இந்து மதமும் அதன் கொள்கைகளும் பல்வேறு அறிஞர்களையும் இன்றும் ஆச்சரியப்படவும் திகைக்கவும் வைக்கையில், சிற்பங்களை விளக்கிக் கூறும் பணியில் மட்டும் பயணிக்க விழைகிறோம். இந்த ‘சர்ச்சை சிற்பங்கள்’ பற்றிய முதல் பதிவை படித்த பின்பு இந்தப் பதிவை படிக்குமாறு வாசகர்களை கேட்டுக் கொள்கிறோம்.
இந்தப் பதிவை இடவேண்டும் என்று பல காலமாக நினைத்திருந்தபோதிலும், வாசகர்களின் அபிப்பிராயம் எவ்வாறு இருக்குமோ என்ற எண்ணத்தினாலே தள்ளிபோட்டு கொண்டிருந்தேன். ஆனால் தாராசுரம் சென்று வந்த நம் நண்பர் திரு. காமன் பாலெம், இந்த சிற்பத்தைப் பற்றி கேட்கவே, அதன் அம்சங்களை பற்றியாவது கூறவேண்டுமென இந்தப் பதிவை இடுகிறேன். வாசகர்கள் அனைவரும் இந்தப் பதிவை பொறுமையுடன் முழுமையாக படித்த பிறகு தங்களது கருத்துக்களை கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தாராசுரத்தில் உள்ள இந்த சரபேசுவரர் சிற்பமானது, சோழர்களின் கலைத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கினாலும், ஒருவரை தாழ்த்தி மற்றொருவரை உயர்த்தும் எண்ணம் காரணமாக உருவாக்கப்பட்டது என்பதாலேயே சற்று நெருடலான ஒன்றாகும். காலச் சக்கரத்தின் சுழற்சியில் இந்த உருவத்தின் துவக்க காலம் தெரியாதபோதிலும், நாம் காண்பது இரண்டாம் இராஜராஜ சோழனின் ஆட்சிகாலமாகிய 12 ஆம்நூற்றாண்டைச் சேர்ந்தது. அந்தக் காலக்கட்டத்தில் சமயப் பிரிவினையானது உச்சத்தை அடைந்தது வேதனைக்குரியதாகும்.
நரசிம்ம அவதாரக் கதை நாம் அனைவரும் அறிந்ததே. பலவிதமாக அது சொல்லப்பட்ட போதிலும், அதன் சாராம்சம் இது தான். பிரம்மதேவனிடம் இருந்து விசித்திரமான வரத்தை பெற்று சாகாவரம் பெற்றதாக இறுமாந்திருந்த ஹிரண்யகசிபுவின் சம்ஹாரமே நரசிம்ம அவதாரத்தின் நோக்கம்.
“அனைத்தும் அருளும் பிரம்மதேவா! நான் வேண்டும் வரத்தை அருள்வாயாக! தங்களால் படைக்கப்பட்ட எந்த உயிரினத்தாலும் நான் கொல்லப்பட கூடாது. வீட்டின் உள்ளேயோ வெளியேயோ, பகலிலோ, இரவிலோ, வானத்திலோ, பூமியிலோ நான் இறக்க கூடாது. எந்த ஆயுதத்தாலோ, விலங்கினத்தாலோ, மனிதராலோ, தேவராலோ, அசுரராலோ, பாதாள லோகத்தில் வாழும் நாகங்களாலோ கொல்லப்பட கூடாது. அனைத்து உயிர்களுக்கும், தேவதைகளுக்கும் நானே அதிபதியாக வேண்டும். தவம், யோகம் போன்றவற்றினால் கிடைக்கும் சித்திகள் அனைத்தும் எனக்களிக்க வேண்டும்.”
வரம் பெற்றபின் தன்னையே சர்வ சக்தி படைத்த இறைவனாக பாவித்து கொண்டு மக்கள் எல்லோரையும் தன்னை வணங்கும்படி வற்புறுத்தினான். மறுத்தவர்களை தண்டித்தான். அவனது மகன் பிரஹலாதன் ஸ்ரீமன் நாராயணனின் சிறந்த பக்தன். தன் தந்தையை கடவுளுக்கு சமமானவன் என ஏற்க மறுத்தான். கோபம் கொண்ட ஹிரண்யகசிபு நீ வணங்கும் உன் கடவுள் எங்கிருக்கிறான் என கேட்க, பிரஹலாதன் ‘அவன் எங்கும் நிறைந்திருப்பான். தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்’ என கூறுகிறான். ஆத்திரம் கட்டுகடங்காது தனது கதையினால் அருகில் இருந்த தூணை உடைக்கிறான் ஹிரண்யகசிபு.
(தெலுங்கு திரைப்படத்திலிருந்து இந்த காட்சி)
அந்த தூணில் இருந்து நரசிம்ம ரூபத்தில் மகாவிஷ்ணு தோன்றுகிறார். அவன் பெற்ற வரத்தை அனுசரித்து மனித உடலும் சிம்மத்தின் தலையும் கொண்டு, தூணை உடைத்துக் கொண்டு, வாசற்படியில் அமர்ந்து, ஹிரண்யகசிபுவை மடியில் கிடத்தி, சந்தியா வேளையில், தனது நகங்களாலேயே அவனது வயிற்றை கிழித்து வதம் செய்கிறார். பல்வேறு சிற்பங்களில் அவரது கோப உக்ர வடிவத்தை காணலாம். பிரஹலாதன் தன் இனிய குரலில் துதி செய்ய நரசிம்மர் சாந்தம் அடைகிறார். இந்தக் கதை இங்கேயே முடிவடைய வேண்டியது.
ஆனால், இதற்கு பின்பும் கதை தொடருவதாகக் கூறப்படுவது, சைவ வைணவ சமயங்களின் பிரிவினையின் தாக்கம் என்றே தோன்றுகிறது. நரசிம்ம பெருமானின் உக்ரம் தணியாது, மகாலட்சுமி கூட அவரது அருகில் செல்ல இயலாத நிலை ஏற்பட, அனைத்துலகங்களும் இந்த உக்ரத்தின் பலனாக நடுநடுங்கி, முடிவில் சிவபெருமானை சரணடைகிறார்கள். அவர் முதலில் வீரபத்ரனை அனுப்புகிறார். ஆனால் வீரபத்ரனாலும் நரசிம்மருக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. எனவே, சிவபெருமானே சரபேசுவர ரூபமெடுத்து செல்கிறார். அதாவது, மனிதன் + சிம்மம் + பறவை – சேர்ந்ததொரு ரூபம்.
பிறகு நடப்பது பலராலும் பலவிதங்களிலும் சொல்லப்படுகிறது. நரசிம்மரை சரபேசுவரர் ஆரத் தழுவி, அவரது சினத்தைத் தணித்து, நரசிம்மரை தக்க வைத்து, மகாவிஷ்ணுவை வெளியேற்றுகிறார்.
இந்த முழுக் கதையும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூன்றே காட்சிகளில் பறைசாற்றப்பட்டுள்ளது.
இப்போது மீண்டும் தாராசுரம் சிற்பம்.
நல்ல வேளையாக, திரு. காமன் அவர்கள் முழு சிற்பத்தையும் படமெடுத்திருந்தார்.
நரசிம்மர் உடலிலிருந்து மகாவிஷ்ணு வெளியேற்றப்படுகிறார். அந்த சிறிய உருவம், பிரஹலாதனாக இருக்கக் கூடும். மேலே, தேவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இக்காட்சியை காண்கிறார்கள்.
சற்று கவனித்துப் பார்த்தால், பிற்காலத்தில் காணப்படும் மதுரை சிற்பங்களைப் போல் அந்த
உருவங்களுக்கான தனித் தன்மையான அம்சங்கள் இந்த சிற்பத்தில் இல்லை என கண்டு கொள்ளலாம்.
திரு. காமன் அவர்களின் அடுத்த கேள்வி, கால்களைப் பற்றியது. சரபேசுவரருக்கு இரு இறக்கைகளும், நான்கு ஜதை கால்களும் உண்டு.
சில இடங்களில் நிறைய கைகளுடன் கூடிய சிற்பங்களும் உள்ளன. இலங்கையில் உள்ள முனீஸ்வரர் கோவில் சிற்பத்தைப் பாருங்கள். ( படம் : விக்கி )
இதை வருந்தத் தக்கது என கூறியதன் காரணமே, சமீப காலத்தில் ப்ரத்யங்கிரா தேவி போன்று பல்வேறு தாத்பரியங்கள் சொல்லப்படுகின்றன. மக்களும் தங்கள் குறைகள் தீர, இந்தக் கோவில்களை நோக்கி கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்.
நிச்சயமாக இந்து மதம் என்பது ஒரு கடவுளையே பிரதானமாக கொண்டதன்று. இதில் முதன்மையானது, என் கடவுள் பெரியதா, உன் கடவுள் பெரியதா என்ற கேள்வி அல்ல, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதும் அல்ல; கடவுளைத் தேடிச் செல்லும் பயணத்தை அனுமதிக்கும் பக்குவமேயாகும்.
இராஜராஜ சோழனின் தஞ்சை பெரிய கோவிலில், இந்து மதத்தின் இரண்டு சமயங்களையும் இணைத்திடும் அற்புதமான ஹரிஹர சிற்பத்தைப் பாருங்கள்.
சுவாமி விவேகனந்தரின் வாசகம் தான் என் நினைவிற்கு வருகிறது. “இந்த உலகத்திற்கு சகிப்புத்தன்மையையும், அனைவரையும் தன்போல ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தையும் கற்றுத்தந்த மதத்தை சேர்ந்தவன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். எல்லா நம்பிக்கைகளையும் சகிப்பது மட்டும் அல்ல அவை அனைத்தும் உண்மை என்று நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் ”
பின்பு ஏன் ஒருவரை தாழ்த்தி மற்றொருவரை உயர்த்துகிறோம்?