பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் – அப்படி பல வருடங்களுக்குப்பின் சிவபுரம் சிலைகளை திருடிய ஸ்தபதி செய்த நகலே நமக்கு ஒரு முக்கிய துப்பு தந்துள்ளது.
இந்த சிவபுரம் சிலை திருட்டு பற்றிய முதல் பாகத்திலும் மற்றும் இரண்டாம் பாகத்திலும் களவு போன ஆறு சிலைகளில் இரண்டு சிலைகளுக்கும் அமெரிக்காவில் உள்ள நோர்டன் சைமன் அருங்காட்சியகத்துக்கும் உள்ள தொடர்பை நிரூபித்தோம். நடராஜர் பெரும் போராட்டத்திற்குப் பிறகு தமிழகம் திரும்பினார் எனபது மட்டுமே அனைவருக்கும் தெரியும். இன்றும் மற்ற ஐந்து சிலைகள் காணவில்லை என்று தான் காவல் துறை தஸ்தாவேஜுகள் சொல்கின்றன. சென்ற இரு பதிவுகள் மூலம் சிவபுரம் சோமஸ்கந்தர் திருமேனி இன்றும் அமெரிக்காவில் உள்ளது என்பதை முக்கிய குறிப்புகளுடன் நிரூபணம் செய்தோம்.
மற்ற நான்கு சிலைகள் என்னவாயின ? தொலைத்த இடத்தில தானே தேட வேண்டும் – காவல் துறை பதிவு செய்த குற்றப் பத்திரிகையின் படி சோமஸ்கந்தர் உடன் இன்னும்“Thirugnanasambandar, Pillaiar and two Amman” கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும் இந்த சிலைகள் 1954 – 1956 இடைப்பட்ட தருவாயில் திருடப்பட்டன. ஸ்தபதி உதவியுடன் நகலை கோயிலுக்கு கொடுத்துவிட்டார்கள். . “The trustees of the temple wanted to repair the idols and this work was entrusted to Ramasamy Sthapathy of Kumbakonam in the year June 1954. In the year 1956 Thilakar of Kuttalam and his brother Doss induced Ramasamy Sthapathy to part with the original Natarajar and 5 other idols and to substitute the same with fake idols. “
துரதிஷ்ட வசமாக திரு ஸ்ரீனிவாசன் அவர்களது நூலில் நடராஜர் / சோமஸ்கந்தர் படங்களை போல ஒரிஜினல் அம்மன் சிலைகளின் படங்கள் இல்லை. இவை இல்லாத பட்சத்தில் எதை கொண்டு தேட முடியும் ?
அதற்க்கு விடை – பாண்டி பிரெஞ்சு இன்ஸ்டிடுட் 15th June 1956 மற்றும் 16th Nov 1957 எடுத்த படங்கள். சென்ற பதிவில் திருட்டு ஸ்தபதி ஒரிஜினல் போலவே சோமஸ்கந்தர் சிலை மற்றும் நடராஜர் சிலைகளை செய்தான் என்பது தெரிய வந்தது.
அதே போல பிரெஞ்சு இன்ஸ்டிடுட் எடுத்த மற்ற சிலைகளின் படங்களை தேடிய பொது இந்த தனி அம்மன் சிலை கிடைத்தது.

நோர்டன் சைமன் அருங்காட்சியக பிற சிலைகளுடன் ஒப்பிட்டு பார்த்த பொது இந்த சிலை கிடைத்தது
Parvati, c. 1000
India: Tamil Nadu, 975-1025
Bronze
32-1/2 in. (82.6 cm)
The Norton Simon Foundation
F.1972.10.S
© 2012 The Norton Simon Foundation

இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று – இந்த சிலையை அவர்கள் சேர்த்த ஆண்டு – 1972, அதே ஆண்டில் தான் சிவபுரம் நடராஜர் மற்றும் சோமஸ்கந்தர் சிலைகளும் சேர்க்கப்பட்டன.
இரு சிலைகளையும் ஒன்றாக வைத்து பார்க்கும்போது கண்டிப்பாக ஒன்றை ஒத்தே மற்றொன்று செய்யப் பட்டுள்ளது என்று தெரிகிறது.

எதோ ஒரு அலட்சியத்தாலோ என்னவோ – நடராஜர் வடிவத்தை நகல் செய்த பொது காட்டிய ஆர்வத்தை சோமஸ்கந்தர் மற்றும் அம்மன் சிலைகளை செய்த பொது ஸ்தபதி காட்ட வில்லை என்று தோன்றுகிறது. பல இடங்களில் வித்தியாசம் தெளிவாகவே தெரிகிறது – எனினும் இரு சிலைகளையும் ஒன்று சேர வைத்து பார்த்தால் தானே குட்டு வெளிப்படும் என்று அவன் நினைத்திருக்கலாம். மேலும் செப்பு சிலை வார்ப்பது என்பது எவ்வளவு கடினம் – ஆயிரம் ஆண்டு சோழர் கலை செல்வத்தை நகல் எடுப்பது கடினம் தானே.
சோமாஸ்கந்தர் சிலை போல இந்த அம்மன் சிலைக்கு நம்மிடத்தில் நேரடி ஆவன படங்கள் இல்லை என்றாலும் நடராஜர் மற்றும் சோமஸ்கந்தர் சிலைகள் திருடிய முறை, சென்றடைந்த இடம் என்று அனைத்தையும் வைத்து பார்த்தால் – கண்டிப்பாக இந்திய அரசு இந்த வழக்கை மீண்டும் திறக்க வேண்டும். யாருக்கு தெரியுமோ இல்லையோ திருட்டு பொருளை வாங்கி இன்றும் காட்சிக்கு வைத்திருக்கும் அந்த அருங்காட்சியகத்தின் அதிகாரிகளுக்கு உண்மை தெரியும் !!