ஒரு ஆறு வயதுச் சிறுமி செய்யும் தவமா இது – பார்வதி ஈசனை நினைத்து தவம் – தாராசுரம்

நண்பர் திரு சதீஷ் அவர்கள் இந்த வாரம் தாராசுரம் செல்கிறேன் என்றார். அங்கே மண்டப தூண்களில் ஸ்கந்த புராணம் சிற்பங்கள் உள்ளன என்றும் அதை படம் பிடித்து வருமாறு கேட்டேன்.அவரும் அவ்வாறே எடுத்து வந்துள்ளார். அருமையான சிற்பங்கள். அவற்றை விளக்க நல்ல தமிழ் உரை தேடும் பொது நண்பர் வைரம் கச்சியப்ப சிவாச்சாரிய முனிவர் எழுதியுள்ள கந்தபுராணத்தில் இதன் வர்ணனை உண்டு என்று ஒரு ஆங்கில நூலை தந்தார். படித்த பின், மதுரை திட்டத்தில் தேடி அண்மையில் அந்த நூலும் இந்த அற்புத திட்டத்தில் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து அவற்றை எடுத்து திரு திவாகர் அவர்களின் உதவியுடன் இங்கே படைக்கிறேன். இணையத்தின் அற்புதம் – நண்பர்களின் உதவி – உருவாகிறது பார்வதி கல்யாணம். இதனை நாம் முன்னர் பார்த்த தஞ்சை தக்ஷ வதம் கதைக்கு தொடர்ச்சி என கருதி வாசிக்கவும்.

புவிய ளித்தருள் முதல்வரும் நாடரும் புனிதன்றான்
இவள்த வத்தினுக் கெய்துமோ எய்தினு மினையாளை
அவன்வி ருப்பொடு வரையுமோ உமையவ ளறியாமே
தவமி யற்றினள் எளியனோ சங்கரன் றனக்கம்மா


முடிவிலாதுறை பகவனென் வேட்கையை முடியாது
விடுவ னென்னினுந் தவத்தினை விடுவனோ மிகவின்னங்
கடிய நோன்பினை யளப்பில செய்துயிர் கழிப்பேன்நான்
நெடிது மூத்தலின் மயங்கினை பித்தனோ நீயென்றாள்.

“ஒரு ஆறு வயதுச் சிறுமி செய்யும் தவமா இது? இப்படி தவம் செய்வது இவளுக்குத் தகுமோ.. பார்வதியே.. உமையே.. அறியாமல் செய்கிறாயே.. இப்படியா தவம் செய்வது.. சிவன் அவன் அருள் வாய்க்குமோ.. அவனையே மணம் செய்வேன் என்று தவம் செய்தால் பெறக் கூடிய அத்தனை எளியனா சிவன்? ஆனாலும் இத்தனைக் கடினமான தவம் உனக்கு வேண்டுமோ.. யோசித்துப் பார்..”

“தவம் செய்யத் தொடங்கிவிட்டேன்.. ஆதியும் அந்தமும் இல்லாத அந்த இறைவனையே மணம் முடிப்பேன்.. என்னுடைய தலைவனே வந்து தவத்தை விடு என்றாலும் விடேன்.. இத்தகைய கடிய நோன்பினால்தான் இனி உயிர் வாழவேண்டுமென்றால் அப்படியே என் வாழ்க்கை முழுதும் கழிப்பேன்”

மேற்கண்டவை மாய மறையோன் வடிவம் தாங்கி சோதனை செய்த இறைவனுக்கும், அந்த இறைவனுக்காகவே வேண்டி கடுந்தவம் செய்யும் பார்வதிக்கும் இடையே நடந்த உரையாடல் கச்சியப்ப சிவாச்சாரிய முனிவர் எழுதியுள்ள கந்தபுராணத்தில் வரும்.

http://www.projectmadurai.org.vt.edu/pm_etexts/pdf/pm0239.pdf

கந்தபுராணம் சிவபுராணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அட்டகாசம் செய்து தேவர்களை சித்திரவதை செய்ததோடு மட்டுமல்லாமல் மூவுலகையே அச்சுறுத்திவந்த அசுரர்களின் தலைவனான சூரபன்மனை வதைக்க தானே ஒரு மகனைப் பெற்றுத் தருவதாக இறைவன் தேவர் முதலா அனைவருக்கும் அபயம் தருவதில் ஆரம்பித்து, அதற்கான வகைகளில் ஒன்றாக பர்வதராஜனின் மகளாக பார்வதிதேவி பிறந்து ஈசனை மணக்க தவம் செய்யும் காட்சிதான் இந்த சிற்பம்.

இதற்கு முன்புதான் மன்மதபாணங்களை வீசி காதலரை அல்லல் படுத்தும் காமன் சிவனின் மூன்றாவது கண்ணின் வெப்பத்தால் சாம்பலாகிப் போனதால் ( இதையும் நாம் தஞ்சை பெரிய கோயில் சிற்பத்தில் பார்த்தோம் ), அம்மை பார்வதியின் தவம் மிக மிகக் கடுமையாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தேவியை அனைவருமே பரிதாபமாகப் பார்த்து இந்தத் தவத்தைக் கைவிடுக.. என்று சொன்னாலும், ஈசனே மாறுவேடத்தில் வந்து கேட்டும் – இறைவனை மணக்க எப்படிப்பட்ட துயர் வந்தாலும் அதைத் தாங்குவேன் என்கிறாள் சக்தி.

இனி சிற்பத்துக்கு வருவோம்..

தராசுரம் கோவில் தூணில் இருக்கும் அருமையான கந்த புராணத்தை விளக்கும் சிற்பங்கள் – முதல் சிற்பம் இன்று பார்போம். அடுத்தடுத்து வரும் மடல்களில் கதை கேற்ப சிற்பங்களை பார்ப்போம்.

தூண் – கீழே இருந்து மேலே நகர்கிறது கதை. பார்வதியின் தவத்தை கண்டு அனைவரும் வியக்கின்றனர். ஊர் முழுவதும் இதே பேச்சு தான் போல. தோழியர் மூவர் ஈசனை நினைத்து லிங்கத்தின் முன் பூஜை செய்யும் தேவியை வணங்குகின்றனர். போதும் தவம் – என்கிறார்களோ ?

மேலே – பார்வதி ஒரு காலில் நின்று கடுந்தவம் புரிகின்றாள் – இரு புறம் தீ பிழம்புகள் – அப்படியும் ஈசன் மனம் இறங்கவில்லை – அடுத்து என்ன – மழைக்காலம் வந்து விட்டது ….. தொடரும் .


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பிருங்கி முனிவர் வரலாறு

புலி கால் முனிவர் பற்றி கூறும் பொது இந்த மூன்று கால் முனிவரும் நினைவிற்கு வந்தார்.

பிருங்கி முனிவர் – மறந்தும் புறந்தொழாத் தீவீர சிவ பக்தர். ( அதனால் சிவனைத் தவிர வேறு யாரையுமே வழிபட மாட்டார், சிவனின் மனைவியான சக்தியாக இருந்த போதிலும் கூட)

ஒருமுறை சிவனை நேரில் வழிபட கைலாயம் சென்ற முனிவர், தம்பதி சமேதராய் இருந்த சிவனையும் பார்வதியையும் கண்டு திகைத்தார். சிவனை மட்டுமே அன்றுவரை வணங்கி வந்த முனிவர் ,சக்தியையும் வணங்குவது தமது பக்திக்கு இழுக்கு என எண்ணித் தம்மை ஒரு வண்டாக உருமாற்றிக் கொண்டார். பறந்து சென்று, மும்முறை சிவனை மட்டும் வலம் வந்தார். பார்வதி தேவியை வணங்காமல் திரும்பும் அவரை கண்டு கடுஞ்சினம் கொண்டாள் சக்தி. தன்னை வணங்காத முனிவருக்கு தன் சக்தி மட்டும் எதற்கு என்று எண்ணி தன் சக்தியை எடுத்துக்கொண்டால்.

தமது சக்தியைத் இழந்த முனிவர், வெறும் எலும்புக் கூடாய் மாறி நிலையாக நிற்க கூட முடியாமல் குடை சாய்ந்தார் – அவ்வாறு கீழே விழப் போன அவரை, சிவன் தனதுகோலைக் கைப்பிடியாய்த் தந்து காப்பாற்றினார்.

( இது மீண்டும் நடை பெறக்கூடாது என்று தானோ என்னமோ அப்பனின் ஒரு பாதியை வாங்கிக்கொண்டாளோ – சிலர் இந்த கதை வேறு விதமாக சொல்வார்கள் – முனிவர் வருவதை கண்டு அவரது நோக்கத்தை அறிந்த சக்தி ஈசனிடம் மிக அருகில் அமர – முனிவர் அப்போதும் அப்பனை மட்டும் சுத்தி வந்தார் – உடனே உமை ஈசனின் ஒரு பாதியை எடுத்து அம்மை அப்பன் என்று அர்த்த நாரியாய் மாற – அவர் வண்டாக மாறி ஈசன் இருக்கும் பக்கம் மட்டும் குடைந்து சுற்றி வந்ததாக கூறுவர் )

அதன் பிறகு ….அது வேறு கதை . இப்போது சிற்பத்தை பார்போம். இவரது சிற்பத்தை எங்கெல்லாமோ தேடினின் – கடைசியில் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் கோவில் வெளி மண்டப தூணில் நமக்காகவே மூன்று கால்களுடன் காட்சி தந்தார் – மிக அரிய சிலை. எலும்பு உருவம் அவ்வளவு சரியாக சித்தரிக்க படவில்லை –



எலும்பு உருவத்தையும் மூன்று கால்களையும் பார்க்க மற்ற இடங்களில் உள்ள படங்களை இணைக்கிறேன்.
2808281028122814
படங்களுக்கு நன்றி – அர்ச்சனா ரகுராம்
Temple Dairies – Part 1
மற்றும்
*http://www.kamat.com/kalranga/mythology/7667.htm*
South Indian shrines illustrated By P. V. Jagadisa Ayyar


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஈசனை குறிபார்க்கும் காமன் – கம்போடியாவில்

நமது புராணங்களில் வரும் கதைகளின் தாக்கம் இந்திய எல்லைகளை தாண்டி எங்கெல்லாம் சென்றுள்ளது என்று அறியும் போது மெய் சிலிர்க்கிறது. கம்போடியா மற்றும் இந்தோனேசியாவில் இருக்கும் சிற்பங்களின் வடிவங்கள் சற்று மாறுபட்டு இருந்தாலும் அவற்றில் சித்தரிக்கப்பட்டிருக்கும் கதைகளின் ஆழம் பிரமிக்கவைக்கின்றது.

இன்றும் அது போல ஒரு அற்புத வடிவம் – கம்போடியா பன்திய ஸ்ரெய் கோவிலில் – காமன் ஈசனை குறி பார்க்கும் வடிவம் இதோ.

முன்னர் நம் சோழ சிற்பி தஞ்சை பெரிய கோவிலில் இதே கதையை மூன்று பாகங்களாக தன் சிற்பத்தின் மூலமாக இந்த கதையை விளக்கி இருந்தான். இப்போது கம்போடியா சிற்பி இதை சிற்பி இதை எப்படி சித்தரிக்கின்றான் – பார்போம்.

2449


ஒரே சிற்பம் – அதனிலேயே முழுக் கதையையும் அப்படியே காட்ட வேண்டும். காமன் தனது
நாணை ஏற்றி ஈசனை குறி பார்க்கிறான் – அது முதல் காட்சி. ஈசனின் அமர்ந்த
கோலம் – அருமை – ( அவர் அமர்ந்திருக்கும் ஆசனத்தின் கீழே மூன்று அடுக்கு – பல முனிவர்கள் , மிருகங்கள், பூத கணங்கள் ) – ஆனால் அவர் காமனை பார்க்கும் பார்வை – ஆம் – சுட்டெரிக்கும் பார்வை மிக மிக அருமை.

ஈசனின் மறு பக்கத்தில் – ஒரு பெண்மணி மிக பணிவுடன் ஈசனின் கரத்தில் இருந்து ருத்ராக்ஷ் மாலையை கையில் வாங்கியவாறு உள்ளது – ஈசன் தனது தி்யான நிலையை விட்டு பார்வதியிடம் காமனின் பாணத்தின் தாக்கத்தால் நாடுவதை காட்டவோ ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

காமனை எரிக்கும் ஈசன் – தஞ்சை பெரிய கோயில்

இன்று மீண்டும் சில அற்புதமான தஞ்சை பெரியகோவில் சிற்பங்களை காண்போம் – காமதேவனை எரித்த கயிலை சிவன் ( திரு சதீஷ் அவர்கள் படம் எடுக்க மட்டும் அல்ல நல்ல தமிழ் ஆற்றல் உடையவர் என்று இன்றுதான் அறிந்தேன் – இதோ அவரது படங்கள் மற்றும் வர்ணனை )

முதலில் காமதேவனை பற்றிய சில குறிப்புகள் – மன்மதன், உருவிலாளன், கருப்புவில்லி, கரும்பன், நாரன், புட்பரசன், மகரக்கொடியோன், மதனன், மாரன், மான்மகன், வசந்தன், வேனிலான் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் காமதேவன் தேவர்கள் யாவரிலும் அழகு மிகுந்தவன். காதல் தெய்வமான, மகரக்கொடியுடைய மன்மதனின் ஆயுதங்கள் என்னவோ ரீங்காரமிடும் வண்டுகளை நாண்களாக உடைய கரும்பாலாகிய வில்லும், ஐந்து மலரினாலாகிய அம்புகளும்தான், இவன் தன் ஆயுதங்கள் மெலிதாயினும் அதன் வலிமையோ வெல்வதற்கரிது. தன் மனைவி ரதியோடு வாகனமாகிய கிளியில் அமர்ந்து, தென்றலாகிய தேரில் வலம் வரும்பொழுது, தென்படுவோர் யாவரும் தென்றலால் மனம் இளக, ரதி தேவி இச்சையை உண்டாக்க, காம பாணத்தை செலுத்துவார் காமதேவன், இதில் வீழ்ந்தோர் தப்பித்ததில்லை.

(சில மாதங்களுக்கு முன் அகத்தியர் குழுமத்தில் திரு. K. Shrikanth அவர்கள் எழுதிய காமபாணத்தை பற்றிய கட்டுரையில் இருந்து சில தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.) பஞ்சபாணம் எனப்படும் மன்மதனின் பாணம், தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை மற்றும் குவளை (நீலோத்பலம்) மலர்களால் ஆனவை. இந்த ஐந்து மலர்கணைகளையும் உடம்பின் வெவ்வேறு பாகங்களில் செலுத்த உண்டாகும் விளைவுகளும் ஐந்துவகை. மார்பைத் தாக்கும் தாமரை உன்மத்தம் எனும் போதையைத் தர, மெல்லிய உதடுகளை தாக்கும் அசோகம் தன் துணையை நினைத்து ஏங்கி புலம்பச் செய்ய, முல்லையோ கண்களைத் தாக்கி உறக்கத்தை கெடுக்க, மாம்பூவோ தலையை தடவி காதல் பித்து கொள்ளச் செய்ய, முடிவில் நீலோத்பலம் எனும் குவளை மலர்க்கணை விரகதாபத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்று உணர்விழக்கச் செய்யும்.

(காண்க: http://manoranjitam.wordpress.com/2008/01/21/legend-of-kaama/)

காமனின் அறிமுகம் போதும், இனி நம் கதைக்கு வருவோம்.

இந்த கதையும் சிற்பங்களும் நாம் முன்னே கண்ட தக்ஷன் தலையக் கொய்த ஈசன் கதையின் தொடர்ச்சியாகவே வருகிறது. தன் மணாளனான மகேசனுக்கு யாகத்தின் பொழுது சேரவேண்டிய அவிர்பாகத்தை தராமலும் தன்னை மகள் என்றும் பாராமல் தட்சனால் தானும் தன் மணாளனும் அவமானப்பட்டதை தாங்க முடியாமல் தாட்சாயணி யாகாக்கினியில் தன் உயிரை மாய்த்துக்கொள்கிறாள். இதனால் மனமுடைந்த ஈசன் சக்தியில்லையேல் சிவமில்லை என நினைத்து யோகத்தில் ஆழ்ந்து விடுகிறார்.

அழிக்கும் கடவுளாகிய பரமசிவன் தவத்தில் ஆழ்ந்துவிட்டதால் தீயசக்திகளின் கொட்டத்தை கேட்கவா வேண்டும். இந்த சமயத்தில் தாரகாசூரன் எனும் அசுரன் பற்பல ஆண்டுகளாக பிரம்மனை நோக்கி கடுந்தவம் செய்தான். அவனது தவத்தின் உறுதியை கண்ட பிரம்மன் வேறுவழியின்றி அவன் முன் தோன்ற, வழக்கம்போல் சாகாவரம் கோரினான் அசுரன். பிரம்மன் மறுக்கவே சிவனின் ஆழ்ந்த தவத்தையும் சக்தியின் மறைவையும் அறிந்திருந்த அசுரன் புத்திசாலித்தனமாக (அல்லது அவ்வாறு நினைத்துக் கொண்டு) சிவனின் குமாரனைத் தவிர வேறு யாராலும் தனக்கு எந்தவித துன்பமும் நேரக்கூடாது எனக்கோரி வரத்தைப் பெறுகிறான்.

வரம்பெற்ற அசுரனின் நடவடிக்கைகள் வரம்பு மீறுகிறது, அனைத்து உலகங்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் கொடுமைப் படுத்தி துன்பத்தில் ஆழ்த்திவிட்டான். தேவர்கள் யாவரையும் ஒருவர் பின் ஒருவராக வெற்றி கொண்டு அவர்களிடம் உள்ள பெறுதற்கரிய பொக்கிஷங்களை பிடுங்கிக் கொண்டு அவர்களை சிறைப்படுத்தினான். அமிர்தமதனத்தின் பொழுது கிடைத்த ஐராவதம், உச்சைசிரவம் முதலியவற்றை இந்திரனிடம் இருந்தும், கேட்டதெயெல்லாம் கொடுக்கும் காமதேனு பசுவை ஜமதாக்கினி முனிவரிடம் இருந்தும், குபேரனின் அரிய ஆயிரம் குதிரைகளையும் பிடுங்கிக் கொண்டதோடல்லாமல், வாயுவையும் தன் விருப்பத்திற்கு ஆட்டி வைத்தான். சூரிய வெப்பத்தை அடக்கி குளிர்ந்த சந்திரனையே எப்பொழுதும் பிரகாசிக்கச் செய்தான். இவன் கொடுமைகளை தாங்க இயலாமல் தேவர்கள் அனைவரும் தங்கள் உல்லாச அரண்மனைகளை துறந்து கானகங்களில் ஒளிந்து திரிந்து வாழ்ந்துவந்தார்கள்.

அசுரனுக்கு பயந்து மறைந்து வாழ்ந்த தேவர்கள் ஒன்றுகூடி அசுரனை அழிக்க ஆலோசித்தனர், அந்த நேரத்தில் அனைவரும் ஒட்டுமொத்தமாக அசுரனுக்கு வரமளித்த பிரம்மனை நிந்தித்தனர். தேவர்களின் துன்பத்தை கண்ட பிரம்மன், தான் அளித்த வரத்தில் உள்ள சூட்சுமத்தை தேவர்களுக்கு எடுத்துரைத்தார். ஆழ்ந்த தவத்தில் இருக்கும் ஈசனின் தவத்தை கலைப்பது எவ்வாறு என்று தேவர்கள் ஆலோசனையில் இறங்கினர்.

இதற்கிடையே பிள்ளைபேறு வேண்டிய இமவானின் தவத்திற்கிணங்கி, உமையாள் “பார்வதி” என்ற பெயருடன் இமவான், மனோரமா தம்பதிகளின் மகளாக பிறந்து வளர்ந்து வருகிறாள். ஈடிணையில்லாத அழகியாக வளர்ந்த பார்வதி பருவமடைந்தவுடன் தன் உண்மை நிலை அறிந்து மகேசனிடம் மனதை செலுத்தி தவம் மேற்கொள்கிறாள்.

இதனை உணர்ந்த இந்திரன் முதலானோர் மன்மதனை அழைத்து தங்கள் கோரிக்கையை வைத்து இறைஞ்ச காமதேவன் பயத்துடனும், தயக்கத்துடனும் ஏற்றுக்கொள்கிறான். இதனை தொடர்ந்து சகல ஆயத்தங்களுடன் கயிலையை நோக்கி பயனிக்கிறான். கவலையினாலும் சினத்தாலும் மோனத்தில் இருந்த பவளமேனியானின் வண்ணம் நெருப்புக் கனலாகத் தெரியவும், கயிலையில் சகலமும் ஒடுங்கி நிசப்தமாயிருப்பதைக் கண்டும் செய்வதறியாது பல காலம் திகைத்து நின்றான்.

இப்படி செய்வதறியாது நின்ற காமனின் கண்களில் தன் உள்ளம் கவர்ந்த நாயகனின் ஆராதனைக்காக மலர்கள் பறிக்க வந்த பார்வதி தேவி கண்ணில் பட, இதுதான் தக்க சமயமென நினைத்து தன் மலர்கணையை நாணேற்றிவிட அதுவும் குறி தவறாமல் மகேசனின் மார்பை ஸ்பரிசித்தது. கோபாக்கினி ஒளிர திடுக்கிட்டு தவம் கலைந்த கையிலைநாதனின் கண்களில் மலர்கள் பறித்துக் கொண்டிருந்த கனிவான, அழகு மிளிரும் பார்வதி தேவியின் முகம் தெரிய அவரது மனம் கனிந்தது. அடுத்த கணமே தவம் களைய காரணமான மன்மதன் அவர் கண்களில் தெரிய கோபத்தில் நெற்றிக்கண் திறந்து காமதேவன் சாம்பலானான்.

இதனைக் கண்ட ரதி தேவி அழுது புரண்டு இறைவனை வேண்ட பரமனும் மனம் இளகி காமதேவனுக்கு அருவுருவ (சூட்சும) உடலளித்து அவன் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரிவான், உண்மை காதலின், அன்பின் உருவமாய் இருப்பான் என்று அருள் செய்தார்.

இதன்பிறகு முருகன் (கந்தன்) பிறந்து கொடிய அசுரர்களை அழித்து தேவர்களை காத்த கதையை நாமறிவோம். (காளிதாசனின் குமார சம்பவத்தில் இந்தக் கதை மிகவும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது)

சற்றே நீளமான பதிவாயினும் சுவாரசியமானதல்லவா, இனி சிற்பங்களை காண்போம்.

முதலாவதாக முழு சிற்பத் தொகுதிகளையும் பார்க்கலாம், மேற்பாக முதல் வரிசையில் சிவயோகிகள் இருக்க, கீழே கடைசி வரிசையில் பயபக்தியுடன் சிவகணங்கள் இருக்க, மொத்த கதையும் மூன்று காட்சிகளில் விளக்கப்பட்டுள்ளது.

முதல் காட்சி, ஆழ்ந்த தவத்தில் இருக்கும் சிவன், மிகச் சிறிய சிற்பமாயினும் சிவனின் கண்கள் மூடியுள்ளதை மிக நுணுக்கமாக வடித்துள்ள சிற்பியின் கலைத்திறனை கட்டாயம் பாராட்ட வேண்டும். வசீகர காமவேந்தன் மலர்க்கணையை சிவனை நோக்கி குறிவைக்கிறான். (காமதேவனின் இதழ்களில் புன்சிரிப்பு தெரிகிறதா? சற்றே கூர்ந்து கவனியுங்கள்!)

இரண்டாவது காட்சியில் முதலில் வருவது, வீழும் காமன், அழுது புலம்பும் ரதி. அடுத்த சிற்பம் சற்றே சிதைந்திருந்தாலும் வீழும் காமனை அழகாய் காட்டுகிறது. தலையில் அடித்துக் கொண்டு அழும் ரதியையும் பாருங்கள். (தென்னிந்தியாவின் துக்க வீடுகளில் இது போன்ற காட்சிகளை காணலாம்)

முடிவாக, இரண்டாவது காட்சியின் வலப்புறம் காண்பது பயபக்தியுடன் மீண்டெழுந்த மன்மதனும் மகிழ்ச்சியில் திளைக்கும் ரதியும் சிவனிடம் ஆசிபெறுகிறார்கள், பூதகணங்களும் சூழ்ந்திருக்கின்றன.

இதை காணும்பொழுது கம்போடியாவிலுள்ள பண்டியா ஸ்ரெய் காம்ப்ளக்ஸில் உள்ள இதே போன்ற சிற்பங்களை நினைவுபடுத்துகிறது. இந்த சிற்பங்களை பிறகு தனிப் பதிவில் பார்க்கலாம்.

பன்னிரு திருமுறை குறிப்பு – இதோ ( நன்றி திரு வி. சுப்பிரமணியன் ஐயா அவர்கள் )

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=41030&padhi=103&startLimit=3&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC


தூமென் மலர்க்கணை கோத்துத்தீ வேள்வி தொழிற்படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த கடனாகைக் காரோணநின்
நாமம் பரவி நமச்சிவாய வென்னும் மஞ்செழுத்தும்
சாமன் றுரைக்கத் தருதிகண் டாயெங்கள் சங்கரனே

தூய மெல்லிய பூக்களாகிய அம்புகளைக் கோத்துக் காமாக்கினியை வளர்க்க முற்பட்ட மன்மதன் சாம்பலாகுமாறு கோபித்த கடல்நாகைக் காரோணனே ! எங்கள் சங்கரனே ! உன் திருப் பெயரை முன்நின்று துதித்து நமசிவாய என்ற திருவைந்தெழுத்தையும் அடியேன் உயிர்போகும் பொழுது சொல்லும் பேற்றினை நல்கு வாயாக.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1228&padhi=72&startLimit=476&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அடியாராம் இமையவர்தங் கூட்டம் உய்ய
அலைகடல்வாய் நஞ்சுண்ட அமுதே செங்கண்
நெடியானும் நான்முகனுங் காணாக் கோல
நீலவிட அரவணிந்த நிமலாவெந்து
பொடியான காமன்உயிர் இரதி வேண்டப்
புரிந்தளித்த புண்ணியனே பொங்கர் வாசக்
கடியாரும் மலர்ச்சோலை மருங்கு சூழும்
கவின்மருகற் பெருமானே காவாய் என்றும்.

`அடியவர்களாகிய தேவர்களின் கூட்டம் முழுதும் உய்யும் பொருட்டாய் அலைபொருந்திய பாற்கடலினி டத்துத் தோன்றிய நஞ்சையுண்டருளிய அமுதமே! சிவந்த கண் களையுடைய நீண்ட திருமாலும் நான்கு முகங்களையுடைய நான்முக னும் காணாத கோலம் உடைய நீலநிறமுடைய நச்சுப் பாம்புகளை அணியாய் அணிந்த விமலனே! வெந்து சாம்பலாகிவிட்ட காமனின் உயிரை அவன் மனைவியான இரதியின் வேண்டுதலுக்கு இணங்க மீண்டும் அளித்த புண்ணியனே! மலர்களின் மணம் மிக்க சோலைகள் எங்கும் சூழவுள்ள அழகுடைய திருமருகலில் வீற்றிருக்கும் இறை வனே! காப்பாயாக!’ என்று கூறியவள் பின்னும்,


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சாகும் தருவாயில் சரணம் – பாகம் 2 எல்லோரா

சில தினங்களுக்கு முன் – அந்தகன் வதம் எல்லோரா சிற்பம் பார்த்தோம். இப்போது அங்கேய இன்னொரு வடிவம் – உள் சுவர்களில் செதுக்கப்பட்ட சிற்பம். மிகவும் சிதைந்த நிலையில் சிற்பம் இருந்தாலும், மிக அருமையான உணர்வுகளை வெளி கொணரும் சிற்பம்.

ஈசனின் கோபம் சற்று தணிந்த நிலையில் உள்ளது. உமையோ அதிகார தோரணையில் அமர்து இருக்கிறாள். ஈசனின் காலில் மிதிபடும் ஒரு அசுரனின் உருவம் மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது – அவன் கையில் ஒரு ஆயுதம் / கதை – ஒருவேளை இது கதையின் முதல் பாகமோ – உமையை தாக்க செல்லும் அசுரனோ ? சரியாக தெரியவில்லை.

எனினும் சூலத்தின் உச்சியில் – அந்தகன் குத்து பட்டு இருக்கும் காட்சி மிக அருமை. சாகும் தருவாயில் இரு கரம் கூப்பி சரண் அடையும் அந்தகன் – அருமை.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

தக்ஷன் தலையை கொய்த ஈசன் – தஞ்சை பெரிய கோயில்

நண்பர் சதீஷ் குமார் அவர்கள் சென்ற வாரம் தஞ்சை செல்லும் பொது – வழக்கம் போல படங்கள் எடுத்து வருமாறு கேட்டேன் . அவரும் அருமையான பல படங்களை எடுத்து வந்துள்ளார் . அதில் ஒன்றை இன்று பார்ப்போம். முதலில் கதை !!

தக்ஷன் வரலாறு

தக்ஷன் எனும் அரசன் முற்பிறவியில் செய்த தவத்தின் பயனாக பார்வதி தேவி அவரின் மகளாகப் பிறக்க அவளை சிவனுக்கு மணம் முடிக்க தேவர்கள் தக்ஷனிடம் பெண் கேட்டு வருகையில் ஆணவத்தால் அறிவிழந்த தக்ஷன் சிவபெருமான் தனது காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று வேண்டவே சிவபெருமான் பார்வதியைச் சிறை எடுத்துச் சென்று மணம் புரிந்து கொண்டார். அவன் விருப்பத்துக்கு மாறாக அவன் மகள் தாக்ஷாயிணியை சிவன் மணந்து கொண்டதால், வேண்டும் என்றே தக்ஷன் ஒரு மகா வேள்வி நடத்த எத்தனித்து, அதற்கு தன் மாப்பிள்ளையை அழைக்காமல் அவமானம் செய்தான்.

அந்த வேள்வியைக் காண தான் செல்ல வேண்டுமெனப் பரமேஸ்வரனிடம் அனுமதி கேட்டாள் மலைமகள். பரமேஸ்வரன் அந்த நேரத்தில் தியானத்தினால் ஆலோசித்து, “இந்த வேள்வியில் என்னுடைய அம்சமாக உள்ள ருத்திரனுக்கு ஹவிர் பாகம் இல்லாமல் இந்த யாகம் நடத்த உள்ளனர். ஆகவே, என்னை அவமதிப்பதற்காகவே இந்த யாகம் நடத்தப்படுவதால் நீ செல்ல வேண்டாம்”, என்று சொல்கிறார்.

ஆனால் தந்தை பாசம் கண்ணை மறைக்க அழையா விருந்தாளியாக தாக்ஷாயிணி அங்கே போனாள். தக்ஷன் வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்து வேள்வியைத் தொடங்குகிறான். தாக்ஷர்யணியை எவரும் விசேஷமாகக் கவனிக்கவில்லை. சிவனுக்கு நடந்த அவமானங்களை கண்டு சகிக்க முடியாமல் அங்கேயே மறைந்து போனாள்.

அப்பொழுது, பரமேஸ்வரனுக்கு விவரம் தெரிந்து, கோபத்தில் தக்ஷ்ன் தலையைக் கொய்து – அதனை வேள்வி தீயினிலே இட்டு எரிக்கிறான் ஈசன். இதை காணும் அனைவரும் அஞ்சி நடுங்குகின்றனர்.

பின்னர், பிரம்மன் ( தக்ஷனின் தந்தை ) ஈசனிடம் சென்று வேண்டிய்தின் பெயரில் , வெட்டப்பட்ட தலைக்கு பதில் ஒரு ஆட்டின் தலையை வைத்து உயிர் பெறுகிறான் தக்ஷன்.
இவற்றை பெரிய கோவில் படிகளின் கைப்பிடியில் செதுக்கி உள்ள அழகு சிற்பங்கள்.. அருமை. ஒவ்வொன்றாக பார்ப்போம்.

முதலில் இது இருக்கும் இடம் ( நண்பர் சதீஷ் அருமையாக படம் எடுத்துள்ளார் ) – நமக்கு சிற்பத்தின் அளவை விளக்க ஒரு பேனாவை வைத்து படங்களை பிடித்துள்ளார். கதையை விளக்க சிற்பங்களை பாருங்கள்.இரு பக்கமாக காட்சிகள் நகருகின்றன – ஒரு பக்கம் தக்ஷன் தலை கொய்தல் . மற்றொறு பக்கம் அவனுக்கு ஆட்டின் தலையை பொருத்துதல் .


முதல் தலை கொய்தல் – முனிவர்கள் அனைவரும் கூடி நிற்கும் காட்சி ( நீங்கள் பார்க்கும் பொது மிகவும் பின்னால் இருக்கும் இடம் ) – அதை அடுத்து மேல் தளத்தில் மிக அழகாக அமர்ந்திருக்கும் ஈசன், நந்தியின் மேல் ஒரு கை வைத்து அழகாக நிற்கும் உமை, அவர்களை அடுத்து ஒரு தோழிப்பெண்.

கீழே – முக்கிய காட்சி – தக்ஷனின் தலையைக் கொய்து தீயில் இடும் ஈசன் ( அதை கண்டு முகம் திரும்பி நகரும் முனிவர். அடுத்து தலை வெட்டப்பட்டு முண்டமாக கிடக்கும் தக்ஷன் – அவன் நிலையை கண்டு கைகளை மேல உயர்த்தி அழும் தக்ஷனின் துணைவி . அதை அடுத்து இந்த காட்சியை கண்டு பார்போர் அலறி பயந்து ஓட – என்ன ஒரு அருமையான படைப்பு – முன்று பெண்மணிகள் , அவர்களை அடுத்து முன்று முனிவர்கள் – அவர்களின் தோற்றம், திரும்பி, முகத்தில் பயம் – அந்த கோர காட்சியை காட்சியை பார்த்துக்கொண்டே , ஓடும் படி செதுக்கி உள்ளான் சிற்பி.. கடைசியில் இருவர் – ஓட ஆரம்பித்தே விட்டனர். ( சிற்பத்தின் அளவை குறிக்க பேனாவை கவனியுங்கள் )

சரி – அடுத்த பாகம் – மூன்று ரிஷிகள் – மற்றும் பிரம்மன் ஈசனிடம் வேண்டும் காட்சி , தக்ஷனின் தவறை மன்னித்து அவனுக்கு உயிர் பிச்சை கேட்டு நிற்கின்றனர். என்ன ஒரு அருமையான சிற்பம் – அதுவும் அந்த ஈசனின் வடிவம் – மான் , மழு , இடையில் தொங்கும் நாகம் , மிக அருமை.


ஈசனும் மனம் இறங்க – கடைசி காட்சி – மேல பூத கணங்களும் விண்ணவரும் இசை முழங்க , ஆட்டின் தலையுடன் ஈசனை வணங்கும் தக்ஷன் – மற்றும் மற்ற முனிவர்கள் ஆசி பெறுகின்றனர்.

இதோ தேவாரம் குறிப்புகள்

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=81140&padhi=14&startLimit=10&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்பற உந்தீபற.

கடுஞ்சினத்தால் தொடங்கின யாகத்துக்கு அதி தேவதையின் தலை அற்ற விதத்தை நமது பிறவித் தொடர் அற்று ஒழி யும் வண்ணம் பாடி உந்தீபறப்பாயாக!

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=81140&padhi=14&startLimit=11&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கநின் றுந்தீபற.

சிறுவிதியின் தலையற்றுப் போக அதற்குப் பிரதியாக ஆட்டின் தலையைப் பொருத்தின விதத்தைப் பாடித் தனங் குலுங்க நின்று உந்தீபறப்பாயாக!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சாகும் தருவாயில் சரணம் – எல்லோரா

முன்னர் கஜமுகாசுர வதம் பார்த்தோம், இன்றைக்கு அந்தகன் வதம் – ஒரு மிகப் பெரிய சிற்பம் – எல்லோரா.

முதலில் கதை – ஒரு முறை ஈசன் தவத்தில் இருக்கும்போது உமை விளையாட்டுத் தனமாய் தனது விரல்களால் ஈசனின் மூன்று கண்களையும் மூடினாள். அதனால் அண்ட சராசரமும் இருளில் தவித்தது. அப்போது ஈசனின் நெற்றிக்கண் சூட்டினால் உமையின் கை வேர்க்க, அந்த வியர்வைத் துளிகளினால் ஒரு குருட்டு அசுரக் குழந்தை உரு பெற்றது. பார்க்க மிக அருவருப்பைத் தந்த அந்தகனைக் கண்டு உமை அஞ்ச – அதை ஈசன் ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுக்கு கொடுத்து விட்டார். ஹிரண்யாக்ஷன்னை விஷ்ணு வதம் செய்ய, குருட்டுக் குழந்தை பெரியவனாகி அசுரர்களுக்கு தலைமை ஏற்று – கடுந்தவம் புரிந்து பிரமனிடத்தில் வரம் கேட்டது – சாகாதிருக்க வரம். அதைத் தர பிரம்மன் மறுக்க, அந்தகன் தான் தனது அன்னையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் – தான் தனது அன்னை மீது மோப்க வெறி கொண்டு ஆசை பட்டால் இறக்க வேண்டும் என்றும், இறக்கும் தருவாயில் தனக்கு கண் பார்வை வர வேண்டும் என்றும் வரம் பெற்றான். அவனுக்கு தன் அன்னையை பார்க்க வேண்டும் என்று அப்படி ஒரு ஆசை – அசுரனுக்கும் தாய் பாசம்.

பல காலம் கழிந்த பின், அந்தகன் பூலோகத்தில் ஜீவராசிகளுக்கு பல இன்னல்கள் தந்த பின், மேல் உலகுக்கும் வந்து அங்கு உள்ள பெண்களை கவர்ந்து செல்ல முற்பட்டான். அப்போது உமையின் அழகை செவி வழி செய்தியாகக் கேட்டு , அவளுக்காக ஈசனிடம் போரிட்டான். அப்போது அவனுக்கு அது அவனது பெற்றோர் என்று தெரியாது. ஈசனும் கடும் போர் புரிந்து முடிவில் தனது சூலாயுதத்தால் அவனை குத்தி மேல உயர்த்த – அவன் கண் திறந்து தனது பெற்றோரை தரிசித்தான்.

சிற்பத்தை இப்போது பாருங்கள் – பதினைந்து அடி உயரம் , உமை அஞ்சி மிக்க பதற்றமாக, ஈசனோ கடுங் கோபத்தில் – கோரைப் பற்கள், பிதுங்கும் கண்கள் என இருக்கும் அந்தகனை ஈட்டியால் குத்தி மேலே உயர்த்திப் பிடித்து – ஆனால் சாகும் தருவாயில், தன் அனைத்து வலியையும் பொறுத்து – இரு கரம் கூப்பி தனது பெற்றோர் இடத்தில் சரண் அடையும் அந்தகன் – அருமை.

இதோ குறிப்பு. ( வதம் மட்டும் தான் அங்கு உள்ளது – மீதி மிச்சம் எல்லாம் எனக்கு பாட்டி சொன்ன கதை )

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=1&Song_idField=10120&padhi=012&startLimit=5&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

1.12.5

அறையார்கழ லந்தன்றனை அயின்மூவிலை யழகார்
கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில்
முறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு
முறையான்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.

ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த அந்தகாசுரனைக், கூரிய மூவிலை வடிவாய் அமைந்த குருதிக்கறைபடிந்த அழகிய நீண்ட வேலின் முனையில் குத்தி ஏந்திய சிவபெருமானது இடம் யாதெனில், முனிவர்கள் பலரும் வேதங்கள் பலவும் சொல்லி நறுமலர் சந்தனம் முதலான பொருள்களைக் கொண்டு முறைப்படி சார்த்தி வழிபடுகின்ற திருமுதுகுன்றமாகும். அதனை நாம் அடைவோம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

தந்தையை கண்டு பயப்படும் முருகன் -புள்ளமங்கை

இன்று ஒரு அற்புத சிற்பம். (நன்றி சந்திரா) புள்ளமங்கை கோவில் சிற்பம். (பெரிய அளவில் இந்த சிற்பம் பல இடங்களில் உள்ளது – தஞ்சை அருங்காட்சியகத்தில் ஒரு மிக முக்கியமான சிற்பம் – அதனைப் பின்னர் பார்ப்போம்). பழைய பதிவை நண்பர் சதீஷ் அவர்களின் படங்களை கொண்டு மீண்டும் இடுகிறேன்.

இந்த சிற்பத்தை முழுவதுமாக ரசிக்க அதன் அளவை முதலில் பார்க்க வேண்டும் , அது எங்கே உள்ளது என்பதும் மனதில் கொள்ள வேண்டும்.

முதலில் சற்று தொலைவில் இருந்து .


கணினி கொண்டு கொஞ்சம் வெளிச்சம் போடுவோம். இப்போது தெரிகிறாதா?

சரி, இப்போது கதை , நான் சொல்வதை விட அருமையான தேவாரப் பாடல் குறிப்பு தருகிறேன்.

சம்பந்தர் தேவாரம் – திருமுறை 1.10.8

ஒளிறூபுலி அதள்ஆடையன் உமைஅஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரண வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட அடர்த்தான்இடம் அண்ணாமலை அதுவே.

ஒளி செய்யும் புலித் தோலை ஆடையாகக் கொண்டவனும், உமையம்மை அஞ்சுமாறு பிளிறும் குரலை உடைய மதம் பொருந்திய யானையின் தலையைப் பிடித்து அதன் தோலை உரித்து எளிதாக விளையாடிய விகிர்தனும், இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி இரத்த வெள்ளத்தில் அடர்த்தவனும் ஆகிய சிவபெருமானது இடம் திருவண்ணாமலை.

கஜமுகாசுரன் – அசுரன். மக்களுக்கு தீங்கு செய்தான். ஈசன் அவனை வைத்தான்.
எவ்வாறு – சிற்பத்தை பாருங்கள்.

சூலம் கொண்டு குத்தி, அவன் தலையை காலின் அடியில் இட்டு , அதன் மேல் ஆடி, அவன் தோலை உரித்து – அப்பப்பா – பயங்கரம். சிற்பி எவ்வாறு இதை செதுக்கி உள்ளான் பாருங்கள் – உடலை வளைத்து ஆடும் ஈசன், யானையின் தலை ( சூலத்தின் அடியில் ), யானையின் தோலை விரித்துப் பிடித்து ,

அப்போது அந்த குள்ள பூதகணம் – ஏளனம் செய்கிறது விழுந்த அசுரனை பார்த்து . மேலே இன்னொரு பூத கணம் இந்தா காட்சியை அப்பப்பா என்கிறது.

இந்த கடும் சண்டையை பார்க்க மனம் இல்லாமல் திரும்பும் உமை – அவள் மடியில் குழந்தை முருகன் – மிரண்டு அடுத்து இருக்கும் தோழியிடம் தாவும் பாவம் – அருமை.


– இது மிகவும் சிறிய சிற்பம் என்றேன்…ஆனால் அது போதுமே எங்கள் சிற்பிக்கு – அதில் ஒரு கதை சொல்லி அதில் அனைத்து முக பாவங்களை கொண்டு வந்துள்ளான். யானை உரி போர்த்திய முர்த்தி. சரி, சிறியது என்றால் எவ்வளவு சிறியது?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

இராவணனை சீண்டும் குட்டி பூதகணம், யானைக்கும் அடி சறுக்கும் அல்லவா

இராவணன் கைலாயத்தை அசைக்கும் காட்சி – முதலில் நாம் கம்போடியா சிற்பம் பார்த்தோம் …இப்போது எல்லோரா .
888891897
இதில் நாம் கவனிக்க வேண்டியது என்ன வென்றால் – தனது ஆணவத்தாலும் தலைகனத்தாலும் அரக்கன் அவன் செய்த காரியத்தை தண்டிக்கும் சிவன் – ( சிதைந்தாலும் … அம்மை அப்பன் முகத்தில் என்ன ஒரு கலை) அவ்வாறு கைலாயத்தின் அடியில் சிக்கி இருக்கும் அவனை கண்டு சிவ கணங்கள் அனைத்தும் பரிகாசம் செய்கின்றன. யானைக்கும் அடி சறுக்கும் அல்லவா… வலிமை மிக்க ஒருவன் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அவனை கண்டு சிறுவரும் நகைபதுண்டு. அதனை எல்லோரா சிற்பி கல்லில் வடித்திருபதை பாருங்கள்.
895903899901906
ஒரு பக்கம் ஒரு குள்ள கணம் கை நீட்டி ஏளனமாக சிரிக்கிறது – மற்றொரு
பக்கம் ஒரு கணம் பின்னால் திரும்பி குனிந்து சொல்லமுடியாத இடத்தை
காட்டி… அதை அடுத்து ஒரு கணம் சிக்கி இருக்கும் அவன் விரல்களை
கணக்கு வாத்தியார் போல் தடி கொண்டு அடிக்கிறது
893901

இந்த சிலை மிக பெரியது என்று சொல்லி விடலாம்…எப்படி உணர்த்த முடியும்..சரி, இதோ படம்.
910

quoting appar’s verses as below:

அப்பர் பாடியது 3-11.

கடுகிய தெர்செலாது கயிலாயமீது
கருதேல் உன் வீரமொழி நீ
முடுகுவது அன்று தன்மம்மென நின்று பாகன்
மொழிவானை நன்று முனியா
விடுவிடு வென்று சென்று விரைவுற்று அரக்கன்
வரையுற்று எடுக்க முடிதோள்
நெடுநெடு வீற்றுவிழ விரலுற்ற பாத (ம் )
நினைவுற்றது என் தன் மனனே

உரை :

தனக்கு சமனாக யாருமே இருக்கக் கூடாது அந்தப் பரம்பொருளே யாயினும் என்று அகங்காரம் பட்டு, அந்தப் பரம்பொருளை கயிலையில் இருக்கும் சிவபெருமானாகக் கருதி அந்தக் கையிலயையே அசைத்து தனது அதிகாரத்தை அங்கு நிறுவ முயன்று ஓர் தேரில் மிக விரைவாக சென்றான் இராவணன். அப்போது அந்த தேர்பாகன் அத்தை கண்டு போருக்காதும் இயலாமையும் உணர்ந்து , அந்தக் கைலாயம் மீது இந்த தேர் செல்லாது என்பதோடு அவ்வாறு செலுத்துவது தருமமும் அன்று என்று மொழிவான். அதனை கேட்டும் மனம் திருந்தாது, அந்தப் பாகனை சினந்து இன்னும் விரைவாக செலுத்துக என்றான். இவ்வாறு மிக விரைவாக சென்று கைலையை அடைந்து சிவபெருமான் பார்வதியோடு இருக்கும் கயிலாய மலையை அசைக்க கருதி எடுக்க, அது கண்டு சிவபெருமான் சிறிதே தன் விரலால் நசுக்க, நசிபுண்டு தலையில் இருந்த கிரீடம் உடம்பு எல்லாம் நெடு நெடுவென தளர்ந்து விழ , அவனும் அலறி தன் தவற்றினை உணரத்தான். இப்படிப்பட்ட வல்லமை மிக்க இறைவனை இன்றைய நிலையில் நினைவு கூர்ந்து மகிழ்ந்து என் மனனே

முதலில் பூத கணங்களின் வேடிக்கை விளையாட்டு சிற்பியின் சிந்தனை என்று நினைத்தேன்… அதையும் அப்பர் தனது பாடலில் பாடியுள்ளார் (நன்றி திரு திவாகர் மற்றும் திரு சுப்ரமணியம் )…ஆஹா …இதோ வரிகள்

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=4034&padhi=&startLimit=8&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அப்பர் தேவாரம் – திருமுறை 4.34.8

பக்கமே விட்ட கையான் பாங்கிலா மதியன் ஆகிப்
புக்கனன் மாமலைக் கீழ்ப் போதுமா(று) அறிய மாட்டான்
மிக்கமா மதிகள் கெட்டு வீரமும் இழந்த வாறே
நக்கன பூதம் எல்லா[ம்] நான்மறைக் காட னாரே.

ஒவ்வொரு பக்கமும் பத்துக் கைகளை உடைய இராவணன் தன் தீச்செயல் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவு இல்லாதவனாய் மலையின் அடியில் புகுந்து வெளியே வரும் வழியை அறிய இயலாதவனாய் மேம்பட்ட அறிவும் கெட்டு வீரத்தையும் இழந்த நிலையைக் கண்டு மறைக்காட்டுப் பெருமானுடைய பூத கணங்கள் சிரித்தன.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஊடல், கூடல், காதல்

ஊடல் கூடல் காதல் என்பார்கள்.. … சிவபெருமானின் அழகிய சிற்ப வடிவம் ஒன்றை சமிபத்தில் கோவில் உழாவாரப்பணி குழுவில் கண்டேன்.

 

 

 

 

சிவகங்காதரா என்னும் இந்த அற்புத சிற்ப வடிவம் – இதனை கங்கை கொண்ட சோழபுரத்திலும் காணலாம்.

 

 

 

திருச்சி மலை கோட்டையில் உள்ள பல்லவ மகேந்திரனின் புகழ் பெற்ற சிற்பமும் இவ்வடிவமே.( அது லலிதாங்குர பல்லவ க்ரிஹம் …ஆ!! அதையும் நாம் பின்னர் பார்போம் )

 

தன் வலது கையால் தனது ஜடையில் இரு ரோமங்களை சிவன் நீட்ட அதில் கங்கை இறங்கும் அற்புத சிற்ப வடிவம் – திருச்சி வடிவம் இதுவே… ஆனால் நமது சிற்பி ஒரு படி முன்னேறி, இதை காணும் உமை பொறுக்காமல் சினத்துடன் அவிடத்தை விட்டு விலக ஒரு கால் வைக்க, தன் மற்ற இரு கரங்களாலும் சிவபெருமான் ஆசுவாசப்படுத்த முயல்வது போல், அற்புத கற்பனையுடன் செதுக்கி உள்ள அக்காட்சி அருமை.

மற்ற படங்களுக்கு நன்றி
http://www.kumbakonam.info/kumbakonam/gkchopu/images/vimsta/viar16.jpg


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment