மலைக்கோட்டை – இரண்டு குடைவரைகளில் முதல் குடைவரை
தொலைவில் இருந்தே பிரமிக்கவைக்கும் மலைக்கோட்டை , திருச்சிராப்பள்ளியின் நடுவில் கம்பீரமாக விஸ்வரூபம் எடுக்கும் மலை – இப்படி மொட்டை பாறைகள் கொண்ட மலைகளில் ஏதோ ஒரு வசீகரம் உள்ளது. சரி, அன்னபூர்ணா அவர்களின் புண்ணியம், இன்று வெகு நாட்களாய் போட விட்டுப் போன பதிவு , அவர் தூண்டுதலினால் வெளிவருகிறது. பல மாதங்களுக்கு முன்னரே பதிவாகி இருக்க வேண்டும், நானும் அரவிந்தும் சென்ற டிசம்பர் மாதத்தில் சென்ற போது கூட முயற்சி செய்தோம், என்னவோ எங்கள் பாக்கியம் – யாராவது ஒருவர் நடுவில் வந்து படம் எடுக்காமல் செய்துவிட்டார்கள் – இந்த படிகளைப் பார்த்தவுடன் மக்களுக்கு ஒரு தொய்வு – உடனே அமர்ந்துவிடுகின்றனர் – நல்ல செங்குத்தான மலையை பாதி வழி ஏறிய களைப்பு. எங்கள் கோபம் அவர்கள் மீது அல்ல, சில ஜோடிகள் – நாங்கள் ரசனையுடன் படம் எடுக்கிறோம் என்று தெரிந்தும், இல்லை, அவர்களது மயக்க நிலையில் தன்னிலை மறந்து லயித்து இருந்தனரோ என்னவோ – அடை மழையில் நனையும் எருமைகள் போல நகர மறுத்தனர். எவ்வளவோ முயற்சி செய்து கடைசியில் சில கோணங்களை அரை மனதுடன் விட்டு விட்டு கிளம்பிவிட்டோம். ( காதல் ஜோடிகள் மீது கோபம் இல்லை – எனினும் புராதான சின்னம், ஒரு ஆலயம், சுற்றிலும் இருப்போர் என்று அனைத்தையும் கடந்து அவர்கள் இருந்த சல்லாப கோலம் சற்று நெருடலாக இருந்தது – வேறு இடம் கிடைக்கவில்லையா என்று கேட்டுவிடலாம் என்று வாய் வரை வந்துவிட்டது)
பிறகு நண்பர், ஸ்ரீராம் உதவியுடன் ஏனைய படங்களையும் எடுக்க முடிந்தது. என்ன செய்வது, இந்த மேல் குடைவரைக்குக் கீழே இருக்கும் குடைவரை நிலைமை தேவலாம். அங்கே எவரும் செல்வதே இல்லை. இப்படி கண்ணில் பட்டு மரியாதை கெட்டு இருப்பதை விட அப்படி கண்ணிலும் நினைவிலும் இல்லாமல் இருப்பதே நல்லது. ( கீழ் குடைவரையை அடுத்த பதிவில் பார்ப்போம் )
இந்த பல்லவர் கால மல்டிப்ளெக்ஸ் , மகேந்திர பல்லவரின் உன்னத படைப்பு – லலிதாங்குர பல்லவேஸ்வர கிருஹம், பல்லவனின் குடைவரைகளில் மிகவும் தென் திசையில் உள்ள குடைவரை – உச்சி பிள்ளையார் கோயில் வளாகத்தில் மிகவும் தொன்மை வாய்ந்த ஆலயம் இது. பல வகைகளில் உன்னதமான படைப்பு. லலிதாங்குரன் என்பது மகேந்திரரின் ஒரு பெயர் – அழகும் வசீகரமும் சொட்டும் பெயர். இங்கே தான் அவர் தான் வேறு மதத்தை விட்டு சைவ – லிங்க வழிபாட்டு வகைக்கு திரும்பினேன் என்று தானே சொல்லும் கல்வெட்டு உள்ளது. இன்றைய காதல் புறாக்களுக்கு தெரியுமோ இல்லையோ, அவர் வெட்டி உள்ள வரிகளில் உள்ள அர்த்தம் – அதையும் அடுத்த பதிவில் பார்ப்போம். குடைவரைக்குள் செல்வோம்.
