சிலை திருட்டு – பாகம் ஆறு. அமெரிக்க அதிகாரிகள் கைப்பற்றிய சிலைகள் !

சிலை திருட்டு பற்றிய தொடரும் இந்த ஆய்வின் அடுத்த பாகம் – அமெரிக்க அதிகாரிகள் கபூர் / ஆர்ட் ஆஃப் பாஸ்ட் கிடங்கை சோதனை இட்டு கொள்ளை அடிக்கப்பட்ட சிலைகளை கைப்பற்றி வெளியிட்ட ஒரு புகை படத்தை கொண்டு இன்று தொடர்கிறது…

முந்தைய பதிவுகளைப் போலவே இன்று இந்திய காவல் துறை வெளியிட்ட திருடப்பட்ட சிலைகளின் “புகை” படங்களை கொண்டே துவங்குவோம். முந்தைய பதிவுகளில் வெளியிட்ட படங்களை டிக் செய்யப்பட்டுள்ளன. இன்றைக்கு பார்க்கப் போகும் சிலைகளுக்கு சிகப்பு அம்புக்குறி

இந்த படங்களில் இல்லாத இன்னும் ஒரு சிலை பற்றி ஹிந்து நாளேட்டில் வந்த செய்தி – சண்டிகேஸ்வரர் சிலை.

இங்கே நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்று – நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வந்த இந்த செய்தியில் மொத்தம் 26 சிலைகள் திருடு போய் உள்ளன. அவற்றில் நமக்கு கிடைத்துள்ள படங்கள் 16 காவல் துறை வெளியிட்டில் மற்றும் ஹிந்து பேப்பர் 1 – மொத்தம் 17 தான். இன்னும் 9 சிலைகளை பற்றி எந்த தகவல்களும் இல்லை.

இப்போது நாம் பார்க்கப்போவது.

1. ஸ்ரிபுரந்தன் தனி அம்மன் .

அமெரிக்க புகைப் படத்தில்.

நமது அதிகாரிகள் வெளியிட்ட படம்.

அடுத்தடுத்து வைத்து பார்த்தால்..

2. சுத்தமல்லி அஸ்திர தேவர்
அமெரிக்க புகை படத்தில்.

நமது அதிகாரிகள் வெளியிட்ட படம்.( இந்த படம் தப்பாக வெளியிடப்பட்டுள்ளது – கண்ணாடி பிம்பம் போல – இடம் வலம் மாறி ..)

சரி செய்யப்பட்டது.

அடுத்தடுத்து வைத்து பார்த்தால்..



3. சுத்தமல்லி சிவகாமி அம்மன்

அமெரிக்க புகை படத்தில்.

நமது அதிகாரிகள் வெளியிட்ட படம்

அடுத்தடுத்து வைத்து பார்த்தால்..



4. சண்டிகேஸ்வரர்

அமெரிக்க புகை படத்தில்.

ஹிந்து பேப்பர் படம்


அடுத்தடுத்து வைத்து பார்த்தால்..

5. ஸ்ரிபுரந்தன் சிவகாமி அம்மன்

அமெரிக்க புகை படத்தில்.


நமது அதிகாரிகள் வெளியிட்ட படம்

அடுத்தடுத்து வைத்து பார்த்தால்..


நல்ல படங்களுடன் இவற்றை கொண்டு எளிதாக சிலைகளை மீட்டு விடலாமே …

சிலை திருட்டு – பாகம் ஐந்து . சுத்தமல்லி உமாபரமேஸ்வரி !

இன்றைக்கு இன்னும் ஒரு சிலை திருட்டை அடையாளம் காட்ட போகிறோம். அதற்காக மீண்டும் காவல் துறை வெளியிட்ட அறிக்கையை காண்போம். பட்டியலில் முதல் படம்.

சிவகாமி அம்மன் / தனி அன்னம் என்று பெயர் கொண்ட படம். இதோ அருகில்.

இப்போது மீண்டும் ஆர்ட் ஆஃப் பாஸ்ட் பட்டியல் ஒன்றை பார்ப்போம். மார்ச் 2011 வெளிவந்த பட்டியல் – அதாவது சிலைகள் திருடு போய் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, காவல் துறை படங்களை வெளியிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் !!

பட்டியலில் 10 ஆம் எண் இருக்கும் சிலை – பெயர் தேவி உமா பரமேஸ்வரி


என்ன அருமையான புகைப்படங்கள். வித விதமான கோணங்களில் படம் எடுத்துப் பதிவு செய்துள்ளனர்.





இரு சிலைகளையும் ஒன்றாய் சேர்த்து பார்ப்போமா?


இன்னும் நுண்ணியமாக பார்க்கும்போது குட்டு வெளியாகிறது.


ஒவ்வொரு பாகமும் அச்சு அசல்..


கால்கள் மற்றும் அடிபாகம்.


என்ன கொடுமையடா இது – இப்படி பகிரங்கமாக கொள்ளை அடித்த சாமி சிலையை விற்கும் அவலம் !! நமது ஆலயங்கள் சிறு முயற்சி எடுத்து தங்கள் சிலைகளை படம் பிடித்து வைத்திருந்தால் இந்த திருட்டுகள் நடக்குமா. அந்நிய சந்தையில் தான் இவற்றை வாங்க யாரேனும் முன் வருவார்களா? அரசின் ஒரு சிறு முயற்சி, தொடரும் இந்த திருட்டை தடுக்க இயலும். படம் பிடித்துப் பட்டியல் இணையத்தில் பதிவேற்ற வேண்டியது தான் – இவர்கள் கொட்டம் அடங்கும் அல்லவா !!

தொடரும்.

சிலை திருட்டு – பாகம் நான்கு. இதோ சுத்தமல்லி நடராஜர்!

சென்ற பதிவில் ஸ்ரிபுரந்தன் நடராஜ வடிவத்தை ஆராய்ந்து அதற்கும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் வடிவத்துக்கும் இடையே ஒற்றுமைகளை பட்டியலிட்டோம். அதில் பல கேள்விகள் எழுந்தன. அவற்றில் ஒன்று சுத்தமல்லி நடராஜர் சிலை பற்றி. இதோ காவல் துறை பட்டியலில் இருக்கும் அந்த சிலை பற்றியே இன்றைய பதிவு.


சுத்தமல்லி நடராஜர் – பழைய படம் – ஆலயத்தில் இருந்தபோது. .

இந்த சிலை மிகவும் முக்கியமான சிலை – இந்த சிலை கொடுத்த துப்பை வைத்துத் தான் இந்த சிலை திருட்டு கும்பல் பிடிபட்டனர். இதனை பற்றிய இந்து பதிவு இதோ.

நமது காவல் துறை திருடு போன சிலைகளின் படங்கள் கொண்ட பட்டியலை 2009 ஆம் ஆண்டு தனது இணைய தலத்தில் வெளியிட்டது. ( அதாவது திருடு போன நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் !). எனினும் வருத்தம் என்ன வென்றால் கூகுளார் உதவியுடன் ஒரு சிறு இனைய தேடலில் ஆர்ட் ஆஃப் பாஸ்ட் 2010 காடலாக் கிடைக்கிறது. அதில் ….

அதில் ஆறாவதாக வரும் சிலை..

என்ன அருமையான சிலை – அதுவும் படங்கள் பிரமாதம் !!



காவல் துறை சிலை திருட்டை பதிவு செய்து வழுக்கு பதிவு செய்து, படங்களை இணையத்தில் பதிவேற்றி – ஒரு ஆண்டுக்கு பின்னர் …இப்படி அதே சிலையை தங்கள் பட்டியலில் படங்கள் போட்டு பகிரங்கமாக விற்க முயற்சி??!

எப்படி இது அதே சிலை என்று சொல்ல முடியும் என்று கேட்கிறீர்களா ? மீண்டும் அதே தான் – ஒவ்வொரு சிலைக்கும் – லாஸ்ட் வாக்ஸ் ப்ரோஸஸ் தரும் தனித்தன்மை.

சென்ற பதிவில் ஸ்ரிபுரந்தன் சிலையை போலவே இங்கும் ஆடும் அரசனை சுற்றி இருக்கும் பிரபாவளியை கொண்டு இரு படங்களை ஒற்றுப் பார்த்தாலே போதும். இங்கே பிரபாவளி இன்னும் அழகு – இரட்டை வளையங்கள் கொண்டு உள்ளது – அவற்றை இணைக்கும் பாணி இரு வளையங்களுக்கும் இடையே துவாரங்களை ஏற்படுத்துகிறது. அவையே நமக்கு இன்று உதவுகின்றன.


அதே போல ப்ரபாவளியின் நடு பாகத்தில் ஒரு சிறு டிசைன் / சொட்டை போல இருக்கிறது.

மகேசன் ஆட விரிசடை வளைவுகளை பல அழகிய அணிகள் கொண்டு சிற்பி அலங்கரித்து இருப்பது அருமை. நம்மிடத்தே மட்டும் நல்ல படம் இருந்தால் !! இருந்தும் ஒப்பிட்டு பாருங்கள் – ஒற்றுமை தெரிகிறதா?

அதே போல ஆடல் அரசன் சுயன்று ஆட மேல் துண்டு விலகுகிறது , மேலும் சுயற்சியில் அது அதன்மீதே முறுக்கியவாறு அமைத்துள்ள அழகு அபாரம்.

இவற்றை கொண்டு இரண்டும் ஒரே சிலை என்று உறுதி பட சொல்லிவிடலாம்.

இன்னும் ஒரு அதாரம் உள்ளது. அதுதான் திருமேனியின் அடி பீடத்தில் இருக்கும் தமிழ் எழுத்துக்கள். பழந்தமிழில் சுதவல்லி ( மல்லி என்று இல்லை – வள்ளி என்று இருக்கிறது ). எனினும் பழைய படத்தில் இந்த எழுத்துக்கள் இல்லாதாதால் இதனை ஆதாரமாக கருத இயலாது. எனினும் இது நமக்கு வேறு ஒரு விதத்தில் உதவுகிறது. ஸ்ரிபுரந்தன் சிலைகள் 2006 இல் விற்று போயின…எனினும் சுத்தமல்லி சிலைகள் 2011 – 2012 வரை விற்க வில்லை – அப்போது வாங்க வந்தார் பலர் இதனை பார்த்திருக்க வேண்டும் – இந்த எழுத்துக்கள் இருப்பதால் நமக்கு எதற்கு வம்பு என்று விட்டு விட்டனரா?

இது தான் காரணம் என்பதற்கு அடுத்த பதிவில் காரணங்களை தருகிறேன். இந்த பதிவிலயே அடுத்த பதிவின் ஆரம்பம் இருக்கிறது…பட்டியலில் .” This is an extremely rare and important matched pair of the Shiva Nataraja and his consort, Uma Parameshvari. The divine couple have not only survived together as an original set, but also remain in complete states, with their flaming prabhas and lotus pedestals.” என்று உள்ளது.

எங்கு இருந்த உமா பரமேஸ்வரி இது …தேடல் தொடரும்.

சிலை திருட்டு – பாகம் மூன்று . சுத்தமல்லி நடராஜர் எங்கே ?

நண்பர்கள் செய்த சிறந்த புலனாய்வு மூலம் இன்று நமக்கு இவை தெரிய வந்துள்ளன. அவர்கள் எடுத்துக்கொடுத்த படங்களை கொண்டு இந்த ஆய்வு. இதை படித்து முடித்தவுடன் இன்னும் பல கேள்விகள் எழுகின்றன. அப்படி எழவேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

மீண்டும் காவல் துறை வெளியிட்ட படங்களைப் பார்ப்போம். இரண்டு நடராஜர் வடிவங்கள் காணாமல் போன பட்டியலில் உள்ளன. ஒன்று சுத்தமல்லி மற்றொன்று ஸ்ரிபுரந்தன்.

இதோ சுத்தமல்லி

இது ஸ்ரிபுரந்தன்


இரண்டு நடராஜர் வடிவங்களும் கிட்ட தட்ட ஒரே போல இருந்தாலும் – ஆடல் அரசனை சுற்றி இருக்கும் பிரபாவளியை பார்த்தாலே இரண்டு வடிவங்களுக்கும் உள்ள வேற்றுமை தெரிகிறது.

இப்போது கடந்த சில மாதங்களாக சர்ச்சையில் சிக்கி உள்ள ஆஸ்திரேலியா நடராஜர் இவற்றில் ஒன்றை போலவே – ஒத்து இருப்பதாக தகவல் வந்துள்ளன.


மீண்டும் பிரபாவளி மூலம் இதனை ஸ்ரிபுரந்தன் வடிவத்துடன் தான் ஒத்து பார்க்க வேண்டும் என்பது தெரிகிறது.

அதே போல நண்பர்கள் வெளியிட்ட பதிவில், எதோ ஒரு இந்திய அறையில் இதே போன்ற ஒரு சிலையை படம் பிடித்து சிலை திருடர்கள் 2006 ஆம் ஆண்டு அடுத்து கபூருக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.


அதே போல ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட் இந்த படத்தை தனது பட்டியலில் இந்த சிலையை விற்கும் பொது இட்டுள்ளது.

நாம் பல முறை கூறிய ஒன்று, நடராஜர் வடிவம் பற்றிய சர்ச்சை கிளம்பியவுடன் – தமிழகத்தில் நூற்றுக்கணக்கான நடராஜர் சிலைகள் உள்ளன என்றும் அவை பார்ப்பதற்கு ஒன்று போலவே இருக்கும். அதனால் குழம்ப வேண்டாம் என்று ஒரு வாதம் எழுந்துள்ளது. உண்மை தான், எனினும் மேலோட்ட பார்வைக்கு மட்டுமே அந்த வாதம் சரி. ஒரு முறை அனைத்துப் படங்களையும் பொறுமையாக பார்த்தால் சாமானியருக்கும் விளங்கும் – ஏன் என்றால் இவை லாஸ்ட் ’வாக்ஸ்’ முறை கொண்டு செய்யப்பட்டவை – ஒவ்வொன்றும் தனக்கே உரிய ஒரு தனித்தன்மையுடன் இருக்கும்.

இந்த சிலையின் தனித்தன்மை என்ன தெரியுமா. தூக்கிய திருவடி அருகில் உள்ள தீப் பிழம்பை பாருங்கள் – அடியில் இருந்து மூன்றாம் பிழம்பு. உடைந்து இருப்பது தெரிகிறதா ? எல்லா படங்களையும் பாருங்கள்.



ஆடல் வல்லானின் கை இதனை நமக்கு சுட்டிக்காட்டுவது போலவே இருக்கிறது.

இதனை உறுதிப் படுத்த சில நிமிடங்கள் போதும் – நல்ல படம் இருந்தால் !!!

ஆனால் ஒன்று நிச்சயம் இது சுத்தமல்லி சிலை இல்லை. ஸ்ரிபுரந்தன் சிலை – இந்த சிலையிலும் அடித்தள பீடத்தை அகற்றி உள்ளனர்.

அப்படி இருக்க – சுத்தமல்லி நடராஜர் எங்கே?

அதைத் தேட இணையத்தில் இது கிடைத்தது – இன்னும் ஒரு நடராஜர் சிலை. ஆர்ட் ஆஃப் பாஸ்ட் பட்டியல் மார்ச் 2011.


மீண்டும் ப்ரபாவளி கொண்டு இது சுத்தமல்லி சிலை இல்லை என்று அறியலாம். அப்போது இது எந்த ஆலயத்தில் இருந்து திருடப்பட்டது? சுத்தமல்லி ஸ்ரிபுரந்தன் போல இன்னும் சில பல கோயில்களில் இந்த கூட்டம் தம் கைவரிசையை காட்டியுள்ளார்களா? திருடு போய்விட்டது என்று கூட தெரியாமல் நாம் குருடர்களாக உள்ளோமா ? இந்த கேள்விகளுக்கு யார் பதில் தேடுவார்கள்?

திருட்டு சிலை – பாகம் இரண்டு. சுத்தமல்லி முருகன்

நமது பாரம்பரிய சின்னங்கள் சூறையாடப்படுவதை எதிர்த்து தொடரும் எங்கள் முயற்சியின் விளைவால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. இவை கண்டிப்பாக வெளிச்சத்திற்கு வரவேண்டும் – அப்படி கொண்டு வந்தால் தான் இந்த திருட்டுக்கு மட்டும் அல்ல இதைப் போல இனியும் திருட்டுகள் தொடராமல் ஒரு முற்றுப் புள்ளி வைக்க இயலும். இணையம், தொழில் நுட்பம் என்று பல துறைகளில் வல்லுனர்கள் நம்மிடையே இருந்தும் நம் குலதனங்கள் நமது கண்முன்னரே திருடப்படுவது மட்டும் அல்லாமல் பகிரங்கமாக விற்கவும்படுகின்றன.

ஒரு பக்கம் குருட்டு நம்பிக்கைகளை காட்டி எங்களை போன்ற ஆர்வலர்களை இந்த அரிய பொக்கிஷங்களை படம் எடுக்க விடாமல் செய்யும் கூட்டம் நமது ஆலயங்களில் உள்ளன. அவர்களுக்கு இந்தப் பதிவு ஒரு பாடமாக அமையும். படம் எடுத்தால் பவர் போய்விடும் என்று எங்களை துரத்தும் இவர்களுக்கு படம் எடுக்காவிட்டால் சாமியே போய்விடும் என்பது புரிய வேண்டும்.

இன்னொரு பக்கம் நமது அரசு, காவல் துறை. திருமேனிகளுக்கு தகுந்த பாதுகாப்பை அளிக்காமல், காலை பாட்டு பாடி எழுப்பி, நீராட்டி, அலங்காரம் செய்து , உணவு படைத்து, மூன்று வே​ளை பூஜித்து, இரவு தாலாட்டு பாடித் தூங்க வைக்கப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்தி பாதுகாப்பு என்ற பெயரில் பாசறையில் தரையில் அடுக்கி வைத்துள்ளனர்!!! அதுவும் எந்தவித பட்டியலும் இல்லாமல் அடைத்து வைப்பது என்பது எந்த விதத்தில் நல்லது? அங்கே அவை களவு போனாலோ பழைய சிலையை அப்புறப்படுத்திவிட்டு புதிய சிலை ஒன்றை செய்து வைத்து விட்டலோ எப்படி அரசாங்கம் கண்டுபிடிக்கும்?

சரி, இந்தத் திருட்டுக்கு வருவோம். இந்தக் களவு பற்றி காவல் துறை தனது
இணைய பக்கத்தில் 2009 ஆம் ஆண்டு இவ்வாறு தகவல்களை வெளியிட்டுள்ளது என்று அறிகிறோம். இதில் என்ன சோகம் என்றால் மிகவும் முக்கியமான இந்த வழக்கில் சம்பந்தர் சிலையை கண்ணன் என்றும், சண்டிகேஸ்வரர் சிலையை முருகன் என்றும் அஸ்திர தேவர் சிலையை தீபலக்ஷ்மி என்றும் தங்கள் தலத்தில் பெயர் இட்டுள்ளனர். சென்னையில் இவை பற்றி தெரிந்த வல்லுனர்களுக்கா பஞ்சம்!!!

அதிர்ஷ்டவசமாக அங்கேயே ஒரு இணைப்பும் உள்ளது அதில் உள்ள பெயர்கள் பரவாயில்லை. எனினும் படங்கள் மிகவும் மங்கலாகவும் சிறியனவாகவும் உள்ளன. ஆனால் இவையாவது உள்ளனவே – 1970,1980களின் ​போது இந்தப் படங்கள் எடுக்கப்பட்டன. பல படங்கள் எடுத்து பட்டியல் செய்து வைத்தது பாண்டி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் முயற்சி என்று நம்புகிறோம்.

பல முறை கேட்டும் இந்தப் படங்களை பெரிய அளவில் எனக்கு தர அந்த நிறுவனம் இணங்க வில்லை. நான் முனைவர் பட்ட படிப்புக்கோ அல்லது ஏதோ ஒரு பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து ஆய்வுக்காகவோ செயல்பட்டால் தான் தர முடியுமாம்! நான் எனது சொந்த படிப்பிற்கோ பட்டம் பெறவோ இவற்றை கேட்கவில்லை – கொள்ளை போன நமது கலைப் பொருட்களை திரும்பப் பெற வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் என்று பல முறை சொல்லியும் பயன் இல்லை – இந்த இணையப் படங்கள் மட்டுமே எனக்கு.

விருதாச்சலம் அர்தனாரி ஆஸ்திரேலியா சென்ற திருட்டு பாதை என்ற பதிவின் மூலம் இந்த கும்பலின் கொள்ளைகளை பற்றி எழுதிய தினம் முதல் கடந்த இரண்டு மாதங்களாய் பல நூறு படங்களை ஆராய்ந்து இந்த உண்மைகளை உங்கள் முன்னர் வைக்கிறேன்.

கூகிள் உதவி மூலம் கபூர் அமெரிக்காவில் நடத்தி வந்த ஆர்ட் ஆப் தி பாஸ்ட் என்ற கா​லெரி மற்றும் அதன் மாதாந்திர பட்டியல்கள் கிடைத்தன. இன்று செப்டம்பர் 2009 ​கேடலாக், குறிப்பாக அதில் இருக்கும் ஒரு சிலையை பார்க்க போகிறோம்.

பட்டியலில் 14 ஆவதாக வரும் முருகன் சிலை.

அருமையாக, விதம் விதமாக படம் பிடித்து கலர் பிரிண்டிங் செய்து விளம்பரம் செய்துள்ளார்கள்.



மீண்டும் நமது காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் உள்ள சிலைகளின் படங்களை பாருங்கள். குறிப்பாக சிகப்பு நிறத்தில் நான் சுட்டிக்காட்டி இருக்கும் முருகன்.

முடித்த அளவிற்கு அந்த படத்தை பெரிதுப்படுத்தி கணினியில் சற்று சரி செய்துள்ளேன்.

அருமையான சிலை – முருகன் சிலை. சோழர் காலத்து சிலை இல்லை (சற்று அழகு கம்மி தான்!) – விஜயநகர அரசு காலம்.

இரண்டும் ஒரே சிலையா? ஒன்று எழுபதுகளில் சுத்தமல்லி கோவிலில் இருந்த​போது எடுத்த படம் – மற்றொண்டு கடல் கடந்து அமெரிக்க சென்ற பிறகு ….

செப்புச் சிலை வார்க்கும் கலை சோழர் காலத்திருக்கு பிறகு சற்று அழகு குறைந்தாலும், மெழுகை உருக்கி செய்யும் பாணி அதே தான். விஜயநகர அரசர்கள் காலத்திலும் கையால் மெழுகில் முதலில் படிமம் செய்யும் முறை தொடர்ந்தது – எனவே ஒவ்வொரு சிலைக்கும் தனித்தன்மை உண்டு. இதை மனதில் கொண்டு சிலையின் கை – குறிப்பாக கட்டை விரல் கையுடன் இணைக்கப்படும் பாணியை பாருங்கள். இரண்டு படங்களிலும் அதே போல இருப்பதை பாருங்கள்.


அதே போல இந்த சிலையின் காதணிகள் மிகவும் வினோதம். இதிலும் ரெண்டு படங்களும் ஒத்து போகின்றன. மார்பில் உள்ள பதாகம் கூட அதே அச்சு அசல்….


இந்தப் படம் கொண்டே இந்த சிலைகள் ஒன்றே என்று நாம் நிரூபணம் செய்ய இயலும். இந்த சிலை இப்போது எங்கே உள்ளது – ஏதாவது அருங்காட்சியகத்திற்கு அல்லது ஆர்வலருக்கு விற்றுவிட்டார்களோ? இல்லை அமெரிக்காவில் ஆர்ட் ஆப் தி பாஸ்ட் நிறுவனக் கிடங்கில் இன்னும் இருக்கிறதா?

இந்த திருட்டுச் சிலையின் படத்தில் இன்னும் ஒரு துப்பு மறைந்து இருக்கிறது – இல்லாத ஒன்று தான் துப்பு. சிலையின் அடியில் இருந்த அடி மேடை அகற்றப்பட்டுள்ளது. இது தற்செயலான செயல் இல்லை. வேண்டும் என்று அதன் அடி பாகம் பிரிக்கப்பட்டுள்ளது.

அடுத்து வரும் பதிவுகளில் ஏன் இப்படி என்றும் இன்னும் பல திடுக்கிடும் உண்மைகளுடன் சந்திப்போம். இதுவரை இரண்டு சிலைகள் தான் – இன்னும் இருபத்தி ஆறு பாக்கி… !!

பாம்பு காதணியை தேடி

வாழ்க்கையே ஒரு தேடல் – அப்படி ஒரு தேடலில் நாம் தேடியது கையில் கிடைத்தவுடன் வரும் மகிழ்ச்சி !! அதுவே பல நாள் தேடலாக இருந்த பின்னர் கிடைத்த பொருளாக இருந்தால் – மிகுந்த மகிழ்ச்சி தான். முன்னர் ஒரு முறைஒரு மோதிரத்தை தேடி சென்றோம். அதே போல இன்று ஒரு காதணியை தேடி பயணிக்கிறோம் ! வெறும் காதணியா அது ? பாம்பு காதணி !!

கையில் எடுத்து ராமன் ஐயா தந்த போது அது என்ன என்று புரியவில்லை. “என்ன சார் இது தாயத்தா?” என்று தான் கேட்க தோணியது. ” இல்லை இது ஒரு வித காதணி “என்று அவர் சொன்னபோதும் நம்பிக்கை வர வில்லை. “இதை எப்படி சார் அணிவார்கள் ! போட்டு காட்டுங்க?” என்று சொன்ன பொது -” நம்மால் முடியாது – இதுக்கு ஆச்சி காத்து வேணும் ” என்றார் ! பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலும் இந்த வகை காதணிகள் தமிழ் நாட்டில் பரவலாக இருந்தது என்று சொல்லி வெள்ளி மற்றும் தமிரத்திலும் எடுத்துக் காட்டினார் !!



நமக்கு ஆச்சி காதணி என்றாலே இன்று பாம்படம் என்று கிராமங்களில் பார்த்த நினைவு தான் ! இது போல. ஒரு வேளை ’இப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் கதையோ ??’

இன்னும் தேடியதில் இந்த பதிவு கிடைத்தது “Snake earrings of India” அதில் குறிப்பாக இதனை நாகவடூர (ம்) என்று சொல்கிறார்.

இதைக் கொண்டு மேலும் தேடியதில் இணையத்தில் இன்னும் சில குறிப்புகள் கிடைத்தன. – இவை பத்தொன்பதாம் நூற்றாண்டு படங்கள் -19thC


Images:
http://collections.vam.ac.uk/item/O79092/earrings-unknown/
http://shanalramlall.blogspot.sg/2010/03/earrings-from-old-days.html
http://www.asianart.com/articles/ganguly/22.html

அப்படி இருந்தும் – இதை போன்ற காதணியை இப்படி தான் அணியவேண்டும் என்று காட்ட ஒரு படமும் கிடைக்க வில்லை. மனிதர்களை விட்டுவிட்டு சிலைகளில் தேடலாம் என்றபோது மீண்டும் ராமன் சார் – ‘ஒ, இருக்கே ……………. கோயில் பாவை விளக்கு சிற்பத்தின் காதில் இருக்கு’ என்றார். உடனே அங்கு சென்றோம் – ஆஹா , அதே நாகவடூரம் ! அப்போது படம் எடுக்க முடியவில்லை.

அதிருஷ்டவசமாக நண்பர் வீரென் மூலமாக புதவை திரு வசந்த் கதிர்வேல் படங்களை தந்து உதவினார். என்ன அழகு – நீங்களே பாருங்கள்!!

இந்த செப்புச் சிலை சுமார் 17th – 18th C. சார்ந்தது. காதில் நாகவடூரம் என்ன அழகாக இருக்கிறது பாருங்கள் .

தற்போதைய நவீனவகை நகைக் கடைகள் இவை போன்ற பாரம்பரிய டிசைன்களுக்கு உயிர் கொடுக்க வேண்டும் – எப்படியெனில் சாதாரண காதுகளிலேயே அணியும் வண்ணம் இதை சற்று மாற்றி அமைக்க வேண்டும் – அல்லது இவ்வளவு பெரிய காது துளை மீண்டும் ஃபாஷனாவதற்கு எத்தனை ஆண்டுகள் பிடிக்குமோ !! !!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

செப்புத்திருமேனியின் ஆபரணங்கள்

தங்கத்தின் விலை மளமளவென்று ஏறுவதை கண்டு பதட்டப்படாமல் எப்படி இருக்க முடியும். அப்படி என்னதான் இந்த மஞ்சள் உலோகத்தின் மீது நம்மவர்களுக்கு ஒரு பித்தோ ! போதா குறைக்கு பெண்களுக்கு போட்டி இட்டு இன்று ஆண்களும் கழுத்திலும் கையிலும் – குறிப்பாக நமது சினிமாவில் வரும் வில்லன்கள் — அப்பப்பா அவற்றை கொண்டு கணத்தில் தண்ணீர் இறைக்கலாம் – அப்படி தாம்பு கயிறு போல தடி தடி செயின்கள் – அது என்ன செயின்? அந்நாள்களில் இவற்றின் பெயர்கள் என்ன ?

கண்டிகை , சாரப்பள்ளி , சாவடி , புலிப்பல் தாலி , தோள்மாலை , வாகு மாலை , தோள்வளை , கடக வளை இப்படி அடிக்கிக் கொண்டே போகிறது திரு கணபதி ஸ்தபதி அவர்களின் நூல் குறிப்பு. இவை பார்பதற்கு எப்படி இருக்கும் என்று ஆசையாக உள்ளதா? இதோ நண்பர் ஷாஸ்வத் உதவியுடன் இந்த அற்புத அர்தாரி வடிவத்தின் அணிகலன்களின் பவனியை ரசிப்போம்.

முதலில் என்ன என்ன இருக்கிறது என்று பார்ப்போம். .

இவ்வளவும் இந்த செப்புச் சிலையிலா இருக்கிறது என்று மலைக்க வேண்டாம். இதோ பாருங்கள்.

கண்டிகை – சிறிய மாலை போல கழுத்துக்கு மிக அருகில் உள்ளது. பெரிய பென்டன்ட் எல்லாம் கிடையாது – நடுவில் ஒரு பெரிய மணி , அதனை ஒட்டி சிறு மணிகள்.

அடுத்து சாரப்பள்ளி, பெரிதாக மேல் பக்கம் முத்துக்களை கொண்டும், அடியில் இலை வடிவ அலங்காரம் கொண்டது.

புலிப்பல் தாலி – புலியின் பல்லை ஒரு சிறு கோடியில் கட்டி இருப்பது தெரிகிறதா? இங்கே ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இந்த அணிகலனை ஆண் பெண் இருவருமே அணியலாம் என்று இருந்தாலும், இந்த அர்த்தநாரி வடிவத்தில் பாதி புலிப்பல் தாலியும் – சிவன் பாகத்தில் , அம்மையின் பாகத்தில் சாவடி போலும் காட்டி உள்ளனர். சாவடி என்னும் அணிகலன் கண்டிகையை விட சற்று பெரிதாகவும் நாடு நடுவில் பூவைத்தது போன்ற வேலைப்பாடும் கொண்டது.

இவற்றை தவிர தோள்மீது முன்பக்கம் தொங்கும் விதம் ஒரு அணிகலன் உள்ளது. இது தான் வாகுமாலை. அதை ஒட்டி தோள்பட்டைகளின் மீது படரும் வண்ணம் இருக்கும் அணிகலன் தோள்மாலை.

அழகிய பூணுல், அதன் நடுவில் பிரம்மமுடிச்சும் உள்ளது.

இன்னும் கையிலும் இடுப்பிலும் உள்ள அணிகலன்களையும் பாருங்கள்.

மேல் கைகளில் தோள்வளை ( கேய்யுரம் !) அதன் அடியில் கடக வளை உள்ளது.

இடுப்பின் அழகிய வளைவுகளை எடுத்துக்கட்டும் வண்ணம் உதர பந்தம் உள்ளது.

பல்லவர் காலத்தில் புரிநூல் மூன்றாக பிரியும். சிறிய உர்ஸ் சூத்ரம், நடுவில் யக்நோபவீதம் ( இரண்டுமே இந்த சோழர் திருமேனியில் உள்ளன ) மற்றும் ஸ்தான சூத்ரம் – இங்கே காணப் படவில்லை.

இன்னும் எளிதாக புரிய இந்த அறிய கொங்கு பெருமாள் திருமேனியை பாருங்கள்.,

என்ன சொல்றீங்க…இந்த டிசைன்ல அம்மணிக்கு ரெண்டு செஞ்சி போடலாமா?

பக்தியை எப்படி வர்ணிப்பது – சிலையில் ?

ஆடவல்லானின் ஆடல் கோலத்தை பலரும் பாடியுள்ளனர், விழா எடுத்துக் கொண்டாடியுள்ளனர். தத்துவபூர்வமான விளக்கங்கள் பல வெளிவந்துள்ளன. அவைகளின் சிறப்பை நாம் எளிதில் உணர்ந்து அனுபவிக்க, அந்த அற்புத நடனத்தை இன்றும் நாம் கொண்டாட, அவரை கல்லில் செதுக்கியும் உலோகத்தில் வார்த்தும் சிறப்பித்த சிற்பிகளும் ஒரு முக்கியக் காரணம்.

அவர்களின் அற்புத கலையின் சிறப்பைப் போற்றி பெருமைப்படவே இந்த பதிவு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள், அந்த அழகை உலோகத்திலும் உயிர் பெற செய்யும் தன்மையை நாம் புரிந்துக்கொள்ள இன்றைய பதிவு.

நண்பர் அர்விந்த் அவர்களின் படங்கள் இல்லையென்றால் கண்டிப்பாக இப்படி ஒரு பதிவை எழுத முடியாது. அலங்கரிக்கப்பட்ட ஆடல் வல்லானின் அழகுக் கோலம், அருங்காட்சியக சூழலில் அல்ல, ஆலயத்தில்! சுழன்று ஆடுவதைப்போல் காணப்படும் இந்த தோற்றத்தை எதிரில் நின்று பார்க்கும் நமக்கு ஏற்படும் அனுபவங்கள் அதிசயம்தான்! அந்த அழகு வதனத்தின் தேஜஸ் மற்றும் அந்த முத்திரைக் காட்டும் கையை பார்க்கும் பொழுது அலைபாயும் நம் மனதிற்குள் ஒரு அதீத அமைதி உருவாகிறது.

ஜோதி ஸ்வரூபமாய் அவன் ஜொலி ஜொலிக்க, அருகில் சிவகாமி அம்மை தன் மணாளன் ஆடும் அழகை கண்கொட்டாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறாள்.

அம்மையின் முகத்தில் புன்சிரிப்பு, வெறும் சிரிப்பல்ல பெண்மைக்கே உரியான ஒரு பெருமித சிரிப்பு! நிற்கும் கோலத்தில் என்ன ஒரு நளினம்!

இருவரோடு முடியவில்லை, இன்னும் ஒருவர் இருக்கிறார்!

இது நம் காரைக்கால் அம்மை.

நாம் முன்னரே பலமுறை அவர்களை கல்லில் பார்த்துள்ளோம். ஆனால் செப்பு சிலைகளில் இதுவரை ஒன்றிரண்டு அருகாட்சியகங்களில் தான் பார்த்ததுண்டு.


படங்கள்: இணையத்தில் இருந்து.

இந்த சிலைகள் அம்மையாரின்வாழ்கையை விளக்குகின்றன , ஆனால் ஏதோ ஒரு குறை, அது அம்மையாரின் பக்தி! அதை எப்படி சிலையில் காட்டமுடியும்?

பக்தி என்பது ஒரு சாதாரண உணர்வோ உணர்ச்சியோ அல்லவே! அது ஒரு நிலை! பிறப்பு, வாழ்வு, இறப்பு என்ற சுழற்சியை விட்டு ஜீவன் வெளியே வந்து, உடல் என்னும் கூடு, ஆவி என்ற ஒரு அடையாளம் என்று இரண்டையும் தாண்டி , இறைவன் என்ற பரம்பொருளிடம் ஐக்கியம் ஆகும் நிலை. இதை சிலையில் எப்படி காட்டுவது? இந்த நிலையை எழுத்தில் வர்ணிக்கவே கடினமாக இருக்கிறது. அம்மையின் பாடலையே விளக்கமாக இடுகிறேன்

இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன்
அடியின்கீழ் இருக்க என்றார்.

– என்றும் கெடுதலில்லாத இன்ப அன்பினை வேண்டிப் பின்னும் வேண்டுவாராய், `இனிப் பிறவாதிருக்கும் வரம் வேண்டும், மீண்டும் பிறவி உளதாயின் உன்னை என்றும் மறவாது இருக்கும் வரம் வேண்டும், இவற்றோடு இன்னும் ஒன்று வேண்டும், அது, அறவா! நீ ஆடும்போது, நான் மகிழ்ந்துபாடி உன் அடியின்கீழ் இருக்கவும் வேண்டும்` என்று வேண்டினார்.

இப்போது மீண்டும் அம்மையை பாருங்கள்.

புடவை சுற்றப்பட்டாலும், வெளியில் தெரியும் தாளம் போடும் கைகள் மற்றும் முகத்தை வைத்தே அந்த கலைஞனின் அற்புத திறனை நாம் உணர முடிகிறது. அம்மையின் கைகள் தாளம் போடும் போதே, சற்றே வளைந்து அவன் ஆட்டத்தில் லயித்து இருப்பது தெரிகிறது. தான் வேண்டிய வரத்தை அளித்த மகேசனின் மீதான அவரது அன்பு, அதனுடன் மேலே பார்க்கும் வண்ணம் கழுத்து நேராக நீண்டு, நாசிகள் சற்றே விரிந்து, அந்த முகத்தில் தெரிவது பக்தியா?

இல்லை இல்லை பக்திப் பரவசம் !!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஆதி தம்பதியினரிடையே இருந்த பரஸ்பரம்

முதலில் கொட்டும் மழையின் நடுவில் லண்டன் பேருந்து ஓட்டுனரிடம் அருங்காட்சியகம் போக வழி கேட்டது பெரிய தவறு. அன்றோ ஏதோ சாலையில் மராமத்துப் பணி நடக்கின்றதால் (அங்கும் !!!) பல சாலைகள் டைவேர்சண் வேறு – கூடவே சுமைதாங்கி போல முதுகில் புதிதாக வாங்கிய கிரிக்கெட் மட்டை வேறு. நட்ட நடு காட்டில் கண்ணை கட்டி விட்டது போல எங்கோ ஒரு இடத்தில இறக்கி விட்டுவிட்டு பேருந்து தன பாதையில் சென்று விட்டது. இங்கும் அங்கும் சுற்றி நாலு பேரிடம் வழி கேட்டு அவர்கள் தங்கள் பங்குக்கு நாலு பக்கம் வழி காட்டினர். முடிவில் செலவை பார்க்காமல் கைபேசியின் ஜி பி எஸ் மூலம் பார்த்து சென்றால் அது வேறொரு அருங்காட்சியகம் (Museum of London)!! நான் செல்ல வேண்டியது – British Museum!!.

மீண்டும் பேருந்து மற்றும் ரயில் பயணம் . முடிவில் பிரம்மாண்ட தோற்றத்துடன் இருந்த அருங்காட்சியகத்தை அடைந்தேன். வாயிலிலேயே தொல்லை – வாயிற் காப்போன் முதுகில் ”அது என்ன” என்று கேட்டான். முடிவில் தனது இத்தனை வருட சர்வீசில் பல வினோத மனிதர்களை பார்த்ததாகவும் ஆனால் இன்று தான் கிரிக்கெட் மட்டையுடன் அருங்காட்சியகம் வந்த ஒருவரை சந்திப்பதாக கூறி உள்ளே செல்ல அனுமதி கொடுத்தான். ஆனால் அன்று அவர்களுடன் எனது மோதலுக்கு இது ஒரு துவக்கம் தான். நாள் முழுவதும் அரைமணிக்கு ஒரு முறை அருங்காட்சியக காப்பாளருடன் சண்டை. எதற்கு…மேலே படியுங்கள்.

செப்புத் திருமேனிகள் நிறைந்த அறை என்றவுடன் அங்கேயே உட்கார்ந்து விட்டேன். அதுவும் இந்த சிற்பம்..

shiva+parvathi

பெயர் பலகை 11th C CE என்றது , அதுவும் சிவ பார்வதி கல்யாணம் – அதாவது கல்யாண சுந்தர மூர்த்தி என்றது. நாம் முன்னரே இந்த காலத்து சோழ கல்யாண சுந்தர முர்த்தி பார்த்தோம். நீங்களே ஒப்பிட்டு பாருங்கள்.

முதலில் இந்த சிற்பம் சோழர் சிற்பத்தில் மூன்றில் ஒரு பங்கு தான் உயரம், உடல் தோற்ற்றம், முக பாவம் அனைத்தும் பதினோராம் நூற்றாண்டு சோழர் சிலைகளை போல நறுக்கென்று இல்லாமல் இருப்பது தெரிகிறது. புகழ் பெற்ற பல்லவர் கால வடக்களத்தூர் கல்யாண சுந்தர மூர்த்தி சிலையின் நல்ல படங்கள் கிடைத்தால் நன்றாக ஒப்பிடலாம். என்னை பொறுத்த மட்டில் இந்த சிலை கண்டிப்பாக 9th C CE இருக்க வேண்டும்.

பார்வதியின் கழுத்தில் இருக்கும் தாலி போன்ற அணியை நாம் இதுவரை பார்த்ததில்லை. மேலும் கல்யாண சுந்தர மூர்த்தி வடிவங்களுக்கே உரியதான ’கைப் பிடித்தல்’ இல்லாததால் இதனை நாம் ஆலிங்கன முர்த்தி என்றே அழைக்க முடியும்.

செப்புத்திருமேனியின் அழகை முழுவதும் ரசிக்க முன்னழகு மட்டும் அல்ல, பின்னழகும் பார்க்க வேண்டும் என்று கூறுவார். அருங்காட்சியகங்கள் இதை மனதில் கொண்டு சிலைகளை பார்வையாளர் சுற்றி வந்து பார்க்கும் வண்ணம் அமைக்க வேண்டும். இந்த சிலையின் பின்னழகை படம் பிடிக்க நான் பட்ட பாடு…..


தற்செயலாக கண்ணாடியின் மீது சாய்ந்துவிட்டேன், உடனே அலாரம் மணி அடிக்க , மீண்டும் காவலர்களுடன் போராட்டம் – சிலையின் பின் புறம் எதற்கு படம் பிடிக்கிறாய் என்று பல கேள்விகள்.

ஆனால் அதற்க்கு கிடைத்த பலன்…ஆஹா.

முன்னழகைக் காணில் முனிவர்தாம் தவம் செய்வரோ
பின்னழகைக் காணில் பிரமன் தான் தவம் செய்வனோ (மாணிக்கவாசகர்)

பொதுவாக சிவன் உமையை அணைத்து பிடிப்பதே ஆலிங்கன மூர்த்தி என்பர் , எனினும் இங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு தம்பதியினரிடையே இருந்த பரஸ்பரம் – அன்யோன்னியம் , இன்று நம் இளைய காதல் ஜோடிகள் பாணியில் , என்னே அந்த கலைஞனின் திறன் !!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு கல்யாணசுந்தர வடிவம்

போகும் வழி எல்லாம் நல்ல மழை, ஆனால் கங்கை கொண்ட சோழபுரம் அடைந்ததுமே சரியாக நமக்கென்றே நின்று ஆதவன் பளீர் என்று தனது ஆதிக்கத்தை செலுத்த துவங்கினான். மழையில் நனைந்த வரலாற்றுச் சின்னம் கண்முன்னே பளீர் என்று ஜொலித்தது.

ஆரம்பமே அங்கு இருந்த ‘ அதிகாரிகளுடன்’ வாக்கு வாதத்தோடுதான். கருவறையை படம் பிடிக்க மாட்டோம், நாங்கள் செய்யும் பணி இது என்று என்ன சொன்னாலும் அவர்கள் கேட்க வில்லை, தொல்லியல் துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்த இடத்திலும் புகைப்படம் எடுக்கலாம், பணம் கட்ட தேவை இல்லை என்று அதட்டியதும் சிட்டாய்ப் பறந்து விட்டனர். வெளியில் எடுத்து முடித்த பின்னர், மீண்டும் அவர்களது தொல்லை துவங்கியது. இம்முறையும் தோல்விதானோ என்று மனம் தளரும் தருவாயில் ஒரு அதிர்ச்சி. உள்ளே ஏதோ ஒரு பெரிய நிகழ்ச்சி, ஒரே கூட்டம், வீடியோ படமே எடுத்துக் கொண்டு இருந்தது அந்தக் கூட்டம். அவர்கள் எடுக்கும் பொது நாங்கள் ஏன் எடுக்கக் கூடாது என்று சத்தம் போட்டு, அவர்களையும் மீறி படம் எடுக்க துவங்கினோம். அப்போது பார்த்து மின் தடை !!

முடிந்த வரை எது எதுவெனப் பார்த்துப் பார்த்துத் தடவி தடவி படங்களை எடுத்தோம். ஆஹா அந்த வாயிற் காவலர்கள் தான் என்ன ஒரு கம்பீரம். இவர்கள் இங்கே இருக்க ”அவர்கள்” அங்கே எதற்கு என்று தோன்றியது.

அப்பப்பா ! எத்தனை பெரிய சிலை

கால்களுக்கு அடியில் கருப்பாக தெரிகிறதே ? அது என்ன ?

ஆம், நமது கேமராவின் மூடி…

இவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தோம் – சுவரின் அந்த பக்கம் இன்னும் ஒரு சிற்பம் – புடைப்புச் சிற்பம். ஆனால் இரண்டிற்கும் உள்ள அளவு வித்யாசமமானது அதை வடித்த கலைஞனின் திறமையை வெளிப்படுத்தியது. பொதுவாக வரையறுக்கப்பட்ட அளவிற்கு வரைவதோ வடிப்பதோ சுலபம். அதையே மிகவும் பெரிது படுத்தியோ அல்லது சிறிது படுத்துவதோ கடினம் – அங்க அமைப்பு சரியாக வராது.

மின்தடையின் காரணமாக வெளிச்சம் குறைவு. முக்கியமான இடம் சரியாக படம் எடுக்க முடியவில்லை.
எனினும் கதை விளங்கியது. பல முனிவர்கள் முன்னிலையிலும், பிரம்மன் முன்னிலையிலும் மீனாக்ஷி திருக்கல்யாணம நடக்கிறது.

கல்யாண சுந்தரராக சிவன், மணப்பெண்ணுக்கே உரித்தான வெட்கத்துடன் மீனாக்ஷி, பெண்ணை தாரை வாற்றுக் கொடுக்கும் பெருமாள் மற்றும் லக்ஷ்மி

உடனே நினைவுக்கு வந்தது நாம் முன்னரே பார்த்த செப்புத் திருமேனி.

இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை அபாரம்


லட்சுமி நிற்கும் பாணி.

பெருமாள் சற்றே முன்ப்பக்கம் குனிந்து இருப்பது போல உள்ளது

ஆனால் மீனாட்சியின் அந்த இடது கை, சற்றே வெட்கத்துடன் கலந்த புன்முறுவல்


இன்னும் அபாரம் பெருமாளின் கடி வஸ்திரம் ( சிவனுக்கு அப்படி இல்லை !)

நாம் சென்ற பதிவில் பார்த்தது போல

செப்புத்திருமேனியுடன் ஒப்பிட்டு பாருங்கள்.

ஒன்று கல் புடைப்புச் சிற்பம், மற்றொன்று செப்புத்திருமேனி , இருந்தும் இரண்டிலும் கலைஞன் தனக்கே உரிய கலையுணர்ச்சியில் சிற்ப விதிகளை வெளிகொணர்ந்த விதம் அருமை.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment