தந்தையும் மகனும் சிற்பிகளாக இருப்பது பெரும் பிரச்சனையாக இருந்திருக்கும் போல – திருமலைப்புரம்

அந்த காலத்தில் தந்தையும் மகனும் சிற்பிகளாய் இருப்பது பலருக்கு கண்ணுறுத்தலாக இருந்திருக்கும் போல ! தந்தை செய்த சிற்பத்தில் மகன் குறை கண்டுபிடிப்பதும் அதனால் தந்தை தன கையை தானே வெட்டி எறிவது போல பல ( கட்டுக்) கதைகள் எதோ ஒரு ஒற்றில் கேட்டால் பரவாயில்லை – ஊருக்கு ஊர் இதே கதையை அந்த ஊரில் உடந்தை சிற்ப்பத்துடன் ( உள்ளே தேரை இருந்தது தான் அந்த குறையாம் !) இந்த கதையை சொல்லி சொல்லி பரப்பி விடுகிறார்கள். ஆனால் நல்ல வேலையாக இந்த முறை புதிதாக ஒரு கதையை கேட்டோம் !

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் வழி கேட்டுக்கொண்டு – அதற்க்கு ஊர்காரர்களுக்கு வழி தெரியவேண்டுமே ! தட்டி தடவி, திருமலாபுரம் என்று இன்று அழைக்கப்படும் திருமலைப்புரம் ( திருநெல்வேலி – கல்லிடைக்குறிச்சி அருகில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது) சென்றடையும் போதே பொழுது சாய்ந்துக் கொண்டு இருந்தது.

பெரிய குன்றில் ஒரு புறம் உள்ள பாறை முகத்தில் வெட்டிய குடவரை பளிச்சென்று தெரிகிறது. அதன் முன்னே அந்த சிற்பி / மன்னன் நின்று பார்க்கும் பொது தங்கள் மனக்கண்ணில் அவர்கள் கைவண்ணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் நிலைத்து நிற்கும் என்று எண்ணி இருப்பார்களா ?

சின்ன குடவரை தான். இரு தூண்கள் – இரு அரை தூண்கள் ( வட திசை நோக்கி ஒரு முடிவுற்ற குடவரை உள்ள்ளது – தெற்கு நோக்கி ஒன்று முடிவு பெறாத நிலையிலும் உள்ளது. அந்த முடிவு பெறாத குடைவரையை வைத்து தான் இந்த கதை வளர்கிறது – அதை பின்னர் பார்ப்போம் )

முதல்லில் வடக்கு குடைவரையை இன்னும் அருகில் சென்று பார்ப்போம். தூண்களில் அழகிய வேலைப்பாடுகள் உள்ளன.

அருமையான குடவரையில் நடு நாயகமாக தாய்ப்பாறையில்f செதுக்கிய நந்தி இருந்திருக்க வேண்டும். பாவம், அதன் கால்கள் மட்டுமே நமக்கு எஞ்சி உள்ளன. எவ்வளவு கடினமான வேலைப்படாக அது இருந்திருக்கவேண்டும் ! அடுத்த குடைவரையை பார்க்கும் பொது இது பற்றி நமக்கு மேலும் புரியும்.

இந்த குடைவரையின் காலம் சுமார் ஏழாம் நூற்றாண்டின் பின்பகுதிக்கு கணக்கிடப் படுகிறது. இது பாண்டியர் பாணியில் உள்ளது. கருவறையில் உள்ள சிவலிங்கம் தாய்பாரையில் செதுக்கப்பட்டிருப்பது, விநாயகர் சிற்பம் இருப்பது மற்றும் உள்ளே இருக்கும் மற்ற சிற்ப்பங்களின் பாணியை கொண்டும் இவற்றை நாம் அறியலாம்.

இரு வாயிற் காவலர்களில் இடது புறம் இருப்பவர் முறுக்கிய மீசையுடன் கம்பீரமாக தோற்றம் அளிக்கிறார்.
உட்சுவர்களில் நான்முகன் , பெருமாள் மற்றும் சிவபெருமானின் அருமையான ஆடல் சிற்பம் உள்ளது.


ஆடல் சிற்பம் என்றால் புகழ் பெற்ற நடராஜர் வடிவம் அல்ல – ஆனால் சதுர கோணத்தில், கையில் நடன நூலை பிடித்து அவர் ஆடும் அழகு மிக அருமை. அவருக்கு இருபுறமும் பூத கணங்கள் உள்ளது – வலது புறம் உள்ள கணம் சிதைந்து விட்டது – இடது புறம் இருப்பவர் சங்கீதம் சார்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் முக்கியமானவர். இந்த ஆடல் காட்சி மற்றும் பூதகணத்தை, அடுத்த பகுதியில் பார்ப்போம்.

இங்கே குறிப்பிட வேண்டியது இந்த சிற்பங்களின் அளவு – மேல் பாகம், முகம் – அணிகலன் எல்லாம் அழகாக இருந்தாலும் – இடுப்பு மற்றும் கால்கள் சற்றே அளவில் குறைவாக இருப்பது சற்று அழகு குறைவாக காட்சி அளிக்கின்றன.

சுவர்களில் ஒரு சில இடங்களில் ஓவியங்கள் இருந்த தடயங்கள் தெரிகின்றன. இந்த குடைவரைகள் முழுவதும் அந்த நாளில் ஓவியங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்திருக்கும் !! இன்னும் ஒரு புதமை இங்கே மும்மூர்த்திகளின் வடிவங்களின் நடுவில் இடத்தை பிரிக்க தூண்களை போலவே கல்லில் செதுக்கி இருப்பது.


பொழுது சாயும் நேரம் ஆகா, விடு விடு என்று அடுத்த குடைவரையை காண சென்றோம். அதற்குள் பெரிய கூட்டம் சேர்ந்துவிட்டது. எதோ பாரதிராஜா போல நாங்களும் படம் எடுக்கு வந்திருக்கிறோம் என்று நினைத்தார்களோ என்னமோ ! அந்த குடவரையில் பார்ப்பதுக்கு ஒன்றுமே இல்லை. அதை பூட்டி வைத்துள்ளனர் – சாவி இங்கே இல்லை, என்றெல்லாம் சொன்னார்கள்.வெளியில் உள்ள அரைகுறை சிற்பத்தை ( விநாயகரா??) பார்க்கும் பொது அவர்கள் சொல்வதில் தப்பு இல்லை என்று தான் தோன்றியது. நாங்கள் அந்த பூட்டிய கதவின் கம்பிகளுக்குள் தலையை திருப்பி திருப்பி உள்ளே பார்க்க முயற்சி செய்த எங்களை பார்த்து அவர்களுக்கு கருணை பிறக்கு – தொல்லியல் துறை தொலைபேசி என்னை தந்தார்கள். உடனே போன் செய்து வழக்கம் போல ” எனக்கு ஆசி இல் @#@#@#@#@# சாரை தெரியும் ” என்று ஒரு இரு பிரமுகர்களின் பெயரை சொல்லியவுடன் அவர் ” இதோ வருகிறேன் என்றார் !”

அப்படி அவர் வருவதற்கு காற்று நிற்கும் பொது தான் அந்த ஆடு மேய்ப்பவர்கள் அந்த ” கதையை” சொன்னார்கள். முதல் குடைவரையை செதுக்கிய சிறப்பிக்கு மிகவும் சுட்டியான மகன் ஒருவன் இருந்தானாம். அவன் தன தந்தைக்கு தினமும் வீட்டிலிருந்து ” காபி ” எடுத்து வருவானாம். அவனுக்கு தந்தையின் கலையை கற்க பெரும் ஆசை. அதன்படி அவன் அப்பாவுக்கு காபி வைத்துவிட்டு அவர் செதுக்குவதை பார்த்து மனதில் பதிந்து – மலையின் அடுத்த பக்கம் சென்று அதே போல செதுக்க துவங்கினானாம். தந்தைக்கு இது தெரியாமல் இருக்க தந்தை சுத்தியால் உலையை அடிக்கும் அதே தருணத்தில் தானும் அடிப்பானாம். அப்படியே பல காலம் செல்ல – ஒரு நாள் தந்தை திடீரேனே செதுக்குவதை நிறுத்த – மகனின் உளியின் ஓசை அவருக்கு கேட்டு விட்டது. என்ன கடக்கிறது என்று பாக்க சத்தம் வந்த இடத்தை நோக்கி அவர் செல்ல – அங்கே தனது வேலையை யாரோ காப்பி அடிப்பதை கண்டு கோபம் கொண்டார். கோபம் கண்ணை மறைக்க கல்லின் மேலே குடிந்து வேலை செய்வது தன மகன் என்று தெரியாமல் சுத்தியல் கொண்டு அடித்து கொன்றுவிட்டாராம் !!

அப்போது சாவி வந்துவிட்டது, உள்ளே சென்று நிறை பெறாத அந்த குடவரையில் ” ஒன்றுமே இல்லாத ” சுவர்களில் அந்த காலத்தில் எப்படி இந்த கல்லை குடைந்தார்கள் என்று அறிய உதவுகிறது. குறிப்பாக அந்த தாய்பாரை நந்தி …இங்கே அதற்க்கு நடுவில் எப்படி கல்லை விட்டு சுற்றி குடைந்து வருவது தெரிகிறது.

குடவரையில் எப்படி கல்லை குடைந்து இன்னும் ஆழம் செல்கிறார்கள் என்றும் அறியலாம். ஒன்று நாம் கவனிக்க வேண்டும் – இங்கே கல்லில் உள்ள உளி பட்ட மார்க்குகள் மல்லை குடைவரைகளில் நாம் முன்னர் நாம் கண்ட மார்க்குகளை விட சற்று வேறுபட்டு காட்சி அளிக்கின்றன.

படங்கள்: அர்விந்த் வெங்கட்ராமன்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

தந்தையும் மகனும் சிற்பிகளாக இருப்பது பெரும் பிரச்சனையாக இருந்திருக்கும் போல – திருமலைப்புரம்

அந்த காலத்தில் தந்தையும் மகனும் சிற்பிகளாய் இருப்பது பலருக்கு கண்ணுறுத்தலாக இருந்திருக்கும் போல ! தந்தை செய்த சிற்பத்தில் மகன் குறை கண்டுபிடிப்பதும் அதனால் தந்தை தன கையை தானே வெட்டி எறிவது போல பல ( கட்டுக்) கதைகள் எதோ ஒரு ஒற்றில் கேட்டால் பரவாயில்லை – ஊருக்கு ஊர் இதே கதையை அந்த ஊரில் உடந்தை சிற்ப்பத்துடன் ( உள்ளே தேரை இருந்தது தான் அந்த குறையாம் !) இந்த கதையை சொல்லி சொல்லி பரப்பி விடுகிறார்கள். ஆனால் நல்ல வேலையாக இந்த முறை புதிதாக ஒரு கதையை கேட்டோம் !

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் வழி கேட்டுக்கொண்டு – அதற்க்கு ஊர்காரர்களுக்கு வழி தெரியவேண்டுமே ! தட்டி தடவி, திருமலாபுரம் என்று இன்று அழைக்கப்படும் திருமலைப்புரம் ( திருநெல்வேலி – கல்லிடைக்குறிச்சி அருகில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது) சென்றடையும் போதே பொழுது சாய்ந்துக் கொண்டு இருந்தது.

பெரிய குன்றில் ஒரு புறம் உள்ள பாறை முகத்தில் வெட்டிய குடவரை பளிச்சென்று தெரிகிறது. அதன் முன்னே அந்த சிற்பி / மன்னன் நின்று பார்க்கும் பொது தங்கள் மனக்கண்ணில் அவர்கள் கைவண்ணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் நிலைத்து நிற்கும் என்று எண்ணி இருப்பார்களா ?

சின்ன குடவரை தான். இரு தூண்கள் – இரு அரை தூண்கள் ( வட திசை நோக்கி ஒரு முடிவுற்ற குடவரை உள்ள்ளது – தெற்கு நோக்கி ஒன்று முடிவு பெறாத நிலையிலும் உள்ளது. அந்த முடிவு பெறாத குடைவரையை வைத்து தான் இந்த கதை வளர்கிறது – அதை பின்னர் பார்ப்போம் )

முதல்லில் வடக்கு குடைவரையை இன்னும் அருகில் சென்று பார்ப்போம். தூண்களில் அழகிய வேலைப்பாடுகள் உள்ளன.

அருமையான குடவரையில் நடு நாயகமாக தாய்ப்பாறையில்f செதுக்கிய நந்தி இருந்திருக்க வேண்டும். பாவம், அதன் கால்கள் மட்டுமே நமக்கு எஞ்சி உள்ளன. எவ்வளவு கடினமான வேலைப்படாக அது இருந்திருக்கவேண்டும் ! அடுத்த குடைவரையை பார்க்கும் பொது இது பற்றி நமக்கு மேலும் புரியும்.

இந்த குடைவரையின் காலம் சுமார் ஏழாம் நூற்றாண்டின் பின்பகுதிக்கு கணக்கிடப் படுகிறது. இது பாண்டியர் பாணியில் உள்ளது. கருவறையில் உள்ள சிவலிங்கம் தாய்பாரையில் செதுக்கப்பட்டிருப்பது, விநாயகர் சிற்பம் இருப்பது மற்றும் உள்ளே இருக்கும் மற்ற சிற்ப்பங்களின் பாணியை கொண்டும் இவற்றை நாம் அறியலாம்.

இரு வாயிற் காவலர்களில் இடது புறம் இருப்பவர் முறுக்கிய மீசையுடன் கம்பீரமாக தோற்றம் அளிக்கிறார்.
உட்சுவர்களில் நான்முகன் , பெருமாள் மற்றும் சிவபெருமானின் அருமையான ஆடல் சிற்பம் உள்ளது.


ஆடல் சிற்பம் என்றால் புகழ் பெற்ற நடராஜர் வடிவம் அல்ல – ஆனால் சதுர கோணத்தில், கையில் நடன நூலை பிடித்து அவர் ஆடும் அழகு மிக அருமை. அவருக்கு இருபுறமும் பூத கணங்கள் உள்ளது – வலது புறம் உள்ள கணம் சிதைந்து விட்டது – இடது புறம் இருப்பவர் சங்கீதம் சார்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் முக்கியமானவர். இந்த ஆடல் காட்சி மற்றும் பூதகணத்தை, அடுத்த பகுதியில் பார்ப்போம்.

இங்கே குறிப்பிட வேண்டியது இந்த சிற்பங்களின் அளவு – மேல் பாகம், முகம் – அணிகலன் எல்லாம் அழகாக இருந்தாலும் – இடுப்பு மற்றும் கால்கள் சற்றே அளவில் குறைவாக இருப்பது சற்று அழகு குறைவாக காட்சி அளிக்கின்றன.

சுவர்களில் ஒரு சில இடங்களில் ஓவியங்கள் இருந்த தடயங்கள் தெரிகின்றன. இந்த குடைவரைகள் முழுவதும் அந்த நாளில் ஓவியங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்திருக்கும் !! இன்னும் ஒரு புதமை இங்கே மும்மூர்த்திகளின் வடிவங்களின் நடுவில் இடத்தை பிரிக்க தூண்களை போலவே கல்லில் செதுக்கி இருப்பது.


பொழுது சாயும் நேரம் ஆகா, விடு விடு என்று அடுத்த குடைவரையை காண சென்றோம். அதற்குள் பெரிய கூட்டம் சேர்ந்துவிட்டது. எதோ பாரதிராஜா போல நாங்களும் படம் எடுக்கு வந்திருக்கிறோம் என்று நினைத்தார்களோ என்னமோ ! அந்த குடவரையில் பார்ப்பதுக்கு ஒன்றுமே இல்லை. அதை பூட்டி வைத்துள்ளனர் – சாவி இங்கே இல்லை, என்றெல்லாம் சொன்னார்கள்.வெளியில் உள்ள அரைகுறை சிற்பத்தை ( விநாயகரா??) பார்க்கும் பொது அவர்கள் சொல்வதில் தப்பு இல்லை என்று தான் தோன்றியது. நாங்கள் அந்த பூட்டிய கதவின் கம்பிகளுக்குள் தலையை திருப்பி திருப்பி உள்ளே பார்க்க முயற்சி செய்த எங்களை பார்த்து அவர்களுக்கு கருணை பிறக்கு – தொல்லியல் துறை தொலைபேசி என்னை தந்தார்கள். உடனே போன் செய்து வழக்கம் போல ” எனக்கு ஆசி இல் @#@#@#@#@# சாரை தெரியும் ” என்று ஒரு இரு பிரமுகர்களின் பெயரை சொல்லியவுடன் அவர் ” இதோ வருகிறேன் என்றார் !”

அப்படி அவர் வருவதற்கு காற்று நிற்கும் பொது தான் அந்த ஆடு மேய்ப்பவர்கள் அந்த ” கதையை” சொன்னார்கள். முதல் குடைவரையை செதுக்கிய சிறப்பிக்கு மிகவும் சுட்டியான மகன் ஒருவன் இருந்தானாம். அவன் தன தந்தைக்கு தினமும் வீட்டிலிருந்து ” காபி ” எடுத்து வருவானாம். அவனுக்கு தந்தையின் கலையை கற்க பெரும் ஆசை. அதன்படி அவன் அப்பாவுக்கு காபி வைத்துவிட்டு அவர் செதுக்குவதை பார்த்து மனதில் பதிந்து – மலையின் அடுத்த பக்கம் சென்று அதே போல செதுக்க துவங்கினானாம். தந்தைக்கு இது தெரியாமல் இருக்க தந்தை சுத்தியால் உலையை அடிக்கும் அதே தருணத்தில் தானும் அடிப்பானாம். அப்படியே பல காலம் செல்ல – ஒரு நாள் தந்தை திடீரேனே செதுக்குவதை நிறுத்த – மகனின் உளியின் ஓசை அவருக்கு கேட்டு விட்டது. என்ன கடக்கிறது என்று பாக்க சத்தம் வந்த இடத்தை நோக்கி அவர் செல்ல – அங்கே தனது வேலையை யாரோ காப்பி அடிப்பதை கண்டு கோபம் கொண்டார். கோபம் கண்ணை மறைக்க கல்லின் மேலே குடிந்து வேலை செய்வது தன மகன் என்று தெரியாமல் சுத்தியல் கொண்டு அடித்து கொன்றுவிட்டாராம் !!

அப்போது சாவி வந்துவிட்டது, உள்ளே சென்று நிறை பெறாத அந்த குடவரையில் ” ஒன்றுமே இல்லாத ” சுவர்களில் அந்த காலத்தில் எப்படி இந்த கல்லை குடைந்தார்கள் என்று அறிய உதவுகிறது. குறிப்பாக அந்த தாய்பாரை நந்தி …இங்கே அதற்க்கு நடுவில் எப்படி கல்லை விட்டு சுற்றி குடைந்து வருவது தெரிகிறது.

குடவரையில் எப்படி கல்லை குடைந்து இன்னும் ஆழம் செல்கிறார்கள் என்றும் அறியலாம். ஒன்று நாம் கவனிக்க வேண்டும் – இங்கே கல்லில் உள்ள உளி பட்ட மார்க்குகள் மல்லை குடைவரைகளில் நாம் முன்னர் நாம் கண்ட மார்க்குகளை விட சற்று வேறுபட்டு காட்சி அளிக்கின்றன.

படங்கள்: அர்விந்த் வெங்கட்ராமன்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சேரன்மாதேவி ராமஸ்வாமி கோயில் .. ஒரு கம்பத்தில் உயிர்பிழைத்து நிற்கும் அவலம்

அளவுக்கு மீறினால் அமிர்தமும் கெடுதிதான்…ஒருவேளை நமது நாட்டின் கலை பொக்கிஷங்களின் அவல நிலைக்கும் இது தான் காரணமோ? வேறெப்படி தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நின்றும் இன்றோ நாளையோ என்று தத்தளிக்கும் சேரன்மாதேவி ராமஸ்வாமி கோயிலின் நிலையை சொல்வது? நிகரிலி சோழ விண்ணகர் – இணையற்ற விண்ணகர் என்ற பெயர்கொண்ட இந்த அற்புத ஆலயம் கூடிய விரைவில் இடிந்து விழுந்தது என்ற செய்தியை பதிப்பிக்க பல நாளேடுகள் போட்டி போடும், பலர் தங்கள் ஆதங்கத்தை ஊடகங்களில் வெளிப்படுத்துவார்கள், அரசாங்கம் ஒரு குழு அமைக்கும் ….ஒரு வாரத்திலோ ஒரு மாதத்திலோ வழக்கப்படி எல்லோரும் எல்லாம் மறந்து மீண்டும் வெற்றி நடிகனின் நூறாவது படம், நடிகையின் கிசு கிசு என்று ” இயல்பான ” வாழ்க்கைக்கு திரும்பிவிடுவோம். இழப்பு யாருக்கு ? வரும் சந்ததியினரின் சொத்து இது, சிதைய விட யார் நமக்கு உரிமையை கொடுத்தது ?

வெளியில் அனுமனின் சிலை, வாய்பொத்தி அண்ணலின் அணைப்பின் பூரிப்பில் நின்றது. எனினும் உள்ளே போனபோது வெறும் சிலை வடிவமாக பார்த்த எங்களுக்கு வெளியில் வரும்போது சிலை வேறு விதமாக பேசியது.

உள்ளே நுழைந்தவுடன் வெளி பிரஹாரம் ஒன்றும் விசேஷமாக இல்லை, பல ஆலயங்களில் பார்த்த காட்சி போல தான் இருந்தது.

உள்ளே செல்லச் செல்ல, கண் முன்னே தோன்றிய காட்சிகள் பிரமிக்க வைத்தன.


தினம் தினம் காணும் காட்சி அல்லவே – பத்தாம் நூற்றாண்டிற்கும் முந்தைய பாண்டிய விமானம் எந்த வித பின்னாளைய ” புதிப்பிப்பும் ” அல்லாமல் பார்ப்பது மிகவும் கடினம்.

நண்பர் பிரதீப் முன்னரே உதவியதால் எவைகளைப் பார்க்கவேண்டும் என்பதும், மற்றும் அங்கே ஊர் நபர்களின் உதவியும் எளிதில் கிடைத்தது.

அஷ்டாங்க விமானம் – ஒரு சிலவே தமிழ் நாட்டில் உள்ளன. பெருமாள் நின்ற கோலம், அமர்த்த கோலம், கிடந்த கோலம் என்று காட்சி அளிக்கும் மூன்று தள விமானம்.

நின்ற கோலம் மட்டுமே இன்று வழிபாட்டில் உள்ளது. அங்கே அற்புத செப்புத்திருமேனிகளை தரிசித்தோம்.

மேலே செல்கிறீர்களா என்று சற்று தயக்கத்தோடு கேள்வி வந்ததன் அர்த்தம், குறுகிய படி , மற்றும் சட சட வென படையெடுத்த வவ்வால்களின் கூட்டம் புரிய வைத்தது.

வீட்டு மாடியிலும் நவீன உணவகங்களிலும் உயரத்தே பார்த்த தோட்டம் நமக்கு இங்கே விமானத்தில் உள்ள தோட்டத்தை பார்த்து பகீர் என்றது

உள்ளே இன்னும் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது

மேலே உள்ள முக்கிய தூண் உடைந்து அதன் பாரத்தை ஒரு மரத் தூண் தாங்கி நின்றது. அது உடைந்தால் என்ன நடக்குமோ ?

ஆனால் இதை அனைத்தையும் பொருட்படுத்தாமல் உள்ளே அமைதியாக தம்பதிகள் சமேத அமர்ந்திருந்த சுதையாலான சுவாமி- ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சிலைகளை கண்டு மிரண்டு தான் போனோம். ( சுதை – எளிதாக சரி செய்து விடலாம் – யாராவது உதவ முன்வர வேண்டுமே )

என்ன அருமையான வேலைப்பாடு, வண்ணம் மிக்க சுதை வடிவங்கள்.

இன்னும் ஒரு தளம் மேலே ஏறினோம். ஆஹா, இங்கு ஆனந்தமாக பள்ளிகொண்ட பெருமாள். தேவிகள் இருவர் முகத்தில் மட்டும் எதோ ஒரு கவலை தெரிந்தது ?

திரும்ப வெளியில் வரும்போது மறுபடியும் ஹனுமனை பார்க்கும்போது – ஏதாவது செய்யுங்கள் என்று தன அண்ணலுக்கு தெரியாமல் சொல்வது போல ஒரு எண்ணம். எதற்காக அப்படி …அவர் காதில் விழுந்தால் பதில் …” எனக்கு உலகமடா !!” என்றல்லவோ இருக்கும்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சேரன்மாதேவியில் உள்ள சோழ பாண்டிய ஆலயமும் அதன் ரகசியமும் – பாகம் 1

சேரன்மாதேவி – நண்பர் பிரதீப் சக்ரவர்த்தி கண்டிப்பாக நீங்கள் அங்கே போக வேண்டும் என்று சொல்லும்போதே எதிர்பார்ப்புகள் அதிகமாயின. திருநெல்வேலி என்றதுமே வறண்ட பிரதேசம் என்ற நினைப்பு பொய்யாகும் அளவிற்கு டிசம்பர் மாதத்தில் சாலையின் இரு புறங்களிலும் பச்சைக் கம்பளம் அதில் வளைந்து வளைந்து சாலையுடன் போட்டியிட்டது தாமிரபரணி. சிறிய சிறிய கிராமங்கள் – மனிதனின் ஓட்டத்தையும் மீறி அப்படியே ஸ்தம்பித்த நிலையில் (நல்லதா கெட்டதா?) வெள்ளந்தி மனிதர்கள் , முதியோர் சிறார் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் முகத்தில் கள்ளங் கபடமற்ற அந்த சிரிப்பு – கால வெள்ளத்தில் பின்னோக்கி பயணம் செய்வது போன்ற உணர்வு.

ஊரை நெருங்கியதும் ஒரு புதிய பாலம் வந்தது . அண்மையில் அமைக்கப்பட்டதால் ஆற்றங்கரை கோயிலுக்கு அதன் மேலே சென்று ஊருக்குள் புகுந்து தான் வழி பிரிய வேண்டும் என்றனர். சிறிய கிராமம், நடுவில் பெரிய கோவில் ஒன்று இருந்தும் முதலில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பக்தவத்சல பெருமாள் கோயிலை பார்த்துவிட்டு வருவோம் என்று நண்பர் அரவிந்த் கூறினார். வழி கேட்டுக்கொண்டே சென்றோம் – ஒன்று இரண்டு இடங்களில் வழிப் பலகைகள் வைத்திருந்தால் உதவியாக இருந்திருக்கும், பாதை குறுகியது, இருபக்கமும் கருவேல முட்செடிகள், நமது கிராமங்களில் சுகாதார முறைகள் பற்றி படமும் கூடவே காற்றில் வந்தது. முடிவில் ஆற்றங்கரை ஓரத்தில் பெரிய மதில் சுவர் தெரிந்தது. நமக்கு மிகவும் பரிச்சயமான தொல்லியல் துறையின் நீல அறிவிப்புப் பலகையை காணவில்லை. அதன் இடத்தில அழகிய அறிவிப்புப் பலகை இருந்தது.

வெளிக் கோபுரம் மொட்டை கோபுரம் தான், எனினும் அழகாக இருந்தது.

பல கல்வெட்டுகள் இருந்தும் அறிவிப்புப் பலகை கூறிய படி ராஜேந்திர சோழரின் கல்வெட்டு முக்கியமானது. சோழர் ஆதிக்கம் இது வரையிலும் இருந்ததற்கு சான்று. சற்றே அதிகமாக இருந்தாலும் அழகாகவே இருந்தன வெளி மண்டபத்து சிற்ப வேலைப்பாடுகள்.
அதிலும் இந்த சிம்மத் தூண் மிக அருமை.

இன்னொரு சிறப்பான சிற்பம் இந்த நரசிம்ம வடிவம் – அமர்ந்த கோலத்தில் தலையில் ஆதிசேஷன் அழகாக குடை பிடிப்பது அருமை.

உள்ளே சென்றோம். ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் நின்ற கோலத்தில் …


பாண்டிய நாட்டு கோயில்களை பற்றி மேலும் பார்த்து தெரிந்துக்கொள்ள அர்த்த மண்டபத்தின் மேலே ஏறி விமானத்தை பார்க்க வேண்டும் என்றோம். வெளியே அழைத்துச் சென்று அங்கேயா என்றார்கள். குறைவாக எடை போட்டு விட்டோம் , மண்டபத்தின் உயரம் மிக அதிகம், அவர்களிடம் இருந்த இரும்பு ஏணி செங்குத்தாக நின்றால் தான் மேல் தளத்தை தொட்டது. என்ன செய்வது என்று சுற்றி முற்றி பார்த்தால் கூட வந்த அரவிந்தை காணவில்லை, தொல்லியல் துறை நண்பரையும் காணவில்லை. கருங்கல் மண்டபத்தில் எப்படி மாயமாக மறைந்தார்கள் என்று வியந்து நின்றபோது மேலும் ஒரு அதிர்ச்சி. தரையின் அடியில் இருந்து குரல்கள் – சுற்றி பார்த்தால் ரகசியம் தெரிந்தது..

தொடரும் …


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

நமது பாரம்பரியத்தின் இன்னொரு முகம். பழைய நாணயவியல் ஒரு முதல் பார்வை – மின் அரட்டை

நண்பர்களே, இன்று நாம் ஒரு புதிய கோணத்தில் இருந்து இந்த அற்புதக் கலையை பார்க்கப்போகிறோம். சிலை , சிற்பம் என்று இது வரை நம் பாரம்பரியத்தை பார்த்துவந்த எனக்கு திரு ராமன் சங்கரன் அவர்களுடைய அறிமுகம் கிடைத்தது. அவர் நாணயவியல் நிபுணர், நம்முடன் அவரது அனுபவங்களை பகிர்கிறார். இதை அப்படியே ஒரு கேள்வி பதில் பேட்டியாக அமைத்துள்ளேன். முதல் பாகம் – அறிமுகம் இதோ.

Me : சார், காலை வணக்கம். எங்களை இந்த பயணத்தில் எடுத்துச் செல்ல எண்ணும் உங்கள் நல்ல உள்ளத்துக்கு எங்கள் முதல் நன்றி. முதல் கேள்வி, எல்லோரும் கேட்பது போலவே தொடங்குகிறேன். உங்களுக்கு் இந்த நாணயங்கள் சேகரிக்கும் ஆசை எப்போது துவங்கியது.

RAMAN: நான் பள்ளியில் படிக்கும் போதே பிரிட்டிஷ் இந்தியா காசுகளை சேர்க்க ஆரம்பித்துவிட்டேன். இப்போது கூட நினைவில் உள்ளது ஒரு ரூபாய் கொடுத்து ஒரு அரையணா காசை வாங்கினேன் 1835 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாணயம் அது. நான் வாங்கியது 1980’s

Me : அப்படியா. அந்த நாணயம் தங்களுக்கு எப்படி கிடைத்தது.

Me: சார், இருக்கீங்களா ?

RAMAN: சாரி, கரண்ட் கட்

Me : பரவாயில்லை சார்.

RAMAN: நான் சென்னையில் வசிக்கிறேன் 🙁

Me: ஹஹஅஹஹா . நீங்கள் உங்கள் முதல் 1835 காசை பற்றி சொன்னீர்கள். அந்த காசு எப்படி உங்களுக்கு கிடைத்தது.

RAMAN: நான் அதை ஒரு பழைய சாமான்களை விற்கும் கடையில் இருந்து வாங்கினேன். நண்பர்கள் அனைவரிடத்திலும் பெருமையாக அதை காட்டினேன். 145 ஆண்டு பழமையான நாணயம் என்று.

Me : அருமை. அடுத்த கேள்வி அதில் இருந்தே தொடர்கிறது. புதிதாக என்னை போல ஆரம்பிப்பவர்கள் பழைய நாணயங்கள் தேடி யாரிடத்தில் செல்வது. நீங்கள் யாரை தொடர்புக் கொள்வீர்கள். அப்படியே நீங்கள் தெனிந்திய நாணயங்களை மட்டுமே சேகரிக்கிறீர்களா இல்லை பொதுவாக ஏனைய பழம் பொருட்களில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா.

RAMAN: புதிதாக வரு்வோருக்கு ஒரு நல்ல டீலர் அறிமுகம் இருப்பது நல்லது. மற்றும் இப்போது எல்லா ஜில்லாக்களிலும் நாணய ஆர்வலர் கிளப்ஸ் ( சங்கங்கள் ?) உள்ளன.

Me : புரிகிறது, இந்த துறையில் பல நகல்களும் புழக்கத்தில் இருப்பதால் நல்ல தேர்ச்சி பெற்ற நண்பர்களின் அறிமுகம் மற்றும் அறிவுரை தேவை . சென்னையில் இது போன்ற கிளப் ( சங்கங்கள்) உண்டா

RAMAN: திருநெல்வேலி , நாகர்கோவில் , தஞ்சாவூர் . திருச்சி , சேலம் சென்னை …. என்று எங்கும் நிறைய கிளப்ஸ் உள்ளன. மேலும் சென்னையில் மட்டுமே 25 டீலேர்ஸ், 5 கடைகள், 4 கிளப்ஸ் உள்ளன.

Me : சார், நீங்கள் நாணயங்கள் மட்டுமே சேகரித்து வருகிறீர்களா. இல்லை மற்ற பொருள்களிலும் ஆர்வம் உண்டா?

RAMAN: கடந்த 25 ஆண்டுகளாக நான் நாணயங்கள் சேகரித்து வருகிறேன். சங்க காலத்து நாணயங்கள் பல வைத்துள்ளேன். சோழ, பாண்டிய, சேர, பல்லவ, விஜயநகர, நாயக்கர் காலத்து நாணயங்கள் என்னிடத்தில் இருக்கின்றன. 2004 முதல் மோதிரங்கள் மற்றும் இலச்சினை (சீல்ஸ்) மீதும் கவனம் செலுத்தி வருகிறேன்.

Me: முதல் முதலில் இந்தியாவில் கிடைத்துள்ள நாணயங்கள் யாருடையது, எந்த காலம்

RAMAN: முதல் முதல் கிடைத்துள்ள காசு வெள்ளியில் வந்த முத்திரை காசு.ஒரு பக்கம் ஐந்து சிறு முத்திரையும், மற்ற பக்கம் ஒன்று அல்லது இரண்டு முத்திரைகளுடன் இருக்கும். தமிழ் நாட்டில் தொன்மையான காசு ஒரு பாண்டிய முத்திரை காசு.

Me: சரி, தமிழ் நாட்டில் என்ன உலோங்கங்களில் நாணயங்கள் கிடைக்கின்றன.

RAMAN: தங்கம், வெள்ளி, தாமிரம் , செப்பு என்று பல காசுகள் கிடைக்கின்றன. அது மட்டும் இல்லாமல் ஈயம் மற்றும் பலஉலோகங்களுடன் பித்தளை கலந்த கலவையிலும் கிடைகின்றன.

Me: அப்படியா. இதில் பரவலாக கிடைப்பது எது. தங்கமே மிகவும் அரியதா ?

RAMAN: சங்க காலத்து தங்க நாணயங்கள் இதுவரை கிடைக்கவில்லை. அப்போது ரோமானியர்களின் நாணயங்களே நாம் உபயோகித்தோம் என்பது பொதுவாக ஏற்கப்பட்ட கருத்து. தமிழ் நாட்டில் முதல் முதலில் கிடைக்கும் தங்க நாணயம் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் காசு தான்.

Me: ஆஹா, எங்கள் ராஜராஜர் புகழ் பாடாமல் பதிவுகள் நகராது போல உள்ளது. அந்த நாணயத்தை நாம் முதலில் பார்த்துவிடுவோமா.

RAMAN: பார்த்தீர்களா அதில் ஸ்ரீ ராஜராஜ என்று தேவநாகரியில் இருப்பதை பாருங்கள்.

Me: அருமை. பொதுவாக பழைய நாணயங்கள் சதுர வடிவில் இருப்பதை பார்க்கின்றோம். எப்போது இவை வட்ட வடிவம் பெறுகின்றன.

RAMAN: பொதுவாக சங்க காலத்து முத்திரை நாணயங்கள் சதுர வடிவத்தில் உள்ளன. பிறகு ரோமானியரின் தாக்கத்தால் வட்ட வடிவமாக மாறி இருக்கலாம். இப்போது இந்த 2ஆம் கி மு சேரர் நாணயத்தை பாருங்கள். .

முன் பக்கம் கம்பீர யானை, எதிரில் ஒரு மரம், அதன் பின்னால் நான்கு மீன்கள், யானையின் அடியில் பக்க வாட்டில் ஒரு பனை மரம் உள்ளது. பின்புறம் சேரர் வில் அம்பு இலட்சினை உள்ளது. அதனுடன் யானையை அடக்கும் அங்குசமும் உள்ளது.

Me: அருமை அருமை. சார், அடுத்து சங்க காலத்து பாண்டியர் நாணயம் பார்க்க கிடைக்குமா.

RAMAN: இருக்கே, இதோ இதுவும் கி மு ஒன்றாம் நூற்றாண்டு.


முன்பக்கம் கம்பீர ஆண் யானை. பின்பக்கம் கரையை நோக்கி நீந்தும் மீன் சின்னம்.

Me. மீன் தெரிகிறது, அது கரையை நோக்கி நீந்துவது ?

RAMAN: நீரில் அலை போல ஒரு குறி இருக்கிறது. வரைந்து காட்டுகிறேன்.

Me: இப்போது புரிகிறது. ரோமானிய நாணயம் பற்றி கூறினீர்கள். இதே காலத்து ரோமானிய நாணயம் எப்படி இருந்தது. நமது நாணயங்களை விட தொழில் நுட்பம் , கலை அம்சம் என்று ரோமானியர் நாணயங்கள் மிகை யா. ரோமானியர் தாக்கம் நமது நாணயங்களில் உள்ளதா?

RAMAN: இருக்கிறது. சோழர் சேரர் வட்ட வடிவ நாணயங்கள் முதலில் பார்ப்போம். .

Me: சங்க காலத்து சோழர் நாணயமா. பார்க்க ஆவலாக உள்ளது.

RAMAN: இதோ


Me: அற்புதமாக உள்ளது. இதன் காலம் என்ன, அதில் என்ன சித்தரிக்கப்பட்டுள்ளது.

RAMAN: இதுவும் கி மு ஒன்றாம் நூற்றாண்டு காலம். முன் பக்கம் யானை, அதற்க்கு முன்னர் வெளியே இருக்கும் மரம், யானைக்கு மேல் வெண் கொற்றக் குடை உள்ளது. பின்புறம் சோழர்களி்ன் வேங்கை ஒரு கால் தூக்கி கம்பீரமாக நிற்கிறது. அதன் வாலும அழகு.

Me: அருமை, வட்டமான சேரர் காசு?

RAMAN: இதோ.

RAMAN: முன்பக்கம் அமர்ந்திருக்கும் சிங்கம் , பக்கத்தில் ஒரு கம்பத்தின் மேல் சக்கரம். பின் பக்கம் சேரர் ’வில் அம்பு’.

Me: சிங்கம் சிங்கம் போல இல்லையே. !!

RAMAN: ஹஹஅஹா , இன்னும் ஒரு காரணம் (- தங்க நாணயம் சங்க காலத்தில் இல்லாமைக்கு ) அந்த காலத்தில் தங்கச் சுரங்கமோ , உலையோ தென் இந்தியாவில் இல்லை. ரோமானிய நாணயங்கள் தமிழ் நாட்டில் எங்கும் கிடைக்கின்றன. சென்னை அருங்காட்சியகம் 5000 க்கும் மேற்பட்ட ரோமானிய தங்கம் மற்றும் செப்புக் காசுகள் உள்ளன. சுமார் கி மு ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து தமிழ் நாட்டில் ரோமானியர் நாணயங்கள் கிடைக்கின்றன.

Me: அப்பாடி , அந்த காசு ஒன்றை பார்க்கலாமா ?

Me: தமிழ் காசுகளில் ரோமானியர் தாக்கம் என்ன. ரோமானியர் காசை போல அரசர் தலை பொறிக்கப் பட்டுள்ள காசுகள் உண்டா ?

RAMAN: உண்டு. சங்க கால அரசர்கள் பெயர் பொறித்த காசுகள் சில கிடைத்துள்ளன. மாக்கோதை , பெருவழுதி ,குட்டுவன் கோதை, கொல்லிப்புறை மற்றும் கொல்லிரும்புறை – என்று பிராமி
எழுத்தில் பொறிக்கப்பட்ட காசுகள் பல கிடைத்துள்ளன.

Me: ஆஹா. நிறைய நாம் கற்க வேண்டும். முதலில் மூவேந்தர் தவிர – அதாவது சேர, சோழ, பாண்டியர் – வில் அம்பு, வேங்கை மற்றும் கயல் சின்னங்கள் தவிர சிற்றரசர் நாணயங்கள் உள்ளனவா?. அவற்றின் குறிப்பிடத்தக்க சின்னங்கள் / இலச்சினைகள் என்ன?.

RAMAN: தமிழ் நாட்டில் வணிக ரீதியாக கிரேக்க நாணயங்கள் கிடைக்கின்றன. அதே போல சங்க காலத்து மலையமான் சிற்றரசனுடைய நாணயங்களும் கிடைத்துள்ளன. திருக்கோயிலூர் அருகில் மட்டுமே மலையமான் நாணயங்கள் கிடைக்கின்றன.

Me: திருக்கோயிலூர் அருகில் தான் எங்கள் பூர்வீகம். மலையமான் நாணயம் பார்க்க கிடைக்குமா ?

RAMAN: சங்க காலத்து நாணயங்கள் பொதுவாக நதிக் கரைகளில் கிடைக்கின்றன. மதுரை, கரூர், திருக்கோயிலூர், மற்றும் திருநெல்வேலி அருகில் – ஆனால் மிகவும் அதிகம் கிடைப்பது கரூர் அமராவதி ஆற்றில் தான். இதோ மலையமான் காசு.

RAMAN: இதுவும் கி மு ஒன்றாம் நூற்றாண்டு. திருக்கோயிலூர் அருகில் கிடைத்தது. முன் பக்கம் வலது புறம் நோக்கி நிற்கும் குதிரை, அதற்கு எதிரில் வேலியில்லாத மரம், குதிரைக்கு மேலே ஆயுதம், அதற்கு மேல் கொட்டுரிவில் எருது தலை சின்னம் ( டாரின் – Taurine ). பின்புறம் ஆற்றின் கரை கோடுகளால் காட்டப்பட்டுள்ளது. நேராக ஒரு வேலும், படுக்க வாட்டில் ஒரு வேலும் உள்ளன.

Me: ஆஹா , மிக அருமை. நாங்கள் கற்றுக் கொள்ள இன்னும் நிறைய உள்ளது, இந்த சின்னங்கள் ( டாரின் போன்று). இந்தத் துறையில் எங்களை போன்று ஆரம்ப நிலை ஆர்வலர்கள் படிக்க நல்ல நூல்கள் உள்ளனவா ? நாங்கள் எங்கே துவங்க வேண்டும்.

RAMAN: முதலில் எந்த நாணயங்கள் சேகரிக்க போகிறீர்கள் என்று முடிவெடுங்கள்.

Me: எங்கள் உடல் மண்ணுக்கு , உயிர் சோழர் தான் ! உடையார் ராஜ ராஜா சோழர் காலத்து காசை கையால் தொட்டால் புளகாங்கிதம் அடைந்து விடுவோம். அவரது காசுகள் இன்றும் கிடைகின்றனவா ?

RAMAN: சோழர் காசு சரியான தேர்வு. தமிழகம் எங்கும் பரவலாக கிடைக்கும். ஒரு செப்புக் காசை நானே அன்பளிப்பாக தருகிறேன்.

Me: ஆஹா

RAMAN: சும்மா சொல்ல வில்லை, கண்டிப்பாக தருவேன்.

Me: அப்படி என்றால் விரைவில் வந்து வாங்கிக் கொள்கிறேன். பொதுவாக இந்த அளவிற்கு தேர்ச்சி வருவதற்கு அறிஞர்கள் துணை தேவை. அப்படி உங்கள் துணை நின்று உதவிய குரு என்று யாராவது உண்டா ?.

RAMAN: எனது முதல் குரு தஞ்சை திரு சீதாராமன் அவர்கள். பிரம்மி எழுத்து பொறித்த நாணயங்கள் மற்றும் மோதிரங்கள், முத்திரைகளுக்கு திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள்.

Me: ஆஹா. ஜாம்பவான்கள்.

RAMAN: எனது அறிவுரை, முதலில் பிடித்த நாணயம் தேர்ந்தெடுத்து , அதை பற்றி படியுங்கள். திரு சீதாராமன் அவர்கள் வெளியிட்டுள்ள புத்தங்களை வாங்கி படியுங்கள்.

Me: பதிப்பகம் எது, எங்கே கிடைக்கும்


RAMAN: அவரது முகவரி இதோ. .

தனலட்சுமி பதிப்பகம்
12, ராஜராஜன் நகர் ,
மானோஜிப்பட்டி ( தெற்கு )
தஞ்சை – 613004

புத்தகத்தின் விலை ரூபாய் 150

Me: நன்றி சார். மிகவும் எளிமையான நடையில் பல தகவல் தெரிந்துக் கொண்டோம். அடுத்து பகுதியில் மூவேந்தரில் ஒருவரையோ அல்லது பல்லவர் நாணயங்களை எடுத்துக்கொண்டு அரட்டை (சாட்) அடிப்போம் !!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சித்தன்னவாசல் – ஓவியக்கலையின் சிகரம்

சித்தன்னவாசல் என்றதுமே பலருக்கு பலவிதமான சிந்தனைகள் தோன்றும். நமது திரைப்பட கவிஞர்கள் தங்கள் கதாநாயகிகளை வர்ணிக்க பொதுவாக சித்தன்னவாசல் ஓவியம் என்று எழுதுவார்கள். அதில் எத்தனை பேர் அங்கே சென்று அந்த ஓவியங்களை பார்த்துவிட்டு ஏற்பட்ட தாக்கத்தினால் அப்படி எழு்தினார்களா என்று தெரியவில்லை. ஏனெனில் அப்படி அவர்கள் அங்கு சென்று இருந்தால் , இன்றைக்கு அந்த அற்புத ஓவியங்கள் படும் பாட்டை பாட்டாக பாடி இருப்பார்கள். பாவம் அவை, தெரியாமல் நம் நாட்டில் உள்ளன. அங்கே இருப்பதில் நூற்றுக்கு ஒரு சதவிதம் வேறு ஒரு நாட்டில் இருந்தாலும் அவை அந்த நாட்டின் தலை சிறந்த கலை பொக்கிஷம் என கொண்டாடப்படும்.

நாம் முன்னரே இரு பதிவுகளில் அங்கு இருக்கும் அற்புத நடன மாந்தர்களை பார்த்துவிட்டோம். அவை இருக்கும் இன்றைய அவல நிலையை கண்டு நம் மனம் கதறுகிறது. இன்றைக்கு, நண்பர் அசோக் கிருஷ்ணசுவாமி அவர்களின் உதவியுடன் நாம் முக்கியமான ஓவியங்களை பார்க்கப் போகிறோம் (அவர் இந்த அற்புதங்களை சரியான விதத்தில் வெளிக் கொணரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் ) இந்தப் பதிவில் இருக்கும் படங்கள் அனைத்தும் அவரது கைவண்ணம் இல்லை கேமராவண்ணம். கேட்டவுடன் பெருந்தன்மையுடன் நமக்காக பகிர்ந்துக்கொண்டார். அவருக்கு அனைவரின் சார்பாக ஒரு பெரிய நன்றி. மின்னாக்கம் என்பது இவற்றை பாதுகாக்கவும், தற்போதைய நிலையை எடுத்துரைக்கவும், மேலும் சிதைவில் இருந்து இவற்றை காக்கவும் உதவும் என்பதே இந்தப் பதிவின் நோக்கம். ( இந்த சமண குடைவரையும் அதில் உள்ள ஓவியங்களையும் திரு S. ராதாகிருஷ்ண ஐயர் அவர்கள் 1916
கண்டுபிடித்தார் )

முதன் முதலில் முனைவர் திரு சுவாமிநாதன் அவர்கள் தான் சித்தன்னவாசல் ஓவியங்களை எனக்கு அறிமுகம் செய்தார். ஒரு மணிநேரம் பிரமித்து அவரது உரையை உள்வாங்கினோம். அதை இன்னும் படங்களுடன் மெருகு சேர்த்து ஒரு பெரிய பதிவை இடவேண்டும் என்று பல நாள் ஆசை. நண்பர் அர்விந்த் அவர்களுடன் சென்ற டிசம்பர் மாதம் இந்தியா வந்தபோது படம் எடுக்க முயற்சி செய்தோம். முடியவில்லை. எனினும் அதற்கேற்ற காலத்தை அதுவே நிர்ணயம் செய்தது போல – படம் பிடிப்பதில் கைதேர்ந்த வல்லுநர் திரு அசோக் அவர்களது படங்களுடன் தான் பதிவு அமைய வேண்டும் என்று காத்து இருந்தது போல.

சித்தன்னவாசல் நோக்கி – வெறும் பாறை இல்லை. அதற்கு மேலும் கீழும் சரித்திரம் உள்ளது. மேலே என்ன வென்று பிறகு பார்ப்போம்.

குடைவரை அடைந்தவுடன் எதிரில் தோன்றிய தூண்கள் சற்று நெருடலாக இருந்தன. இவை மிகவும் சமீபத்தில் கட்டியவை.

குடைவரையின் காலம் ஏழாம் நூற்றாண்டு என்று அங்கே இருக்கும் தடிமன் பெருமான் தூண்கள் ( மகேந்திரர் காலத்து தூண்கள் போல ) இருப்பதால் நாம் கருதலாம் , பின்னர் ஒன்பதாம் நூற்றாண்டில் செப்பனிடப் பட்டது. இதனை குடைவரை தூணில் இருக்கும் ஒன்பதாம் நூற்றாண்டு கல்வெட்டு சொல்கிறது. சிறிமாறன் ஸ்ரீவல்லபன் ( பாண்டிய அரசன் (815 – 862 AD) காலத்தில், இலன் கௌதமன் என்னும் சமணனால் அர்த்த மண்டபம் செப்பனிடப்பட்டது

நாம் முன்பு பார்த்த பதிவில் வெளிக் குடைவரை தூண்களில் உள்ள நடன மாதர் ஓவியங்களை பார்த்தோம். இப்போது உள்ளே செல்கிறோம் – மண்டபத்தின் மேலே பார்த்துக்கொண்டே..

ஆம்! மேல் சுவரில் தான் உள்ளது அந்த தாமரை பூத்த தடாகம்.

முதலில் சுவரில் பூச்சு அடித்து அது காய்ந்த பின்னர் ஓவியத்தை வரையும் முறை இங்கு காணப்படுகிறது. இதனை ஃபிரெஸ்கோ செக்கோ என்பார்கள்.

http://en.wikipedia.org/wiki/Fresco-secco

யோசிக்கும் போதே , தலை சுற்றுகிறது. இப்படி சாரம் கட்டி, மல்லாக்க பார்க்க படுத்துக்கொண்டு, எப்படித்தான் ஓவியக் கலவை , தூரிகையை கொண்டு கையாண்டார்களோ.

சரி, இன்னமும் உங்கள் பொறுமையை சோதிக்க மாட்டேன். இதோ ஓவியம்.

அப்படி என்ன இந்த ஓவியத்தில் என்று கேட்கிறீர்களா. பொறுமை, இந்த ஓவியப் பயணத்தை படங்களுடனே தொடருவோம். நீங்கள் கவனிக்க வேண்டிய பகுதிகள். ஆமாம்
ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஒளிந்துக் கொண்டிருக்கிறது இந்த ஓவியத்தின் பெருமிதம்.

இப்படி போட்டுக் காட்டினால் எளிதாக உள்ளதா?. தாமரை பூத்துக் குலுங்கும் தடாகத்தில் மீன்கள் பல துள்ளி விளையாடுகின்றன .

மீன்களை சிரிக்கும் வண்ணம் வரைந்தானோ ஓவியன்.இன்னும் பல தடாகத்தில் ஒளிந்துக்கொண்டு இருக்கின்றன. நன்றாக தேடிப் பாருங்கள்.

இது ஒரு பெரிய தடாகம். மீன்கள் மட்டும் அல்ல – உள்ளே ஒரு காட்டெருமை குடும்பம், ஒரு எருமை மாடு, ஏன் ஒரு யானை குடும்பம் , எட்டு நாரை பறவைகள் உள்ளன, என்றால் நம்புவீர்களா ?


உண்மை தான். முதலில் கஜங்கள். உற்று பாருங்கள். அதில் ஒன்று தனது துதிக்கையை கொண்டு ஒரு தாமரை மலர்க் கொத்தை சுற்றி இழுப்பதும், அதன் அடியில் ஒரு குட்டி யானை ( சற்று கடினம் தான் – என்ன செய்வது ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன )

இப்போது மாடுகள். காட்டெருமை நம்மை வெறுப்புடன் திரும்பிப் பார்ப்பது தெரிகிறதா. அதன் பின் அதன் துணை போல

மாடுகளின் கொம்புகளில் உள்ள வித்தியாசத்தை காட்டும் ஓவியனின் கலை அபாரம்.


இன்னொரு விதமான எருமை. இது நம்ப ஊரு எருமை போல உள்ளது. ( என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பெயர் எருமை – என் பெயரை விட அவர் என்னை கூப்பிட உபயோகித்த பெயர் அதுதான் )


இங்கே மிகவும் சிதைந்த நிலையில் ஒரு பிராணி உள்ளது. குதிரையாக இருக்கலாம்.

இவை அனைத்துக்கும் நடுவில் கூட்டம் கூட்டமாக நாரைகள். எதையோ கண்டு மிரண்டு பறக்க இருக்கின்றன.

கண்களில் ஒரு மிரட்சி தெரிகிறதா ?


அவை மிரள காரணம் என்ன. ஓவியத்தை மீண்டும் பாருங்கள். அவை எதை பார்த்து மிரளுகின்றன.

அடியில் இருக்கும் நாரைகளை தவிர ( அவை அருகில் இருக்கும் யானையை கண்டு மிரளுகின்றன ) மற்ற பறவைகள் அனைத்தும் பார்ப்பது…..

ஆம், குளத்தின் நடுவில் இரு மனிதர்கள் தண்ணீரில் இடுப்பு வரை இறங்கி பூக்களை பறிக்கிறார்கள். இது சாமவ சரண என்னும் சமண சடங்கில் வரும் காட்சி.


சற்று மாநிறமாக இருப்பவர், எட்டி ஒரு தாமரையை பறிக்க தண்டை பிடித்து இழுக்கிறார். மற்றொரு கையில் ஒரு பின்னிய கூடையில் பிரித்த மலர்கள். ஓவியன் அவர் இழுப்பிற்கு வளையும் வண்ணம் தண்டை வரைந்துள்ளான் பாருங்கள்.

அவருக்கு பின்னால் இன்னும் ஒரு இளம் துறவி. இவர் சற்று நல்ல சிகப்பு நிறம் போல. முகத்தில் என்ன ஒரு தேஜஸ். அந்த கையில் தான் என்ன ஒரு நளினம், தன நண்பனுக்கு அடுத்த பூவை சுட்டிக்காட்டும் பாவம் அருமை.

அவருக்கு பின்னல் இருக்கும் பூ தண்டுகளை கவனமாக பாருங்கள். நடுவில் இருப்பது அல்லி , இருபுறமும் தாமரை. அல்லித் தண்டு வழவழ வென இருக்கும், தாமரை சற்று சொர சொரவென இருக்கும்.(அல்லித் தண்டு காலெடுத்து அடிமேல் அடிவைத்து என்று கவியரசர் எழுதினாரே..)

என்னமாய் நுண்ணி்ய அளவில் ஒரு தடாகத்தை கூர்ந்து கவனித்து நமக்கென வரைந்துள்ளான் அந்த அற்புத ஓவியன். இவனல்லவா உலகிலேயே மிகச் சிறந்த ஓவியன்.. இன்னும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தடாகத்தில் உள்ள மலர்கள் மொட்டில் இருந்து முழுவதுமாக மலரும் வரை எத்தனை விதமாக மலருமோ , அவ்வளவும் உள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன்னரே திரு சிவராமமூர்த்தி அவர்கள் எடுத்த பிரதி உதவுகிறது.

இருங்கள், இதுவரை பாதி தடாகம் தான் முடிந்தது. அடுத்த பக்கம் இதன் மறுபாதியைக் காண்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

திருச்சி – கீழ்க் குடைவரை – “ஏன் சார், வேஸ்ட் பண்றீங்க. அங்கே பார்க்க ஒன்றும் இல்லை!!”.

ஐயப்பன் சீசன். கூட்டம் களை கட்டியது. நோ என்ட்ரி.. புதிர்களை தாண்டி மலைகோட்டை அடைவதற்குள் சூரியன் தனது அரைநாள் வேலையை முடித்து விட்டு மேலே நகர்ந்துக்கொண்டிருந்தான். முதல் படியிலேயே சண்டை – தேவஸ்தான அதிகாரியுடன் – கேமரா டிக்கெட் வாங்கியே ஆகவேண்டும் என்று அவர் ஒரே பிடியாய் நிற்க, நாங்கள் ஆசி குடைவரைகளை பார்க்க மட்டும் தான் போகிறோம் – அதற்க்கு சீட்டு தேவை இல்லை என்று வாதாடி தோற்றோம் ( எந்த ஆசி தளத்திற்குள் சென்று படம் எடுக்க கட்டணம் தர தேவை இல்லை. முக்காலி கொண்டு எடுக்க வேண்டும் என்றால் தான் பிரச்சினை ). வேண்டா வெறுப்பாக கட்டணத்தைக் கட்டி சீட்டை பெற்றுக்கொண்டு முதல் தளத்தை கடந்து இடது புறம் திரும்பினோம். உடனே அருகில் இருந்த உங்கள் நண்பன் – அவர்தான் நம்ப ஆட்டோ காரர் – ஒரு விதமாக பார்த்தார். அந்தப் பக்கம் உட்டு அடிக்க வந்தோம் என்று முதலில் நினைத்தாரோ என்னமோ. பின்னர், இது தப்பான வழி. அப்படி போ என்றார். சுற்றி பார்த்தோம் – அறிவு ஜீவிகள் – பேர் பலகையில் முழு பக்கம் வரைந்து வைத்துள்ளனர். அதுவும் பல்லவர் குடைவரை செல்லும் வழி என்று ( பெரும்பாலான அறிஞர்கள் இந்தக் குடைவரை பாண்டியர் குடைவரை என்று கருதுகின்றனர் ). எனினும் அவர் விட வில்லை. எங்கே சார் போகணும் என்றார். குடைவரைக்கு என்று சொன்னோம். ”ஏன் சார், வேஸ்ட் பண்றீங்க. அங்கே பார்க்க ஒன்றும் இல்லை. மேலே போங்க!” என்றார்.

அதை பார்க்கத்தான் வந்தோம் என்றவுடன்,எதோ புழு பூச்சியை சாப்பிட்டது போல ஒரு எக்ஸ்பிரஷன் காட்டி மீண்டும் பீடியை ஊத ஆரம்பித்தார். ஒரு நூறு அடி நடந்ததும் எங்களுக்கே ஒரு கலக்கம். இது சரியான வழியா என்று. நல்ல வேளை, வீடுகளின் நடுவில் ஒரு சின்ன குறுக்கு பாதை மலையை நோக்கி சென்றதை கண்டு அதனுள் விரைந்தோம். பத்து அடி சென்றவுடன்….எதிரே பிரம்மாண்டம்.

அப்படியே பெரிய மலையின் அடியில் எப்படித்தான் இடம் பார்த்து இப்படி குடைந்தார்களோ. பாறையும் அதன் அடியி உள்ள குடைவரையும் கண்ணைப் பறித்தன. அங்கே அலை மோதிய கூட்டம், ஆனால் இங்கே ஈ காக்கா இல்லை. சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருந்தனர் ( சிற்பத்தின் கால்கள் தான் ஸ்டம்ப்_. ஆசி நபர்கள் இருவர் இருந்தனர்

மலையை ஆழமாக்க குடைந்து அமைக்கப்பட்ட குடைவரை. வெளித் தூண்களே எப்படி உள்பக்கமாக இருக்கின்றன பாருங்கள்.

தூணைப் பார்த்தவுடனேயே சந்தேகங்கள் – இது பல்லவ தூண் மாதிரி இல்லையே. அருகே ஆசி பலகை – இது மாமல்லர் காலம் என்று அடித்துச் சொன்னது 640 to 670 AD.

நீள்சதுர வடிவில் இருக்கும் குடைவரையின் இரு பக்கங்களில் இரு அர்த்த மண்டபங்கள் வெட்டப்பட்டுள்ளன. உள்ளே கர்ப்பக்கிருஹம் – ஒன்று சிவனுக்கு,மற்றொன்று பெருமாளுக்கு. இரண்டு கருவறைகளுக்கும் கருவறை காவலர்கள், மற்றும் அர்த்த மண்டபத்துக்கும் இரு வாயிற் காவலர்கள் – என்று மொத்தம் எட்டு வாயிற் காப்போன் சிலைகள் உள்ளன !! ( ஒவ்வொன்றாக அடுத்த பதிவில் பார்ப்போம்)

பின் சுவரில் சிற்பி தனது முழு திறனையும் காட்டி – விநாயகர் ( மாமல்லர் காலத்தில் விநாயகர் சிற்பமா?) , நான்முகன், முருகன், சூரியன் மற்றும் துர்க்கை சிற்பங்கள் உள்ளன.

ஒவ்வொன்றாக வரும் பதிவுகளில் அவற்றை பார்ப்போம். ஆசி ஓவியர் சிற்பங்களை வரைந்துக்கொண்டிருந்தார். ( கரும்பு கடிக்க கூலி வேணுமா – நமக்கு )

ஏனோ அந்த ஆட்டோ காரர் சொன்ன “ஏன் சார், அங்கே வேஸ்ட் பண்றீங்க. அங்கே பார்க்க ஒன்றும் இல்லை ” என்ற வார்த்தைகள் இப்போதும் வலித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் அறியாமை தமிழகத்தில் இப்படியும் இருக்கலாகுமோ…


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

நரிதனை பரியக்கி பரிதனை நரியாக்கி

முந்தைய பதிவில் ஆவுடையார் கோயில் குதிரை வீரனை பற்றி பார்க்கும் பொது, அதனை ஒட்டிய கதையை பிறகு பார்ப்போம் என்று கூறினோம். இன்று திரு அரவிந்த் அவர்கள் உபயம் , கீதா அம்மா அவர்கள் உதவியுடன் பாபநாசம் பாலைவனநாதர் கோயிலில் உள்ள இந்த அற்புத சிற்பத்தை பார்ப்போம்.


மாணிக்க வாசகர் என்னும் திருவாதவூரார் வரலாறு ( நன்றி விக்கி )

படம் பார்த்தோம். பாடல். வித்தியாசமாக ஒரு திரைப்பட பாடல்.

படம்: மதுரை வீரன்
பாடல் : கண்ணதாசன்
இசை: G.இராமநாதன்

ஆடல் காணீரோ!
விளையாடல் காணீரோ!

ஆடல் மதுரையின் ராஜ தம்பிரனாம் எங்கள்
ஆண்டவன் திருவிளையாடல் காணீரோ (ஆடல்)

ஊற்றுப்பெருக்காலே உவப்பூட்டும்
ஆற்று வெள்ளம் தடுக்கவே
வீட்டுக்கொரு ஆள் தந்து
வேந்தனின் ஆணை தன்னை
ஏற்று விணை முடிக்கவே
பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்

பிள்ளைப் பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்
பிட்டுக்கு மண் சுமக்கவே வந்து பித்தனைப் போலே

கைப்பிரம்பாலே பட்ட அடி பேசிடும் சகல் ஜீவராசிகள்
முதுகிலும் பட்டு வடுவுற்ற ஈசன் திருவிளையாடல் காணீரோ ( ஆடல்)

நரிதனை பரியக்கி பரிதனை நரியாக்கி
நாரைக்கு முத்தி கொடுத்து
உயர் நால்வேத பொருள் சொல்லி
நாகத்தையும் வதைத்து நக்கீரர்க்கு உபதேசித்து
வர குணப்பாண்டியர்க்கு சிவ லோகம் காட்டி
வலை வீசி மீன் பிடித்து
வாய் திறவாத கல்யாணைக்கு கரும்பூட்டி
வைர வளை முத்து வளை ரதன வளை விற்ற

திருவிளையாடல் காணீரோ
ஆடல் காணீரோ! திருவிளையாடல் காணீரோ!

தல புராணத்திலிருந்து திரட்டிய தகவல்களாக அபிதான சிந்தாமணி கூறுவது: “திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார். அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான்.

உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார்.

ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு, அமைச்சர் வாதவூராரிடம் கோடிப்பொன் கொடுத்து, அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படிப் பாண்டிய மன்னன் பணித்தான். ( இதை அவர் ஒட்டகத்தின் மீது வைத்து எடுத்து வந்தார் என்று ஒரு குறிப்பு கிடைத்தது. இது ஒட்டகமா ? அப்படி தெரியவில்லை )

வாதவூரார் பொன்னோரு திருப்பெருந்துறையை (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) அடைந்தார். அங்கே இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவு எடுத்து அமர்ந்திருந்தார். அவர்முன் சென்று வாதவூரார் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று வாதவூரார் கேட்க, அவர் சிவஞான போதம் என்றார்

‘சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் யாது? அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன்’ என்றார் பக்குவமடைந்திருந்த வாதவூரார். சிவஞானத்தை அவருக்கு போதித்து, திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான்.

தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு, வாய்பொத்திக் குருவின் முன் வாய்பொத்தி நின்ற வாதவூராரை, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் வாதவூரார்.

பாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம் (அரசனின் ஆணை தாங்கிய ஓலை) கொடுத்துக் கையோடு வாதவூராரை அழைத்துவரக் கட்டளையிட்டான்.

‘குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை’ என்று கூறி வாதவூரார் அதனைக் குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குருமூர்த்தி, ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து ‘குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல்’ என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார்.

சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் ‘எங்குமே குதிரைகள் தென்படவில்லை’ என்ற செய்தியோடு திரும்பினர்.

ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை. ‘இன்றைக்குள் குதிரைகள் வராவிட்டால் உம்மை வெய்யிலில் நிறுத்துவேன்’ என்று கூறிப் பாண்டிய மன்னன் வாதவூராரை எரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் வாதவூரார் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் (iron clamps) இறுக்கினர். வாதவூரார் சிவனை தியானித்தார்.

உடனே சிவபெருமானின் சிவகணங்களை குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான்.

குதிரைப் அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உறுப்புச் சிறப்பைக் கூறி, ‘இவை உன்னுடையவை’ என்று கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி, குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான். ( இந்த சிறிய விவரத்தை கூட சிற்பி விடவில்லை )

அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி, முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின.

திருப்பாண்டிப்பதிகம்: பாடல் எண்: 527

சதுரை மறந்தறிமால் கொள்வர் சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை கைப்பிடித்துக்
குதிரையின் மேல் வந்து கூடிடு மேல் குடி கேடு கண்டீர்
மதுரையா மன்னன் மறுபிறப்பு ஓட மறித்திடுமே.

இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூராரை வைகையாற்று மணலில் வெய்யில் நேரத்தில் நிறுத்தி வைக்குமாறு கூறினான்.

சிவபெருமானுக்கு பக்தனின் துயரம் பொறுக்கவில்லை. கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார்.கரையை உடைத்துக்கொண்டு ஓடத் தொடங்கிவிட்டது.

உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான்.

ஒரே ஒரு வந்திக் கிழவி, பிட்டு சுட்டு விற்பவள், மட்டும் தனிக்கட்டை. எவ்வளவு சொல்லியும் பாண்டியனின் வீரர்கள் கிழவியை விடவில்லை, அவள் வீட்டில் இருந்தும் ஒருவர் வரவேண்டும். நீ இல்லை என்றால் வேறு ஆளை அமர்து என்று கூறுகின்றனர்.

அவள் வீட்டில் இளைஞர்கள் யாரும் இல்லை. என்ன செய்வது என்று யோசிக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து அவள் சார்பாக வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன் என்று வந்தி கூறுகிறாள். அதற்குச் சம்மதித்த சிவபெருமான் தனது ‘வேலையைத்’ தொடங்குகிறார்.

அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். சிற்பத்தை பாருங்கள், வயிறு முட்ட உண்டு தூப்பையை தடவிக்கொண்டு தலைக்கு மன்வாரும் கூடையை வைத்து உறங்கும் பாணி அருமை.

மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது.

கோபம் கொண்ட அரசன் அவனைப் பிரம்பால் அடித்தான்.

கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட, அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி அண்ட சராசரங்களின் அனைத்து உயிர்களின்மேலும், கருவில் இருந்த குழந்தை மீதும், படவே பாண்டியன் கலங்கிப் போனான்.

அப்போது சிவபிரானின் குரல் கேட்டது, ‘மன்னவா! வாதவூராரின் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்’ என்று அக்குரல் சொல்லிற்று.

பிட்டுக்கு மண் சுமந்தல்: திருக்கழுக்குன்றப் பதிகத்தில் இருந்து: பாடல் எண் 469


“பிட்டு நேர்பட மண்சுமந்த
பெருந்துறைப்பெரும் பித்தனே
சட்டம் நேர்பட வந்திலாத
சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்”


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சித்தன்னவாசல் – மடிந்த ஓவியம் – பாகம் இரண்டு

சித்தன்னவாசல் பற்றிய எந்தன் முதல் பதிவுக்கு ஆதரவு தந்த அத்தனை நெஞ்சங்களுக்கும் நன்றி! சித்தன்னவாசலின் சோகக்கதையை கலையுள்ளம் கொண்ட யாரால்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? இதோ இன்னொரு பதிவு. கடைசியாகக் காணப்படும் கோலங்கள் கலைப் பார்வைக்காக மட்டுமே என்பதனை முன்னமேயே சொல்லிவிடுவது நல்லது.

நான் இந்த அழகியை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன், சில தெளிவுகள்.

நீங்கள் காண்பது ஒரு மதத்தினர் சம்பந்தப்பட்டது என எண்ணாமல் வரைந்தவர் தம் கலைத் திறனைக் காண்பிக்கும் சித்திரமாகவே மனதில் கொள்ளவேண்டும். நிர்வாணம் என்பதே அலங்கோலம், அருவருப்பு, கவர்ச்சியின் உச்சகட்டம் என்பதெல்லாம் தற்போதைய கணிப்புதானே தவிர பழைய காலங்களில் அதனை அழகாகக் காட்டும்போது வெகுவாகவே ரசித்ததாகவே தெரிகிறது. நாகரீகம் உலகில் எங்கெல்லாம் வெகுவாக போற்றப்பட்டதோ அங்கெல்லாம் கூட நிர்வாணக் கலையும் வெகு அழகாக ரசிக்கப்பட்டு போற்றப்பட்டது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். கலை வெளிப்பாடு என்பது கலைஞனின் ஆழ் உள்ளத்தில் எழுந்து அது தூய்மையான எண்ணமாக வெளிக் கொணரும்போது அங்கு அருவருப்பு என்று சொல்லுக்கே இடமில்லை. கலைஞனின் கைவண்ணம் காவியம் போலவே நம் கண்களுக்கு விருந்தாகப் படுகிறது. அந்தக் கலை ஒரு நிர்வாணமான ஆணோ அல்லது பெண்ணோ யாராக இருந்தாலும் அந்தக் கலைஞனின் கையிலிருந்து பெறப்படும்போது அவன் திறமையை நாம் போற்ற வேண்டும். அப்படிப்பட்ட கலைஞன் யுகத்துக்கு ஒருவனாகக் கூட தென்படலாம்.

சித்தன்னவாசலும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். கலைஞனின் ஞானத்தை நாமும் போற்றலாமே.

வழக்கம் போல தொலைவில் இருந்து நாம் அருகில் செல்வோம்.

“என்னடா ஒண்ணுமே தெரியலை?” என்று உங்கள் குரல் கேட்கிறது , இன்று நீங்கள் அங்கு சென்றால் இப்படி தானே இருக்கும். சரி சற்று அருகில் செல்வோம்.

பெரிய பில்ட் அப் கொடுத்துட்டு வெட்டி சுவரை காட்டுகிறானே இவன் என்று நினைக்காதீர்கள் . இந்த அவல நிலைதான் இவளின் நிலை.

கொஞ்சம் வண்ணம் தீட்டுவோம். கையில் முதலில் தீட்டி பிறகு கணினியில் (திரு அசோக் அவர்களுக்கு நன்றி.) இப்போது ..

பாருங்களேன்.. அந்த அழகியின் ஒயிலான இடை, கவர்ச்சியால் தன்னை நோக்கி அழைக்கும் கண்கள், ஒரு பக்கம் சற்றே சாய்ந்த நிலையில் ‘என்னைப் பாராயோ’ என்பது போல அந்த அழகியின் முகம், வலது கையை மூடிய அழகு, ஒன்றைப் புகழ்ந்தால் இன்னொன்று கோபிக்குமோ என்ற நிலையில் அவள் ஒவ்வொரு உயிர்த் துடிப்பான அங்கமும் எந்த கலை ரசிகனையும் எங்கெங்கோ அழைத்துச் செல்லுகிறதே..

எனினும் இந்த அழகு ஓவியம் கலைந்த சிதைந்த நிலையை பார்க்கும் பொது நெஞ்சில் ஒரு சோகம், கண்களின் ஓரத்தில் சிறு கண்ணீர்த் துளிகள் … இந்த அற்புத வடிவங்களை அழிய நாம் விட்டுவிட்டோமே !


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சித்தன்னவாசல் – மடிந்த ஓவியம் – பாகம் ஒன்று

அது என்ன சித்தன்னவாசல் ஓவியம் ?

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் பற்றி பதிவை வெகு நாட்களாக எழுதவேண்டும் என்று எனக்கு ஆசை. அங்கே அப்படி என்ன இருக்கிறது என்று நண்பர்கள் கேட்பார்கள். சரியான கேள்வி தான். திரு சுவாமிநாதன் அவர்கள் ஒருமுறை ஒரு மணிநேரம் விளக்கினர். பிறகு நண்பர் திரு இளங்கோவன் அவர்களது அருமையான பதிவும் படித்தேன்.

சித்தன்னவாசல்

எனினும் இதை பற்றி இணையத்தில் அதுவும் குறிப்பாக அங்கே உள்ள ஓவியங்கள் பற்றி இணையத்தில் எங்கும் எதுவும் இல்லையே என்பதால் இந்த பதிவை இடுகிறேன்.

இதன் தற்போதைய நிலைமை, கலை ஆர்வலர் சென்றாலே விரக்தி அடைந்து திரும்பும் நிலை – ஏன் தெரியுமா ? அங்கே அப்படி என்ன இருக்கிறது என்ற கேள்விதான் ? இதற்கு விடை அளிப்பது கடினம். அங்கே அப்படி என்ன இருந்தது என்ற கேள்விக்கு வேண்டும் என்றால் பதில் கூறலாம். கூறும் முயற்சியே இந்த பதிவு .

அங்கே ஒரு குகைக்கோயில், சில பல சமணர் படுக்கைகள், பழமையான கல்வெட்டுக்கள் என்று பல இருந்தும் என்னை மிகவும் கவர்ந்தவை அங்கே உள்ள ( இருந்த ) ஓவியங்கள். சித்தன்னவாசல் ஓவியங்கள் பற்றி செவி வழி கூட செய்தி அறியாமல் பல தமிழரே இருக்கும் பொது இதை பற்றி வெளி உலகிற்கு தெரியாமலேயே போனது ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அதை விட சுவையான தகவல் – இவை அனைத்தும் சமணர்களின் பங்களிப்பாகும். ஆனால் இப்போது அங்கே என்ன இருக்கிறது?

அஜந்தா ஓவியங்கள் பாணியில் மிக அற்புத ஓவியங்கள் இருந்தன . அவை எங்கே போயின ? இலங்கையில் பல இடையூறுகள் நடுவிலும் நிற்கும் சிகிரியா மாந்தர்போல இவை ஏன் நிற்கவில்லை. ஆயிரம் ஆண்டுகள் நின்ற இவை – வெள்ளையர்கள் வெளியேறிய பின்னரே சிதைந்தன. நம் கைகளாலேயே நம் கண்களைக் குருடாக்கி கொள்வது போல நம் ஆட்களே ஓவியங்களை சிதைந்துள்ளனர்.

அப்படி என்ன ஓவியங்கள் அங்கே உள்ளன – முதலில் , தூண்களை பார்ப்போம். தூண்களின் முகப்பில் நாட்டிய மங்கையர் இருவர் நடனமாடும் எழில்மிகு தோற்றம் தீட்டப்பட்டுள்ளன. இவை மிகவும் அழிந்த நிலையிலேயே காணப்படுகின்றன.

ஒவ்வொருவரை பார்ப்போம்.

முதல் மங்கை. என்ன தெரியவில்லையா ?இப்போது

அதுதான் இன்றைய நிலை.

சுமார் ஐம்பத்து வருடங்களுக்கு முன் எடுத்த கருப்பு வெள்ளை புகைப்படம் மட்டுமே மிஞ்சி உள்ளது. சில கோட்டோவியங்கள்

இவள் எப்படி இருந்திருப்பாள் என்பதை கற்பனை செய்து நான் தீட்டிய ஓவியம்.

ஓவியம் காட்டும் அபிநயமும், முத்திரைகளும், ஆடல் அரசன் நடராசரின் தாண்டவத்தை நினைவுபடுத்துகின்றன. நாட்டியக் மங்கை பலவித அணிகலன்களை அணிந்துள்ள பாங்கு வியக்கத்தக்கது. பொன்னிறமான மேனியழகு புன்முறுவல் நெஞ்சத்தை ஊடுருவிப்பார்க்கும் நீண்ட நயனங்கள் குறுகிய இடை பாம்புபோல் நெளியும் கரங்கள், அங்க அசைவுகள் கண்களின் ஒளி இவையாவும் ஒன்று சேர்ந்து உயிரோட்டம் ததும்பும் இவள் தேவலோகத்திலிருந்து இறங்கிவந்து இன்னிசைக்கேற்றவாறு நடனமாடுவது போல் உள்ளது.

இன்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வழக்கிலிருந்த நாட்டிய பாவனைகளையும் நாட்டியக்கலை விதிகளையும் தெரிந்துகொள்ள இந்த ஓவியங்கள் நல்ல சான்று பகிர்கின்றன.

சித்தன்னவாசல் ஓவியங்களை வரைய உபயோகப்படுத்திய வண்ணங்கள் யாவும் இயற்கை கனிப்பொருள்களே ஆகும் கருப்புக்கு கரிப்பொடியும், சிகப்பு, மஞ்சள் நிறங்களுக்கு இவ்வண்ண காவிக்கற்களும் நீல நிறத்திற்கு நீலக்கல்லும் பிறவண்ணங்களுக்கு இந்த வண்ணங்களின் கலப்பும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அஜந்தா ஓவியங்களிலும், பல்லவர் ஓவியங்களிலும் காணப்படும் அழகையும் அமைதியையும் பண்பட்ட கலைத்திறனையும் சித்தன்னவாசல் ஓவியங்களில் காணமுடிகிறது.இந்திய ஓவியக்கலைப் பாரம்பரியத்தில் தமிழகத்தின் பங்கினை சித்தன்னவாசல் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

கலை உணர்வற்ற மூடர்களின் கருணையின்மையால் பெரும்பாலான ஓவியங்கள் சிதைந்து அழிந்துவிடட் போதிலும், இன்று நாம்காணும் எஞ்சியுள்ள ஓவியங்கள் அக்கால தமிழகத்தில் ஓவியக்கலை, நாட்டியக்கலை ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள காலத்தால் முற்பட்ட சான்றாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. உங்களது சிந்தைக்கு விருந்தளிக்க சித்தன்னவாசல் ஓவியக்கூடம் அன்புடன் உங்களை அழைக்கின்றது. முழுவதுமாய் ரசிக்க கொஞ்சம் கற்ப்பனை இல்லை நிறைய கற்பனைத் திறன் வேண்டும்.

தென்னிந்தியாவின் ஓவிய திறமைக்கு முடி சூடும் இந்த ஓவியங்கள் இப்போது நம் அறியாமைக்குத் தீனியாகி மாண்டுவிட்டன. மாண்டவர் மீண்டும் வருவாரோ ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment