முதல் ஆண்டு நிறைவு பதிவு பால கண்ணனா அல்லது ஞானக் குழந்தையா..

நண்பர்களே, இன்று நமது ‘கல்லிலே கலைவண்ணத்துக்கு’ முதல் ஆண்டு நிறைவு நாள். சரியாக ஓராண்டுக்கு முன், வறண்ட பூமியில் விழுந்த விதைக்கு இயற்கை தந்த அரவணைப்பினால் மளமளவென வளரும் விருக்ஷம் போல நல்ல உள்ளங்கள் பலரின் தூண்டுதலால் ஓங்கி வளர்ந்துள்ளது. தயங்கி தயங்கி நடை பயிலும் சிறு குழந்தை போல நாங்கள் எடுத்து வைத்த கால் நண்பர் பலரின் உதவியுடன் எழுந்து ஓடும் பிள்ளையாய் இன்று நூற்றைம்பது பதிவுகளாய் தமிழிலும் ஆங்கிலத்திலும் மலர்ந்துள்ளது.

தமிழகக் கோயில் கலையோடு மட்டும் நின்றுவிடாமல், அதுவும் கல்லோவியங்களோடு மட்டும் நிற்காமல், இந்தியா, இந்தோனேசியா, கம்போடியா என்றும் சிற்பம், ஓவியம், குடவரை என்று எங்கும் உலாவி, பல சுவையான கலைபெட்டகங்களை நம் கண்முன்னே நிறுத்தி, அதன் மூலம் இன்னும் பல புதுப்புது உறவுகளை உருவாக்கி தளத்தின் தரத்தையும், இடுகைகளின் அழகையும் மெருகு சேர்த்துள்ளோம். எங்கள் உயரிய நோக்கம் ஒன்றே, எங்கள் தளத்திற்கு வரும் ஒவ்வொரு நண்பரும் நம் கலையை ரசிக்க, அதன் பால் காதல் கொள்ளச் செய்ய வேண்டும், இதற்கு இந்த துறையின் வல்லுனர்கள் பலரிடம் கலந்துரையாடி, பல நூல்களை சேகரித்து, அதில் இருக்கும் கருத்துக்களை பாமரனும் புரிந்துகொள்ளும் பாணியில் படைக்க வேண்டும் என்பதே.

உங்கள் அன்புடனும் ஆதரவுடனும் நாங்கள் இந்த இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து நுழைகின்றோம். இந்த இரண்டாம் ஆண்டு விழாவில் இன்று மீண்டும் ஒரு சிறப்பு பதிவு.

இந்தப் பதிவு உருவான கதையும் மிகவும் சுவாரசியமானது, முந்தைய பதிவில் உள்ள சிலை பற்றி நண்பர் வைரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, செப்பு படிமங்களில் வெகு நாட்களாக இருந்த சந்தேகம் வெளிவந்தது. இரண்டு சிலைகள் – பார்ப்பதற்கு ஒன்று போலவே இருப்பதால், பலருக்கும் ஐயம் தரும் வடிவங்கள். பால கண்ணன் மற்றும் திருஞானசம்பந்தர் சம்பந்தப்பட்ட சோழர்கால சிலைகளே இவைகள். கைதேர்ந்த வல்லுனர்களும் பல அருங்காட்சியகங்களுமே குழம்பி, திகைத்து, எதற்கு வம்பு என்று இரு பெயர்களையும் பெயர்ப்பலகையில் இட்டு தப்பிக்க பார்க்கும் புதிர் இந்த வடிவங்கள். இதோ தஞ்சை அருங்காட்சியகத்தில் அடுத்து அடுத்து இருக்கும் சிலைகள் ( நன்றி சதீஷ் )

அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. நீங்களே பாருங்கள். முதல் பார்வையில் இரு வடிவங்களுக்கும் குமுதம் புதிர் போல ஆறு வித்தியாசங்கள் போட்டி வைக்கலாம் போல உள்ளது.

ஆனால் இங்கே தான் கலை வல்லுனர்களின் திறன் வெளி வருகிறது. அதுவும் வெண்கல/செப்புச் சிலைகளை பற்றிய வல்லுநர் என்றால் முதலில் நினைவுக்கு வரும் பெயர் – முனைவர் திரு நாகசாமி அவர்கள். எங்கள் பாக்கியம், அவர்களின் அறிமுகம் ஏற்கனவே நண்பர் சுந்தர் பரத்வாஜ் மூலம் கிடைத்ததால், அவரிடமே ஐயத்தைக் கேட்டோம். அவரும், உடனே பதில் அளித்தார் – சான்றோர் எப்போதும் சான்றோரே!! அவர் அளித்த தெளிவுரையே இந்த பதிவு.

சரி, மீண்டும் இரு உருவங்களை பார்ப்போம். வலது கையின் சித்தரிப்பில் உள்ள வித்தியாசத்தை கூர்ந்து பாருங்கள்!.

பால கண்ணன் சிலைக்கு வருவோம். விடை கண்ணன் வலது மார்பில் உள்ளது. ஆம்! முக்கோண வடிவில் ஸ்ரீவத்சம் தெரிகிறதா? கேள்விக்கு இடமே இல்லை, இது கண்ணனே!. வலது கரம் அபய ஹஸ்தம், தன்னிடம் அடைக்கலம் நாடும் பக்தரை ரக்ஷிக்கும் பாணி.

இப்போது அடுத்த சிலை. ( நன்றி நண்பர்கள் சதீஷ் சிங்கை மற்றும் ஸ்டூவர்ட் லீ சென்னை அருங்காட்சியக – அற்புத புகைப்படங்களுக்கு )
இந்த வடிவம், சோழர் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிலை. சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதலில் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவர் – சைவ நெறியில் மூழ்கி இருந்த சோழர்களின் குலக்கொடி பேரரசன் ராஜ ராஜன் கண்டெடுத்த ( திருமுறை கண்ட சோழன் ) திருமுறைகளில், பின்னாளில் அவை தொகுக்கப்பட்டபோது, முதல்வராக போற்றப்பட்டு, முதல் மறை, முதல் தேவாரம் தந்த திருஞானசம்பந்தர் சிலை!. அவர் பாடிய முதல் பதிகத்தின் காட்சியையே இந்த சிலை குறிக்கிறது.

இவரது தந்தையார் சிவபாதஹிருதயர், தாயார் இசைஞானியார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. குளித்துவிட்டு வெளியே வந்த தந்தையார், பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கவனித்து, அது குறித்துக் கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித் “தோடுடைய செவியன்” என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் பாடினார்.
தோடுடைய செவியன்

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!

இந்த காட்சியை படமாக காண

தோடுடைய செவியன்

காட்சி புரிந்ததா, இப்போது இதனை சிற்பி வடிக்கிறான். அதுவே இந்த சிலை யாரை குறிக்கிறது என்பதற்கு விடையும் கூட.

” குழந்தையின் தந்தை, யார் பாலூட்டியது என்று கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டியவர்”

இப்போது சிலையின் வலது கையை மீண்டும் நன்றாக பாருங்கள். ஆள் காட்டி விரல்

ஒரு நிமிடம் , சரியான படத்தை இடுகிறேன், சோழ சிற்பி தனது படைப்பில் கொண்டு வரும் உயிரோட்டத்தை விளக்கும் சிலை இது – இல்லை இல்லை, விரல் இது!. ஆள் காட்டி விரல், சற்றே மேல் நோக்கி நகருங்கின்றது, எனினும் இன்னும் முழுமையாக வானத்தை காட்ட வில்லை.

குழந்தை தந்தையின் கேள்விக்கு விடை அளிக்கும்போது ஆனந்தத்தில் ஆடிப் பாடி, விரலை மேல் நோக்கி நகர்த்தும் தருவாயில் சிற்பி தன் அகக்கண்ணில் அக்காட்சியை படம் பிடித்து உலோகத்தில் வார்த்து விட்டான். முகத்தில் ஒரு பரவசம், இடது கையில் தான் என்ன அப்படி ஒரு நளினம்!. நேரில் பார்க்குபோது சிலை உயிர் பெற்று அப்படியே பதிகத்தை பாடி அதற்கேற்ப அபிநயம் பிடிப்பது போல உள்ளது.

பல அருங்காட்சியகங்களில் இந்த வடிவம் உள்ளது – தில்லி, சென்னை, ப்ரீஏர்..


இனி நாம் இந்த சிலைகளை அடையாளம் கொள்ளவது சிரமம் இல்லை.

ஆக்க்லாந்து அருங்காட்சியகம்

ஸ்ரீவத்சம் நன்கு தெரிகிறது – எனவே கண்டிப்பாக கண்ணன்

இங்கே இருப்பது சம்பந்தர், தளத்தில் குறிப்பிட்டது போல கண்ணன் அல்ல.

ஹிந்து விஸ்டொம் தளம்

இந்த ஓவியத்தில் இருப்பது மேலே பார்த்த குறிகளை வைத்து சம்பந்தராக இருக்கலாம். (ஸ்ரீவத்சம் இல்லை!!)

சிற்பக் கலை பற்றி நல்ல பதிவு எனினும்

இந்த மகிழ்வான சந்தர்ப்பத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களையும், வாழ்த்திக் கொண்டே இருப்பவர்களையும், எங்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பவர்களையும், எங்களுக்கு எல்லா வகைகளிலும் உதவுபவர்களையும் நினைத்துப் பார்க்கிறோம். இவர்கள் ஒவ்வொரு பெயரையும் எழுத ஆரம்பித்தால் இந்த வலைத்தளம் போதாது என்னவோ.. அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி. வழக்கம் போலவே உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் எந்நாளும் நாடுகிறோம்.

மீண்டும், உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி கூறி, இன்னும் பல நண்பர்களை எங்களுடன் இணைத்து வையுங்கள், கோயில், அருங்காட்சியகம் எங்கு சென்றாலும் எங்களை நினைவு கொண்டு படங்களை எங்களுடன் பகிருங்கள் என்ற வேண்டுகோளை மீண்டும் இட்டு உங்களிடம் இருந்து விடை பெறுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *