என்னடா ? இப்படி ஒரு தலைப்பா என்று சிரிக்க வேண்டாம். இதுவும் ஒரு பெரியபுராண கதை தான். தாராசுரம் சிற்பம். அமர்நீதி நாயனார் புராணம்.
முதலில் சிற்பம் இருக்கும் இடத்தை பாருங்கள்.
அடுத்து கதை : ( நன்றி விக்கி)
வணிகத்தால் பெரும் பொருள் தேடிச் செல்வந்தராய் விளங்கிய இவர் சிவனடியார்க்குப் பணிசெய்வதையே தனது நாளாந்த தொண்டாகக் கொண்டிருந்தார். சிவனடியார்க்கு திருவமுது (உணவு), ஆடை, கீழ்கோவணம் அளித்தல் ஆகிய திருத்தொண்டுகளைச் செய்துவந்தார். சிவனடியார்களுக்குத் திருவமுது கொடுப்பதற்காகத் திருநல்லூரில் மடம் கட்டினார். திருவிழாக்காலங்களில் தம் சுற்றத்தவரோடு தங்கியிருந்து அடியார்களுக்கு திருவமுது, உடை, கோவணம் என்பன அளித்து மகிழ்ந்தார்.
அன்பர் பணி செய்யும் அமர்நீதியாருக்குச் சிவபெருமான் அருள் புரியத் திருவுளங்கொண்டார். அவர் ஒரு நாள் அந்தணர் குலத்து பிரம்மச்சாரியாக கோலங்கொண்டார். கையில் இருகோவணம் முடிந்த ஒரு தண்டுடன் கோவண ஆடையுடன் திருநல்லூரில் உள்ள அமர்நீதியார் மடத்தை அடைந்தார்.
அவரைக் கண்டு அமர்நீதியார் மிக முகமலர்ச்சியோடு வரவேற்று உபசரித்தார். அமர்நீதியார் அவரை உணவுண்ண அழைத்தார். பிரம்மச்சாரியார் அவ்வேண்டுகோளிற்கிசைந்து காவிரியில் நீராடச் சென்றார். செல்லும் பொழுது மழை வரினும் வரும் எனக்கூறித் தமது தண்டில் கட்டி இருந்த கோவணம் ஒன்றை அவிழ்த்து அமர்நீதியாரிடம் கொடுத்து அதனைப் பக்குவமாக வைத்திருக்கும்படி கூறினார்.
அது எப்படி பட்ட கோமணம் , பாட்டை படியுங்கள்
பன்னிரண்டாம் திருமுறை
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=14&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவா றுமக்கே
ஈங்கு நான்சொல்ல வேண்டுவ தில்லைநீ ரிதனை
வாங்கி நான்வரு மளவும்உம் மிடத்திக ழாதே
ஆங்கு வைத்துநீர் தாரும்என் றவர்கையிற் கொடுத்தார்.
மேற்கூறிய குணநலம் சான்ற கோவணத்தின் பெருமையை உள்ளவாறு உமக்கு இங்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டுவதில்லை. நீர் இதை வாங்கி நான் நீராடி வரும் வரையில் உம்மிடத்தில் பாதுகாப்பாக வைத்துப் பின் திருப்பித் தருவீராக என்று சொல்லி, அதனை அந்நாயனார் கையில் கொடுத்தார்.
அமர்நீதியார் அதனைத் தனியாக ஓர் இடத்தில் சேமித்து வைத்தார். எப்படி பட்ட இடம்
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=16&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
தந்த கோவணம் வாங்கிய தனிப்பெருந் தொண்டர்
முந்தை அந்தணர் மொழிகொண்டு முன்புதாம் கொடுக்கும்
கந்தை கீளுடை கோவண மன்றியோர் காப்புச்
சிந்தை செய்துவே றிடத்தொரு சேமத்தின் வைத்தார்.
மறையவராக வந்தவர் தந்த கோவணத்தை வாங்கிய ஒப்பற்ற பெருந்தொண்டர், முதன்மை பொருந்திய அந்தணராகிய அவர்தம் மொழியினை ஏற்றவராய், இதற்கு முன் தாம் அடியவர்களுக்குக் கொடுப்பதற்கென வைத்திருக்கும் கந்தை, கீள், உடை, கோவணம் எனும் இவற்றை வைத்திருக்கும் இடத்திலன்றிப் பாதுகாப்பான இடத்தை எண்ணி, அவ்விடத்தில் அதனைக்காவல் பொருந்திய தொரு தனியிடத்தில் வைத்தார்.
சிவனடியார் கோவணத்தை மறையும்படி செய்து மழையில் நனைந்தவராய் வந்தார். வைத்த கோவணத்தை கொண்டு வருமாறு கூறினார்.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=19&limitPerPage=1&sortBy=&sortOrder=தேசக்
தொண்டர் அன்பெனுந் தூயநீ ராடுதல் வேண்டி
மண்டு தண்புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத்
தண்டின் மேலதும் ஈரம்நான் தந்தகோ வணத்தைக்
கொண்டு வாரும்என் றுரைத்தனர் கோவணக் கள்வர்.
தொண்டர்தம் அன்பு எனும் தூய நீரினில் ஆட விரும்பி, அவரை நோக்கிச் செறிவும் குளிர்ச்சியும் மிக்க நீரில் ஆடி வந்ததால், ஈரமுடைய கோவணத்தை மாற்றுதற்குத் தண்டின் மேல் உள்ளதும் ஈரமாகிய கோவணம் ஆதலின், நான் தந்த கோவணத்தைக் கொண்டு வருவீராக என்றுரைத்தார் கோவணக் கள்வர்.
சிற்பி இதை கவனித்து செதுக்கி உள்ளதை பாருங்கள்.
கோவணம் கொண்டுவரச் சென்ற தொண்டர் வைத்த இடத்தில் காணாது திகைத்தார். பிற இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் பிறிதொரு கோவணத்தை எடுத்துக்கொண்டு பிரமச்சாரியிடம் வந்தார். அடிகளே!, தாங்கள் தந்த கோவணத்தை வைத்த இடத்தில் காணவில்லை. அது மறைந்ததோ பெரும் மாயமாக உள்ளது. இது வேறு ஒரு நல்ல கோவணம்; இது ஆடையிற் கிழிக்கப்பட்டதல்ல. கோவணமாகவே நெய்யப்பட்டது. நனைந்த கோவணத்தை களைந்து (அகற்றி) இதனை அணிந்து அடியேனது குற்றத்தைப் பொறுத்து அருளுங்கள் என வேண்டினார்.
இதனைக் கேட்ட சிவனடியார் சீறிச் சினந்தார். அமர்நீதியாரே!, நாம் உம்மிடம் தந்த கோவணத்திற்கு ஒத்தது தண்டில் உள்ள இந்தக் கோவணம். இந்தக் கோவணத்திற்கு எடையான கோவணத்தைக் கொடுப்பீராக என்று கூறினார்.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=31&limitPerPage=1&sortBy=&sortOrder=தேசக்
உடுத்த கோவண மொழியநாம் உங்கையில் தரநீர்
கெடுத்த தாகமுன் சொல்லும்அக் கிழித்தகோ வணநேர்
அடுத்த கோவண மிதுவென்று தண்டினில் அவிழா
எடுத்து மற்றிதன் எடையிடுங் கோவண மென்றார்.
நாம் உடுத்தியிருக்கும் கோவணம் தவிர, உம்கையில் நாம் தர, நீர் அதனைப் போக்கியதாக முன் கூறிய அக் கிழிந்த கோவணத்திற்கு ஒப்பாகும் கோவணம் இதுவாகும்` என்று கூறி, தண்டில் கட்டியிருந்த கோவணத்தினை அவிழ்த்து எடுத்து, `இக் கோவணத்திற்கு ஒத்த எடையுடைய கோவணத்தை இடுவீராக` என்று தனது கோவணத்தை தராசில் இட்டார். ( இதையும் சிற்பி செதுக்கி உள்ளான் )
அதனை ஏற்றுக்கொண்ட அமர்நீதியார்,அதற்கு ஈடாகத் தம்மில் உள்ள நெய்த கோவணத்தை மற்றொரு தட்டில் வைத்தபோழுது அது நிறை போதாமையால் மேலெழுந்தது. அது கண்ட அமர்நீதியார், தாம் அடியார்களுக்குக் கொடுத்தற் பொருட்டு வைத்திருந்த கோவணங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக இட்டார். அப்பொழுதும் அன்பரது தட்டு மேற்பட அடியாரது கோவணத்தட்டு நிறையால் கீழே தாழ்ந்தது. அந்நிலையில் அமர்நீதியார், தம்மிடம் உள்ள பொன், வெள்ளி, நவமணித் திரள் முதலிய அரும்பொருள்களையும் இட்டார்.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=39&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
தவநி றைந்தநான் மறைப்பொருள் நூல்களாற் சமைந்த
சிவன்வி ரும்பிய கோவண மிடுஞ்செழுந் தட்டுக்
கவனி மேலமர் நீதியார் தனமெலா மன்றிப்
புவனம் யாவையும் நேர்நிலா என்பது புகழோ.
தவத்தால் நிரம்பிய நான்மறைப் பொருளாக உள்ள நூல்களால் அமைந்ததும், சிவபெருமான் விரும்புதற்குரியதா யுள்ளது மான கோவணம், இட்டமேலான தட்டுக்கு, இவ்வுலகில் வாழும் அமர் நீதீயார் செல்வங்கள் மட்டுமேயன்றி, அனைத்துலகங் களும் கூட ஒப்ப நிற்கமாட்டா என்று சொல்வதும் அதற்கொரு புகழாமோ? ஆகாது என்பதாம்.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=40&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
நிலைமை மற்றது நோக்கிய நிகரிலார் நேர்நின்
றுலைவில் பல்தனம் ஒன்றொழி யாமைஉய்த் தொழிந்தேன்
தலைவ யானுமென் மனைவியும் சிறுவனும் தகுமேல்
துலையி லேறிடப் பெறுவதுன் னருளெனத் தொழுதார்.
இந்நிலைமையை நோக்கிய ஒப்பற்றவராகிய நாயனார், மறையவர் முன் நேர்நின்று, கெடுதல் இல்லாத பல்வகைச் செல்வங்களையும் ஒன்று கூட விடாமல் தட்டில் வைத்துள்ளேன்; என்னுயிர்த் தலைவ! யானும் என், மனைவியும், சிறுவனும் ஒப்பாதற் குரிய பொருளாமேல், துலையில் ஏறப் பெறுதற்கு உன் அருள் முன்னிற்பதாகுக எனத் தொழுதனர்.
அடியாராக வந்த இறைவர், திருநல்லூரிற் பொருந்திய அம்மையப்பராகிய திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காட்டியருளினார். படத்தை பாருங்கள், அம்மை அப்பன் நந்தியின் மேலே .

அமர்நீதியாரும் மனைவியாரும் மைந்தரும் சிவலோகவாழ்வினைப் பெற்று இன்புற்றார்கள்.
ஒரு கோவணத்தை வைத்துக்கொண்டு கூத்தபிரான் விளையாடிய திருவிளையாடல் பார்த்தீர்களா . அற்புத கதை மற்றும் சிற்பம்.