இந்த சிலை திருட்டு பற்றி முதல் முதலில் தகவல் வெளியாகி பல காலம் ஆகி விட்டது. நண்பர்கள் பலர் உதவிகளுடன் பல துப்புகள் வெளி வந்துள்ளன. இதுவரை நமது அதிகாரிகள் சிலைகளை மீட்டு வர என்ன முயற்சிகள் எடுத்துள்ளனர் என்று தெரியவில்லை, எனினும் இன்னும் துரிதமாக ( இப்போதாவது) செயல்படலாமே என்ற ஆதங்கம் வருகிறது. எனினும் நம் பணி தொடர்கிறது. இன்று ஆஸ்திரேலியாவில் சிக்கி இருக்கும் ஆடல் அரசனின் துணை – சிவகாமசுந்தரி அமெரிக்காவில் இருப்பதை நிரூபணம் செய்கிறோம்.
முதலில் அம்மை அப்பன் ஸ்ரிபுரதன் சிவல் கோயிலில் இருந்தபோது உள்ள படம்.
இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் இருக்கும் நடராஜர் வடிவம் என்பதை தெளிவு பெற விளக்கினோம். இப்போது சிவகாமசுந்தரி பற்றி, நமது நேயர் ஒருவரின் உதவியுடன், புதிய ஆவணங்கள் கொண்டு நிரூபிக்கிறோம். ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட் பட்டியல் 2008 – முத்து முத்தான வரிகளை கொண்ட வர்ணனையுடன் அழகிய படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த முகத்தை பார்த்தவுடனே எண்ணெய் கசிந்த குறிகள் தெரிகின்றன – திருமேனியாக பல நூறு ஆண்டுக்காலம் அபிஷேகத்தால் வழிபட்ட சிலை என்பதற்கு ஆதாரமாய் !
இரண்டு படங்களை ஒட்டி பார்த்தால் உடனே தெரிகிறது இரண்டும் ஒரே சிலை என்று.



நல்ல காலம் இதை யாரும் இன்னும் வாங்க வில்லை. அமெரிக்க போலிஸார் ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட் சம்பந்தப்பட்ட ஒரு சேமிப்பு கிடங்கை சோதனை இட்டு பறிமுதல் செய்த பொது சிக்கியது. அதை இந்த படத்தில் பார்க்கலாம்.

இந்த ஆதாரங்களை கொண்டு நமது காவல் துறை துரிதமாக செயல் பட்டு அழகான இந்தத் தெய்வச்சிலைகளை மீட்டு வரவேண்டும் – மேலே அமெரிக்காவில் இருக்கும் அம்மையிடமிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கீழே ஆஸ்திரேலியாவில் இருக்கும் அப்பன், இருவரும் மீண்டும் வீடு திரும்பி இணைய வேண்டும்.