பொதுவாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ‘நமது ‘ ஆர்வத்தை தூண்டும் இடங்கள் கிடைப்பது கடினம். அப்படி இருக்க ‘பாத்தாம்’ சென்ற போது இங்கே ஒரு இந்துக் கோவில் இருக்கிறது என்றவுடனே பட்டியலில் அடுத்து இருந்த ஷாப்பிங் ஒரு படி இறங்கி இதற்கு இடம் விட்டது. நாகா கோயில் என்று அங்கு இருப்பவர்கள் அழைக்கிறார்கள். அடர்ந்த மரங்களுக்கு இடையே ஒரு கோபுரம் – இல்லை இரு கோபுரம் ! இல்லை ஒரே கோபுரம் இரண்டாய் பிளந்து ! இல்லை, பின்னர் தான் திருக் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் ” கோபுர கலை மரபு ” நூலில் படித்தது நினைவுக்கு வந்ததது. பொதுவாக நமது ஆலயங்களின் வெளியில் இருக்கும் கோபுரம் என்பது ஒரு வகை நம் எண்ணங்களை சுத்தப்படுத்தும் – தேயினுள் நுழைவதை குறிக்கும். இந்த காட்சியை கீழே இருக்கும் படத்தை பார்த்தால் புரியும்.

இதுவே கொஞ்சம் கொஞ்சமாக மாறி தற்போது நாம் பார்க்கும் கோபுர வாயில்களாக மாறிஉள்ளது. இங்கே ஜாவா தீவுகளிலும் இந்தோனேசியா பாலி போன்ற இடங்களில் இன்றும் அப்படியே உள்ளன.
உள்ளே சென்றோம். அங்கே இடது புறத்தில் ஒரு சிறு ஆலயம். திரிபுரசுந்தரி சுந்தரி ஆலயம். பூஜைக்கு இன்னும் அரை மணி நேரம் ஆகும் மேலே சென்று அங்கே இருப்பதை பார்த்துவிட்டு வாருங்கள் என்றார் பூசாரி.
சிறிது தொலைவு நடந்ததும் அழகான படிக்கட்டுகளின் மேலே ஒரு கோபுரம் தென்பட்டது.

இந்த ஆலயத்தை பற்றி இன்னும் படித்து தெரிந்துக்கொள்ள வில்லை. எனினும் எதிரே அழகிய வாயிற் காப்போன், மேலே தோரணத்தில் கருடன் என்று எடுத்தவுடனேயே அழகிய சிற்பங்கள்.
உள்ளே சென்றவுடன் ‘நமது ‘ தென்னாட்டு பாணியில் பிள்ளையார். அது என்ன தென்னாட்டு பாணி ? மேலே படியுங்கள்.

அடுத்து எதிரில் தோன்றிய காட்சி மலைக்க வைத்தது. ஏற்கனவே ஒரு சிறு மலை மீது ஏறி இருந்த நாங்கள் எதிரே ஒரு பெரிய மலை போல உயர்ந்த கோயிலை பார்த்து அதிர்ந்து போனோம். வெளியில் இருந்து ஒன்றுமே தெரியவில்லை !
உள்ளே இப்படி ஒரு பிரம்மாண்ட விமானம் இருக்கும் என்று நினைக்க வாய்ப்பே இல்லை. இரு புறத்திலும் இரு இந்தோனேசியா பிள்ளையார் சிலைகள். கைகளில் முறையே மழு, பூ மொட்டு, சுவடி மற்றும் மோதகம்
நடுவில் நாகங்கள். இது என்னவாக இருக்கும் என்று யோசித்தோம்.
சுற்றி ஏதாவது தென்படுகிறதா என்று சென்று பார்த்தோம்.
ராட்சச பாம்பின் சுருள்கள் – அடடே , பாற்கடல் கடையும் காட்சி போல உள்ளதே ! நாலு பக்கமும் பெரிய நகங்களை கொண்ட கால்கள் பாம்பின் உடலின் கீழே தெரிந்தன. பின்னால் இரண்டு வால்கள் தென்பட்டன.
ஆமாம். அதே தான். மீண்டும் முன் பக்கம் வந்து பார்த்தோம்.
கீழே இருக்கும் முகம் குர்ம வடிவம். அதற்க்கு மேலே வாசுகி.
பொதுவாக இருபக்கமும் தேவர்களும் அசுரர்களும் நின்று கடையும் விதமே பார்த்த நமக்கு – இது ஒரு புதுமை. மேலும் பின்புறம் சற்று உயரத்தில் கருடனும் அவருக்கு மேலே ஒரு பறவையும் உள்ளன.
மேலே – உச்சியில் தங்க முலாம் பூசிய வடிவம் ஒன்று நடனம் ஆடும் வண்ணம் உள்ளது. கம்போடிய வடிவங்களில் விஷ்ணு இப்படி இருப்பார்.
எனினும் கைகளில் ஒன்றும் இல்லாததால் முடிவாக சொல்ல சற்று கடினமாக உள்ளது . மேலும் இதனை சிவன் கோயில் என்றும் சொல்கிறார்கள். .
இப்படி பிரமித்து நின்று விட்டு அருகில் ஆதி விநாயகர் மற்றும் திரிபுரசுந்தரி ஆலயம் சென்று அருமையான பூஜையை தரிசித்து விடை பெற்றோம்.
சிங்கை வந்தால் பாத்தாம் கண்டிப்பாக சென்று வாருங்கள். அங்கே நண்பர் திரு Dhani Hariadi
சேவை அற்ப்புதம்
PT. TITA PANORAMA INDAH TOURS & TRAVEL
Komplek TanjungPantun Blok P No. 4 Batam Island 29453, Indonesia.
Phone:+62 (778) 3306999
Fax: +62 (778) 456 797
Mobile Number: (+62) 81372788887