பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – இரண்டாம் பாகம்

சென்ற பதிவில், சோமஸ்கந்தர் வடிவத்தின் மிக தொன்மையான உருவத்தையும் தற்காலச் சிலையையும் பார்த்தோம்.

தர்மராஜா ரதத்தில் உள்ள சோமஸ்கந்தர் வடிவத்தை மிகவும் தொன்மைவாய்ந்தது என்று சொல்கிறார்களே அது எப்படி! அதனை மீண்டும் ஒரு முறை பார்த்துஆராய்வோம். படங்களும், வினாக்களும் என்னுடையது, விடையை நீங்கள்தான் கொடுக்கவேண்டும்.

இதை பல்லவ மன்னன் ராஜசிம்ஹன் காலத்து சோமஸ்கந்தர் வடிவத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் ஏதும் பிடிபடுகிறதா என்று பார்ப்போம். நாம் கொடுத்து வைத்தவர்கள், சிற்பக் கலைக்கு மெருகேற்றியஅவனது காலத்து சோமஸ்கந்தர் வடிவங்கள் பல இடங்களில் உள்ளன. மல்லை கடற்கரை கோயிலில் அற்புதமான வடிவம் ஒன்று உள்ளது. (மல்லை கடற்கரை கோயில் உண்மையில் மூன்று ஆலயங்கள் கொண்டது. முதலில் இருந்த சயன பெருமாள் கோயில், அதனை ஒட்டி ராஜ சிம்ஹன் எடுப்பித்த ராஜசிம்மேஷ்வரம் மற்றும் ஷத்ரியசிம்மேஷ்வரம் என்ற இரு சிவ ஆலயங்கள், நாம் இன்று பார்க்கும் சோமஸ்கந்தர் வடிவம் ராஜசிம்மேஷ்வர ஆலயத்தில் உள்ளது. ஷத்ரியசிம்மேஷ்வரம் சோமஸ்கந்தர் வடிவத்தை அடுத்து வரும் பதிவுகளில் அலசுவோம்).

இரண்டு சிற்பங்களுக்கும் உள்ள வேற்றுமையை எளிதில் கண்டறிய ஒற்றி எடுத்த கோட்டோவியங்கள் உதவும். ஆறு வித்தியாசம் கண்டுபிடிப்பது போல், இரண்டு சோமஸ்கந்தர் வடிவங்களுக்கும் உள்ள வேற்றுமைகளை நீங்களே ஒரு பட்டியல் இடுங்கள் பார்ப்போம்.

மல்லையின் புதிர்களில் இன்னும் ஒரு புதிர். மல்லை ராமானுஜ மண்டபம், அங்கிருக்கும் குடைவரைகளிலேயே மிகவும் முழுமை பெற்ற குடைவரை. எனினும் வன் செயல்களால் இங்கு உள்ள அனைத்து சிற்பங்களும் அழிக்கப்பட்டுள்ளன. .இரு வாயிற் காப்போன்கள் முதல் உள்ளே இருக்கும் மூன்று புடைப்பு சிற்பங்களும் உளி கொண்டு முழுவதுமாக செதுக்கி எடுக்கப்பட்டுள்ளன. ( யாரால், எதற்கு ?)

ஆனால், எந்தக் கயவனும் தடயம் விடாமல் செல்ல மாட்டானே. கருவறையில் உள்ள பின் சுவரில் அழிக்கபட்ட சிற்பத்தின் தடயங்கள் இன்னும் தெரிகின்றன – ஆம் அதுவும் ஒரு சோமஸ்கந்தர் வடிவமே.

நன்றாக உற்றுப் பாருங்கள், சரி இதையும் ஒற்றி எடுத்து பார்ப்போம். சோமஸ்கந்தர் எந்த வகை? தர்மராஜா ரதம் பாணியா அல்லது ராஜசிம்மேஷ்வர பாணியா? நீங்களே கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

உங்கள் பணியை எளிதாக்க , தர்மராஜ ரதத்தில் உள்ள சோமஸ்கந்தர் வடிவத்தை இரண்டாய் பிரித்து உமை ஒரு பாகமாகவும் ஈசனை மற்றொரு பாகமுமாகத் தருகிறேன்.

இன்னும் உதவி தேவையா. படங்களை நான்றாக தலையை சாய்த்து பாருங்கள் !!