பல்லவர்கள் நமக்கென விட்டுசென்ற சிற்பங்களில் அவர்கள் அழகு சேர்த்த சோமாஸ்கந்தர் வடிவத்தை நாம் தொடர்ந்து பதிவுகளில் பார்த்து வருகிறோம், இன்னும் ஒன்று சிவ கங்காதர வடிவம். இந்த குடைவரையில் நாம் பார்க்கும் இந்த வடிவம் மிகவும் அழகானது மட்டும் அல்லாமல் மிகவும் தொன்மை வாய்ந்ததாகவும் இருக்கலாம்.
பல்லவன் இவ்வளவு தூரம் வந்து, அதுவும் சோழர் தேசத்திற்குள் வந்து, இந்த மலையில் தங்கி , குடைந்து (இங்கும் மற்ற மகேந்திரர் குடைவரைகள் போல் அருகில் சமணர் படுக்கை உள்ளது !!) – இந்த பதிவிற்கு திரு நாகசுவாமி அவர்கள் மற்றும் திரு சுவாமிநாதன் அவர்களின் இடுகைகளை கொண்டு விளக்க முயற்சிக்கிறேன். திரு சு்வாமிந்தன் அவர்கள் குடைவரை பற்றி சொல்லும் பொது ” இந்த மலை தாயுமானவர் கோயில், உச்சிப்பிள்ளையார் கோயில் , மற்ற ஆலயங்கள் , கடைகள் அனைத்தும் இல்லாத பொது எப்படி இருந்திருக்கும், அப்போது மகேந்திரர் இந்த இடத்தை சுமார் இருநூறு அடி உயரத்தில் தேர்ந்தெடுத்து , தனது சிற்பிகளை கொண்டு எப்படி செதுக்கினார் என்று யோசிக்கவேண்டும். இந்த குடைவரையிலும் பல புதிர்கள் உள்ளன “ என்கிறார்.
குடைவரை முகப்பு – நான்கு தூண்கள் மற்றும் இரு பக்கங்களிலும் இரு அரை தூண்கள் உள்ளன. மற்ற்படி பெரிய அலங்காரங்கள் மிகுதியாக முகப்பில் இல்லை. தூண்கள் மகேந்திர காலத்து பாணி என்பதை அவற்றின் தடிமனான தோற்றம், சதுரம் , கட்டு , சதுரம் – சரி, தூண்களை பற்றி இன்னும் விரிவாக படிக்கும் பக்குவம் நமக்கு வந்துவிட்டது – மேலே படியுங்கள்.
1. சதுரம் அல்லது நான்முகத்தூண் அல்லது பிரம்மகாந்தத்தூண்
2. கட்டு அல்லது எண்பட்டைத்தூண் அல்லது விஷ்ணுகாந்தத்தூண்
3. கட்டு அல்லது பதினாறு பட்டைத்தூண் அல்லது இந்திரகாந்தத்தூண்
4. வட்டம் அல்லது ருத்ரகாந்தத்தூண்
ஒரு தூண் மேற்சொன்ன ஏதோ ஒரே ஒரு வடிவத்தில்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒரே தூணில் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கள் கூட வரலாம். மேலே உள்ள தூண்கள் கீழே சதுரமாகவும், நடுவில் எண்பட்டையாகவும், மேலே மீண்டும் சதுரமாகவும் அமைந்திருப்பதால் அதை, சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பிலமைந்த முழுத்தூண் என முழுமையாக வரையறுக்கலாம். அப்படியானால் அந்த அரைத்தூண்கள்? அவை நான்முக அரைத்தூண்கள். இந்தத் தூண்களின் நீட்சிதான் பாதபந்தத் தாங்குதளத்தின் கண்டப் பகுதியில் காணப்படும் பாதங்களாகும்.
தூண்களுக்கு தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை போன்ற பல உறுப்புகள் இருக்கின்றன
( நன்றி வரலாறு. காம்)
தூண்களின் நாலு பக்கங்களிலும் தாமரை பதக்கங்கள் உள்ளன.


மகேந்திரர் பட்டப் பெயர்கள் பல்லவ க்ரந்தத்திலும் சில இடங்களில் தமிழிலும் தூண்களில் செதுக்கப்ப்டுள்ளது.
வெளி தூண்களை கடந்து உள்ளே படியேறி மண்டபத்திற்குள் செல்வோம். மண்டபத்தின் பின்னால் முன்னாள் இருப்பது போலவே நான்கு தூண்கள் உள்ளன. இடது புறம் கம்பீர கங்காதர வடிவம், வலது புறம் இருபுறமும் அழகிய வாயிற் காவலர்கள் கொண்ட தற்போது காலியாக உள்ள கருவறை மண்டபம் .

இந்த அற்புத கங்காதர வடிவத்தை அடுத்த பதிவில் மெதுவாக பார்ப்போம். எனக்கு மிகவும் பிடித்தமான சிற்பம், அழகினால் மட்டும் அல்ல – அதை நான் அறிந்த அன்று தான் நான் எனது சரித்திர / சிற்ப பயணத்தில் இரண்டு முக்கிய – அருமையான மனிதர்களை சந்தித்தேன் – திரு சுந்தர் பரத்வாஜ் மற்றும் திரு திவாகர் – திவாகர் அவர்களின் நூல் வெளியீடு – விசித்திர சித்தன் – சரித்திர புதினம் – மகேந்திரரின் ஆரம்ப கால கதை, நூலின் முகப்பில் அதே கங்காதர வடிவம்.
முதில் இரண்டு வாயிற் காவலர்களையும் பார்ப்போம். இருவரும் மிகவும் அழகு.


ஒரு பக்கமாக திரும்பி நிற்கும் பல்லவருக்கு உரித்தான பாணி, இரண்டு கரங்கள், ஒரு கால் சற்றே மடித்து, ஒரு கை ஒய்யாரமாக கதை அல்லது உருள் தடியை அலட்சியாமாக கொண்டு – நாம் முன்னர் மண்டகப்பட்டு குடவரையில் பார்த்ததைவிட சற்று மெலிந்து காட்சி அளிக்கின்றனர். மிகவும் தேய்ந்து போன சிற்பம் என்றாலும் அணி ஆபரணம் என்று – ஒரு தனி அழகுதான்.




கருவறை கதவு பூட்டப்பட்டு இருந்தது சற்று வேடிக்கை தான். இன்றைய நிலை அப்படி. புரியவில்லையா – அது வேறு கருவறை – உள்ளே ஒன்றும் இல்லை , பிற்கால பல்லவர் வேளைகளில் தான் சோமாஸ்கந்தர் வருகிறது, கருவறையில் பாண்டியர் குடைவரைகளில் தான் லிங்கம் ஒரே கல்லில் செதுக்கப் படும் – பல்லவர் காலத்தில் வேறு கல் லிங்கம் தான். அப்படி இருக்க எதற்கு கதவு – பூட்டு – எல்லாம் நமது குடி மகன்களில் தொல்லையை தாங்காமல் தான். என்ன ஒரு வெட்கக் கேடு !!
சரி , குடைவரையில் புதிர் இருக்கிறது என்று சொன்னேனே – புதிர் இல்லை, புதிர்கள் உள்ளன – முதல் புதிர் இதோ. அப்படி லிங்கத்தை கருவறையில் பொருத்த துவாரம் ஒன்று இருக்கும். இங்கே தரையின் நடுவில் அதே போல ஒரு துவாரம் உள்ளது – ஆனால் அதை அடுத்து வலது புறத்தில் இன்னும் ஒரு துவாரம் உள்ளது.
மூடி இருந்தால் நமக்கு உள்ளே என்ன இருக்கும் என்பதை பார்க்காமல் போவோம் – என்று நண்பர்கள் வலைக் கதவை நெம்பி பெயர்த்து எடுத்து உள்ளனர். குடி மகன் ஆயிற்றே – துவாரத்தை பார்த்தவுடம் குப்பை தொட்டி என்றி எண்ணி பாட்டிலை எரிந்து விட்டு சென்றுள்ளனர். இரு துவாரங்கள் படத்தின் கீழ் பாதியில் தெரியும்.
அடுத்த பதிவில் மற்ற அற்புதங்களை பார்ப்போம்.