பெரிய கோயில் போன்று உலகப்புகழ் பெற்று திகழும் ஆலயத்தை ஒட்டி இருக்கும் கதைகளும் பல. நாம் முன்னரே விமானத்தின் நிழல் பற்றி பார்த்தோம். இன்று அதே போன்று இன்னொரு பரவலாக கேட்கப்படும் கேள்வி…தஞ்சை பெரியகோயிலில் ஏன் புத்தர் வடிவங்கள் உள்ளன? ஆம் வடிவங்கள்தாம் – ஒன்றல்ல – இரு இடங்களில் புடைப்புச் சிற்பம் மற்றும் புகழ் பெற்ற சோழர் கால ஓவியங்களில் புத்தர் வடிவம் உள்ளது.
( படங்களுக்கு நன்றி : திரு சதீஷ் , திரு அரவிந்த் மற்றும் நண்பர் ஓவியர் திரு தியாகராஜன் – பெரிய கோயில் ஓவியங்கள் நூல் )
திரிபுராந்தகர் பற்றிய குறிப்புகளை முதலில் பாருங்கள். ( நன்றி திவர்கர் சார்)
தாராசுரன் எனும் அசுரனின் புதல்வர்களான தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி எனும் மூவரும் மிகச் சிறந்த சிவபக்தர்களாக இருந்தனர். இவர்களுக்கு இந்த சிவபக்தியால் கிடைத்த தவ வலிமையைக் கொண்டு படைப்புக் கடவுளான பிரும்மனை நோக்கி நெடுங்காலம் கடுந்தவத்தைச் செய்தார்கள். அந்தத் தவத்தின் பலனாக திரிபுரம் எனச் சொல்லப்படும் மூன்று நகரங்களைப் பெற்றனர். மூன்றும் பறக்கும் தன்மை உடையது. அவைகள் கொண்டே பல காலம், இந்த அசுரர்கள் தங்கள் எதிரிகள் அனைவரையும் வென்று தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தீராத தொல்லையைத் தந்து கடும் இன்னல் விளைவித்தனர்.
அவர்களின் தொல்லை தாங்காது, அனைவரும் சிவனிடம் முறையிட்டார், சிவ பெருமான் தக்க நேரத்தில் அவர் குறை தீர்ப்பதாய் சொல்லி விட்டார். இந்த திரிபுர அசுரர்கள் எப்போதும் சிவபக்தியை தக்க வைத்துக் கொண்டிருந்ததும், அந்த பக்தியினால் ஈசன் அசுரர்களை அழிக்காமல் விடுவதாக ஒரு எண்ணம் தேவர்கள் மத்தியில் எழுந்தது.
இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த அசுரர்களை அழிக்கவேண்டுமென்றால் ஈசன் ஒருவனால்தான் முடியும் என்பதைத் தவிர, இந்த பறக்கும் நகரங்களான முப்புரங்களும் அழிய ஒரு குறிப்பிட்ட நாள் வேண்டும், அதாவது இந்த நகரங்கள் பூசத் திருநாளன்று ஒரு நேர்க்கோட்டில் வான் வழியே கூடும். அந்தத் திருநாள் வரும்போது மட்டுமே அழிபடக்கூடிய ஒரு சிறப்பான வரத்தைப் பெற்றிருந்தனர் இந்த அசுரர்கள். ஆகையினால் இந்த முறை வரும் அந்த பூசத் திருநாளை நிச்சயம் நழுவவிடக்கூடாது என்பதை மனதில் கொண்டு விஷ்ணுவிடம் அவர்கள் வழி கேட்டனர். காக்கும் கடவுளான மகாவிஷ்ணு தேவர்களைக் காக்கும் விதமாக முன்வந்தார்.
ஞானகுருவின் வடிவான புத்ததேவன் உருக்கொண்டு அசுரர்களிடம் குருவாக தோன்றினார். சிவபக்தியில் சிறந்த அசுரர்களை தெய்வநோக்கம் என்பது வல்லவர்களுக்குத் தேவையான ஒன்றல்ல என்பதையும் அசுரர்கள் எல்லா வல்லமையும் ஏற்கனவே பெற்ற போது தெய்வத்தின் துணையை அவர்கள் நாடுவது நல்லதல்ல என்பதையும் போதித்தார். புத்த போதனையை திரிபுர அசுரர்கள் மேற்கொண்டனர். சிவசிந்தனையும் அவர்கள் மனதை விட்டு அகன்றது.
இதுதான் சமயம் என தேவர்கள் மறுபடியும் ஈசனின் கருணை வேண்டி சிவனிடம் சென்றபோது, சிவன் சம்மதித்தார். தேவர்கள் அனைவரையும் தனக்குத் துணை வருமாறு அழைத்தார். அசுரர்களின் பறக்கும் நகரங்களை அழித்திட ரதம் ஒன்றை வடிவமைத்தனர். வரம் கொடுத்த பிரும்மன் சாரதியாக, மேருமலையே வில்லாக, மாலவன் அம்பாக, சூரிய சந்திரர்கள் ரதத்தின் இரு சக்கரமாக, ஈசன் அந்தத் தேரில் பறக்கும் நகரங்களை நோக்கி போர் செய்யப் பயணித்தார்.
எதையும் யாவற்றையும் ஆக்கி, காத்து, அழித்து மறுபடியும் உருவாக்குபவர் எனும் பெயர் கொண்ட ஈசனுக்கே இந்த அசுரர்களை அழிக்க இத்தனை உதவிகள் தேவையா எனக் கேள்வி உருவாகக்கூடும். உருவானது கூட தேவர்களின் மத்தியிலே.. அவர்களுக்கு இதனால் ஆணவம் கூட வந்தது. எத்தனைதான் ஈசனே ஆனாலும் தம் உதவியில்லாமல் ஈசனால் கூட சில காரியங்கள் நடக்காது என்பதாக உணரத் தலைப்பட்டனர்.
ஈசன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு முக்கிய காரணம் உண்டு என்பதையும் மறந்தனர். எந்தவொரு முக்கிய செயலும் கூடிச் செய்தால்தான் அதன் முக்கியத்துவத்தை நாம் உணரமுடியும் என்பதற்காகவே ஈசன் தம்முடன் தேவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றார் என்பதையும் மறந்தனர்.
திரிபுரத்தை அழிக்கும் வேளை வந்த அந்தச் சமயத்தில் தேவர்கள் ஆணவத்தை உணர்ந்த ஈசன் இவர்களுக்கும் ஒரு சிறிய பாடம் எடுக்கவேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ.. பூசத் திருநாளன்று முப்புரங்களும் ஒன்று சேர்ந்த பொழுதில் ஒரு சிறு மென்னகை செய்தார், அந்த மென்னகையே அந்த திரிபுரங்களை தீ பற்றி எரிக்கத் தொடங்கியது.
”பிரமற்கும் பிரான்மற்றை மாற்கும்பிரான்
நொடிக்கும்மள விற்புரம் மூன்றெரியச்
சிலைதொட்டவ னேஉனை நான்மறவேன்”
என்பார் சுந்தரர். கண்ணிமை நொடிக்குமளவில் புரம் மூன்றையும் எரித்தவனாகப் பாடுவார்,
ஈசனுக்கு உதவியாக வந்த தேவர்கள் திகைத்தனர். ஈசனின் திருவிளையாடலை உணர்ந்த தேவர்கள் தம் தவறுக்கு வருந்தினர். ஈசனின் தாளை நினைந்து பணிந்தனர். அனைவரும் கூடிச் செயல் புரிதலின் அருட்தன்மையும் உணர்ந்தனர். ஈசன் அவர்களுக்கு அருள் புரிந்தார். அவர்களின் உதவியையும் ஏற்று மாலவனான தன் அம்பை அசுரர்களை நோக்கி ஏவி விட, திரிபுரம் மூன்றும் மொத்தமும் எரிந்து அசுரர்களும் அழிந்தனர். திரிபுர அசுரர்களை அழித்து மூவுலகமும் காத்து அருள்செய்த ஈசனை ‘திரிபுராந்தகர்’ என்று தேவர்களும் முனிவர்களும் வழிபடத் தொடங்கினர்.
சரி, இப்போது சிற்ப்பங்களை பார்ப்போம். முதல் புடைப்புச் சிற்பம்.
இன்னும் அருகில்
மேல் வரிசையில் மூவரை நான்றாக அடையாளம் காண முடிகிறது – மகிஷாசுரமர்த்தினி சிங்க வாஹனத்தில் , எலி வாஹனத்தில் கணபதி, மயில் வாஹனத்தில் முருகன்.
நடு வரிசையில் திரிபுர சண்டை காட்சி போல தெரிகிறது. கடைசி வரிசை முடிவடையாத நிலையில் உள்ளது
பக்கத்துக்கு வரிசைக்கு வருவோம். மேலே புத்தர் – அருகில் அவர் சொல்வதை பணிவுடன் கேட்டு நிற்கும் திரிபுர அசுரர்கள்
அடுத்த வரிசையில் – சண்டையில் தோற்று விழும் அசுரர்கள் போல உள்ளது. அருகில் நிற்பவர்கள் கை பாவங்களை பார்தால் மகேசனிடம் சரணடைய சொல்வது போல உள்ளது.
அடுத்த வரிசையில் தலை மீது சிவலிங்கத்தை வைத்து வழிபடும் காட்சி.
அடுத்த சிற்பத்தில் இதே காட்சி சற்று வேறு விதமாக உள்ளது.
முன்னர் பார்த்தவாறே புத்தர் , அருகில் அசுரர்கள்
இங்கே பாருங்கள் தனது ரதத்தில் கம்பீரமாகும் நிற்கும் மகேசன், பிரம்மன் சாரதியாக…
முடிவாக புகழ் பெற்ற சோழ ஓவியங்கள் – அதில் வரும் திரிபுர தகனம் காட்சி. நாம் முன்னரே பார்த்தது தான்.
இங்கே மேலே புத்தர், தேரின் மீது மகேசன், தேரோட்டியாக நான்முகன், அருகில் மகிஷாசுரமர்த்தினி சிங்க வாஹனத்தில் , எலி வாஹனத்தில் கணபதி, மயில் வாஹனத்தில் முருகன்.
நாம் கவனிக்க வேண்டியது பல்லவர் காலத்திலேயே புத்தரை பெருமாளின் அவதாரமாக சித்தரிக்கும் முயற்சி எழுந்துள்ளது. ஆனால் அந்த புத்தர் தான் சாக்கியமுனியா என்பது ஒரு பெரும் கேள்வி. ஆனாலும் இங்கே நாம் பார்த்தமட்டில் புத்த வடிவங்கள் அளவிலும் சரி, அமைப்பிலும் சரி ஒரு மதிப்புக்குரிய பாவத்தில் தான் உள்ளன.