படங்களுக்கு நன்றி:

Varalaaru.com. மற்றும் திரு அசோக்

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – முதல் பாகம்

நண்பர்களே, எங்கள் இடுகைகளை தொடர்ந்து படித்து பின்னூட்டம் இடுவதற்கு எங்கள் நன்றி. ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்பிகிறோம், இந்த பதிவுகள் ஆய்வுக்க் கட்டுரைகள் அல்ல, எங்கள் சிற்பத் தேடலில் எதிர்கொள்ளும் புதிர்களையும் அதற்கான ( எங்கள் அறிவுக்கு எட்டும் ) விடைகளையும் எளிய முறையில் உங்களுடன் பகிர்கின்றோம். நாங்கள் சொல்வது தான் சரி என்பதற்காக அல்ல, நீங்களும் எங்களை போல தேட ஆர்வம் கொள்ளவே. பிழைகள் ஏதேனும் இருந்தால் வெளிப்படையாக எங்களுக்கு எழுதுங்கள்.

என்னடா, பலமான அஸ்திவாரம் இந்த பதிவுக்கு என்று அஞ்சவேண்டாம். பதிவு அப்படி.

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த தொடரின் முதற் பதிவு இது. இதை நாங்கள் திரு கிப்ட் அவர்களது ஆராய்ச்சியின் அடிப்படையில் படைக்கிறோம். அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_somaskanda.htm

இந்த தொடரின் நோக்கம் கேள்விகள் எழுப்புவது, அவற்றிற்கு எளிய தர்க்கரீதி முறையில் விடை தேடுவது. இன்னும் பயமுறுத்தாமல் தொடரின் முதல் பதிவுக்கு செல்வோம். பல்லவ சோமஸ்கந்தர்

இந்த தொடரின் வாதம் – பரிணாம வளர்ச்சி. அதாவது ஒரு சிற்பம் எப்படி காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி கொண்டு மாறுகிறது என்பதை விளக்கும் முறை. அது சரி, சோமஸ்கந்தர் சிற்பம் இன்றைக்கு எப்படி உள்ளது? இதோ அவற்றின் தற்காலத்து முழுமை பெற்ற சிலை வடிவம்


சிற்பத்தின் அழகை ரசிக்க அவற்றின் ஒற்றிஎடுத்த கொட்டோவியம்

சரி, இது இன்றைய நிலை. இந்த வடிவத்தின் ஆதி, மிகவும் தொன்மை வாய்ந்த, இன்றைக்கும் இருக்கும் வடிவம் உள்ளதா. ஆம், இருக்கிறது. மல்லை தர்மராஜா ரதம், மேல் தலத்தில் இருக்கும் புடைப்பு சிற்பம்


முதல் பதிவு என்பதால், ஆராய்ச்சிக்கு ஒன்றும் இல்லை. சிலை மற்றும் சிற்பத்தின் அழகை முதலில் ரசிப்போம். பின்னர் பல இடங்களுக்கு சென்று வரும் பதிவுகளில் எப்படி இந்த வடிவம் மாறுகிறது என்பதை பார்ப்போம்.

படங்களுக்கு நன்றி:

www.Varalaaru.com மற்றும் www.exoticindiaart.com

எனது முதல் கண்டுபிடிப்பு ! மூன்று ஸோமாஸ்கந்தர் வடிவங்கள் ஏன் உள்ளன

நண்பர்களே!

இன்று மிகவும் சந்தோஷமான நாள். எனது முதல் கண்டுபிடிப்பு இன்று வெளி வருகிறது. இது தற்செயலாக கண்ணில் பட்ட ஒரு புகைப்படத்தில் இருந்த வந்ததே என்றாலும், இரண்டு வருடங்களாக இதனை நான் எப்படி வெளியிடுவது என்ற குழப்பத்தில் இருந்தேன். ஏதாவது கருத்தரங்கில் பெரிய பெரிய ஆய்வாளர்களுக்கு முன் இதனை வெளியிடவேண்டும் என்ற ஆசை இருந்தது. பிறகு தான் புரிந்தது, இவை எல்லாம் எவ்வளவு கடினம் என்று, அது மட்டும் இல்லாமல் அவ்வாறு சமர்ப்பித்த ஆவணங்கள் எத்தனை சான்றோர்களையும், சாமானியர்களையும் ஆன்றோர்களையும் சென்று அடைகின்றன! அதனால், இன்று நண்பர்கள் துணையுடன், இணையத்தில் எங்கள் தளம் தரும் தைரியத்தில், முதல் முதலில் எனது கண்டுபிடிப்பை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

பல்லவர்கள் கலை உலகுக்கு செய்த சேவை மிக அரியது. அதனை பற்றி எழுத வேண்டும் என்பதால் மகேந்திர குடைவரைகள் பற்றிய தொடரை துவங்கினேன். அவற்றில் நாம் பல அரியதகவல்களை தெரிந்து கொண்டோம் . இந்தத் தொடரில் மேலும் பல விஷயங்களை தொடர்ந்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.

பல்லவர்கள் சிற்பக் கலை வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டில் மிகவும் போற்றப்பட வேண்டியவை அவர்கள் தந்த சோமாஸ்கந்த வடிவம், சிவ கங்காதர வடிவம் மற்றும் மகிஷாசுரமர்தினி வடிவங்கள். அவற்றில் பல்லவ சோமாஸ்கந்த வடிவம் மிகவும் அற்புதமான வடிவம், பிற்கால பல்லவர் ஆலயங்களில் கருவறையில் பின் சுவரில் இந்த அற்புத வடிவத்தை நாம் பார்க்கலாம்.

இந்தப் பதிவு அப்படிப்பட்ட மூன்று சோமாஸ்கந்த வடிவங்களை பற்றியும் அவற்றால் எழும் புதிருக்கு விடையும் பற்றியது. பொதுவாக கருவறை பின்சுவரில் மட்டுமே இருக்கும் இந்த வடிவம் சாளுவன்குப்பம் அதிரணசண்ட மண்டபத்தில் வெளியிலும் இரண்டு இடங்களில் உள்ளன. இந்தக் குடைவ்ரையே புதிர்கள் நிறைந்த ஒன்று.

பல அறிஞர்கள் வெகுவாக விவாதித்த விஷயம். பார்ப்பதற்கு குடைவரையின் பாணி முற்கால பல்லவர் குடைவரை போல ( தூண்களின் அமைப்பு ) இருந்தாலும் , அங்குள்ள கல்வெட்டில் (அற்புதாமான கல்வெட்டு) ராஜஸிம்ஹ பல்லவன் தான் எடுப்பித்த அதிரணசண்ட பல்லவேஸ்வர க்ருஹம் என்று தனது பட்டப்பெயர் அதிரணசண்ட (அதி – மிகை , ரண – போர்களம், சண்ட – வல்லவன் ) என்று கூறுகிறது.

மல்லை பற்றி திரு நாகசுவாமி அவர்களின் அற்புதமான பதிவைப் படியுங்கள். ஒரு தவம் போல அவர்கள் பணிகள் நம்மை நெகிழவைக்கும்.

http://tamilartsacademy.com/books/mamallai/new-light.xml

வாசகர்கள் இந்த அதிரணசண்ட மண்டபத்தின் அமைப்பையும் மகேந்திரர் கால குடவரைகளின் அமைப்பையும் ஒப்பு நோக்கினால் இன்னும் பல கேள்விகள் வெளி வரும்.

அதற்கு முன்னர், இந்த சோமஸ்கந்தர் என்றால் என்ன? உமையுடனும் கந்தனுடனும் இருக்கும் ஈசன் என்றே பொருள்சரி! முருகன் மட்டும் ஏன், விநாயகர் எங்கே? அதற்கு முந்தைய பதிவான மல்லையில் எங்கும் விநாயகர் இல்லை வாசியுங்கள்.

பல்லவ மன்னன் மகேந்திரன் தான் முதல் முதலில் உலோகம், சுதை, செங்கல், மரம் போன்றவற்றை உபயோகிக்காமல் கல்லில் கட்டிய ஆலயம் என்று கூறியதை மண்டகப்பட்டு கல்வெட்டில் பார்த்தோம். அப்போது அவர்கள் இறைவனின் வடிவத்தை சுதை மற்றும் மரத்தில் செய்து வழிபட்டார்கள். இன்றும் பல்லவ கால உத்திரமேரூர் வரதர் ஆலயத்தில் சுதை வடிவங்களை பார்க்கலாம். ஆலயத்தை கல்லில் கட்டிய அவர்கள், மரத்தாலும் சுதையாலும் ஆன விக்கிரகங்கள் மிக விரைவில் அழிந்து விடுவதை கண்டோ, அல்லது அங்குள்ள சிற்பியின் கைவண்ணம் காலத்தால் வளர்ந்ததாலோ, அவற்றையும் கல்லிலே செதுக்க ஆரம்பித்தனர் எனவே பிற்கால பல்லவர் கருவறை சுவரின் பின்பக்கம் சுவரிலேயே சோமாஸ்கந்த வடிவம் செதுக்கப்பட்டது. இவ்வாறு வந்ததே சோமாஸ்கந்த வடிவம். வலது புறத்தில் ஈசன், இடது புறத்தில் உமை, உமையின் மடியில் அல்லது நடுவில் குழந்தை முருகன். இந்த வடிவமும் காலப்போக்கில் எவ்வாறு வளர்ச்சி பெற்றது என்பதை பற்றி படிக்க திரு கிபிட் சிரோமொனே அவர்களின் பதிவு

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_somaskanda.htm

சோழர்கள் இந்த வடிவத்தை வெண்கல சிலைகளாக வடித்து, இந்த வடிவத்தின் பெருமையை இன்னும் பெரிதாக்கினார்.


சரி, மீண்டும் அதிரணசண்ட பல்லவேஸ்வரக்ருஹம் வருவோம், பலருக்கு இன்று நாம் பார்க்கும் மல்லை முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணுள் புதைந்து இருந்தது என்பது தெரியாது. (ஆம், புகழ் பெற்ற பஞ்ச பாண்டவ ரதம் கூடத்தான்!) அந்தக் காலத்தில் ( 18 C) இருந்த நிலையை அரிய இந்த புகைப் படத்தை பாருங்கள் ( நன்றி பிரிட்டிஷ் லைப்ரரி )

இன்று இப்படி காட்சி அளிக்கும் மண்டபமே அது.


சரி, சற்று அருகில் சென்று பார்ப்போம்.

கருவறைக்கு இருபுறமும் இரண்டு சோமஸ்கந்தர் வடிவங்கள் உள்ளதை பாருங்கள். பொதுவாக கருவறையில் உள்ளே மட்டுமே இருக்கும் இவை ஏன் இங்கு வெளியில் வந்துள்ளன.

கருவறையினுள் சற்று சென்று பார்ப்போம். சிவ லிங்கத்தின் பின்புறம் அழகிய சோமஸ்கந்தர் வடிவம் உள்ளது.

பின்னர் எதற்காக சிற்பி வெளியிலும் இரண்டு சோமாஸ்கந்த வடிவங்களை செதுக்கினான்

இங்கே தான் எனது கண்டுபிடிப்பு வருகிறது. மண்ணில் புதைந்த மண்டபத்தை வெளிக் கொணர்ந்தவுடன் எடுத்த புகைப் படம் ( மீண்டும் நன்றி பிரிட்டிஷ் லைப்ரரி ) என் கண்ணில் பட்டது.

சற்று உன்னிப்பாக கவனியுங்கள். வெளியிலும் இரண்டு சிவ லிங்கங்கள் இருப்பதை பார்க்கிறோம்.

அதனால் தான் சிற்பி அவற்றுக்கு பின்னர் சோமஸ்கந்தர் வடிவங்கள் செதுக்கி உள்ளான். இதுவே எனது கண்டுபிடிப்பு

இந்த லிங்கங்கள் இப்போது எங்கே போயின ? இவை மற்றும் இன்றி இன்னும் இரண்டு சிற்பங்கள் புகை படத்தில் உள்ளன. தலையில்லாத அமர்ந்த கோலத்தில் ஒரு வடிவமும், நிற்கும் கோலத்தில் அழகிய இன்னொரு வடிவமும் காணலாம். சென்ற முறை அங்கு சென்ற பொது இந்த சிதைவுகள் ஒரு ஓரத்தில் இருப்பதை படம் எடுத்தேன்!!

கால ஓட்டம் ஒரு கலைஞனையும் அவன் திறமையயும் அழிக்க நினைத்தாலும், அந்தக் கலைஞனின் சிற்பக் கலையை மட்டும் காலத்தால் அழிக்க முடிவதில்லை என்பதையும் உணர்ந்தேன். அது பதினெட்டாம் நூற்றாண்டின் நிலை. பின்னர் விளைந்த சிதைவுக்கு யார் பொறுப்பு?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment