ்திரம் ஆகும்.

வலது கரம் பாதுகாக்கும் அபாய ஹஸ்தமாக உள்ளதை கவனிக்கவும்.

இடது கையோ மிகவும் அனாயசமாக இடது புற இடுப்பில் வைத்திருப்பதாக உள்ளது. இதற்கு கட்யவலம்பிதா நிலை என்று பெயர். இவ்வாறு இடுப்பில் இருக்கும் கரத்திற்கு கடி ஹஸ்தம் என்று பெயர்.

இன்னும் அங்கதம் காணவில்லையே.

சந்திர சேகர வெண்கல சிலையில் இதனை காண முடிகிறதா என்று பாப்போம்.

விஷ்ணுவின் சிலை போன்றே வலது கரம் அபாய ஹஸ்தம் கொண்டுள்ளது. ஆனால் இடது கை வேறுபட்டுள்ளது.

ஒரே போன்று தொன்று இரண்டு நிலைகள் உள்ளன. கடக ஹஸ்தம் மற்றும் சிம்ம கர்ண ஹஸ்தம்.

இவை இரண்டிலும் பெரிய வித்தியாசம் இல்லை. இருப்பினும், சிம்ம கரணத்தில் நடுவிரல் சிறிது விரிந்திருக்கும். பொதுவாக கடக ஹஸ்தம் பல்வேறு பெண் தெய்வ திருமேனிகளில் கரத்திலே ஒரு பூவை தாங்கி இருக்கும் விதமாகக் காணப்படும். (மலர்ந்த மலர்களை இறைவியின் கரத்தில் வைப்பது வழக்கம்). ஆக, நாம் இதை ஆராய்ந்து பார்க்கும்போது, நடுவிரல் சிறிது விரிந்திருக்கவே, இது சிம்ம காரணமாக இருக்க கூடும். (திரு. கோபிநாத் அவர்களின் Elements of Hindu Iconography -இல் இரண்டு முத்திரைகளும் ஒன்று போலவே கருதப்படுகின்றன. இவற்றை மேலும் தெளிவாக ஆராய மேலும் பலரின் புத்தகங்களை தேட வேண்டும்)

இப்போது நமது கண்களுக்கு வித்தை காட்டும் அந்த அங்கதம் – இது ஒரு கை அணி ஆகும். ஆனால் இது வரை நாம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் அது நன்றாக மறைந்துள்ளது. அதை காண்பதற்கும் நாம் சிலையின் பின்புறம் சென்று பார்க்க வேண்டும்.

இப்போது தெரிகிறதா? ஆம். இது தான் அங்கதம் – தோள்வளை என்ற மேல் கை ஆபரணம் இது.

படங்களுக்கு நன்றி : ஆக்ருதி , ப்ரூக்ளின் மற்றும் மெட்ரோபோலிடன் அருங்காட்சியகம் .


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

விரல் வித்தை

கை நீட்டுவது, விரல் நீட்டுவது என்பதே சற்று சர்ச்சைக்குரிய விஷயம், அதுவும் கற்சிற்பம் கை நீட்டி எதை உணர்த்துவது என்பதை புரிந்துக் கொள்வது எவ்வளவு கடினம் என்பதை இன்று பார்க்கப் போகிறோம். ஆமாம், தோழி காத்தி அவர்களுடன் விளையாட்டாக நடந்த விவாதத்தில் தக்கோலம் வாயிற்காப்போன் விரல் வித்தை பற்றிய கேள்வி எழுந்தது ( படங்களுக்கு நன்றி நண்பர் அரவிந்த் and மற்றும் வரலாறு.காம் மற்றும் திருமதி சுபாஷினி அவர்கள் சட்டென வரைந்து கொடுத்த ஓவியங்கள்).

முதலில் படங்களை பாருங்கள்


பல கை முத்திரைகள் இருந்தும் இன்று நாம் பார்க்க இருப்பவை ஒரே போல இருக்கும் இரு முத்திரைகள். ஒன்று ஸூசி ஹஸ்தம், இன்னொன்று தர்ஜனி ஹஸ்தம்.

விடை தேடி திரு கோபிநாத் ராவ் அவர்களது ” Elements of Hindu Iconography ‘ நூலை நாடினேன்.

“Suchi-hasta has been misunderstood by some Sanskrit scholars to mean the hand that carries a suchl or needle. ……………………….. But, like the Tarjani hasta, the Suchl-hasta, also denotes a hand-pose, in which the projected forefinger points to an object below, whereas in the tarjani-hasta the forefinger has to point upwards, as if the owner of the hand is warning or scolding another”

அதாவது ” ஸூசி ஹஸ்தம் என்பது சில வடமொழி ஆய்வாளர்களால் தவறுதலாக கையில் ஊசி பிடித்து இருப்பது என்று பொருள்கொள்ளப்படுகிறது ……………………. ஆனால் தர்ஜனி ஹஸ்தம் போல ஸூசி ஹஸ்தமும் ஒரு கை முத்திரை. அதில் ஆள்காட்டி விரல் கீழே இருக்கும் பொருளை சுட்டிக்காட்டுகிறது, தர்ஜனி முத்திரை ஆள் காட்டி விரல் மேல்நோக்கி, எதிரில் இருப்பவரை எச்சரிக்கும் வண்ணமோ, கண்டிக்கும் வண்ணமோ இருக்கும்”

மீண்டும் ஒருமுறை தக்கோலம் வாயிற்காப்போன்களின் கை முத்திரையை அருகில் சென்று பாருங்கள்.

இந்த அற்புத சிற்பங்களை நன்றாகத் துடைத்துப் பாதுகாக்க நம்மால் முடியவில்லையே என்று வருத்தமாக உள்ளது. ஒருவர் நமக்கு தன் அவல நிலையை காட்டுவது போலவும், இன்னொருவரோ என் நிலைமையை பார்க்காதீர்கள் என்று வேறு பக்கம் கை காட்டுவது போலவும் உள்ளது.

கண்டிப்பாக இரண்டுமே தர்ஜனி ஹஸ்தம் தான்

அடுத்து தஞ்சை பெரிய கோயில் செல்வோம். அங்கே என்ன முத்திரை?

இங்கே சற்று சிக்கலாக தான் உள்ளது.

இவர்கள் எச்சரிக்கை செய்கிறார்களா இல்லை அவர் மிக பெரியவர் என்பதை காட்டுகிறார்களா?

மீண்டும் ஒருமுறை திரு கோபிநாத் ராவ் அவர்கள் சொன்னதை கேட்போம். ஸூசி ஹஸ்தம் கீழே உள்ள பொருளை நோக்கி கை கட்டுவது என்றாரே.

இது போன்ற சிலைகளை பார்ப்போமா?

கொடும்பாளூர் மூவர் கோயில் காலசம்ஹார மூர்த்தி

கண்டிப்பாக ஸூசி ஹஸ்தம் தான்.

அடுத்து தாராசுரம் யானை உரி போர்த்திய முர்த்தி

இங்கேயும் ஸூசி தான்!

அடுத்து இரண்டு என்ன வகை?

இருவருமே கண்டிப்பாக கண்டிக்கும் பாவத்தில் இல்லை. திரும்ப ஒரு முறை திரு கோபிநாத் ராவ் வேறொரு இடத்தில என்ன சொல்கிறார் என்று பாருங்கள். எல்லோரா உமாசஹிதர் பற்றி அவர் கூறும் பொது


“Siva is herein holding in one of his left hands the upper part of the garment of his consort and keeps one of his right hands in the suchi pose and the other appears to be carrying a book. He is evidently giving out to Uma one of the puranas…….”

அதாவது ” சிவன் தனது இடது கையில் உமையின் மேலாடையை பிடித்துக் கொண்டு, மேல் வலக் கையை ஸூசி முத்திரையிலும் கீழ் வலக்கையில் ஒரு நூலை பிடிப்பது போல உள்ளது. உமையம்மைக்கு ஏதோ புராணத்தை பற்றிய விளக்கத்தை …..”
இங்கே விரல் மேல் நோக்கி தான் உள்ளது. அப்போது மகேசன் உமையை கண்டிக்கிறாரா? கவனி என்று அதட்டுகிறாரா? இங்கும் அங்கும் பார்த்தால் மேலாடையை பிடித்து கவனம் இங்கே இருக்கட்டும் என்று …..

இரு வகை குண்டலங்கள் – ஹலெபேடு

தமிழகத்தை விட்டு இன்று கர்நாடகம் செல்கிறோம். அங்கே ஹோய்சாளர் அவர்களின் உன்னத கலைப் படைப்பு – ஹலெபேடு ஹோய்சாலேஸ்வரர் ஆலயத்தில் காதணி அல்லது குண்டலங்களை பற்றி ஒரு சிறு பதிவு. முதலில் இருபுறமும் கம்பீர வாயிற்காப்போர்களைக் கொண்ட மகேசனை தரிசிப்போம்.

பல்லவ குடைவரைகளில் உருள்தடி பிடித்த உருவங்கள் முதல் சோழர் காலத்து பிரம்மாண்ட உருவங்களைப் பார்த்த நமக்கு ஹோய்சாளர் வாயிற்காப்போர்கள் வேறு தினுசாக தெரிகிறார்கள். அங்கே நல்ல வருமானம் கிடைத்ததோ என்னமோ – உடை, அலங்காரம் என்று பவனி வருகிறார்கள் இருவரும்.

நாம் முன்னர் பார்த்த போலவே இங்கு வாயிற்காப்போனும் இரு காதுகளிலும் வெவ்வேறு காதணி அணிந்துள்ளான்.

இடது காதில் மிக அற்புதமாக வடிக்கப்பட்டுள்ள மகர குண்டலம். முன்னர் திரு உமாபதி ஆச்சார்யா அவர்கள் நமக்கு மகரம் என்ற உன்னத படைப்பை விளக்கினார்..

ஆனால் இன்று நாம் காண இருப்பது வலது காதில் உள்ள அணி. திரு கோபிநாத் ராவ் அவர்களின் ”Elements of Hindu Iconography” என்ற நூலில் குண்டலங்களில் ஐந்து வகை என்றும், அவை பத்ர குண்டலம் (பனை ஓலை சுருட்டி இருப்பது போல – பின்னலில் அதே பாணியில் தங்கத் தகடில் வார்த்து அணிந்தார்கள்), நகர குண்டலம் (மகர குண்டலம் தான்), சங்கபத்ர குண்டலம் (சங்கை பக்கவாட்டில் வெட்டியவாறு), ரத்ன குண்டலம் மற்றும் சர்ப்ப குண்டலம் என்று விவரிக்கிறார்.

இதில் கடைசியாக வரும் வகை, பொதுவாக காதில் ஒரு நல்ல பாம்பு படம் எடுப்பது போல இருக்கும். இதோ பேலூர் கோயிலில் உள்ள கருடனின் காதுகளில் பாருங்கள். .

ஆனால், ஹலெபேடு வாயிற்காவலனின் காதில் இருப்பதோ பல தலை நாகம்

என்ன அருமையான வேலைப்பாடு, நம்மை பார்த்து அந்த நாகம் சிரிப்பது போல இருக்கிறது.

வேலைப்பாட்டை பற்றி சொல்லும் பொது, அந்த தலையில் உள்ள மண்டை ஓடுகளை பற்றி சொல்ல வேண்டும்.

அபாரமான வேலை, இந்த சிறிய இடத்தில, உள்பக்கம் உள்ள கல்லையும் குடைந்து உள்ள நுணுக்கம் அபாரம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஆலங்குடியானின் அற்புதக்கோலம்.

முந்தைய பதிவில் மகேசன் கையில் விடத்தை எடுக்கும் காட்சியை பார்த்தோம். இந்த பதிவு அதன் தொடர்ச்சி. ஊத்துக்கோட்டை அருகில் இருக்கும் சுருட்டுப்பள்ளி ( சென்னை திருப்தி வழியில் சுமார் அறுபது கிலோ மீட்டர் தொலைவில் ) இருக்கும் சிற்பத்தை கொண்டு, நண்பர் மருத்துவர் திரு ஷங்கர் குமார் அவர்கள் அருமையான புதிய நடையில், நண்பர் திரு அசோக் கிருஷ்ணசுவாமி அவர்களது படங்களுடன் இதோ ஆலங்குடியானின் அற்புதக்கோலம்.

திருச்சிற்றம்பலம்.

‘முடியாதுன்னா முடியாதுதான்! எவ்ளோ கெஞ்சிக் கேட்டாலும் இதான் பதில்!’ தனது தலையை இப்படியும் அப்படியுமாக வேகமாக ஆட்டியபடியே தீர்மானமாகச் சொல்கிறார் நந்தியார்!

பரிதாபமாகக் கெஞ்சியபடி நின்ற கூட்டம் நிம்மதி இழந்து தவிக்கிறது.

மஹாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன், வாயு, அக்னி, வருணன், நாரதர், மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, இன்னும் இவர்களுடன் எண்ணிலடங்காத் தேவர்களும், முனிவர்களும் அங்கே பதற்றத்துடன் நிற்கிறார்கள்.

‘எல்லாம் இவரால் வந்தது’ எரிச்சலுடன் முணுமுணுக்கிறார் வாயு பகவான்.

தன்னைப் பார்த்துத்தான் சொல்கிறார் எனப் புரிந்த இந்திரன், ‘நான் என்ன எனக்காகவே கேட்டேன்? நம்ம எல்லாருக்காவும்தானே?’ எனப் பதிலுக்கு முறைக்கிறார்.

‘சரி, சரி, இப்ப பழசையெல்லாம் கிளற வேண்டாம்’ எனச் சமாதானப் படுத்த முனைந்தார் பிரமதேவன்.

‘அதெப்படி? வாயு பகவான் சொல்வதும் சரிதானே? இந்திரன் அமிர்தம் வேணும்னு கேட்கப்போனதாலதானே இத்தனை அமர்க்களமும் ஆச்சு.’ எனச் சிண்டு முடிந்தார் நாரதர்.

‘விடாம, துரத்தித் துரத்தி நம்மளையெல்லாம் இம்சை படுத்தின ராக்ஷசர்களோட தொல்லை பொறுக்க முடியாமத்தானே பாற்கடலைக் கடைஞ்சு அமிர்தம் எடுக்க முடிவு செஞ்சோம்? அப்பவும் நம்மளோட சக்தி மட்டும் அதுக்குப் போறாதுன்னுதானே, வேற வழியில்லாம அவர்களையும் கூடச் சேர்த்துகிட்டோம்? இப்படியெல்லாம் ஆகும்னு யார் கண்டா?’ எனச் சற்று தைரியமாகக் குரலை உயர்த்தினார் இந்திரன்.

‘நீ சொல்றதுல்லாம் வாஸ்தந்தான். யாரு இல்லைன்னாங்க? வாசுகியை கயிறா வைச்சுகிட்டு, வடவரையை மத்தாட்டமா கடைஞ்சோம். எங்கே தலைப் பக்கத்தைப் பிடிச்சா பாம்பு கடிச்சிருமோன்னு பயந்துபோயி, நீங்கள்லாம் வாலைப் பிடிச்சுண்டீங்க பாரு, அங்கதான் தப்பாயிடுச்சு. அந்த முரட்டு அரக்கர்கள்லாம் சேர்ந்து வாசுகியோட தலையைக் கெட்டியாப் பிடிச்சு நசுக்கிட்டாங்க பாவிப்பசங்க! வலி தாங்க முடியாம அது தன்னோட வேலையைக் காட்டிடிச்சு. பொங்கிவந்த அந்த ஆலகால விஷத்தைப் பார்த்ததுமே, அதோட உக்ரம் தாங்கமுடியாம எல்லாருமா ‘துண்டைக் காணும், துணியைக் காணும்’னு ஓடிட்டீங்க.’ என நிறுத்தினார் பிரமன்.

‘நான் சொல்லலை…. கொஞ்சம் சீண்டிவிட்டாப் போதும். என்னோட தந்தையார் எல்லா விஷயத்தையும் சொல்லாம நிறுத்த மாட்டார்’ என்பதுபோல ஒரு நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தார் நாரதர்!

அதைக் கவனியாதவர்போல பிரமன் தொடர்கிறார்.

‘விஷமா, அப்பிடியே சீறிப் பாயறது. அந்த உஷ்ணம் தாங்காம, லோகமே…. இந்தப் பிரபஞ்சமே கிடுகிடுத்துப் போயிடுத்து! எனக்கா கையும் ஓடலை, காலும் ஓடலை. என்ன பண்றதுன்னே புரியலை எனக்கு! நேரா அந்த ஆபத்பாந்தவன் சாக்ஷாத் பரமசிவனை விட்டா வேற வழியில்லைன்னு புரிஞ்சிடுத்து.’

‘நிஷ்டையுல இருந்த பரமேச்வரனைப் பாக்கறதுகாக, அப்பவும், இதோ கெஞ்சிக் கூத்தாடிண்டு நிக்கறோமே, அப்படித்தான் இந்த நந்தி பகவான்கிட்ட மன்னாடி, ஒருவழியா அவரையும் மீறிண்டு உள்ளே போயிட்டேன். எல்லாம் புரிஞ்சவர்மாதிரி, தன்னோட கடைக்கண்ணால, பக்கத்துல் நிக்கற சுந்தரரைப் பாக்கறார் சர்வேச்வரன்.’

‘அடுத்த நொடியே, சுந்தரரைக் காணலை அங்கே! சித்த நாழியுல, கையுல அந்த விஷத்தை எடுத்துகிட்டு வரார் அந்தப் பிரபு! கொஞ்சங்கூட முகத்துல இருக்கற களை மாறவேயில்லை அவருக்கு! இத்தனைக் கொடிய விஷத்தைக் கையுல வச்சிண்டிருக்கோமேன்ற பதட்டமே இல்லாம வரார்! அப்படியே வந்து பவ்யமா சிவன் முன்னாடி கையை நீட்டிண்டு நிக்கறார்.’

‘அப்போ நடந்ததுதான் பெரிய ஆஸ்சர்யம்!…. நீங்கள்லாந்தான் அங்கே அப்போ இல்லியே! அதனாலத்தான் இவ்வளவு விவரமாச் சொல்றேன்…… பரமசிவன் லேசாக் கண்ணைத் திறந்து பார்க்கிறார். சுந்தரமூர்த்தி நாயனாரின் கையிலிருக்கிற விஷத்தை நொடிப்பொழுதுல எடுத்து, என்னப் பண்ணப் போறாரோன்னு நினைக்கறதுக்கு முன்னாடியே, அப்படியே வழிச்சு தன்னோட வாயுல போட்டுக்கறார்!’

‘என்ன ஒரு கருணை! இந்த லோகத்தும் மேல அவருக்குத்தான் எவ்வளவு அக்கறை! வெளியிலும் இருக்கக் கூடாது அந்த விஷம். தூக்கி எறியவும் இயலாது. எங்கேன்னு எறியறது அதை? இருக்கற ஒவ்வொரு கணமும் அதால இந்தப் பிரபஞ்சத்துக்கே ஆபத்து!! அப்படிப்பட்ட அந்த கடுமையான ஆலகால விஷத்தை இந்த லோக க்ஷேமத்துக்காகத் தானே குடிக்க முடிவு பண்ணின அந்தக் கருணையை நினைச்சு பரவசப்படற அந்த நேரத்துலதான்’ ….என ஒரு இடைவெளி கொடுத்து சுற்றி இருந்தவர்கள் முகத்தைப் பார்க்கிறார் பிரம்மா!

அனைவர் முகத்திலும் ஆச்சரியமும், வியப்பும், திகைப்பும் ஓட பிரம்மாவையே பார்க்கின்றனர்.

அனைவரின் கவனமும் தன் மேல்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிரமன் தொடர்கிறார்! நாரதர் முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை தவழ்கிறது!

‘ம்ம்ம். மேலே சொல்லுங்க! அப்படி என்ன நடந்தது அப்போ?’ என ஆவலை அடக்கமுடியாமல் வருணன் கேட்கிறார்.

‘வாயில் போட்ட விஷம் இன்னும் தொண்டையைத் தாண்டலை! பக்கத்துல உட்கார்ந்திருந்த உமாதேவி, தனது கையால் பரமேச்வரனோட கழுத்தை இறுக்கிப் பிடிக்கறார்! விஷம் உள்ளே இறங்காம, அப்படியே தொண்டையிலியே நின்னுடுத்து!’

‘ஏன் இப்படிப் பண்ணிட்டார்னு நாங்கள்லாம் திகைச்சுப் போயிட்டோம்! அப்பத்தான் இந்த அற்புதத்தோட அருமை புரிஞ்சுது எனக்கு! யார் இந்தப் பரமேச்வரன்? அகில லோகத்துக்கும் ஆதார சுருதியே இவர்தானே! இவரோட ஆட்டத்தாலத்தானே அகிலமே ஆடறது.. ஆடிக்கொண்டு இருக்கு! அப்படிப்பட்டவரோட வயிற்றுக்குள்ளே இந்த விஷம் இறங்கிட்டா, அப்பறம் இதை வெளியுல வைக்கறதுக்கு அர்த்தமே இல்லாமப் போயிடுமே! அது மட்டும் உள்ளே போயிட்டா, அந்த விஷம் தன்னோட வேலையைச் செஞ்சுடுத்துன்னா, இந்த லோகமே அழிஞ்சு போயிடாதா?

‘இதைப் புரிஞ்ச ஒரே ஆள் பார்வதிதான்! லோகமாதாவாச்சே அவர்! சர்வலோக ஜெகன்மாதாவுக்கு அந்தச் சிவனை விடவும் இன்னும் அதிகமான அக்கறை இந்த ஜீவராசிகள் மேலே! அதனாலத்தான், அந்த ஆலகாலத்தை அப்படியே பரமசிவனோட தொண்டைக்குக் கீழே போகவிடாம தடுத்து கருணை பண்ணியிருக்கார்! இப்படி ஒர்த்தருக்கு மேலே ஒர்த்தரா அவங்க இரண்டு பேரும் பண்ணின அற்புதத்தாலதான் இன்னைக்கு நாமெல்லாம் இப்படி நின்னு பேசிகிட்டு இருக்கோம்’ எனச் சொல்லிவிட்டு அனைவரையும் பெருமிதத்துடன் பார்த்தார்!

‘அந்த அற்புதத்துக்கு ஈடு இணை உண்டா? ஆனா, அதுக்கு அப்புறம் நடந்ததாக் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தாலத்தானே இப்ப நாம இங்கே இப்படி நின்னுகிட்டிருக்கோம்’ என அவரை நிகழ்காலத்துக்கு இட்டு வருகிறார் பெருமாள்!

‘இதோ, இங்க நிக்கறானே இந்த நாரதன், இவன் தான் அதைச் சொன்னவன்! அவனையே கேளுங்க’ என்று நாரதரைப் பார்க்கிறார் பிரமன்.

‘அதான் ஏற்கெனவே சொல்லியாச்சே! விஷத்தை எடுத்து முழுங்கின சிவபெருமான், அது உள்ளேயும் போகாம, வெளியேவும் வராம, அப்படியே அசதியா சாய்ஞ்சுட்டாராம்! அந்த மலைமகள்தான், அவரைத் தன்னோட மடியுல சாய்ச்சுண்டாராம்! இப்ப அப்படியே கண்ணைத் திறக்காம, அந்த சர்வேச்வரன் காலை நீட்டிப் பள்ளி கொண்டிருக்கிறாம்’ என்றார் நாரதர்!

‘என்னது? பள்ளிகொண்டாரா பரமசிவன்? அது என்னோட வேலையாச்சே! அவர் கண்ணை மூடிண்டு படுத்துட்டா இந்த லோகம் என்ன ஆகிறது? அதான் இந்த பிரபஞ்சமே இருளோன்னு இருக்கு. அவரைப் பார்த்து, அவருக்கும், என்னோட சகோதரி மீனாக்ஷிக்கும் அவ்வளவு துணிச்சலா இந்த லோக நன்மைக்காக இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினதுக்காக, என்னோட வணக்கத்தையும், பாராட்டையும் சொல்லலாம்னு பார்த்தா இந்த நந்தி உள்ளே விடமாட்டேன் என்கிறாரே,’ என அங்கலாய்க்கிறார் பாரளந்த பரமன்.

மற்ற எல்லாரைப் போல இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நந்தி பகவான், மஹாவிஷ்ணுவிடம் வந்து, ‘பெருசா ஒண்ணுமில்லை. லேசா தலை சுற்றுகிறாற்போல் இருக்குன்னு சொல்லிட்டு, அம்மையின் மடியில் சயனித்திருக்கிறார் எம்பெருமான். அவர் நிஷ்டையில் இருக்கும்போது எப்படி எவரையும் உள்ளே செல்ல எனக்கு அனுமதி கிடையாதோ, அதே போலத்தான் இதுவும். ‘என்றவர், உடனேயே, ‘கொஞ்சம் இருங்க. உள்ளே ஏதோ சத்தம் கேட்கிறது. என்னன்னு பார்த்துவிட்டு வருகிறேன்’ எனச் சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்.

விஷயம் கேள்விப்பட்ட சூரியனும் தனது அன்றாடப் பணிகளை முடித்துவிடும் தருவாயில் லேசாக எட்டிப்பார்க்கத் துவங்கினான்!

‘நான் உதயமாக இன்னும் கொஞ்சம் நேரமிருக்கிறது. அதற்குள் சிவதரிசனம் கிடைத்தால் நல்லாயிருக்குமே’ எனச் சந்திரன் கைகளைப் பிசைந்து கொள்கிறான்.

அவன் நினைத்ததுபோலவே அருளுறை அன்னை உடன்வர, ஆலவாய் அண்ணல் அன்புப் புன்னகை பூத்தவண்ணம் வெளியே வந்து தரிசனம் தருகிறார்!

அகிலத்தையே தங்கள் கருணையால் காப்பாற்றிய அம்மையப்பனைக் கண்டதும் அனைவர் முகத்திலும் சொல்லவொண்ணா மகிழ்ச்சி ததும்புகிறது!

‘ஆலமுண்ட அண்ணலே போற்றி! அகிலம் காத்தருளிய அன்னையே போற்றி போற்றி!’ எனும் முழக்கம் விண்ணைப் பிளக்கிறது!

“தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!”

திருச்சிற்றம்பலம்!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

திருவட்டது​​றை: ஒரு ஆலயத்தின் ஜீவநாடி – சிற்பம் மற்றும் புராணம்

நமக்கு இன்று மீண்டும் ஒரு விருந்து, மிஸ். லீய்ஸ்​பெத் பங்கஜ ​பென்னிங்க் சென்ற பதிவில் ஞானக் குழந்தைக்கு கிடைத்த குடை மற்றும் பல்லக்கை மிக அழகாக நமக்கு விளக்கினார். இன்று முழு விருந்து. ஒரு ஆலயத்தை எப்படி நாம் இனி பார்க்கவேண்டும் என்று நமக்கு கட்டறுக் கொடுக்கிறார்.

ஒவ்​வொரு ​கோவிலும் ​பல்​வேறு தலவரலாறு ​கொண்டது ​போன்​றே, ஒவ்​வொரு ​தெய்வ வடிவமும், சிற்பமும் பல்​வேறு க​தைக​ளை நமக்கு எடுத்து​ரைக்கின்றன. ஒவ்​வொரு மூர்த்தமும் ஏ​தேனும் ஒரு புராணத்​தை ​மையமாகக் ​கொண்டுள்ளது. ​மேலும் அந்த சிற்பம் வடிக்கப்பட்ட காலகட்டத்தின் வரலாற்​றையும் விளக்கக்கூடியது. ஒரு புராணம் அல்லது ​தொன்மத்​தை அந்த சிற்பியின் காலகட்டத்தில் எவ்வாறு ​சொல்லப்பட்டது என்பதற்கு சான்றாக உள்ளது. சாஸ்திரத்தில் உள்ள ​கொள்​கையின் அடிப்ப​டையி​லே​யே ​தெய்வீக வடிவங்கள் அ​மைக்கப்படுகின்றன என்ற​போதும், அதற்கு உயிர்​கொடுப்பது சிற்பியின் இயற்​கையான அறிவாற்றலும், கற்ப​னைத் திறம் மற்றும் அவர் கண்ட ​மேற்​கோள்களும் ஆகும். சிற்பியின் திற​மையான ஆற்றலின்றி இத்தகு ​தொன்மங்கள் உயிர் ​பெறுவது கடினம்.

இந்த இடு​கையில் ​கோவிலின் அ​மைப்புடன் இ​​யைந்த மூர்த்திக​ளைப் பற்றி காண்​போம். ஒவ்​வொரு மூர்த்தத்தின் க​தை​யையும் தனித்தனி​யே கூறுவதன் மூலம் அவற்றின் முக்கியத்துவத்​தை அறிய முடியும் என்பதால் அவற்​றை அவ்வா​றே கூற விரும்புகி​றேன்.

முதன்மு​றையாக ஒரு ​கோவிலுக்குள் ​செல்வ​தே ஒரு உன்னதமான அனுபவம். ஒவ்​வொரு ​கோவிலுக்கும் அதற்​கென்று ஒரு அதி​ர்வு உண்டு. அதனுள் பல ​பொக்கிஷங்ளும் உண்டு. பற்பல ​கோவில்கள் பிரபலமான​​வை, என​வே அவற்றின் பு​கைப்படங்களும் பல்​வேறு புத்தகங்களும் எளிதில் கி​டைக்கும். அவ்வாறு பிரபலமான ​கோவில்களில் நாம் நு​ழையும்​போது ஏற்கன​வே நமக்குள் எதிர்பார்ப்புகள் நி​றைந்திருக்கும். இருப்பினும் நமது உண்​மையான அனுபவ​மோ வித்தியாசமாகவும் எதிர்பாராததாகவு​மே இருக்கும். ஆனால், நாம் அறியாத ​கோவிலுக்குள் நு​ழைவ​தோ உண்​மையி​லே​யே மிகச் சிறந்த அனுபவமாகும். பல அற்புதங்கள் பு​தைந்துள்ள ஒரு ​பொக்கிஷ நிலவ​றைக்குள் புகும் அனுபவத்​தை ஏற்படுத்தும்.

திருவட்டது​றை சிவன்​ ​கோவிலுக்குள் ​செல்வதும் அத்த​​கைய ஒரு அற்புத அனுபவமாகும். நாங்கள் அக்​கோவிலின் முதன் ​கோபுர வாயிலில் இருந்து ​வெளிப்பிரகாரத்​தை அ​டைந்​தோம். எங்களுக்கு இடதுபுறத்தில் அம்பி​கை சன்னதிக்குச் ​செல்லும் முற்றத்தின் வாயில் இருந்தது. எங்களுக்கு வலதுபுறத்தில் அம்பி​கை சன்னதிக்கான ​கொடிமரமும் நந்தியும் இருந்தன. அ​தைத் தாண்டி சிவாலயத்திற்கான ​கொடிமரமும் நந்தியும் இருந்தன. மார்கழி மாத ​​வெயிலில் குளுகுளு​வென்றிருந்தது. இரண்டாம் ​கோபுர வாயி​லைத் தாண்டி நாங்கள் ​​சென்​றதும் எங்களுக்கு ​எதிரில் ​தெரிந்தது ஒரு மண்டபத்தின் சுவர்கள் தாம்.

பிரதட்சிணம் ​செய்யும் விதமாக நாங்கள் இடப்புறமாக திரும்பி சுற்றி வரத் துவங்கி​னோம்.

அந்த மண்டபம் மிகவும் அழகாகவும் ​தொன்​மையாகவும் இருந்தது. அதன் தூண்கள் பிற்கால ​சோழர் காலத்தியதாக​வோ அல்லது முற்கால நாயக்கர் காலத்தியதாக​வோ இருக்கக்கூடும், அ​நேகமாக 14ஆம் நூற்றாண்​டைச் ​சேர்ந்தது. அந்த மண்டபத்தின் வாயில் ​தெற்குப்புறமாக இருந்தது. இது ஒரு முகமண்டபத்துடன் இ​ணைந்திருந்தது. அந்த முகமண்டப​மோ இன்னும் ​தொன்​மையானதாக இருக்கக் கூடும். அதன் வாயிலும் ​தெற்குப்புறத்தில் இருந்தது. ஒரு சிறிய வழியும் ​தெரிந்தது. இந்த வழி​யை சுற்றி வந்த பிற​கே விஸ்தாரமான முற்றமும் இ​றைவனின் ஆலயமும் ​தெரிந்தன.

ஆலயத்​தைக் கண்ட உட​னே​யே அது முற்கால ​சோழர் கால ​கோவில் என்று அறிந்து​கொண்​டோம். சுவற்றில் உள்ள மாடங்களில் கல்லினால் ஆன ​தெய்வ மூர்த்தங்கள் காணப்பபட்டன. என்​னை​ ​மே​லே ​செல்ல விடாமல் எதிரில் இருந்த மிக அழகிய பிட்சாடனர் திருஉருவம் ஈர்த்தது. நான் இதுவ​ரை கண்டதி​லே​யே மிக அழகான பிட்சாடனர் சிற்பம்.

ஆளுயர அளவில், பளபளக்கும் கருநிறத்தில், ஒயிலான ந​டையுடனும், இதழ்களில் ஒரு மர்ம புன்ன​கையுடனும் அற்புத ப​டைப்பு. தாருவனத்தில் சிவ​பெருமானின் ஆனந்த நடனத்​தைக் குறிப்பது பிட்சாடனர் திருவுருவம்.

இக்க​தை​யை விளக்கும் மற்று​மொரு அழகிய ஓவியம் சிதம்பரத்தில் உள்ள சிவகாமசுந்தரி ஆலயத்தில் உள்ளது.

தனது ​மேல் இடக்கரத்தில் சூலம் ஏந்தி, அத​னை தனது ​தோள்களில் சாய்த்துக் ​கொண்டு நிற்கிறார். சூலத்திலிருந்து ஒரு மயிலிறகு கற்​றை அழகுற ​​தொங்குகிறது. இடதுகரத்தில் ஒரு மண்​டை ஓடு பிட்​சை பாத்திரமாக உள்ளது. கீழ் வலதுகரம் தன்​னை பின்பற்றி வரும் மா​னை ​நோக்கி உள்ளது. இந்த ஓவியத்தில் காணும்​போது, மானுக்கு உணவளிக்க சிறிது புல் ​கையில் ​வைத்திருப்பது​ ​தெரிகிறது. அவருக்கு இடதுபுறத்தில் ஒரு குறுமனிதன் மிகப் ​பெரிய பாத்திரத்​தைத் தூக்கிப் பிடித்துள்ளார். திருவட்டது​றையி​லோ அருகி​லே ஒரு ரிஷி பத்தினி காணப்படுகிறார்.

தாருவனத்தில் ரிஷிக​ளை எதிர்​​கொண்ட பின் சிவ​பெருமான் தனது ஆனந்த நடனத்​தை நிகழ்த்துகிறார். எட்டு தி​சைகளும் அதிர, திருமுடியில் உள்ள கங்​கை பயத்தால் நடுநடுங்க, சிவ​பெருமான் ஆட, உ​​மையம்​மையும் கூட ஆடத்துவங்குகிறார். பிட்சாடனருக்கு அடுத்துள்ள மாடத்தில் சிவகாமசுந்தரியுடன் ஆனந்த நடனம் புரியும் ஆனந்த தாண்டவ மூர்த்திக் காணப்படுகிறார். இந்த நடராஜரும் மிக அற்புதமானது.

அற்புத ​வே​​லைப்பாட்டிற்காக மட்டுமன்றி, நடராஜர் சிற்பத்தின் ​வரலாற்றிலும் முக்கிய இடம் வசிப்பதாலும், இ​தேப் ​போன்று ​வே​​றெங்கும் காணப்படாதது மிக ஆச்சரியமான விஷயமாகும்.

நடராஜருக்கும் பிட்சாடனருக்கும் இ​டையி​லே சங்கடங்க​ளை தீர்க்கும் விநாயகர் அருள்பாலிக்கிறார். ஆக, பிட்சாடனர், விநாயகர், நடராஜர் என மூன்று மூர்த்திகள் ​தெற்குமுக அர்த்தமண்டபத்தின் சுவற்றில் காணப்படுகிறார்கள்.

பிரதட்சிணமாக பிரகாரத்​தை வலம் வரும்​போது அடுத்து நாம் காண்பது சிவ​பெருமானின் தட்சிணாமூர்த்தி ​திருவுருவம்.

இந்த சிற்பமும் அற்புத ​​வே​லைப்பாட்டுடனும் அழகுடனும் விளங்குகிறது. நான்கு முனிவர்கள் சுற்றியிருக்க சின்முத்தி​ரையுடன் அருள்புரியும் இவர்தான் பரமகுரு. ​கர்ப்பகிரஹத்தின் தெற்கு சுவற்றிலுள்ள மாட​மே தட்சிணாமூர்த்தியின் இருப்பிடமாகும்.

அடுத்து ​மேற்கு சுவற்றிலுள்ள மாடத்தில் லிங்​கோத்பவ​ரைக் காண்கி​றோம். லிங்​கோத்பவர் பற்றிய க​தை திருவண்ணாம​லையில் நடந்ததாகக் கருதப்படுகிறது. ​மேற்கு மாடத்தில் உள்ள லிங்​கோத்பவ​ரை சிறிய வடிவத்தில் பிரம்மாவும் விஷ்ணுவும் வணங்குகின்றனர்.

லிங்​கோத்பவ வடிவம் எப்​போது​மே ​மேற்கில் உள்ள மாடத்தில் இருப்பதாக ​தொன்று​தொட்டு எண்ணி வருகி​றோம். இருப்பினும் எப்​​போது​மே இது வழக்கில் இருந்திருக்கிறதா? சற்​றே ​மேல்​நோக்கி விமானத்​தைக் காண்​போம். அங்​கே இரண்டாம் தளத்திலும் சிகரத்திலும் விஷ்ணு​வே ​மேற்கு தி​சையில் குடியிருக்கிறார்.

இரண்டாம் தளத்தில் ஆதி​சேஷன் மீது ஸ்ரீ​தேவி பூ​தேவி ச​மேதராக மஹாவிஷ்ணு காட்சியளிக்கிறார். சிகரத்திலும் விஷ்ணு தனது இரு ம​னைவியருடன் அமர்ந்திருக்கிறார். இருப்பினும் அவரது ஆசனம் காணப்படவில்​லை. இ​தைக் காணும்​போது நமக்குள் ​கேள்வி எழுகிறது. இந்த மாற்றம் ஏன், எப்​போது ஏற்பட்டது? இன்று பல ​கோவில்களில் ​மேற்குமாடத்தில் நாம் விஷ்ணு மூர்த்தி இருப்ப​தைக் காண்கி​றோம். ஆனால் ​கோவில் விமானத்தி​லோ இ​தே இடத்தி​லே​யே விஷ்ணு குடியிருப்பது, ஆதிகாலத்திலிருந்து இது விஷ்ணு மூர்த்தியின் இடமாக இருந்திருக்கும் எனத் ​தெரிகிறது. இதற்கு சான்று கும்ப​கோணத்திலுள்ள நா​​கேஸ்வர ​கோவில். ​மேற்கு சுவற்றின் மாடத்தில் அர்த்தநாரீசுவரர் இருந்தாலும், விமானத்தின் இரண்டாம் தளத்திலும், சிகரத்திலும் விஷ்ணு​வே குடியிருக்கிறார்.

பிரகாரத்​தின் வடக்குப்பகுதியில் வலம்வரவும், அங்​கே வடக்கு மாடத்தில் நான்முகனாகிய பிரம்மா தனது ​தொன்று​தொட்ட இடத்தி​லே காட்சியளிக்கிறார்.

அர்த்தமண்டபத்தின் வடக்குபுற சுவற்றிலும் மூன்று மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். சிவ​பெருமானின் இரு வடிவங்கள், கங்காதர​ர் மற்றும் அர்த்தநாரீசுவரர் இருவரும் துர்க்​கையின் ​மேற்கு மற்றும் கிழக்கு தி​சையில் உள்ளனர். துர்க்​கை நடுவில் உள்ள மாடத்தில் வீற்றிருக்கிறாள். அ​னைத்து மூர்த்திகளு​மே மிகவும் அழகுற வடிக்கப்பட்டு அவற்றின் க​தை​யை ஆன்மிக ​நோக்குடனும் அழகுடனும் விளக்குகிறது.


ஆதிகால ​சோழர் ​கோவில்களில் அர்த்தமண்டபத்திலும் விமானத்திலும் உள்ள மாடங்கள் 3-1-1-1-3 என்ற விதமான கட்ட​மைப்பு ஒரு ​பொதுவான அம்சம். இருப்பினும் இக்​கோவிலில் ​மேலும் ஒரு கூடுதலான மாடம் முகமண்டத்தின் வடக்கு முக சுவற்றில் இருப்பது மிக அபூர்வமான ஒன்று.

பத்தாவது மாடத்தில் கால​பைரவர் காட்சியளிக்கிறார். இரு பஞ்சரங்களின் இ​டையி​லே ஓர் தனி மாடத்தில் எழுந்தருளியிருக்கிறார்.

அ​நேகமான ஆதிகால ​சோழர் ​​கோவில்களில் விமானத்தின் சுவர்களில் ஒற்​​றை மாடம் இருப்பது வழக்கம். ​தெற்கு சுவற்றில் தக்ஷிணாமூர்த்தியும், விஷ்ணு (முற்காலம் முத​லே), அர்த்தநாரீசுவரர் (சிறிது காலத்திற்கு பின், ​மேலும் சில கால​மே வழக்கில் இருந்தது) அல்லது லிங்​கோத்பவர் (பிற்காலத்தில் வழக்கில் இருந்து இன்று வ​ரை ​தொடர்கிறது). பிரம்மா எப்​பொழுதும் வடக்கு சுவற்றி​லே​யே காணப்படுகிறார். சில சமயங்களில் பிற மூர்த்திகளும் வடக்கு சுவற்றில் காணப்படுவது உண்டு, உதாரணத்திற்கு காமரசவல்லியிலும், கும்ப​கோணத்திலுள்ள நா​கேஸ்வரர் ​கோவிலிலும் இவ்வாறு உள்ளது.

அர்த்தமண்டபத்தின் சுவற்றில் மூன்று மாடங்கள் இருப்பது ஒன்றும் புதிதன்று. இருப்பினும் இந்தக் ​கோவிலில் ஆறு மாடங்களில் நான்கு மாடங்கள் மு​றையான மாடங்கள் அன்று. இ​வை ​ஒழுங்கான மாடத்தின் கட்ட​மைப்பாக இன்றி, கோவிலின் சுவற்றில் ​​வெட்டப்பட்டு உள்ளன. மகரத்​தோரணம் ​கொண்ட உத்திரக்கல்லும், ​மேலுள்ள வரிகளின் ​தொடர்பின்​மையும் இ​த​னை ப​றைசாற்றும்.

அர்த்தமண்டபத்தின் சுவற்றில் நடுநாயகமாக விளங்கும் விநாயகரும் துர்க்​கையு​மே உண்​மையான மாடங்களாக விளங்கியிருக்கின்றன என எடுத்துக் காட்டுகிறது. இது கூறும் க​தை​யென்ன? ஒரு​வே​ளை சிற்ப கட்டுமானர், கட்டுமானம் துவங்கியபின் இ​டை​யி​லே பல்​வேறு மூர்த்திக​ளையும் ​சேர்க்க எண்ணியிருப்பா​ரோ? அல்லது ஒரு​வே​ளை கட்டுவித்தவர் விருப்ப​மோ? ஆதிகால ​சோழர் ​கோவில்களில் இது எந்த நி​லைமாறுபடு காலத்​தைக் குறிக்கிறது? மற்ற நான்கு மூர்த்திக​ளை விட விநாயகர் மற்றும் துர்க்​கையின் மூர்த்திகள் ​வேறுவிதமாய் இருப்ப​தை அறியலாம். அதிலும் குறிப்பாக துர்க்​கை அ​நேகமாக உருண்​டையாக வடிவ​மைக்கப்பட்டுள்ளது. மஹிஷாசுரனின் த​லைமீது வீற்றிருக்கும் அன்​னை சற்​றே குறுகிய மற்றும் உயரமான ​வே​லைப்பாட்டுடன், சற்​றே அதிக உயரமாகவும் குறுகலாகவும் உள்ள மாடத்தில் மிக அரு​மையாக ​பொருந்தியுள்ளது.

ஆனால் சுவற்றில் ​வெட்டப்பட்டுள்ள மற்ற மாடங்க​ளோ ஆழமின்றியும், அகலமாகவும், உயரமாகவும் உள்ளன. அ​வை வரிகளின் ​மே​லே​யே உள்ளன. ஆனால் ஒழுங்கான மாடங்க​ளோ ​பொதுவாக ​சோழர் கால ​கோவில்களில் காணப்படுவது ​போன்​றே வரிகளின் ஊ​டே ​செல்கின்றன. ஒரு​வே​ளை இந்த மாடங்கள் பிற்காலத்தில் ​வெட்டப்பட்டனவாக இருக்கக் கூடு​மோ என்ற ஐயம் எழுகிறது. ​​வே​றொரு ​கோவிலில் இருந்த வந்த மூர்த்திகளுக்கு அ​டைக்கலம் வழங்க ​​செய்யப்பட்டதாகவும் இருக்கலா​மோ என்றும் ​தோன்றுகிறது. இ​வைகளின் இ​டை​யே உள்ள ஒற்று​மை ​வேற்று​மைக​ளை அறிந்து ​கொள்வதன் மூலம் நாம் இன்னும் ​தெளிவாக புரிந்து ​கொள்ள இயலும். பின்பு வரும் மற்று​மொரு இடு​கையில் இந்த மூர்த்திக​ளை ​மேலும் ஆராய்ந்து பார்த்து இந்தக் ​கேள்விகளுக்கு வி​டை காண முயற்சிப்​போம்.

(தமிழாக்க உதவி – தோழி திருமதி பர்வதவர்த்தினி முரளிகிருஷ்ணா அவர்கள் )


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

250 ஆவது பதிவு. விடமுண்ட கண்டரே.. விஷாபஹரணரே! யாருக்காக விஷத்தை உண்டீர்?

கல்லிலே கலைவண்ணத்தோடு நாம் மேற்கொண்ட ஒரு சிறப்பான நீண்ட நெடிய உற்சாகக் கலைப் பயணத்தில் இது ஒரு முக்கிய தருணம். இந்த சிறப்பான புனிதப்பணியில் என்னோடு பங்கு கொண்டு பயணித்து வரும் நண்பர்களுக்கும் இது இனிய தருணம். ஆம்! இது 250 ஆவது பதிவு. இந்தப் பதிவின் போது ஒரு முக்கியமான உத்தமரைப் பற்றியும் அவர் எங்கள் பதிவுகளுக்கு எத்தனை அரிய சந்தர்ப்பங்களை தன் தேவாரம் தளம் மூலமாக செய்து கொடுத்திருந்தார் என்பதையும் இங்கு நன்றியுடன் நினைவு கூறுகிறேன். அவர்தான் தமிழ்ப் பேரறிஞர் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள். தமிழின் இனிய தேவகானமான தேவாரத்தையும் திருவாசகத்தையும் பெரிய புராணத்தையும் உலகின் பல பாஷைகளில் எடுத்துச் செல்லும் மகான். அத்தகைய மாமனிதரை இந்த 250 ஆவது சிறப்புப் பதிவான விஷாபஹரணர் (விடமுண்ட கண்டன்) சிற்பத்துக்காக ஒரு முன்னுரை எழுதச் சொல்லிக் கேட்டபோது அந்த சிவபக்தர் உடனடியாக ஒப்புக் கொண்டு அனுப்பிவைத்தார். இதோ அவர் கையால் ஒரு சிறிய முன்னுரை.

”ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி” என்றார் அபிராமிப் பட்டர் (அபிராமி அந்தாதி பாட்டு 7).

மத்து (சுழலும்போது) இரு பக்கமும் மாறி மாறிச் சுழலும். இந்தப் பக்கம் போகுதே எனக் கருதுமுன்பே மற்றப் பக்கம் திரும்பும்.

உயிர் அத்தகைய சுழற்சிக்கு ஆளானது. திரோதான சக்தி ஒருபுறம் ஈர்க்கும், சிவனின் திருவடிகளை அடைய உதவும்.

அந்தச் சக்தியின் ஈர்ப்பில் ஆட்பட்ட நிலை தொடராது.

மாயை மறுபக்கம் ஈர்க்கும், ஆணவம் சார்ந்த நிலை வரும்.

ஐயையோ தவறினோமே என வருந்தி அந்த ஈர்ப்பிலிருந்து விடுபட்டுத் திரோதான சக்தியின் ஈர்ப்பில் உயிர் ஈடுபடும்.

நல்வினை ஒருபுறம், தீவினை மறுபுறம். மாறி மாறி வரும் ஈர்ப்புகள், இடையில் தவிக்கும் தத்தளிக்கும் உயிர்.

”அமுதம் தரும் பாற் கடல். மத்தாக மேரு மலை. நாணாக வாசுகி பாம்பு. ஒரு பக்கம் அசுரர். மறுபக்கம் தேவர். பாற்கடலைக் கடைகின்றனர்.

ஆலகால விடம் திரள்கிறது. அமுதம் திரளவேண்டிய இடத்தில் விடம். அந்த விடம் அனைவரையும், அனைத்தையும் அழிக்கும் விடம்.

சிவன் விடத்தை அள்ளுகிறார்.

நீடும் இருவினைகள் நேராக நேராதல் கூடும் இறை சத்தி கொளல் (திருவருட்பயன் 51) என்றார் உமாபதிசிவம்.

நல்வினை ஒருபுறம், தீவினை மறுபுறம்.
அருளின் ஈர்ப்பு ஒருபுறம், ஆணவத்தின் ஈர்ப்பு மறுபுறம்.

”எல்லாப் பிறப்பும் பிறந்தேன், பிறந்து பிறந்து இளைத்தேன், உன் பொன்னடிகள் கண்டேன், வீடுபேறு அடைந்தேன்,(மாணிக்கவாசகர்)

விடமுண்ட கண்டன் திருவடிகளை அடைதல், உயிரின் ஏக்கம். அறுக்க முடியாப் பாசத்தை அறுத்து, வினை நீக்கி விரும்பி வீடருள்வான் சிவன்.

தேவாரத்தில்தால் இறைஞானிகள் எத்தனை இடங்களில் விடமுண்டகண்டனை சிறப்பித்துள்ளார்கள்

ஒளியார் விடமுண் டவொருவன்

கறைக்கண் டத்தாரே

செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்

இவ்வாறாகப் பன்னிரு திருமுறைகள் முழுவதும் சிவனின் கண்டத்தில் விடமுள்ள பாங்கான உயிரது இருவினை ஈர்ப்பு நிலையைச் சுட்டி நிற்கின்றன.

முழுமையை நோக்கிய உயிரின் நெடும் பயணம். இடைவிடா முயற்சி. உயிரின் தன்மையே அஃதாம். அந்தக் கூர்மை முயற்சி வழுக்கும் கம்பம் போல. சாண் ஏற முழம் சறுக்கும். தீவினைகளைத் தனதாக்குபவன் சிவன், உயிரின் கூர்மை முயற்சிக்குக் கை கொடுப்பவன் சிவன். விடா முயற்சிக்குரிய நம்பிக்கையின் ஊற்றுக்கண், விடமுண்ட கண்டன் அவன்.

இறைவன் இந்த உயிரினம் என்றும் நிலைக்கச் செய்ய தன்னையே கூட தியாகம் செய்ய முன்வந்த அற்புத நிகழ்ச்சிதான் விடமுண்டகண்டன் நிகழ்ச்சி. நினைத்துப்பாருங்கள்.. அன்று சிவன் மட்டும் விடத்தை உண்டிராவிட்டால் ஏது இங்கே உலகம்.. ஏது மக்கள்.. ஏது உயிரினம்.. கிடைத்தற்கரிய அமுதத்துக்காக ஏற்கனவே கிடைத்திருந்த உயிரினங்களை பலி கொடுக்கவேண்டிய சூழ்நிலையில் அனைவரையும் அனைத்தையும் காத்தவன் அன்றோ..

ஆஹா.. அப்படிப்பட்ட விடமுண்டகண்டனின் சிற்பம் ஒன்று இந்த சிறப்புப் பதிவில் பார்ப்போமே. பல்லவர்கள் போய் சோழர்கள் தமிழகத்தை தங்கள் கீழ் கொண்டு வரும் 9ஆம் நூற்றாண்டு சிற்பம். மிகவும் அரிய பொக்கிஷம் இது. பொக்கிஷம் என்று சொல்லிவிட்டதால் அது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது என்று சொல்லவும் வேண்டுமோ.

மீண்டும் ஒரு முறை காட்சியை மனதில் கொண்டு மேலே செல்வோம். சிவன் விடத்தை அள்ளுகிறார். அவர் மனதில் என்ன எண்ணங்கள் உதித்திருக்கும் , அவை அவரது திருமுகத்தில் எப்படி பிரதிபலிக்கும்.

நாம் முன்னர் பார்த்த சோமஸ்கந்தர் பல்லவ வடிவம் இந்த சிலையை விட பழமை என்று ஏன் கருதப்படுகிறது என்றும் பார்ப்போம்.

ஈசனின் மனதில் உள்ள ஆழ்ந்த சிந்தனையை எப்படி தான் முகத்தில் கொண்டு வந்தானோ அந்த கலைஞன்.

பொதுவாக ஆனந்தக் கூத்தனின் புன்முறவல் இங்கே இல்லை. அண்டத்தை காக்க தான் செய்ய வேண்டிய அடுத்த காரியத்தை எண்ணி ஒரு நிமிடம் …நெற்றிக் கண்ணோடு அந்த முகத்தில் இருக்கும் பாவம்.

இந்த சிலையில் ஜடாமகுடம் சற்றே உயர்ந்து காணப்படுவது இதன் காலத்துக்கு ஒரு அறிகுறி. அதில் கொன்றைப் பூ மற்றும் பிறைச் சந்திரன் அருமை. இங்கு மகுடத்தில் ஒரு புதிய அணிகலன் காணப்படுகிறது. பல முனைகளை கொண்ட சூலம் போன்ற ஒரு அணிகலன் நாம் முதன் முறையாக இந்த சிலையில் பார்க்கிறோம்.

உடல் அமைப்பு அருமையிலும் அருமை. அந்த இடை கொள்ளை அழகு. மார்பின் மேலே யக்நோபவீதத்தின் (புரிநூல்) முடிச்சு மிகவும் அழகாக உள்ளது. அதுவும் மூன்று இழைகளாக பிரிந்து ஒன்று வலது கையின் மேலே செல்கிறது. இந்த பாணி பல்லவர் காலத்து சிலைகளிலும் சிற்பங்களிலும் வெகுவாக நாம் பார்க்கலாம். பட்டையாக வேப்லைபாடுகள் கொண்ட உதரபந்தம் உள்ளது.
இரண்டு கரங்களை ஒரு பக்கத்தில் காட்ட முயற்சிக்கிறான் சிற்பி, அதனால் கைகளின் மேல் பகுதி சற்றே தடிமனாக உள்ளது. இதை கொண்டு இது ஒன்பதாம் நூற்றாண்டுக்குள் வடிக்கப்பட்டதென்று கருதலாம.

ஆனால் கை முட்டிக்கு கீழே அபாரம். ஆபரணங்கள் மகுடத்தில் உள்ள புதிய வடிவத்தை ஒத்து உள்ளன. இதனை ஒத்து பார்க்கும் பொது நடேசர் சிலையின் மிக குறைவான அணிகலன்களை கொண்டு அதன் காலம் இந்த சிலையை விட முன்னதாக நிர்ணயிக்கப்படுவதை நாம் உணரலாம்.

மேல் கைகள் ஒரு பக்கம் மழு , மறு பக்கம் மான். இங்கே நாம் பார்க்கவேண்டியது மழு எப்படி கையினுள் உள்ளங்கையில் படும்படி இருக்கிறது. நாம் முன்னர் பார்த்த வடிவங்களில் இரு விரல்களில் அது இருக்கும்.

மான் குட்டி மிக சுட்டி. ஆஹா என்ன அழகாக தந்து முன்னங்கால்களை மடக்கி – ஒரு வேளை ’வேண்டாம் செய்யாதீர்கள்’ என்றோ அல்லது ’ஆஹா தம்மைப் போன்ற உயிரினங்களையும் வாழவைக்க நீங்கள் செய்யப் போகும் மகத்தான காரியம்’ என்று போற்றி வணங்குகிறதா ?

உடலில் தோலுக்குள் இருக்கும் எலும்பு, அதன் மேலே படியும் சதை, அதை சுற்றி இருக்கும் துணி என்று அனைத்தையும் ஆய்ந்து தன் திறமையை வெளிப்படுத்துகிறான் சிற்பி. அந்த வலது காலை பாருங்கள்.

இடுப்பில் ஆடை உக்ரமுக பதக்கதில் இருந்து வெளி வருவது போல வடிவம் உள்ளது. உத்சவ மூர்த்தி என்பதால் பவனி வருவதற்கு எதுவாக கைப்பிடிகள் , நல்ல தடிமனான பீடம் எல்லாம் உள்ளன.

தோள்களின் மேல் தவழும் அவரது கூந்தலில் ஒரு மலர் – ஆஹா என்ன அழகு.


பின்புறம் சென்று பார்க்கும் பொது தான் அந்த சிகை அலங்காரத்தின் முழு அழகு தெரிகிறது.

மிக அழகான சிரஸ் சக்கரம், முன்னர் பார்த்த வடிவங்களை விட இந்த வடிவம் புதியது என்பதற்கு இன்னும் ஒரு காரணம். சிரஸ் சக்கரத்தில் இருந்து விரியும் கூந்தல், அதில் ஒன்று எப்படி அந்த கழுத்து மாலையின் பின்னல் தொங்கும் பட்டையின் மேலே தவழ்கிறது பாருங்கள்.

அப்படியே வளைந்து தோள்களின் மேல் படரும் கூந்தல் எழில் சொக்க வைக்கிறது.

கீழ் இரண்டு கைகள் தான் நமக்கு மிகவும் முக்கியம்.

இடது கையில் ஒரு பெரிய நாகம், படம் எடுத்து மகேசனை நோக்கும் வண்ணம். ஒரு வேளை வலது கையில் இருக்கும் விடத்தின் தன்மையை விளக்க சேர்க்கப்பட்டதோ.

வலது கையில் ஆலகால விடம்

அனைத்தையும் சேர்ந்து பார்க்கும்போது தான் சிற்பத்தின் உள்ளுணர்வு நமக்கு புரிகிறது.

ஈசன் தயார். அடுத்து என்ன நடந்தது? அடுத்த பதிவில் பார்ப்போம்.

இதோ ஈசன் தயார். அடுத்து என்ன நடந்தது? அடுத்த பதிவில் பார்ப்போம்.

மீண்டும் ஒரு முறை திரு மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களுக்கு நன்றி கூறி, அவருக்கும் அவரதுமகத்தான பணியில்துணை நிற்கும் அனைவருக்கும் உங்களால் முடிந்த உதவியை தவறாமல் செய்யுங்கள் என்று கூறி, 250 பதிவுகளை பொறுமையாக படித்து பின்னூட்டம் அளித்து எங்களை வழி நடத்தும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறோம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஒக்கூர் ந​டேசன் – முதன் முதலாக ​வெண்கலச் சிற்பத்தில் ஈசனின் ஆனந்த தாண்டவம்

வெண்கலச் சிற்பங்க​ளில் ஆர்வம் ​செலுத்த துவங்கிவிட்​டோமானால், அது என்றும் தணியாத தாகமாக​வே இருக்கும். அதிலும் ஒருமு​றை ​சோழர் கால ​வெண்கலச் சிற்பத்​தை பார்த்து விட்டா​லே, கண்க​ளை அவற்றினின்று அகற்றுவது மிகக் கடினம். ஆனால், இந்த ஆர்வத்துக்கு தீனியிடுவதும் அத்த​னை எளிதல்ல. ஏ​னெனில்,அ​நேகமாக ​வெண்கலச் சிற்பங்கள் ​கோவில்களில் உற்சவ மூர்த்தியின் வீதியுலா ​​போன்ற சமயங்களில் தான் ​வெளி​யே ​கொண்டு வரப்படும். அப்​பொழுதும் முழு​மையான ஆ​டை அணிகலன்கள், மலர் அலங்காரங்கள் என ​செய்யப்பட்டு சிற்பத்தின் அழ​கைக் காணவியலாத நி​லையி​லே தான் இருக்கும். விழாக்கள் இல்லாத பிற நாட்களி​லோ பாதுகாப்பிற்காக கூண்டுகளி​லே ​வைக்கப்படுகின்றன. ஆக​வே, ​வெண்கலச் சிற்பங்களின் அழ​கைக் காண​வோ, அதன் ​தோற்றங்கள் குறித்து ஆராய​வோ, அருங்காட்சியகத்திற்கு ​செல்வ​தே மிகச் சிறந்த வழியாகும். அவ்வாறு நூற்றுக்கணக்கான ​வெண்கலச் சிற்பங்க​ளை பாதுகாக்கும் ​​பேறு ​பெற்றது ​சென்​னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகமாகும். இருப்பினும், வருத்தத்திற்குரிய விஷயம் என்ன​வென்றால், இந்த சிற்பங்கள் அ​னைத்தும் கண்ணாடி கூண்டுகளில் உள்ளன, ​மேலும் ​போதிய ​வெளிச்சமும் இருப்பதில்​லை. இ​தையும் விட ​வருந்தத்தக்க விஷயம், இந்த ​வெண்கலச் சிற்பங்க​ளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது. ​இவற்​றை எவ்வாறு ரசிப்பது – எ​தைப் பார்க்க ​வேண்டும், எப்படி பார்க்க ​வேண்டும் ​போன்ற ​தெளிவு இல்லா​மை​யே. அப்படி என்ன இவற்றை பற்றி படிக்க பார்க்க தனி வழி …மேலே படியுங்கள்.

இன்று, திரு பி. ஆர். ஸ்ரீனிவாசன் அவர்களின் மிக அற்புதமான புத்தகம் – பிரான்ஸஸ் ஆப் சவுத் இந்தியா (Bronzes of South India) – மூலமாக புகழ்​பெற்ற ஒக்கூர் ந​டேசனின் ​வெண்கலச் சிற்பத்தி​னை பற்றி காண உள்​ளோம். ​ஈசனின் ஆனந்த தாண்டவத்​தை ​வெண்கலச் சிற்பத்தில் ​​வார்க்க ஸ்தபதியால் ​மேற்​கொள்ளப்பட்ட முதல் முயற்சியாக ​ஒக்கூர் ந​டேசனின் சிற்பம் அறிந்து கொள்ளப்படுகிறது. ​மேலும் இந்த வடிவ​மே பிற்கால ​சோழர் காலத்தின் நடராஜ சி​லைகளுக்கும் முன்​னோடியாக விளங்கியிருக்கிறது.

இந்த ​வெண்கல சிற்பம் ​செதுக்கப்பட்ட காலம் நிபுணர்களின் கணிப்பின்படி கி.பி. 9-ல் இருந்து கி.பி. 10-க்குள் இருக்கக்கூடும். ​இதன் காலகட்டம் ஒவ்​வொருவராலும் ஒவ்​வொருவிதமாக கூறப்பட்டாலும், இது​வே முதன் முதலில் ஈசனின் ஆனந்த தாண்டவத்​தைக் குறிக்கும் நடன சிற்பமாக ஏற்றுக்​கொள்ளப்பட்டுள்ளது. சரி, இப்​போது இந்த அற்புத சிற்பம் எந்​தெந்த சிறப்பியல்புகளினால் ‘முதன் முதல் ஆனந்த தாண்டவ சிற்பம்’ என்று ​பெயர்​பெற்றது என்று பார்ப்​போம்.

இந்த சிற்பத்தில் தனித்துவம் ​பெற்ற இரு விஷயங்கள் – முதலாவது நடனமாடும் ஈசனின் உருவத்​தை சுற்றி அழகுற விளங்கும் பிர​பை. இரண்டாவது அழகிய தாம​ரை பீடம்.

ஒவ்​வொன்றாக நாம் காண்பதற்கு முன்பு, ஆனந்த ரசத்​தை எத்து​ணை அழகாக நமது சிற்பி எடுத்துக் காண்பித்துள்ளார் பாருங்கள் – 1000 ஆண்டுகாலத்திற்கு பின்பும், கண் முன் காட்சியளிக்கும் தெய்வீக புன்ன​கை.

மற்று ​மொரு சுவாரசியமான விஷயம் சிற்பத்தில் காணப்படும் ​நெற்றிக்கண் மற்றும் ​​வெவ்​வேறாக உள்ள காதணிகள். இடது காதில் ​பெரிய பத்ரகுண்டலம் உள்ளது, ஆனால் வலது காதி​லோ து​ளை ​பெரிதாகவும், அணிகலனாக ஒரு சிறிய வ​ளையம் (க்ளிப்) ​போன்று உள்ளது. (​மே​லே ​சொல்லப்பட்டுள்ள புத்தகத்தில் வலது காதில் உள்ள சிறிய வ​ளையம் பற்றி கூறப்படவில்​லை)

ஈசனின் சி​கையலங்காரம் நாம் பல்லவ ​சோமாஸ்கந்தரில் பார்த்தது ​போன்​றே உள்ளது, ​மேலும் ஊமத்​தை மலரும் மற்றும் பி​றைச் சந்திரனும் உள்ளன. உருண்​டையாக முன்புறம் ​தோன்றுவது மண்​டை ஓடாக இருக்கலாம். அதற்கு ​மே​லே உள்ள​வை இறகுகளாலாகிய ஆபரணம் (மயிலிறகுகளாக இருக்கு​மோ?)

கழுத்தில் அணியும் ஆபரணங்கள் இரண்டும் சாதாரணமாக​வே உள்ளன. இருப்பினும் இரண்டாவது கழுத்தணியில் நடுவில் உள்ள பதக்கம் கவனத்​தைக் ஈர்க்கிறது. ​பெரிய கழுத்தணி, ருத்திராட்ச ​கொட்​​டைகளால் ஆனது, ​மேலும் அபூர்வமாக விலங்கின் (புலி) பல் பதக்கமாக உள்ளது.

விரிந்திருக்கும் முடிக்கற்​றைப் பற்றி விரிவாக பிறகு ( பின்னல் இல்லை இல்லை பின்னால் ) பார்ப்​போம், இருப்பினும் ​வெண்கலச் சிற்பங்களில் நடனமாடும் சிவ​​பெருமானின் முடிக்கற்​றை விரிந்திருப்பது இது​வே முதன்மு​றையாகும். அ​வை ஆபரணங்கள் ஏதுமின்றி சாதாரணமாக​வே உள்ளன. ​மேலும் கங்​கையின் எவ்வித உருவமும் காணப்படவில்​லை. ​வெண்கலச் சி​லைக்கு பலம் ​சேர்க்கும் விதமாக விரிந்திருக்கும் முடிக்கற்​றைகள் பிர​பையில் ​சேர்க்கப்பட்டுள்ளது சிற்பியின் அபார புத்திக்கூர்​மை​யை ​வெளிப்படுத்துகின்றது.

ஈசனின் நான்கு கரங்களும் முட்டிகளில் பிரியாமல் ​தோள்பட்​டையி​லே​யே பிரிகின்றன (பல்லவர் கால ​வெண்கலச் சிற்பங்களின் இயல்பாக இது ​சொல்லப்படுகிறது. என​வே இது பிற்காலத்​தை ​சேர்ந்தது, அதாவது ​சோழர்காலத்தின் ஆரம்ப காலங்களில்). தூக்கிய திருவடிகள் பிற்கால சிற்பங்க​ளைப் ​போன்று மிக உயரத்திற்கு இன்னும் வரவில்​லை..

காலில் உள்ள ​கொலுசுகள் மிக அழகாக சிறு மணிகள் ​கோர்க்கப்பட்டு உள்ளன. இ​றைவனின் ஆனந்த தாண்டவத்தின்​போது அ​வை எழுப்பும் ரீங்காரம் காதில் இனிய சங்கீதமாய் கேட்குமோ ?

இரட் ​டையாக உள்ள பூணூல் (யக்​ஞோபவீதம்) மற்றும் தடிமனான உத்தரீயம் (இடுப்பில் கட்டும் ஆ​டை) ஆகியவற்றுடன் ஆ​டை மிக எளி​​மையாக உள்ளது. உத்தரீயம் வயிற்றில் முடி​போட்டு கட்டப்பட்டுள்ளது. ஆ​டையில் உள்ள சித்திரம் இன்றும் கண்களுக்குத் ​தெரிகிறது.

​ மே​லே உள்ள கரங்கள் மிக அற்புதமாக ​செதுக்கப்பட்டுள்ளன. ஒன்றில் உடுக்​கையும் மற்​றொன்றில் அக்னியுள்ள சிறிய சட்டியும் உள்ளன – நளினமாக அந்த சட்டி​யை விரல்களின் நுனியில் ஏந்தியுள்ள​தை எத்த​னை தத்ரூபமாக ​செதுக்கியிருக்கிறார் அந்த சிற்பி பாருங்கள்.

​கையில் சுற்றப்பட்டுள்ள பாம்புடன் அபயஹஸ்தமளிக்கிறது கீ​​ழேயுள்ள வலது கரம்,

இந்த அரு​மையான ​வெண்கலச் சிற்பத்தின் அழகுக்கு அழகு ​சேர்ப்பது கீ​ழேயுள்ள கரங்களும் ​மெல்லிய து​டைகளும். ​மேலும் பாதங்களுக்கு அடியில் உள்ள முயலகன் ஒரு ​பெரிய நாகத்துடன் வி​ளையாடுவது ​போன்ற பாவ​னை ​கொள்​ளை அழகு.

இ​வைய​னைத்​தையும் விட இந்த சிற்பத்தின் உண்​மையான அழகு நாம் அதன் பின்புறம் ​சென்று பார்க்கும்​போது தான் ​தெரிகிறது.

முடிக்கற் ​றைகள் எவ்வாறு பிரிந்து விரிந்திருக்கிறது என்பது மிக அற்புதமாக ​செதுக்கப்பட்டுள்ளது. கழுத்தணி​யை கட்டுவதற்கு உள்ள ​கொக்கி​யையும் நீங்கள் காணலாம்

இந்த ​வெண்கலச் சிற்பம் பழ​மையானது என்பதற்கு மற்று​மொரு குறிப்பு – த​லைக்கு பின்புறம் சிரச்சக்கர​மோ, முடிக்கற்​றைக​ளை தாங்கும் விதமாக வ​ளைய​மோ இல்லாதது தான்.

​மேலும் ​கெளபீனம் கட்டப்பட்டிருக்கும் விதத்​தைப் பாருங்கள், இருப்பினும் ஒரு சிற்றா​டையும் அணிந்திருக்கிறார்.

பிர ​பையில் நாம் கவனிக்க ​வேண்டிய விஷயம் – தீப்பிழம்புகள் மிகவும் இயற்​கையாக உள்ளன. பிர​​பை​யை சுற்றி இ​​வை இருந்தாலும், அக்னி ஜ்வா​லைகள் இயற்​கையாக உள்ள​தைப் ​போல் ​​மேல் ​நோக்கி​யே உள்ளன,

ஆஹா! எத்த​னை அற்புதமான உன்னத ப​டைப்பு!!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment