சிலைத் திருட்டு – பாகம் பதினைந்து – 1916 புத்தகம் கொடுக்குத துப்பு ..

தமிழக கோயில்களில் உள்ள சிலைகளை முறைப்படி படம் எடுத்து வைப்பதன் முக்கியத்துவத்தை நிரூபிக்க இதனை விட ஒரு பெரிய உதாரணம் தேவை இல்லை.

1916 ஆண்டு வெளிவந்த நூல் என்றவுடன் ஏனோ தானோ என்று தான் இருக்கும் என்று எண்ணி வேக வேகமாகப் பக்கங்களை புரட்டினேன் – செப்புத் திருமேனிகள் படம் கண்ணில் பட்டது. எங்கேயோ பார்த்த நினைவு.

South-indian images of gods and goddesses (1916)

இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

பக்கம் 109 (129 in the pdf) உள்ள படம் தான் எனது ஆர்வத்தை தூண்டியது.

சோமஸ்கந்தர் சிலை – உலோகம் – சிவன்கூடல் என்ற குறிப்பு மட்டுமே இருக்கிறது.

பொதுவாக சோமஸ்கந்தர் வடிவம் ஒரே பீடத்தில் அமர்ந்திருப்பது போலவே இருக்கும் – இந்த சிலையில் வெவ்வேறாக வார்த்து இருப்பது கவனிக்கத்தக்க அரிய விஷயம். இப்படி உலோகத்தில் செய்வது கடினம் – இரண்டு பீடங்களை ஒரே அளவில் வார்க்க வேண்டும் – அதில் உள்ள கோடுகள் உட்பட அனைத்தும் ஒரே சீராக இருக்கவேண்டும்.

இதுவே நமக்கு தரும் முக்கிய துப்பு/குறிப்பு. தற்போது சிங்கை அருங்காட்சியகத்தில் இருக்கும் சிலை மட்டுமே இது போல இருக்கிறது. இந்த சிலையை அருங்காட்சியகம் 2000 ஆம் ஆண்டு வாங்கியது. யாரிடம் இருந்து வாங்கினார்கள் என்ற விவரங்கள் இல்லை.

இரு சிலைகளையும் ஒப்பிட்டு பார்ப்போமா?









இரண்டு சிலைகளும் ஒன்றே என்பது தெளிவாக தெரிகிறது. அக்கம் பக்கம் கேட்டு பார்த்தால் இந்தக் கோயிலில் இப்போது ஒரு சிலை கூட இல்லை. இந்தக் கோயில் பற்றி வேறு எந்த நூலிலும் தகவல்கள் இல்லை. இந்த நூலிலும் வேறு எந்த சிலை படமும் இல்லை.

இவற்றைக் கொண்டு அதிகாரிகள் மேலே துப்பு துலக்கினால் பல உண்மைகள் வெளி வரும்!! இந்த திருட்டு உறுதி செய்யப்பட்டால் இந்த சிலை திருட்டு கும்பல் 2000 ஆண்டுக்கு முன்னரே இந்த செயல்களை செய்தார்கள் என்பதும், இன்னும் பல கோயில் சிலைகளை திருடி விற்ற செயல்கள் அம்பலம் ஆகும்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

திருட்டு சிலை – பாகம் இரண்டு. சுத்தமல்லி முருகன்

நமது பாரம்பரிய சின்னங்கள் சூறையாடப்படுவதை எதிர்த்து தொடரும் எங்கள் முயற்சியின் விளைவால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. இவை கண்டிப்பாக வெளிச்சத்திற்கு வரவேண்டும் – அப்படி கொண்டு வந்தால் தான் இந்த திருட்டுக்கு மட்டும் அல்ல இதைப் போல இனியும் திருட்டுகள் தொடராமல் ஒரு முற்றுப் புள்ளி வைக்க இயலும். இணையம், தொழில் நுட்பம் என்று பல துறைகளில் வல்லுனர்கள் நம்மிடையே இருந்தும் நம் குலதனங்கள் நமது கண்முன்னரே திருடப்படுவது மட்டும் அல்லாமல் பகிரங்கமாக விற்கவும்படுகின்றன.

ஒரு பக்கம் குருட்டு நம்பிக்கைகளை காட்டி எங்களை போன்ற ஆர்வலர்களை இந்த அரிய பொக்கிஷங்களை படம் எடுக்க விடாமல் செய்யும் கூட்டம் நமது ஆலயங்களில் உள்ளன. அவர்களுக்கு இந்தப் பதிவு ஒரு பாடமாக அமையும். படம் எடுத்தால் பவர் போய்விடும் என்று எங்களை துரத்தும் இவர்களுக்கு படம் எடுக்காவிட்டால் சாமியே போய்விடும் என்பது புரிய வேண்டும்.

இன்னொரு பக்கம் நமது அரசு, காவல் துறை. திருமேனிகளுக்கு தகுந்த பாதுகாப்பை அளிக்காமல், காலை பாட்டு பாடி எழுப்பி, நீராட்டி, அலங்காரம் செய்து , உணவு படைத்து, மூன்று வே​ளை பூஜித்து, இரவு தாலாட்டு பாடித் தூங்க வைக்கப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்தி பாதுகாப்பு என்ற பெயரில் பாசறையில் தரையில் அடுக்கி வைத்துள்ளனர்!!! அதுவும் எந்தவித பட்டியலும் இல்லாமல் அடைத்து வைப்பது என்பது எந்த விதத்தில் நல்லது? அங்கே அவை களவு போனாலோ பழைய சிலையை அப்புறப்படுத்திவிட்டு புதிய சிலை ஒன்றை செய்து வைத்து விட்டலோ எப்படி அரசாங்கம் கண்டுபிடிக்கும்?

சரி, இந்தத் திருட்டுக்கு வருவோம். இந்தக் களவு பற்றி காவல் துறை தனது
இணைய பக்கத்தில் 2009 ஆம் ஆண்டு இவ்வாறு தகவல்களை வெளியிட்டுள்ளது என்று அறிகிறோம். இதில் என்ன சோகம் என்றால் மிகவும் முக்கியமான இந்த வழக்கில் சம்பந்தர் சிலையை கண்ணன் என்றும், சண்டிகேஸ்வரர் சிலையை முருகன் என்றும் அஸ்திர தேவர் சிலையை தீபலக்ஷ்மி என்றும் தங்கள் தலத்தில் பெயர் இட்டுள்ளனர். சென்னையில் இவை பற்றி தெரிந்த வல்லுனர்களுக்கா பஞ்சம்!!!

அதிர்ஷ்டவசமாக அங்கேயே ஒரு இணைப்பும் உள்ளது அதில் உள்ள பெயர்கள் பரவாயில்லை. எனினும் படங்கள் மிகவும் மங்கலாகவும் சிறியனவாகவும் உள்ளன. ஆனால் இவையாவது உள்ளனவே – 1970,1980களின் ​போது இந்தப் படங்கள் எடுக்கப்பட்டன. பல படங்கள் எடுத்து பட்டியல் செய்து வைத்தது பாண்டி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் முயற்சி என்று நம்புகிறோம்.

பல முறை கேட்டும் இந்தப் படங்களை பெரிய அளவில் எனக்கு தர அந்த நிறுவனம் இணங்க வில்லை. நான் முனைவர் பட்ட படிப்புக்கோ அல்லது ஏதோ ஒரு பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து ஆய்வுக்காகவோ செயல்பட்டால் தான் தர முடியுமாம்! நான் எனது சொந்த படிப்பிற்கோ பட்டம் பெறவோ இவற்றை கேட்கவில்லை – கொள்ளை போன நமது கலைப் பொருட்களை திரும்பப் பெற வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் என்று பல முறை சொல்லியும் பயன் இல்லை – இந்த இணையப் படங்கள் மட்டுமே எனக்கு.

விருதாச்சலம் அர்தனாரி ஆஸ்திரேலியா சென்ற திருட்டு பாதை என்ற பதிவின் மூலம் இந்த கும்பலின் கொள்ளைகளை பற்றி எழுதிய தினம் முதல் கடந்த இரண்டு மாதங்களாய் பல நூறு படங்களை ஆராய்ந்து இந்த உண்மைகளை உங்கள் முன்னர் வைக்கிறேன்.

கூகிள் உதவி மூலம் கபூர் அமெரிக்காவில் நடத்தி வந்த ஆர்ட் ஆப் தி பாஸ்ட் என்ற கா​லெரி மற்றும் அதன் மாதாந்திர பட்டியல்கள் கிடைத்தன. இன்று செப்டம்பர் 2009 ​கேடலாக், குறிப்பாக அதில் இருக்கும் ஒரு சிலையை பார்க்க போகிறோம்.

பட்டியலில் 14 ஆவதாக வரும் முருகன் சிலை.

அருமையாக, விதம் விதமாக படம் பிடித்து கலர் பிரிண்டிங் செய்து விளம்பரம் செய்துள்ளார்கள்.



மீண்டும் நமது காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் உள்ள சிலைகளின் படங்களை பாருங்கள். குறிப்பாக சிகப்பு நிறத்தில் நான் சுட்டிக்காட்டி இருக்கும் முருகன்.

முடித்த அளவிற்கு அந்த படத்தை பெரிதுப்படுத்தி கணினியில் சற்று சரி செய்துள்ளேன்.

அருமையான சிலை – முருகன் சிலை. சோழர் காலத்து சிலை இல்லை (சற்று அழகு கம்மி தான்!) – விஜயநகர அரசு காலம்.

இரண்டும் ஒரே சிலையா? ஒன்று எழுபதுகளில் சுத்தமல்லி கோவிலில் இருந்த​போது எடுத்த படம் – மற்றொண்டு கடல் கடந்து அமெரிக்க சென்ற பிறகு ….

செப்புச் சிலை வார்க்கும் கலை சோழர் காலத்திருக்கு பிறகு சற்று அழகு குறைந்தாலும், மெழுகை உருக்கி செய்யும் பாணி அதே தான். விஜயநகர அரசர்கள் காலத்திலும் கையால் மெழுகில் முதலில் படிமம் செய்யும் முறை தொடர்ந்தது – எனவே ஒவ்வொரு சிலைக்கும் தனித்தன்மை உண்டு. இதை மனதில் கொண்டு சிலையின் கை – குறிப்பாக கட்டை விரல் கையுடன் இணைக்கப்படும் பாணியை பாருங்கள். இரண்டு படங்களிலும் அதே போல இருப்பதை பாருங்கள்.


அதே போல இந்த சிலையின் காதணிகள் மிகவும் வினோதம். இதிலும் ரெண்டு படங்களும் ஒத்து போகின்றன. மார்பில் உள்ள பதாகம் கூட அதே அச்சு அசல்….


இந்தப் படம் கொண்டே இந்த சிலைகள் ஒன்றே என்று நாம் நிரூபணம் செய்ய இயலும். இந்த சிலை இப்போது எங்கே உள்ளது – ஏதாவது அருங்காட்சியகத்திற்கு அல்லது ஆர்வலருக்கு விற்றுவிட்டார்களோ? இல்லை அமெரிக்காவில் ஆர்ட் ஆப் தி பாஸ்ட் நிறுவனக் கிடங்கில் இன்னும் இருக்கிறதா?

இந்த திருட்டுச் சிலையின் படத்தில் இன்னும் ஒரு துப்பு மறைந்து இருக்கிறது – இல்லாத ஒன்று தான் துப்பு. சிலையின் அடியில் இருந்த அடி மேடை அகற்றப்பட்டுள்ளது. இது தற்செயலான செயல் இல்லை. வேண்டும் என்று அதன் அடி பாகம் பிரிக்கப்பட்டுள்ளது.

அடுத்து வரும் பதிவுகளில் ஏன் இப்படி என்றும் இன்னும் பல திடுக்கிடும் உண்மைகளுடன் சந்திப்போம். இதுவரை இரண்டு சிலைகள் தான் – இன்னும் இருபத்தி ஆறு பாக்கி… !!

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் இரண்டு

முதல் பாகத்தை படித்து பலரும் அனுப்பிய நல்ல மறுமொழிகள் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. யாருமே சென்று காணாத இந்த பல்லவர் கால சுவர் ஓவியங்கள் இன்று புத்துயிர் பெற்று நம்முடன் பேசுவது போன்ற உணர்ச்சி பெறுகிறோம். இந்த பயணத்தில் நானும் ஓவியர் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்களும் பல புதிய விஷயங்களை தெரிந்துக்கொண்டோம். அதை அப்படியே உங்களுடன் பகிர்கின்றோம்.

நண்பர் திரு ஜகதீஷ், அவருக்கு மீண்டும் ஒரு நன்றி. அவர் தந்த படங்கள் எங்களுக்கு எந்த அளவிற்கு உதவியாக இருந்தது எனபது இந்த பதிவை படித்து முடித்தவுடன் புரியும். தக்க சமயத்தில் உதவினார் இந்த பதினோராவது வகுப்ப மாணவன்.

சென்ற பதிவில், படத்தில் யார் யார் இருக்கின்றனர், எங்கெங்கே என்று குறித்து விவரித்தோம் நாங்கள், இன்னும் அருகில் சென்று ஒவ்வொரு சிறு குறிப்புகளையும் பார்த்தோம். பூத கணம், எங்குமே முழுமையாக தெரியவில்லை. கொஞ்சம் கற்பனைத் திறனை கலந்து வரைந்து முடித்து விட்டார் ஓவியர்.

அருகில் இருக்கும் தோழி அப்படி அல்ல. நல்ல படம் இருந்தது, மேலே உமையின் ஆடையில் இருக்கும் வேலைப்பாடு கூட கிடைத்தது.


அடுத்து இருவருக்கும் நடுவில் ஏதாவது இருக்குமோ.அனைத்து ஓவியங்களிலும் இந்த பகுதியில் சிதைந்து விட்டது ( மொத்தம் நான்கு சுவர் ஓவியங்களை வைத்து நாம் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம் ) . சோமஸ்கந்தர் பற்றிய நமது தொடரை வாசிக்கும் நண்பர்கள், பொதுவாக சோமஸ்கந்தர் வடிவங்களில் தரையில் ஒரு கூஜா இருப்பதை கவனித்து இருப்பார்கள். இதோ இந்த மலை கடற்கரை கோயில் வடிவம் போல

அதனால் அதை நமது ஓவியத்திலும் போட்டுவிட்டோம்.

அடுத்து பிரம்மா. ஒரே ஒரு ஓவியத்தில் மட்டும், அவரது உருவம் தெரிகிறது. ( இரு கைகளையும் கூப்பி அஞ்சலி முத்திரையில் அவரை காட்டவேண்டும். மூன்றாம் பாகத்தில் திருத்தி விடுவோம் )

எப்படி அவரது மற்ற முகங்களை காட்டுவது என்று யோசிக்க, புள்ளமங்கை பிரம்மா நினைவுக்கு வந்தார்.
.

அவரை முன்மாதிரியாக வாய்த்த இந்த பிரம்மன் படத்தை வரைந்தாயிற்று.

விஷ்ணு உருவத்திற்கு இந்த நிலை இல்லை. ஒரு ஓவியத்தில் மிகவும் நல்ல நிலையில் இருப்பதால் எங்கள் பணி எளிதாயிற்று.

அடுத்து குழந்தை முருகன்.

முருகன் – அழகன். அதுவும் குழந்தை முருகன் என்றால் !! சரியாக வரவேண்டுமே.

அருகில் சென்று படங்களை பார்க்கும் பொது தான் நாங்கள் முதலில் நினைத்ததைப் போல ஆசனத்தின் கால்களில் சிங்க வடிவங்கள் இல்லை என்பது தெரிந்தது.

அடுத்து உமை.


ஈசன், இந்த வடிவத்தின் நடு நாயகன் – மிகவும் நேர்த்தியாக வரவேண்டும் என்பதால், இன்னும் கவனமாக படங்களை ஆராய்ந்தோம். குறிப்பாக அவர் கை முத்திரைகள். ( ஒரு குறிப்பு மிகவும் உதவியாக இருந்தது – அது என்ன வென்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்) . இடது மேல் கரம் இங்கே பாருங்கள்.

ஈசனின் மகுடம். நிறைய வேலைப்பாடுடன் இருந்ததால் மிகவும் கடினமாக இருந்தது.

குறிப்பாக மகுடத்தில் உள்ள ஒரு அணிகலன். இதுவரை நாங்கள் பார்க்காததாக இருந்தது. எனினும் அந்த வடிவம் நாம் முன்னரே எங்கோ பார்த்த வடிவம். அப்போது திரு நாகசாமி அவரது செப்புத்திருமேனி (Masterpieces of South Indian Bronzes)நூலில் ஒரு குறிப்பு கிடைத்தது. பல்லவர் கால செப்ப்புத்திருமேனி ஒன்றில் இரு மகர ஒப்பனை கொண்டு இந்த அணிகலன் உள்ளது என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

ஆம், அதே நம் ஓவியத்திலும்.


இப்போது ஒரு அளவிற்கு நமது ஓவியம் வந்து விட்டது. இன்னும் சிறு சிறு அமைப்புகளை சரி செய்து வண்ணம் பூசினால் முடிந்து விடும்.

அதற்கு, அடுத்த இறுதிப் பதிவு விரைவில் பார்ப்போம்.

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் ஒன்று

தமிழ் நாட்டு ஓவியக்கலையின் மிக தொன்மையான பல்லவ ஓவியங்கள் இன்றும் காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் இங்கும் அங்குமாய் சிதைந்த நிலையில் பார்க்க முடிகிறது. பார்த்த சில நொடிக்களிலேயே நம்மை சொக்க வைக்கும் அழகைக் கொண்ட இந்த ஓவியங்களைப் பார்க்கும் பொது ஒருபக்கம் பரவசமும் மறு பக்கம் பெரும் துக்கமும் வரும். பரவசம், ஆயிரத்திமுன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே தனது கலையில் இப்படி ஒரு உன்னத நிலையை நம் மண்ணின் கலைஞன் எட்டிவிட்டான் என்பதும், அவனது கலை காலத்தை வென்று இன்று வரை நின்றுள்ளது என்பதும். துக்கம், இங்கும் அங்குமாய் தெரிந்த சில கோடுகள், சில வண்ணங்கள், என்று நாம் இன்று காணும் இந்த ஓவியங்கள், அடுத்த தலைமுறை பார்க்க , பரவசம் அடைய இந்த அரிய பொக்கிஷங்களை , நம் குல தனங்களை, நிலைக்க வைக்க முடியுமா என்ற கேள்வி.

நம்மால் முடிந்தது – இன்றைய நிலையை அப்படியே படம் பிடித்து இணையம் மூலம் கருவூலம் அமைத்து பாதுகாக்கமுடியும். எனினும், எங்கோ மூலையில் ஒரு சின்ன ஆசை. இவை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி வண்ணங்களின் பிரதிபலிப்பாய் ஜொலித்திருக்கும் என மனக்கண்ணில் அப்படியே அவற்றை கற்பனை செய்து ரசிப்பது உண்டு, எனினும் அப்படி மனக்கண்ணில் கண்ட காட்சியை அனைவருடன் எப்படி பகிர்வது. பல்லவ சிற்பியுடன் போட்டி போட நமக்கு தேர்ச்சி இல்லை, தற்போது உள்ள கணினி தொழில்நுட்பம் கொண்டு படங்களை ஒற்றி எடுத்தும், ஒரு ஓவியம் கூட முழுவதுமாக இன்று நிலைக்க வில்லை. இது சாமானியன் செய்யும் வேலை இல்லை என்று புரிந்தது. இந்த கலை ரத்தத்திலேயே ஊறி போன ஒருவரால் மட்டுமே இவற்றுக்கு உயிர் கொடுக்க முடியும் என்று தெளிவாக தெரிந்து. ஓவியர் நண்பர்கள் யாரை சந்தித்தாலும் கோரிக்கை மனு கொடுத்து வைப்பேன்.

இப்படி இருக்கையில், தற்செயலாக நண்பர் ஒருவரின் ஓவியக் கண்காட்சி ஒன்றிற்கு சென்ற பொது, ஓவியர் மணியம் அவர்களின் வழித்தோன்றல் இருவரை சந்திக்க நேர்ந்தது. ஆம் அவர்தான், அமரர் கல்கியின் கதை காலத்திற்கு மெருக் ஏற்றி அற்புத ஓவியங்களை படைத்தவர். அவரது கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டு வந்தவர். திரு மணியம் அவர்களின் ஓவியங்கள் சில , அவரது மகன் திரு மணியம் செல்வன் அவர்களும் சிறந்த ஓவியர், அவரது ஓவியங்கள் சில ,ஆனால் நான் சந்தித்தது அவரது புதல்விகளை . புலிக்கு பிறந்தது பூனை யாகுமா. இருவருமே சிறந்த ஓவியர்கள். அப்படியே நின்றுக் கொண்டே பேசினோம், கல்கி , பார்த்திபன் கனவு , பொன்னியின் செல்வன் என்று போன உரையாடல் முடிவில் கோரிக்கை மனுவை நீட்டினேன். திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்கள் அவரது ஓவியங்கள் ,முயற்சி செய்து பார்ப்போம் என்று கூறினார்.

பணி மிகவும் கடினம், ஓவியங்கள் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தன. நான்கு இடங்களில் உள்ள இதே வடிவம், ஒரு இடத்தில கூட முழுவதுமாக இல்லை. போதாத குறைக்கு என்னிடத்தில் நல்ல படங்களும் இல்லை. நண்பர்கள் இடத்தில கேட்டுப் பார்த்தேன், யாரிடத்திலும் எங்களுக்கு தேவைப்படும் அளவிற்கு பெரிய படங்கள் இல்லை.


இருப்பதை வைத்து, முதலில் வேலையை துவங்கினோம். நன்றாக வருமோ என்ற ஐயம் எழும் முன்னரே, உடனே வந்தது சுபாஷினி அவர்களின் முதல் பிரதி

சரியான இடத்தில தான் பணியை ஒப்படைத்துள்ளோம் என்று சொன்னது மனம். வாழை அடி வாழையாய் வந்த கலை, அவர்களது கையில் விளையாடியது . எனினும் மிக நேர்த்தியாக வரையவேண்டும் என்றால் நல்ல படம் சீக்கிரம் தேவை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொடிருந்த பொது, ஒரு இனிய அதிர்ச்சி. மே மாதம் தற்செயலாக தளத்தின் மூலம் உரையாடிய பத்தாம் வகுப்பு மாணவன் ஜகதீஷ், ஒரு மடல் அனுப்பினான். எனது காஞ்சி பயண புகை படங்கள் என்றது தலைப்பு. கூடவே,”ஹலோ அண்ணா , என்னை நினைவுள்ளதா, நான் ராஜகேசரி ( புனைப்பெயர் ) , சமீபத்தில் காஞ்சிபுரம் சென்றிருந்தேன் , அங்கு எடுத்த படங்கள் இதோ ”

உள்ளே, நான் தேடிக்கொண்டிருந்த படங்கள். உடனே தொடர்பு கொண்டு, முழு அளவில் படத்தை அனுப்பு என்று சொன்னவுடன் உதவினான் நம் தோழன், இந்த சின்ன வயதில் -வேலூர் பள்ளியில் இப்போது பதினொன்றாம் வகுப்பு படிக்கும் நம் ஹீரோ இதோ.

பல்லவ கலை, ராஜசிம்ம பல்லவனால் வளர்க்கப்பட்ட கலை, இன்று இந்த மாணவன் உதவியுடன் அடுத்த தலைமுறைக்கு செல்கிறது.

பிரம்மா

உமை

விஷ்ணு

நல்ல படங்கள் ஏன் தேவை பட்டன என்பதற்கு, கிழே இருக்கும் பூத கணம், மற்றும் பணிப்பெண் உருவங்களை கண்டு கொள்ள பெரிதும் உதவின.

ஆசனத்தின் கால்கள் சிங்க முகங்கள் போல சித்தரிக்க நினைத்தோம். ( மலை மகிஷாசுரமர்தினி மண்டபம் போல )

அடுத்து இன்னும் பல விவரங்களை எடுத்து ஓவியத்தை பூர்த்தி செய்ய ஆரம்பித்தோம்.

நன்றாக வருகிறது . இன்னும் பார்க்க ஆவலா ? பொறுமை, அடுத்த பதிவில் தொடரும் இந்த ஓவியம்.

பல்லவ சோமாஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – ஆறாம் பாகம் – மல்லை மகிஷாசுர மர்த்தினி மண்டபம்

இன்றைக்கு நாம் மல்லையில் இன்னொரு அற்புத புடைப்பு சிற்பத்தை பார்க்கப் போகிறோம் – மல்லை மகிஷாசுர மர்த்தினி மண்டபம் . நாம் முன்னரே இங்கு சென்று அங்குள்ள இரண்டு அற்புத சிற்பங்களை பார்த்தோம் – மகிஷாசுர மர்த்தினி சிற்பமும், சேஷ சயன பெருமாள் சிற்பமும். பொதுவாக அங்கே செல்வோர் இவ்விரு சிற்பங்களையும் பார்த்து விட்டு திரும்பிவிடுவர் – கர்ப்பக் கிருஹத்தில் உள்ள அற்புத சோமஸ்கந்தர் வடிவத்தை பார்க்க மறந்துவிடுவர். இது இயற்கை..

பல்லவர் சோமஸ்கந்தர் வடிவங்களில் இதுவே மிகவும் பெரியது. முழு கருவறை பின் சுவரை ஆக்ரமிக்கும் பிரம்மாண்ட வடிவம். மகேந்திர பல்லவர் குடைவரைகளில் சோமஸ்கந்தர் வடிவங்கள் இருப்பதில்லை என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.

இந்த சிற்பத்தை ஆராய்வதற்கு முன்னர், சிலவற்றை நாம் தெரிந்துக் கொள்வது முக்கியம். மல்லை சிற்பங்களை சுற்றி பல புதிர்கள் உள்ளன. பல்லவர் காலம் என்று பொதுவாக கொண்டாலும், எந்த பல்லவ அரசனின் காலத்தில் எந்த எந்த இடங்கள் உருவாகின என்பது இன்றும் பல வல்லுனர்களை குழப்பத்தில் ஆழ்த்தும். இந்த புதிரை நீட்டிக்கும் குடைவரைகளில் இந்த குடைவரையும் ஒன்று. விடை தேட இங்கே கல்வெட்டுகள் எதுவும் இல்லை. மேலும் பல குழப்பங்களை உள்ளடக்கும் இந்த மண்டபத்தை நாம் இந்த சோமஸ்கந்தர் வடிவத்தின் காலத்தை மட்டும் வைத்து ஆய்வு செய்வோம். இதை ஒப்பிட நமக்கு உதவுவது மல்லையில் ராஜ சிம்ஹன் கல்வெட்டுகளை கொண்ட கடற்கரை கோயிலில் உள்ள சோமஸ்கந்தர் வடிவம். இதில் ஏது முந்தையது – ஏது பிந்தைய கால வடிவம் என்ற கேள்விக்கு மட்டும் விடை தேடும் பதிவு இது.

முதல் பார்வையில், இரண்டுமே ஒரே வடிவமாக தெரியும். இன்னும் நுணுக்கமாக பார்க்க இரண்டு சிற்பங்களையும் பக்கத்தில் வைத்து , குறிப்புகள் இட்டு பார்ப்போம்.

எதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்பதை விளக்கும் படம் இதோ.

என்ன அருமையான வடிவம். குழந்தை குமரனின் வடிவம் – அப்படியே அமர்ந்த வடிவில் நம்மை கண்டு தாவும்படி, சற்றே திரும்பி, வலது கையால் குமரனை அணைத்து , இடது கையில் சாய்ந்து நளினமாக அமர்ந்திருக்கும் உமையம்மை, கம்பீரமாக சுஹாசனத்தில் ஈசன் – பின்னால் விஷ்ணு, பிரும்மா – அருமை (உமைக்கு மேல் சாமரம் !!)


இரண்டு வடிவங்களுக்கும் வித்தியாசம் – அவர்கள் அமர்ந்திருக்கும் அரியணையின் கால்கள் – கடற்கரைக் கோயில் வடிவத்தில் கால்கள் வெறுமனே இருக்கும் . ஆனால் இவை இங்கு சிங்க வடிவத்தில் செய்யப்பட்டுள்ளன. காலுக்குக் கீழே இங்கே நந்தி வந்து விட்டது. ( நரசிம்ம பல்லவர் காலத்தில் பல்லவர் கொடி நந்தியில் இருந்து சிம்மத்திற்கு மாறியது !! இதே போல பல்லவ தூண்களும் மாறின – அவற்றை இன்னொரு பதிவில் பார்ப்போம் ) – மேலும் உமையம்மை காலுக்கு அடியில் இருந்த சொம்பு மாறி இங்கே ஒரு பெண் பக்தை இருக்கிறாள்.

சரி, மீண்டும் கேள்விக்கு வருவோம். இரண்டு உருவங்களில் ஏது பழையது. இன்னும் ஆராய்வோம்.

ஈசனின் அலங்காரம் எல்லாம் ஒன்றே போல தான் உள்ளது.

இரண்டு சிற்பங்களிளும் வெளித் தோற்றதில் ஒன்றே போல இருக்கின்றன. ஆடை , அணிகலன் உட்பட. இன்னும் ஒரு முறை ஒன்றுக் கொன்று அருகில் வைத்து பார்ப்போம். ஈசனின் இடது காலை கவனியுங்கள். கடற்கரை கோயில் வடிவத்தில் – அது மேல் இருந்து கீழே ஈசனின் நடுவே ஒரு கோடு போட்டால் அப்படியே அது நடுவில் வருகிறது. ஆனால் இந்த குடவரையில் அது சற்று நகர்ந்து, நந்தி உள்ளே வர வழி விட்டு , சற்று தள்ளி வந்துள்ளது.

இன்னும் சரியாக விளக்கு கணினி கொண்டு இரு உருவங்களையும் இணைத்து பார்ப்போம். நந்தி உள்ளே வர கால் எப்படி அழகாக நகர்கிறது பாருங்கள்.

இவற்றை கொண்டு பார்த்தால், மகிஷாசுர மர்த்தினி மண்டப சிற்பம் கடற்கரை கோயில் வடிவத்தை ஒத்தது. அந்தக் கோயில் கட்டப்பட்ட காலத்திலோ அல்லது அதற்கு பிறகோ தான் வடிவமைத்திருக்க வேண்டும்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

காஞ்சி மாதங்கேஸ்வரர் ஆலயம் – சோமஸ்கந்தர் வடிவம்

சிறப்பு விருந்தினர் அரவிந்த் படைக்கும் சிறப்பு விருந்து. பலரும் செல்லும் காஞ்சியில் ஒளிந்து இருக்கும் பொக்கிஷம். நண்பர் அரவிந்த் சிலை சிற்பங்கள் மேல் தீராக் காதல் கொண்டவர். சிற்பம் பற்றி பல நல்ல புத்தங்களை சேகரித்து, அவற்றை பல முறை ஆழ்ந்து படித்து, அதன் பின்னர் அங்கு சென்று மீண்டும் மீண்டும் ரசித்து ஆராய்பவர். மேலே படியுங்கள் – இனி ஓவர் டு அரவிந்த்

காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என்பது நான் பல நாட்களாக செய்யவேண்டும் என்று குறித்து வைத்த ஒன்று. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின்போது பலமுறை சென்றிருந்தாலும், சமீப காலத்தில் இந்த புதையல்களின் குவியலை சென்று பார்க்கவில்லையே என்ற ஒரு குறை வெகு நாட்களாக இருந்தது.

காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என்பது நான் பல நாட்களாக செய்யவேண்டும் என்று குறித்து வைத்த ஒன்று. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின்போது பலமுறை சென்றிருந்தாலும், சமீப காலத்தில் இந்த புதையல்களின் குவியலை சென்று பார்க்கவில்லையே என்ற ஒரு குறை வெகு நாட்களாக இருந்தது.

ஒரு நண்பருடன் பேசும்போது, ஆர்வம் மீண்டும் எழுந்தது. கடைசியில், சென்ற வாரம், இப்போதே போக வேண்டும் என்று முடிவெடுத்து – அதுவும் அது ஒரு முழு வாரக் கடைசி – இரண்டு நாட்கள் ஒதுக்கி வைத்து – முடிந்தவரையிலும் அனைத்து இடங்களை இம்முறை பார்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் புறப்பட்டேன். நண்பர் கோபிநாத ஸ்ரீநிவாஸ் அவரும் உடனே வருகிறேன் என்று சேர்ந்துக்கொண்டார்.

ஒவ்வொரு ஆலயமாக செல்லச் செல்ல, சிற்பங்களின் போதை ஏறியது, வெய்யில் அதிகம் – என்றாலும் முதல் நாள் கைலாசநாதர், கச்சபேஸ்வரர், காமாட்சி அம்மன் , உலகளந்த பெருமாள் என்று சனிக்கிழமை வந்தது தெரியாமல் ஓடியே போய் விட்டது.

அடுத்த நாள் விடியற் காலையிலேயே புறப்பட்டு விட்டோம். மதியம் நடைசாத்தும் முன்னர் முடிந்த வரையிலும் முடிக்க வேண்டும் . ஏகாம்பரேஸ்வரர் தரிசனத்தை முடித்துவிட்டு வைகுண்ட பெருமாள் கோயில் விரைந்தோம். ஏகாம்பரேஸ்வரர் கோயில் வெளியேஇருந்து பார்த்த பிரம்மாண்டத்திற்கு உள்ளே சிற்பங்கள் அப்படி ஒன்றும் விசேஷமாக இல்லை. ஆனால் வைகுண்ட பெருமாளோ …அப்பாடா – நகர முடியவில்லை – ஒவ்வொரு துணுக்கும் ஏராளமான சிலை, அவை சொல்லும் கதை. ஒரு இடத்தில ஹோங் சென், மல்லை கடற்கரை கோயில், பல்லவ மன்னர்கள் அரியணை ஏறும் வைபவம் என்று எங்கே பார்த்தாலும் சிற்பக் குவியல். அப்போது கோவில் பூசாரி பக்கத்தில் இன்னும் ஒரு நல்ல கோயில் இருக்கிறது – போய்ப் பாருங்கள் என்றார்.

வைகுண்ட பெருமாள் கோயிலில் இருந்து ஒரு இருநூறு மீட்டர் தூரம் தான் . ஆனால் அதை கண்டுபிடிப்பது சுலபம் இல்லை.

பூசாரி – இரண்டாவது வலது ரோட்டில் திரும்ப சொன்னார் – திரும்பியவுடன் கோபுரம் தெரிந்தது. ஆஹா என்று, சென்று பார்த்தால் – உள்ளே செல்லும் வழி தெரியவில்லை. எல்லா பக்கமும் நவீன வீடுகள். திரும்ப ஒருமுறை வந்த வழியே வந்து பார்த்தோம். ஆ , இதோ ஒரு சிறு பாதை. முப்பது அடி உள்ளே – அருமையான கோயில். பல்லவர் கட்டிய சிறு ஆலயம் தான் – மொத்தமே நாலாயிரம் சதுர அடி தான் இருக்கும். எதிரே ஒரு சிறு நந்தி, பக்கத்தில் ஒரு அரச மரம் ( அதுக்கு நல்ல கூட்டம் போல தெரிகிறது )


தரையில் இருந்து பத்து படி ஏறினால் மண்டபம்

உள்ளே – லிங்கம் – அதன் பின்னர் அற்புத சோமஸ்கந்தர் வடிவம். இது எந்த பாணியில் உள்ளது? பார்த்து சொல்லுங்கள்

இந்த ஆலயத்தின் உள்பக்க சுவரிலும், வெளி பிரகாரத்திலும் இன்னும் மிக அற்புத சிற்பங்கள் உள்ளன. இவற்றின் அழகை முழுவதுமாக ரசிக்க மீண்டும் ஒரு முறை வர வேண்டும்.

அற்புத சிற்பங்களையும் இந்த ஆலயத்தின் வரலாற்றையும் பற்றி – தொடரும் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

எல்லோரா கார்த்திகேயனின் ஆடுதலை சேவகர்கள்

எல்லோரா குடைவரைகள் சிற்பக்கலை ஆர்வலர்களுக்கு ஒரு புதையல். அது ஒரு குடைவரை என்பதனால் மட்டும் அல்ல அதில் உள்ள சிற்பங்களின் அழகு மற்றும் கலை நுணுக்கங்களும் தான். இன்று எல்லோரா குடைவரை 21 இல் இருந்து ஒரு அற்புத வடிவத்தை பார்க்கப்போகிறோம்.

அழகிய கார்த்திகேயனின் வடிவம் தான் அது.

படங்களுக்கு நன்றி:

http://www.elloracaves.org/search.php?cmd=search&words=&mode=normal&cave_name=21

அருமையான சிற்பம். சாமபங்கத்தில் கார்த்திகேயன், வலது கையை இடுப்பில் வைத்து ( இதற்கு கட்யவலம்பிதம் என்று பெயர் ) நிற்கும் கோலம்.

செதுக்கப்பட்டபோது நான்கு கைகளுடன் இருந்து சிலை, இப்போது காலத்தின் கோலத்தால் மிகவும் சிதைந்துள்ளது. வலது மேல் கரம் சுத்தமாக காணமுடியவில்லை. இடது மேல் கை, அவர் வாஹனமான மயிலை தடிவியவாறு உள்ளது. கீழே இருக்கும் இடது கையில் ஏதோ பாத்திரம் போல உள்ளது. பூணூல் அணிந்து, கழுத்தில் அணிகலன் பல, அழகிய கிரீடம் என்று ஜொலிக்கிறான் குமரன்.

மயிலும் காலத்தின் பசிக்கு தனது தலையை பறிகொடுத்துவிட்டது, ஆனால் அது மயில்தான் என்பது இறக்கை மூலம் தெளிவாக காட்டுகிறது. கால்கள் தான் கொஞ்சம் தடிமனாக உள்ளன ( முருகனை தூக்கி தூக்கி பலம் ஏறிவிட்டதோ?)

மேலே இரு புறமும் கந்தர்வர்கள். இடது பக்கம் ஆண் பெண் இருவருமே குமரனின் அழகை வியந்து வலது கையை விஸ்மயத்தில் வைத்துள்ளனர். வலது புறம், ஆண் கரம் கூப்பி அஞ்சலியில் உள்ளார். பெண்ணோ, கொஞ்சம் துணுக்காக அமர்திருக்கிறாள்.

இப்போது ஆடு தலைகளுக்கு வருவோம். இருவரும் யார்

குமாரனின் இடது புறத்தில் இருக்கும் ஆடுதலை கொண்ட உருவும், சற்றே நளினமாக தெரிகிறது. அதன் வலது கையில் மலரை கொண்ட முகர்ந்துக் கொண்டு இருக்கிறது. இடது கை இடுப்பில் ஒய்யாரமாக – அந்த தலை சற்றே சாய்ந்திருக்கும் பாணி, அனைத்தும் இது ஒரு பெண் என்று எனக்கு உணர்த்துகிறது – உங்களுக்கு ?

வலது புறம் இருப்பது ஆண். ஆனால் அவர் கைகள் வைத்திருக்கும் முறை புது விதமாக உள்ளது. வலது கை வணக்கம் சொல்ல இருந்தாலும், இடது கை மடக்கி உள்ளது. ( புரூஸ் லீ ‘குங் ஃபூ’ பாணியில் வணக்கம் சொல்வது போல உள்ளது)

இவர்கள் யார். குமரனின் கதைகளில் வரும் ஆடு தலை கொண்ட பெண் – அஜமுகி, சூரபத்மனின் தங்கை, கஸ்யப முனிவர்-மாயா வின் பெண்.

முழு கதையை படிக்க இங்கே சொடுக்குங்கள்.

http://indianmythologytales.blogspot.com/2009/04/tales-of-muruga-part-1.html

சரி, அந்த மற்றொருவர் யார்?. ஆடு தலை கொண்ட ஆண், தக்ஷன் மட்டும் தானே. அப்படியானால் இது தக்ஷனா ? அவனுக்கும் குமரனுக்கும் என்ன சம்மந்தம்?

இரண்டு வாரம் விடுமுறையில் நாளை முதல் செல்கிறேன். தில்லை, தஞ்சை, சீராப்பள்ளி, மதுரை, கோவை என்று பெரிய பயணம் முடிக்க ஆசை – பல அற்புத சிற்பங்களை உங்களுக்கு பரிசாகக் கொண்ட வர திட்டமிட்டுள்ளேன். அதுவரை , வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – இரண்டாம் பாகம்

சென்ற பதிவில், சோமஸ்கந்தர் வடிவத்தின் மிக தொன்மையான உருவத்தையும் தற்காலச் சிலையையும் பார்த்தோம்.

தர்மராஜா ரதத்தில் உள்ள சோமஸ்கந்தர் வடிவத்தை மிகவும் தொன்மைவாய்ந்தது என்று சொல்கிறார்களே அது எப்படி! அதனை மீண்டும் ஒரு முறை பார்த்துஆராய்வோம். படங்களும், வினாக்களும் என்னுடையது, விடையை நீங்கள்தான் கொடுக்கவேண்டும்.

இதை பல்லவ மன்னன் ராஜசிம்ஹன் காலத்து சோமஸ்கந்தர் வடிவத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் ஏதும் பிடிபடுகிறதா என்று பார்ப்போம். நாம் கொடுத்து வைத்தவர்கள், சிற்பக் கலைக்கு மெருகேற்றியஅவனது காலத்து சோமஸ்கந்தர் வடிவங்கள் பல இடங்களில் உள்ளன. மல்லை கடற்கரை கோயிலில் அற்புதமான வடிவம் ஒன்று உள்ளது. (மல்லை கடற்கரை கோயில் உண்மையில் மூன்று ஆலயங்கள் கொண்டது. முதலில் இருந்த சயன பெருமாள் கோயில், அதனை ஒட்டி ராஜ சிம்ஹன் எடுப்பித்த ராஜசிம்மேஷ்வரம் மற்றும் ஷத்ரியசிம்மேஷ்வரம் என்ற இரு சிவ ஆலயங்கள், நாம் இன்று பார்க்கும் சோமஸ்கந்தர் வடிவம் ராஜசிம்மேஷ்வர ஆலயத்தில் உள்ளது. ஷத்ரியசிம்மேஷ்வரம் சோமஸ்கந்தர் வடிவத்தை அடுத்து வரும் பதிவுகளில் அலசுவோம்).

இரண்டு சிற்பங்களுக்கும் உள்ள வேற்றுமையை எளிதில் கண்டறிய ஒற்றி எடுத்த கோட்டோவியங்கள் உதவும். ஆறு வித்தியாசம் கண்டுபிடிப்பது போல், இரண்டு சோமஸ்கந்தர் வடிவங்களுக்கும் உள்ள வேற்றுமைகளை நீங்களே ஒரு பட்டியல் இடுங்கள் பார்ப்போம்.

மல்லையின் புதிர்களில் இன்னும் ஒரு புதிர். மல்லை ராமானுஜ மண்டபம், அங்கிருக்கும் குடைவரைகளிலேயே மிகவும் முழுமை பெற்ற குடைவரை. எனினும் வன் செயல்களால் இங்கு உள்ள அனைத்து சிற்பங்களும் அழிக்கப்பட்டுள்ளன. .இரு வாயிற் காப்போன்கள் முதல் உள்ளே இருக்கும் மூன்று புடைப்பு சிற்பங்களும் உளி கொண்டு முழுவதுமாக செதுக்கி எடுக்கப்பட்டுள்ளன. ( யாரால், எதற்கு ?)

ஆனால், எந்தக் கயவனும் தடயம் விடாமல் செல்ல மாட்டானே. கருவறையில் உள்ள பின் சுவரில் அழிக்கபட்ட சிற்பத்தின் தடயங்கள் இன்னும் தெரிகின்றன – ஆம் அதுவும் ஒரு சோமஸ்கந்தர் வடிவமே.

நன்றாக உற்றுப் பாருங்கள், சரி இதையும் ஒற்றி எடுத்து பார்ப்போம். சோமஸ்கந்தர் எந்த வகை? தர்மராஜா ரதம் பாணியா அல்லது ராஜசிம்மேஷ்வர பாணியா? நீங்களே கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

உங்கள் பணியை எளிதாக்க , தர்மராஜ ரதத்தில் உள்ள சோமஸ்கந்தர் வடிவத்தை இரண்டாய் பிரித்து உமை ஒரு பாகமாகவும் ஈசனை மற்றொரு பாகமுமாகத் தருகிறேன்.

இன்னும் உதவி தேவையா. படங்களை நான்றாக தலையை சாய்த்து பாருங்கள் !!

படங்களுக்கு நன்றி:

Varalaaru.com. மற்றும் திரு அசோக்

புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் – ஒரு சிற்ப விருந்து

நண்பர்களே, இன்றைக்கு நமக்கு ஒரு சிற்ப விருந்து. புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வந்த இரு நண்பர்கள் – இல்லை இல்லை அவர்களை அங்கு சென்று படம் எடுத்து வாருங்கள் என்று தூண்டி இப்போது அதன் பலனை உங்களுடன் சேர்ந்து நானும் அனுபவிக்கிறேன். புள்ளமங்கை ஒரு கலைப் புதையல். ஆனால் புதையல் என்றாலே புதையுண்டு பல காலம் நினைவில் இருந்து விலகி பின்னர் கண்டுபிடிக்கப்படுவது போல, இன்னும் புதையுண்டு கிடக்கும் பொக்கிஷம் புள்ளமங்கை. அதன் அருமைகளை இந்த தொடரின் மூலம் வெளியிடுகிறோம்.

பொதுவாக இடுகைகளில் படங்களை தொலைவில் இருந்து இட்டு மெதுவாக அருகில் செல்வோம். ஆனால் இந்த பதிவுக்கு அதை சற்றி தலைகீழாக மாற்றி, முதலிலேயே அருகில் செல்வோம். படித்து முடித்தவுடன் ஏன் என்று உங்களுக்கு புரியும்.

இன்று நாம் பார்கவிருப்பது நான்கு சிற்பங்கள். கந்தன் பிறப்பை கல்லில் காட்சியை வடிக்கும் சிற்பங்கள், மற்றும் சில யாளிகள்.

எனக்கு பிடித்தமான யாளிகளுடன் துவங்குகிறேன்.

அற்புத வடிவங்கள், இவ்வளவு திறமை கொண்டு இவற்றை வடித்தான் சிற்பி என்றால், இவை வெறும் அலங்கார மதிப்புக்காகவா என்ற ஐயம் வருகிறது?

இன்னொரு யாளி ( கொம்புடன் இருப்பதால் இதனை ஆங்கிலத்தில் வ்யாலா என்கிறார்கள் )


என்னடா, முருகனின் பிறப்பு என்று சொல்லி மீண்டும் யாளிகளை வலம் வருகிறானே என்று எண்ண வேண்டாம். போகப் போக உங்களுக்கே புரியும் . சரி இதோ சிற்பங்கள்.


முதல் வடிவம். உமையும் ஈசனும் ஆடும் அற்புத நடனத்தைக் கண்டு ஸ்தம்பித்து நிற்கும் காமன் மற்றும் ரதி. இருவர் ஆட்டத்தில் தான் என்ன ஒரு உயிரோட்டம். ஆடல் வல்லானின் ஆட்டத்தின் ஆண்மை கலந்த தோரணை, உமையின் வடிவத்தில் பெண்ணிற்கே உரிய நளினம்.

அடுத்த வடிவம், உமையை தன்பால் ஈர்க்கும் ஈசன்.

வெட்கப்படும் பாவையாய் உமை, கடைக்கண் பார்வையால் தலைவனை பார்க்கும் வண்ணம் – ஆஹா, ஈசன் அமர்ந்திருக்கும் அழகைப் பாருங்கள்.

அடுத்து, இன்னும் நெருங்கி விட்டனர். தனது ஆசைக்குரிய பார்வதியை அன்புடன் சிவன் அணைக்கும் காட்சி.

இந்த சிற்பம் வடித்த சிற்பிக்கு உள்ள அறிவுக்கூர்மையை பாருங்கள். முதல் பார்வையில் ஈசனுக்கு இரண்டு வலது கரங்கள் இருப்பது போல வடித்தாலும் – ஒரு கை பின்னால் அமர்ந்திருக்கும் நந்தியின் மேல் , இன்னொரு கரம் உமையை அன்புடன் அணைப்பது போல இருந்தாலும், சிற்பத்தை இன்னும் ஒரு முறை பாருங்கள்.

கல்லில் ஈசனின் கை உயிர் பெற்று, நகர்ந்து உமையைப் பற்றுவது போல காட்டவே சிற்பி அப்படி வடித்தான் போல !!

அது சரி, அந்த முதல் ஸ்பரிசத்திற்கு உமையின் பதில். அப்பப்பா, நாணம் என்றால் இது தானோ !!!

அதனுடன் நிறுத்தவில்லை சிற்பி, நந்தியை கொஞ்சம் பாருங்கள்.

மேலே இருபுறமும் கணங்கள், கிழே பணிப்பெண் என்று பின்னுகிறான் சிற்பி.

நான்காவது சிற்பம். முருகன் பிறப்பு.

புரியவில்லையா. ஈசனின் மடியில் ஒரு குழந்தை, அப்பாவை செல்லமாக கை நீட்டி ஆசையாய் கன்னத்தை தொடுகிறது. கார்த்திகை பெண்கள் ஆறு, ஐவர் கையில் மற்ற ஐந்து குழந்தைகள்.

சிற்பங்கள் மற்றும் படங்கள் தரம் குறித்து சிலர் அதற்குள் கூறும் மறுமொழிகள் கேட்கிறது ( நல்லவை கெட்டவை இரண்டும் !!)

ஒரு நிமிடம் பொறுங்கள். காரணத்தை படங்கள் மூலமே சொல்கிறேன்.

இன்னும் முடியவில்லை

இன்னும் தொலைவில் இருந்து, இப்போது புரிகிறதா ? இந்த சிறிய சிற்ப புதையல்களை நாம் முதல் பார்வையில் விட்டு விடக் கூடும்.

நான் ” சிறு ” என்று பதிவில் சொன்னேனா ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஈசனை குறிபார்க்கும் காமன் – கம்போடியாவில்

நமது புராணங்களில் வரும் கதைகளின் தாக்கம் இந்திய எல்லைகளை தாண்டி எங்கெல்லாம் சென்றுள்ளது என்று அறியும் போது மெய் சிலிர்க்கிறது. கம்போடியா மற்றும் இந்தோனேசியாவில் இருக்கும் சிற்பங்களின் வடிவங்கள் சற்று மாறுபட்டு இருந்தாலும் அவற்றில் சித்தரிக்கப்பட்டிருக்கும் கதைகளின் ஆழம் பிரமிக்கவைக்கின்றது.

இன்றும் அது போல ஒரு அற்புத வடிவம் – கம்போடியா பன்திய ஸ்ரெய் கோவிலில் – காமன் ஈசனை குறி பார்க்கும் வடிவம் இதோ.

முன்னர் நம் சோழ சிற்பி தஞ்சை பெரிய கோவிலில் இதே கதையை மூன்று பாகங்களாக தன் சிற்பத்தின் மூலமாக இந்த கதையை விளக்கி இருந்தான். இப்போது கம்போடியா சிற்பி இதை சிற்பி இதை எப்படி சித்தரிக்கின்றான் – பார்போம்.

2449


ஒரே சிற்பம் – அதனிலேயே முழுக் கதையையும் அப்படியே காட்ட வேண்டும். காமன் தனது
நாணை ஏற்றி ஈசனை குறி பார்க்கிறான் – அது முதல் காட்சி. ஈசனின் அமர்ந்த
கோலம் – அருமை – ( அவர் அமர்ந்திருக்கும் ஆசனத்தின் கீழே மூன்று அடுக்கு – பல முனிவர்கள் , மிருகங்கள், பூத கணங்கள் ) – ஆனால் அவர் காமனை பார்க்கும் பார்வை – ஆம் – சுட்டெரிக்கும் பார்வை மிக மிக அருமை.

ஈசனின் மறு பக்கத்தில் – ஒரு பெண்மணி மிக பணிவுடன் ஈசனின் கரத்தில் இருந்து ருத்ராக்ஷ் மாலையை கையில் வாங்கியவாறு உள்ளது – ஈசன் தனது தி்யான நிலையை விட்டு பார்வதியிடம் காமனின் பாணத்தின் தாக்கத்தால் நாடுவதை காட்டவோ ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment