சர்ச்சைச் சிற்பங்கள்- பாகம் மூன்று – கங்காளர்

சர்ச்சைச் சிற்பங்கள் தொடரில் இன்று மீண்டும் ஒரு பெரிய சர்ச்சைச் சிற்பம் – கங்காள முர்த்தி. கதைக்கு செல்வதற்கு முன்னர் சிற்ப வடிவத்தின் அம்சங்களை பார்த்துவிடுவோம். வெகுவாக பிக்ஷாடனர் வடிவத்துடன் ஒத்துப்போவதால் இரு வடிவங்களுக்கு இடையே பலமுறை குழப்பம் வருவது இயல்புதான்.
கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள இரு வடிவங்களையும் பாருங்கள்.

முதல் வித்தியாசம் என்று பார்த்தல் – துணி தான். பிக்ஷாடனர் பொதுவாக பிறந்த மேனியாக ஒரு சில பாம்புகளை மட்டுமே உடுத்தி இருப்பார். கங்காளற் மேல் துணியாக குதிரை அல்லது கழுதையின் தோல் அணிந்தும், கீழுக்கு சனலாலான துணி அதுவும் முட்டிக்கு மேல் வரைக்குமே அணிய வேண்டும். இருவருமே தடிமனான மாற பாத ரக்ஷைகள் அணிவார்கள்.

அடுத்த வித்தியாசம், தலை அலங்காரம். கங்காளற் அழகிய ஜடா மகுடம் ( ஜடையை கொண்டே கிரீடம் போல பின்னி இருப்பது ) வைத்திருப்பார். பிக்ஷாடனர் ஜடா பாரம் அல்லது ஜடா மண்டலம் – பொதுவாக

இப்படங்களை பாருங்கள் – வித்தியாசம் புரியும் …நன்றி

எனினும் அங்கும் இங்கும் சில இடங்களில் பிக்ஷாடனர் ஜடா மகுடதுடனும் காணபடுகிறார். ஒரு வேலை சிற்பி இரு உருவங்களையும் சேர்த்து ஒரு கலவை செய்தாரோ என்னவோ.

நல்ல வேலையாக நமக்கு உதவ இன்னும் சில வித்தியாசங்கள் உள்ளன.

சிவன் கீழ் இடது கையை முதலில் பார்ப்போம். அங்கே கபாலம் இருந்தால் அது பிக்ஷாடனர். தக்க என்ற ஒரு வகை மேளத்தை கொண்டு இருந்தால் அவர் கங்காளற்.

மேலும், கீழ் வலது கரம் மானுக்கு புள் கொடுக்கும் படி இருந்தால் அது பிக்ஷாடனர், கங்காளற் வடிவத்தில் அந்த கை பனா என்ற ஒரு குச்சியை கொண்டு அந்த மேளத்தை கொட்டும் வகையில் இருக்க வேண்டும். அடுத்த கை தான் மானுக்கு புள் கொடுக்க வேண்டும். இப்போது கங்கை கொண்ட சோழபுறது கங்காளற் வடிவத்தில் உள்ள பிரச்சனைக்கு வருவோம்…இங்கே அவருக்கு ஆறு கைகள். அதில் முன் இரண்டும் உடைத்து விட்டன. இருந்தும் அடுத்த வலது கரம் மானுக்கு புள் கொடுப்பதை வைத்து நாம் அவரை அடையாளம் கொள்ளலாம். பின் வலது கை மேலே ஒரு பாம்பை பிடித்துள்ளது.

இரண்டு உருவங்களுமே தங்கள் மேல் இடது கையில் ஒரு தண்டத்தை வைத்துள்ளனர். எனினும் கங்காளற் விடிவதில் இது மிகவும் முக்கியம் – கங்காளம் – எலும்புக் கூடு. பிக்ஷாடனர் கையில் இருக்கும் கபாலம் நான்முகனின் ஐந்தாவது தலையின் ஓடு என்றால் இந்த கங்காளம் கதை இன்னும் சர்ச்சைக்கு உரியது. பிரவ வடிவில் சிவன் பெருமாளை சந்திக்க செல்ல வாயிலில் விஷ்வாக்செனர் அவரை தடுத்து நிறுத்த, சினந்தில் தனது திரிசூலம் கொண்டு அவரை குத்தி அவரது சடலத்தை அதில் தொங்கியவாறே செல்வதாக செல்கிறது கதை. ( இதுவே இது தொடர்பான கதைகளில் கொடூரம் கம்மியாக இருந்தது !) எனினும் முடிவில் விஷ்ணு ( சிலர் லக்ஷ்மி என்கிறார்கள்) உதவியுடன் சிவன் சரியாகி – விஷ்வாக்செனரும் உயிர் பெற்றார் என்று முடிகிறது.

திரு கோபிநாத் ராவ் அவர்களின் சிற்ப நூல் குறிப்பில் Sri Gopinath Rao’s Elements of Hindu Iconography இவ்வாறு கங்காளற் வடிவம் இருக்கவேண்டும் என்று சொல்கிறார்.

“கங்காளற் வடிவத்தில் அவரை சுற்றி நிறைய பெண்களும், பூத கணங்களும் இருக்க தண்டும். அந்த கணங்கள் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் பல்வேறு இசைக்கருவிகளை வாசித்த வண்ணம் இருக்க வேண்டும். ஒரு கணம் தலையில் ஒரு பெரிய பாத்திரம் ஏந்தி இருக்க வேண்டும் – இதில் கங்காளற் பிச்சை எடுக்கும் உணவு போட பட வேண்டும் – இந்த கணம் அவருக்கு இடது புறம் இருக்க வேண்டும். சுற்றி இருக்கும் பெண்கள் அவர் மீது மோக மயக்கத்தில் அவரை அணைக்க துடிக்கும் வண்ணம் இருக்க வேண்டும். மேலும் ரிஷிகள், தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், வித்யாதரர்கள் அவரை சுற்றி அஞ்சலி முத்திரையில் இருக்க வேண்டும். வாயு தெருக்களை பெருக்க, வருணம் நீர் தெளிக்க, மேலே தேவர்கள் மலர்கள் தூவ, ரிஷிகள் மாத்திரம் ஜெபிக்க, சுர்யனும் சந்திரனும் சாமரம் பிடிக்க – நாரதரும் தும்புருவும் இசை வாசிக்க இவர் வளம் வர வேண்டும் ”

சென்ற டிசம்பர் மாதம் திருக்குறுங்குடி சென்ற பொது கோபுர பராமரிப்பு வேலை நடந்துக்கொண்டு இருந்தது – அதனால் சாரங்களில் ஏறி மேல் தலத்தில் உள்ள சிற்ப்பங்களை படம் பிடிக்க முடிந்தது. அங்கே கங்காளற் சிற்பம் இருப்பதை கண்டு வியப்பில் ஆய்ந்தோம்.

கண்டிப்பாக அந்த சிற்பிக்கு நிறைய தைரியம் இருந்திருக்க வேண்டு,.

மேலே நாம் படித்த பெரும்பாலானவை இந்த சிற்பத்திற்கு அப்படியே பொருந்துகின்றன.

அந்த தண்டத்தின் மறு பக்கத்தில் இருக்கும் அந்த பள்ளி / உடும்பு போன்ற விலங்கிற்கு தான் குறிப்பு கிடைக்க வில்லை.

ஒரு வேலை இப்படி முதிகில் ஒரு சடலத்தை சுமந்த பிச்சை கேட்டல் யார் போடுவார்கள் பாவம். அதனால் மதிய உணவை கட்டிக் கொண்டு வந்து விட்டாரோ என்னவோ.

விளையாட்டை இருந்தாலும், இந்த கதைகளை எல்லாம் நாம் அந்த காலத்துக்கு சூழலில் பார்க்க வேண்டும். நவ கண்டம் போன்ற விஷயங்கள் பற்றி படிக்கையில் இந்த குறிப்பு கிடைத்தது தன உயிரை தானே எடுப்பது ” வீரன் மற்றும் நாராயணன் என்னும் சகோதரர்கள் – இரட்டை பிறவிகள் , இருவருமே முதலாம் பராந்தக சோழர் ஆட்சியில் பணிபுரிந்தவர்கள், நெல்லோரே அரசன் விக்கலனை எப்படி கொன்றோம் என்று மன்னர் கேட்டதற்கு இப்படி தான் என்று தானே தங்கள் தலைகளை கொய்தனர் !”


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஒன்றா , இரண்டா …புலித்தொப்பை நண்பர்களின் லூட்டி – திருமால்புரம்

புள்ளலூர் பற்றிய சென்றைய பதிவினை இதற்கு முந்தைய பதிவு போல நினைத்துப் படிக்கவும்

கதிரவன் தலைக்கு மேலே வந்ததும் சங்கருக்கு தெரியவில்லை. நல்ல பசி. சில மாதம் பழக்கம் தான் அவருடன் பழக்கம் – மடல் மற்றும் அவ்வப்போது தொலை பேசியில் பேசிய தொடர்பு மட்டுமே . எனினும் அந்த சில மாதங்களில், ஒவ்வொரு வாரமும் திங்கள் வந்ததுமே ஒரு எதிர்பார்ப்பு, சங்கர் இந்த வாரம் எந்தக் கோயிலுக்கு சென்று அதில் உள்ள அற்புத வடிவங்களை பற்றி கூறுவார் என்று. சனி ஞாயிறு என்றாலே இந்த ஆர்வலர் அடிக்கும் லூட்டி , அப்பப்பா ? எப்படித்தான் வீட்டில் சமாளிக்கிறாரோ ! சென்னை பயணம் என்றவுடன் அவருடன் ஒரு ஞாயிறு முழுவதும் இல்லை – அரை ஞாயிறு தான், காஞ்சி அருகில் உள்ள திருமால்புரம் செல்வோம் என்று பேசிக்கொண்டோம். இன்னும் நன்றாக அவரது ஆர்வம் தெரிந்திருந்தால் காஞ்சியிலே ஒரு கட்டு ஃபுல் மீல்ஸ் முடித்துவிட்டு வந்திருப்பேன்.

இடம் மட்டுமே தெரியும், அதுவும் அந்த ஊரில் உள்ள ரயில் நிலையம் தான் தெரியும். அதன் அருகில் சந்தித்தோம். பிறகு ரோடு என்ற பேரில் ஒரு கோடு கூட இல்லாத தடத்தில் உருண்டு சென்றோம். இதை விட சாலை மோசமாக இருக்க வாய்ப்பு இல்லை என்ற கோட்பாட்டை மீண்டும் மீண்டும் மாற்ற வைத்த பாதை, அருகில் பச்சை பசேல் என்ற வயல் வெளிகள் வரத்துவங்கின. அப்போது திடீரென ASI பச்சை வேலி கண்ணில் பட்டது. கதவில் பெரிய பூட்டு வேறு தொங்கியது. வேலியை சோதித்துப் பார்த்தோம். யாரோ நல்ல கான்ட்ராக்டர் போல இருந்தது. ஒரு இடத்தில கூட புகுந்து செல்ல முடியவில்லை ( அது சரி – நாம புகுந்து செல்ல நகர வாயில் வேண்டுமே !!) . உள்ளே சிறு கற்றளி – அப்படி ஒன்றும் பெரிய அளவில் இருப்பதாக தெரியவில்லை. விமானம் கூட இல்லை.

அருகில் இருந்த ஊர் வாசிகளிடம் கேட்டுப் பார்த்தோம் – பொதுவாக அவர்களிடத்தில் சாவி இருக்கும் . இங்கே அதுவும் இல்லை. சரி, இவ்வளவு செய்துவிட்டோம், இது கூடவா செய்ய மாட்டோம். இரும்புக் கதவை ஏறி குதித்தேன். ஒரு கூட்டமே கூடி விட்டது ( இலவச சர்க்கஸ்??) . சங்கர் முயற்சிக்கும்போது எங்கள் மீது கருணை பிறந்து ஒருவர் தனது சைக்கிள் தந்து உதவினார். ( உடனே சென்று விட்டார் – அதன் மீது ஏறிய சங்கர் உள்ளே குதித்த பின்னர் திரும்பும்போது வெளியே எப்படி செல்வது என்று யோசிக்க ஆரம்பித்தார்.. சார், வாங்க முதல்லே வேலையை முடிப்போம் – வி கிராஸ் தி பிரிட்ஜ் வென் வி கம் டு இட் !

அருகில் சென்றோம். அழகிய புல்வெளி தரை நடுவில் சிறு கோவில். பின்புறமாக பாதை சென்றது

தொலைவில் இருந்து பார்த்துவிட்டு ரொம்ப சின்ன கோயில், இங்கே அப்படி என்ன இருக்கப் போகிறது என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டோம்.

இப்படி ஒரு சிறு கோவிலுக்கு பராந்தகர் (907 – 955 CE) முதல் பொன்னியின் செல்வர் உட்பட பலரும் கொடை கொடுத்துள்ளனரே ? சரியான இடத்திற்கு தான் வந்துள்ளோமா ?

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_22/part_2/parantaka.html
http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_22/part_2/rajaraja_1.html

அருகில் சென்று பார்த்ததும், எங்கும் எதிலும் கல்வெட்டுகள். இன்னும் பல புதையல்கள் அதனுள் அடக்கி உள்ள இந்த கோயிலை புதிய மதிப்புடன் அணுகினோம்.

பல நுண்ணிய சிற்பங்கள், தோரணம் மற்றும் மேலே பூத வரி என்று பல கண்களில் பட துவங்கின. அவை அனைத்தும் அடுத்த சில பதிவுகளில் பார்ப்போம். முதலில் பூத வரி என்றவுடன் மனதில் ஒரு ஆசை, நமது நண்பர் புலித்தொப்பை இருப்பாரோ என்று ஒரு முதல் தேடுதல் பணியை மேற்கொண்டோம்.

அருமையான பூத வரி. ஆனால் நம் நண்பர் ?

அதோ அங்கே, இருப்பது அவரா ?

இல்லை , தலை கீழாக நின்று சிறக்கும் ஒரு கணம் தான் அது !!

இன்னும் சற்று தேடிய பொது., ஆஹா, நம் நண்பர் தான்,

ஆனால் ஒன்றில்லை , இரண்டு பேர்.


இதுவரை நாம் ஒரு கோயிலில் ஒரு புலித்தொப்பை பார்ப்பதே அரிது. இங்கோ இருவரை பார்த்த ஆசை, பேராசையாக மாறி இன்னும் கிடைக்குமா என்று தேடினோம்.

ஆஹா, இங்கே இன்னும் ஒன்று.

மூன்று , ஒரே இடத்தில. இன்னொன்று இருக்குமோ ? இதோ.

புலித்தொப்பை தாகம் அடங்கி விட்டது. நால்வரை பார்த்த பெருமிதம். சரி அடுத்த பதிவில் அங்கே இருக்கும் மற்ற சிற்பங்களை பார்ப்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

தச புஜ ரிஷப தாண்டவ மூர்த்தி – மேலைக்கடம்பூர், பாகம் 1

இன்றைக்கு நாம் ஒரு மிக அரிய அற்புத சிலையை பார்க்கப்போகிறோம். கடம்பூர் என்றதுமே பலருக்கு பொன்னியின் செல்வன் நினைவுகள் மலரும். நாங்கள் ஒரு வருடத்துக்கு முன்னர் மேலைக்கடம்பூர் சென்றோம்.

ஒரு வார பயணத்தின் முதல் நாள் என்பதாலும், அன்றைக்கு இரவே தில்லை செல்லவேண்டும் (30 km தொலைவில்) என்பதாலும், அரக்கபரக்க சென்றோம். மழை வேறு “இதோ இப்போ வருகிறேன்” என்று பயமுறுத்திக்கொண்டே இருந்தது. கோயில் வாயில் அடையும் போதே இருட்டி விட்டது. அடுத்த நாள் பிரதோஷ பூஜைக்கு குருக்கள் தயார் ஆகிக்கொண்டிருந்தார்.

ஒரு வருடத்துக்கு முன்பா? அப்போ ஏன் இவ்வளவு தாமதம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இரு காரணங்கள். ஒன்று திரு ராஜா தீக்ஷதர் அவர்கள் அருமையான ஆங்கில பதிவு ஒன்றில் மிகவும் அருமையாக இந்த ஆலயத்தை விளக்கி இருந்தார். அவரிடத்தில் அந்தப் பதிவை தமிழில் மொழிப்பெயர்த்து நமது தளத்தில் இட கேட்டிருந்தபோது, திடீரென அவர் நம்மை விட்டு பிரிந்தார். அவர் நினைவாக விரைவில் அதனை செய்து விடுவோம். இரண்டாவது காரணம், கடம்பூர் கோயிலில் இருக்கும் சிலை. பிரதோஷத்தன்று மட்டுமே வெளியில் வரும் இந்த சிலை, அன்று நாங்கள் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் வெளி வரவில்லை. வெளியில் இருக்கும் பெயர்ப் பலகையை மட்டுமே படம் பிடித்தோம்.

ஆனால், இணையத்தில் தேடியதில் கோயில் தர்மகர்த்தா திரு விஜய் அவர்களின் தொடர்பு கிடைத்தது.

கடம்பூர் கோயில்

ஆலயத்தின் ஸ்தல புராணம் பற்றிய அவரது பதிவு.

கடம்பூர் புராணம்

கடம்பூர் – அம்ரிதகடேஷ்வரார் கோயில். தற்போது இருக்கும் கற்கோயில் முதலாம் குலோத்துங்கன் காலத்து கட்டுமானம் (1075 -1120 C.E.). அதன் அற்புத வடிவம் மற்றும் சிற்பங்கள் பற்றி திரு ராஜா தீக்ஷதர் அவர்களது பதிவில் பின்னர் பார்ப்போம். நேரடியாக அந்த சிற்பம் காண செல்வோம்.

தச புஜ ரிஷப தாண்டவ மூர்த்தி

அருகில் சென்று அதன் அற்புத வடிவத்தை பார்ப்போம்.

இந்த சிலையின் தனித்தன்மைகள், உயர்ந்த மேடை, பின்னல் இருக்கும் பிரபை

திரு நாகசாமி அவர்கள் இதனைப் பற்றி கூறுகையில் , ” இந்த கோயிலில் குலோத்துங்கன் காலத்து, அற்புத உற்சவர் சிலைகள் பல உள்ளன. அவற்றில் ஒன்று சிவன் நந்தியின் முதுகில் ஆடும் காட்சி, அருகில் விநாயகர், முருகர், பிருங்கி, நந்தி, பைரவர் மற்றும் பல கணங்கள் உள்ளன. இந்த சிலை வங்க தேசத்து பால வம்சத்து வெளிப்பாடை கொண்ட சிலை. இந்த சிலை சுமார் 9th – 10th நூற்றாண்டை ஒட்டி இருக்க வேண்டும். இது குலோத்துங்கனின் ராஜ குரு கொண்டு வந்ததாக இருக்கலாம். அவர் வங்க தேசத்தில் இருந்த வந்தவர். இது தமிழ் நாட்டில் கிடைத்த மிகவும் பழமையான பால கலை சிற்பம். சிதம்பரத்துக்கும் வங்க தேசத்திற்கும் இருந்த நெருங்கிய தொடர்பை இது காட்டுகிறது “

கடம்பூர் பற்றிய திரு நாகசாமி அவர்களின் பதிவு

இந்த சிலையை பால கால புத்தர் சிலையுடன் ஒப்பிட்டு பார்ப்போம். (நியூயார்க் நகர மெட்ரோபொலிடன் அருங்காட்சியக சிலை)

மேடை மற்றும் பிரபைகள் ஒத்து போவதை நாம் காணலாம்.

மேலும் இந்த சிலை தென்னாட்டு வடிவங்களில் இருந்து வேறுபட்டது என்பதற்கு மகேசனின் ஊர்த்வ லிங்கம் இன்னும் ஒரு சான்று. இவ்வாறு நாம் சோழர் மற்றும் பல்லவர் கால செப்புத்திருமேனிகளில் பார்ப்பதில்லை.

திரு விஜய் அவர்கள் நாம் இன்னும் நன்றாக பார்க்க, அருகில் சென்று பின்னால் இருக்கும் தகடை விலக்கியும் படம் எடுத்து உதவி உள்ளார்.

மிகவும் அழகாக காட்சி அளிக்கும் இந்த சிலை மகேசனின் அற்புத நடனத்தை பிரதிபலிக்கிறது. கைகள் தோள்பட்டையில் இணையும் பாணி மிகவும் அருமை. இதற்கு முந்தைய பல்லவர் மற்றும் சோழர் வடிவங்களில் கைகள் முட்டியில் பிரியும்.

இன்னும் நிறைய பார்க்க உள்ளது இந்த சிலையில். அவற்றை இந்தப் பதிவின் அடுத்த பகுதியில் விரைவில் பார்ப்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் மூன்று

கடந்த இரு பதிவுகளின் தொடர்ச்சியாய் இன்றும் நமது வாசகர்கள், முன் வரிசையில் அமர்ந்து, இந்த அற்புத ஓவியப் பயணத்தை நம்முடன் தொடர்கிறார்கள். இதுவரை பயணம் அருமையாக சென்றுக் கொண்டிருக்கிறது. காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் ராஜசிம்மன் காலத்து அரிய சோமஸ்கந்தர் ஓவியத்தின் சிதைந்த பகுதிகள் கொண்டு முழு ஓவியத்தையும் தீட்டும் நமது முயற்சி இன்றும் தொடர்கிறது.

இந்த ஓவியத்தின் நடு நாயகனான ஈசன் மீது முதலில் நாம் கவனம் செலுத்துவோம்.

அடுத்து உமை

உமையின் வடிவத்தை ஓவியத்தில் உற்றுப் பார்க்கும் பொது, அம்மை மஞ்சள் நிற மேலாடை அணிந்திருப்பது போல தெரிந்தது. மஞ்சள் பூசி உள்ளாரோ அல்லது மஞ்சள் நிற கச்சை அணித்து இருக்கிறாரோ ?

ஓவியத்திற்கு இப்போது வண்ணம் தீட்டுகிறோம். முதலில் மெல்லிய வண்ணம். உடல் வண்ணங்கள்.

மகேசன் வண்ணம் பெறுகிறார், நீலகண்டர் ஆயிற்றே !

உமை இன்னும் வண்ணம் ஏற்றி அழகு பெறுகிறார்.

அம்மை அப்பன் எப்படி ஒன்றாக அழகுபட காட்சி அளிக்க ஆரம்பிக்கின்றனர்.

கேயுரம் எனப்படும் மேல் கை பட்டை, மற்ற ஆபரணங்கள் என்று இன்னும் ஜொலிக்க ஆரம்பிக்கயார் மகேசன் .

ஆசனம், கணம் , தோழி என்று அனைவரும் வண்ணம் பூசப்படுகின்றனர்.

முடியும் தருவாயில், மீண்டும் ஒரு முறை நாம் எதையாவது விட்டு விட்டோமோ என்று ஓவியத்துடன் ஒத்துப் பார்க்கிறோம்.

அடடே, நான்முகனின் அஞ்சலி ஹஸ்தம் சரி செய்ய மறந்துவிட்டோமே.

ஈசனின் கை முத்திரைகள் சில சரியாக தெரியவில்லை, அதைப் பற்றி படிக்க, நாம் சோமஸ்கந்தர் பற்றி தொடரை ஆரம்பிக்க காரணமான திரு கிப்ட் சிரோமனி அவர்களது 1971 ஆம் ஆண்டு குறிப்பை மீண்டும் சென்று படித்தேன்

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_somaskanda.htm

சோமஸ்கந்தர் வடிவம் பற்றி அவர் சொல்லும்போது ராஜசிம்மன் காலத்திற்கு முந்தைய சோமஸ்கந்தர் கல் சிற்பம் பற்றி இவ்வாறு விவரிக்கிறார். ” சிவனின் நான்கு கைகளில், மேல் வலது கையில் ஒரு பாம்பை பிடித்து இருக்கிறார் ”

ராஜசிம்மன் காலத்து சோமஸ்கந்தர் வடிவத்தில் அவர் குறிப்பாக இந்த பாம்பை பற்றி ஒன்றும் கூறவில்லை. எனினும் பாம்பு கண்ணில் தென்படுகிறதா என்று தேடிப் பார்த்தோம்.

மேல் வலது கையில் ஒன்றும் தெரியவில்லை , ஆனால் கீழ் வலது கையின் அருகில்

படம் எடுத்து ஆடும் பாம்பு தெரிகிறதா ?

அத்துடன் நமது இந்த பயணம் முடிவுக்கு வருகிறது, மீண்டும் ஒரு முறை நாம் ரசிக்கும் வண்ணம் சலிக்காமல் வரைந்த ஓவியர் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்களையும், சரியான தருணத்தில் நல்ல படங்களை தந்து உதவிய இளம் நண்பர் திரு ஜகதீஷ் அவர்களையும் வாழ்த்தி , முடிவு பெற்ற ஓவியத்தை படைக்கிறேன்.

இந்த ஓவியப் பயணம் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். உங்கள் உற்சாக வரவேற்புடன் இன்னும் பல பணிகளை இது போலவே எடுத்து நிறைவேற்ற முயற்சிக்கிறோம்.இது ஒரு முயற்சி தான், பிழைகள், தவறுகள் ஏதேனும் இருந்தால் முதலில் மன்னிக்கவும் , பிறகு கண்டிப்பாக எடுத்துக் கூறவும்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் இரண்டு

முதல் பாகத்தை படித்து பலரும் அனுப்பிய நல்ல மறுமொழிகள் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. யாருமே சென்று காணாத இந்த பல்லவர் கால சுவர் ஓவியங்கள் இன்று புத்துயிர் பெற்று நம்முடன் பேசுவது போன்ற உணர்ச்சி பெறுகிறோம். இந்த பயணத்தில் நானும் ஓவியர் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்களும் பல புதிய விஷயங்களை தெரிந்துக்கொண்டோம். அதை அப்படியே உங்களுடன் பகிர்கின்றோம்.

நண்பர் திரு ஜகதீஷ், அவருக்கு மீண்டும் ஒரு நன்றி. அவர் தந்த படங்கள் எங்களுக்கு எந்த அளவிற்கு உதவியாக இருந்தது எனபது இந்த பதிவை படித்து முடித்தவுடன் புரியும். தக்க சமயத்தில் உதவினார் இந்த பதினோராவது வகுப்ப மாணவன்.

சென்ற பதிவில், படத்தில் யார் யார் இருக்கின்றனர், எங்கெங்கே என்று குறித்து விவரித்தோம் நாங்கள், இன்னும் அருகில் சென்று ஒவ்வொரு சிறு குறிப்புகளையும் பார்த்தோம். பூத கணம், எங்குமே முழுமையாக தெரியவில்லை. கொஞ்சம் கற்பனைத் திறனை கலந்து வரைந்து முடித்து விட்டார் ஓவியர்.

அருகில் இருக்கும் தோழி அப்படி அல்ல. நல்ல படம் இருந்தது, மேலே உமையின் ஆடையில் இருக்கும் வேலைப்பாடு கூட கிடைத்தது.


அடுத்து இருவருக்கும் நடுவில் ஏதாவது இருக்குமோ.அனைத்து ஓவியங்களிலும் இந்த பகுதியில் சிதைந்து விட்டது ( மொத்தம் நான்கு சுவர் ஓவியங்களை வைத்து நாம் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம் ) . சோமஸ்கந்தர் பற்றிய நமது தொடரை வாசிக்கும் நண்பர்கள், பொதுவாக சோமஸ்கந்தர் வடிவங்களில் தரையில் ஒரு கூஜா இருப்பதை கவனித்து இருப்பார்கள். இதோ இந்த மலை கடற்கரை கோயில் வடிவம் போல

அதனால் அதை நமது ஓவியத்திலும் போட்டுவிட்டோம்.

அடுத்து பிரம்மா. ஒரே ஒரு ஓவியத்தில் மட்டும், அவரது உருவம் தெரிகிறது. ( இரு கைகளையும் கூப்பி அஞ்சலி முத்திரையில் அவரை காட்டவேண்டும். மூன்றாம் பாகத்தில் திருத்தி விடுவோம் )

எப்படி அவரது மற்ற முகங்களை காட்டுவது என்று யோசிக்க, புள்ளமங்கை பிரம்மா நினைவுக்கு வந்தார்.
.

அவரை முன்மாதிரியாக வாய்த்த இந்த பிரம்மன் படத்தை வரைந்தாயிற்று.

விஷ்ணு உருவத்திற்கு இந்த நிலை இல்லை. ஒரு ஓவியத்தில் மிகவும் நல்ல நிலையில் இருப்பதால் எங்கள் பணி எளிதாயிற்று.

அடுத்து குழந்தை முருகன்.

முருகன் – அழகன். அதுவும் குழந்தை முருகன் என்றால் !! சரியாக வரவேண்டுமே.

அருகில் சென்று படங்களை பார்க்கும் பொது தான் நாங்கள் முதலில் நினைத்ததைப் போல ஆசனத்தின் கால்களில் சிங்க வடிவங்கள் இல்லை என்பது தெரிந்தது.

அடுத்து உமை.


ஈசன், இந்த வடிவத்தின் நடு நாயகன் – மிகவும் நேர்த்தியாக வரவேண்டும் என்பதால், இன்னும் கவனமாக படங்களை ஆராய்ந்தோம். குறிப்பாக அவர் கை முத்திரைகள். ( ஒரு குறிப்பு மிகவும் உதவியாக இருந்தது – அது என்ன வென்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்) . இடது மேல் கரம் இங்கே பாருங்கள்.

ஈசனின் மகுடம். நிறைய வேலைப்பாடுடன் இருந்ததால் மிகவும் கடினமாக இருந்தது.

குறிப்பாக மகுடத்தில் உள்ள ஒரு அணிகலன். இதுவரை நாங்கள் பார்க்காததாக இருந்தது. எனினும் அந்த வடிவம் நாம் முன்னரே எங்கோ பார்த்த வடிவம். அப்போது திரு நாகசாமி அவரது செப்புத்திருமேனி (Masterpieces of South Indian Bronzes)நூலில் ஒரு குறிப்பு கிடைத்தது. பல்லவர் கால செப்ப்புத்திருமேனி ஒன்றில் இரு மகர ஒப்பனை கொண்டு இந்த அணிகலன் உள்ளது என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

ஆம், அதே நம் ஓவியத்திலும்.


இப்போது ஒரு அளவிற்கு நமது ஓவியம் வந்து விட்டது. இன்னும் சிறு சிறு அமைப்புகளை சரி செய்து வண்ணம் பூசினால் முடிந்து விடும்.

அதற்கு, அடுத்த இறுதிப் பதிவு விரைவில் பார்ப்போம்.

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் ஒன்று

தமிழ் நாட்டு ஓவியக்கலையின் மிக தொன்மையான பல்லவ ஓவியங்கள் இன்றும் காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் இங்கும் அங்குமாய் சிதைந்த நிலையில் பார்க்க முடிகிறது. பார்த்த சில நொடிக்களிலேயே நம்மை சொக்க வைக்கும் அழகைக் கொண்ட இந்த ஓவியங்களைப் பார்க்கும் பொது ஒருபக்கம் பரவசமும் மறு பக்கம் பெரும் துக்கமும் வரும். பரவசம், ஆயிரத்திமுன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே தனது கலையில் இப்படி ஒரு உன்னத நிலையை நம் மண்ணின் கலைஞன் எட்டிவிட்டான் என்பதும், அவனது கலை காலத்தை வென்று இன்று வரை நின்றுள்ளது என்பதும். துக்கம், இங்கும் அங்குமாய் தெரிந்த சில கோடுகள், சில வண்ணங்கள், என்று நாம் இன்று காணும் இந்த ஓவியங்கள், அடுத்த தலைமுறை பார்க்க , பரவசம் அடைய இந்த அரிய பொக்கிஷங்களை , நம் குல தனங்களை, நிலைக்க வைக்க முடியுமா என்ற கேள்வி.

நம்மால் முடிந்தது – இன்றைய நிலையை அப்படியே படம் பிடித்து இணையம் மூலம் கருவூலம் அமைத்து பாதுகாக்கமுடியும். எனினும், எங்கோ மூலையில் ஒரு சின்ன ஆசை. இவை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி வண்ணங்களின் பிரதிபலிப்பாய் ஜொலித்திருக்கும் என மனக்கண்ணில் அப்படியே அவற்றை கற்பனை செய்து ரசிப்பது உண்டு, எனினும் அப்படி மனக்கண்ணில் கண்ட காட்சியை அனைவருடன் எப்படி பகிர்வது. பல்லவ சிற்பியுடன் போட்டி போட நமக்கு தேர்ச்சி இல்லை, தற்போது உள்ள கணினி தொழில்நுட்பம் கொண்டு படங்களை ஒற்றி எடுத்தும், ஒரு ஓவியம் கூட முழுவதுமாக இன்று நிலைக்க வில்லை. இது சாமானியன் செய்யும் வேலை இல்லை என்று புரிந்தது. இந்த கலை ரத்தத்திலேயே ஊறி போன ஒருவரால் மட்டுமே இவற்றுக்கு உயிர் கொடுக்க முடியும் என்று தெளிவாக தெரிந்து. ஓவியர் நண்பர்கள் யாரை சந்தித்தாலும் கோரிக்கை மனு கொடுத்து வைப்பேன்.

இப்படி இருக்கையில், தற்செயலாக நண்பர் ஒருவரின் ஓவியக் கண்காட்சி ஒன்றிற்கு சென்ற பொது, ஓவியர் மணியம் அவர்களின் வழித்தோன்றல் இருவரை சந்திக்க நேர்ந்தது. ஆம் அவர்தான், அமரர் கல்கியின் கதை காலத்திற்கு மெருக் ஏற்றி அற்புத ஓவியங்களை படைத்தவர். அவரது கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டு வந்தவர். திரு மணியம் அவர்களின் ஓவியங்கள் சில , அவரது மகன் திரு மணியம் செல்வன் அவர்களும் சிறந்த ஓவியர், அவரது ஓவியங்கள் சில ,ஆனால் நான் சந்தித்தது அவரது புதல்விகளை . புலிக்கு பிறந்தது பூனை யாகுமா. இருவருமே சிறந்த ஓவியர்கள். அப்படியே நின்றுக் கொண்டே பேசினோம், கல்கி , பார்த்திபன் கனவு , பொன்னியின் செல்வன் என்று போன உரையாடல் முடிவில் கோரிக்கை மனுவை நீட்டினேன். திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்கள் அவரது ஓவியங்கள் ,முயற்சி செய்து பார்ப்போம் என்று கூறினார்.

பணி மிகவும் கடினம், ஓவியங்கள் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தன. நான்கு இடங்களில் உள்ள இதே வடிவம், ஒரு இடத்தில கூட முழுவதுமாக இல்லை. போதாத குறைக்கு என்னிடத்தில் நல்ல படங்களும் இல்லை. நண்பர்கள் இடத்தில கேட்டுப் பார்த்தேன், யாரிடத்திலும் எங்களுக்கு தேவைப்படும் அளவிற்கு பெரிய படங்கள் இல்லை.


இருப்பதை வைத்து, முதலில் வேலையை துவங்கினோம். நன்றாக வருமோ என்ற ஐயம் எழும் முன்னரே, உடனே வந்தது சுபாஷினி அவர்களின் முதல் பிரதி

சரியான இடத்தில தான் பணியை ஒப்படைத்துள்ளோம் என்று சொன்னது மனம். வாழை அடி வாழையாய் வந்த கலை, அவர்களது கையில் விளையாடியது . எனினும் மிக நேர்த்தியாக வரையவேண்டும் என்றால் நல்ல படம் சீக்கிரம் தேவை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொடிருந்த பொது, ஒரு இனிய அதிர்ச்சி. மே மாதம் தற்செயலாக தளத்தின் மூலம் உரையாடிய பத்தாம் வகுப்பு மாணவன் ஜகதீஷ், ஒரு மடல் அனுப்பினான். எனது காஞ்சி பயண புகை படங்கள் என்றது தலைப்பு. கூடவே,”ஹலோ அண்ணா , என்னை நினைவுள்ளதா, நான் ராஜகேசரி ( புனைப்பெயர் ) , சமீபத்தில் காஞ்சிபுரம் சென்றிருந்தேன் , அங்கு எடுத்த படங்கள் இதோ ”

உள்ளே, நான் தேடிக்கொண்டிருந்த படங்கள். உடனே தொடர்பு கொண்டு, முழு அளவில் படத்தை அனுப்பு என்று சொன்னவுடன் உதவினான் நம் தோழன், இந்த சின்ன வயதில் -வேலூர் பள்ளியில் இப்போது பதினொன்றாம் வகுப்பு படிக்கும் நம் ஹீரோ இதோ.

பல்லவ கலை, ராஜசிம்ம பல்லவனால் வளர்க்கப்பட்ட கலை, இன்று இந்த மாணவன் உதவியுடன் அடுத்த தலைமுறைக்கு செல்கிறது.

பிரம்மா

உமை

விஷ்ணு

நல்ல படங்கள் ஏன் தேவை பட்டன என்பதற்கு, கிழே இருக்கும் பூத கணம், மற்றும் பணிப்பெண் உருவங்களை கண்டு கொள்ள பெரிதும் உதவின.

ஆசனத்தின் கால்கள் சிங்க முகங்கள் போல சித்தரிக்க நினைத்தோம். ( மலை மகிஷாசுரமர்தினி மண்டபம் போல )

அடுத்து இன்னும் பல விவரங்களை எடுத்து ஓவியத்தை பூர்த்தி செய்ய ஆரம்பித்தோம்.

நன்றாக வருகிறது . இன்னும் பார்க்க ஆவலா ? பொறுமை, அடுத்த பதிவில் தொடரும் இந்த ஓவியம்.

ஈசனின் மாப்பிள்ளை ஊர்வலம்

ஒரே நாளில் மூன்று முறை அதிர்ஷ்டம் அடிப்பது கடினம். எனது மனைவியின் பிறந்த நாளன்று், தற்செயலாக நாங்கள் தஞ்சையில் இருந்தோம் – முதல் வேலையாக பெரிய கோயில் ( நானும் அரவிந்தும் விடியல் காலையிலேயே எழுந்து புள்ளமங்கை தனியே சென்று வந்து விட்டோம்). ஒரு போன் போட்டு குடவாயில் பாலு ஐயா இருக்கிறார்களா என்று பார்த்தோம். அவரோ, இதோ வருகிறேன் என்று அடுத்த நிமிடம் பெரிய கோயிலுக்கு வந்தது மட்டும் அல்லாமால், வாங்க.. நானே சுற்றிக் காட்டுகிறேன் என்று புறப்பட்டுவிட்டார். கரும்பு கடிக்க கூலி தேவையா. வாருங்கள் ஒரு கரும்பை, சாறு பிழிந்து உங்களுடன் பகிர்கின்றேன். சிறிய புடைப்புச் சிற்பம் தான், எனினும் சோழ சிற்பியின் கைவண்ணம் குடவாயில் பாலு அவர்கள் சொல்வண்ணம் இரண்டும் சேர்ந்தால். ..

நாம் முன்னரே பெரிய கோயிலில் உள்ள தக்ஷன் தலையை கொய்தது மற்றும் காமனை எரிக்கும் படலங்களின் சிற்பங்களை பார்த்து விட்டோம்

தக்ஷன் தலையை கொய்த ஈசன் –

காமனை எரிக்கும் ஈசன்

இன்று நாம் பார்க்கும் காட்சி, அவற்றை அடுத்து வருபவை. மகேசன் மீண்டும் குடும்பஸ்தானாக ஆக சம்மதிக்க வைத்துவிட்டனர். தாக்ஷாயினி மீண்டும் உமையாக, பர்வத ராஜன் ஹிமவானின் குமாரியாக பிறந்து வளர்ந்து வருகிறாள். ஈசனே தன் கணவனாக வருவதற்கு தவமும் செய்யத் தொடங்கிவிட்டாள்.கந்தபுராணத்தில் இந்த காட்சியின் ஒரு வர்ணனை உண்டு ( சிற்பம் காலத்தால் அந்த காவியத்திற்கு முற்ப்பட்டது ).

கதை மிகவும் சுவாரசியம். பர்வத ராஜன் ஈசன் தூது அனுப்பிய ஏழு முனிவர்களின் பேச்சை ஏற்று தனது மகளை மகேசனுக்கு கொடுக்க ஒப்புக் கொண்டு விட்டான். ஈசன் தனது திருமணத்திற்கு கிளம்பி வருகிறார். அப்போது ஹிமவானின் மனைவி, ராணி மேனை , ஒரு அம்மாவுக்கே உண்டான ஆர்வத்துடன் தன மருமகனைக் காண விரைந்து செல்கிறாள். தன அருமை மகள் கரம் பிடிப்பவன் என்ன வதன சௌந்தர்யம் பொருந்தியவனாக இருப்பன் என்று பார்க்க அவளுக்கு ஆவல்.

ஈசன் எப்படி வருகிறார் – அவர் தான் திருவிளையாடல் நாயகன் ஆயிற்றே. இன்றும் ஜானவாசம் எப்படி எல்லாம் நாம் கொண்டாடுகிறோம் . என்ன தோரணை, பள பளக்கும் பட்டாடை, உடலெங்கும் தொங்கும் தங்க ஆபரணங்கள் , சிகை அலங்காரம் என்ன நகை அலங்காரம் என்ன, குதிரை மேலே மாப்பிள்ளை வர, ஆட்டம் பாட்டம் என்று கூட வரும் கோஷ்டி அடிக்கும் லூட்டி வேறு.

இதை எல்லாம் எதிர்பார்த்து சென்ற மேனைக்கு அங்கே ஒரு பெரும் அதிர்ச்சி.

பூத கணங்கள் சூழ்ந்து , ரிஷப வாஹனத்தில், அண்ணல் யானை தோல் உடுத்தி, நாக ஆபரணம் பூண்டு, பரதேசி போல வரும் கோலம். அதுவும் நமக்காக திரும்பி படம் பிடிக்க போஸ் கொடுக்கிறார் பாருங்கள்.

வரவேற்க வந்த மேனைக்கும் அவள் தோழிகளுக்கும் தூக்கி வாரி போட்டது. உடனே சென்று தன கணவரிடம் முறையிட்டாள்.

ஏற்கனவே சிவன் மகா கோபக்காரன். பிரமன் தலையை. தட்சன் தலையைக் கொய்தவர். இப்படிப்பட்டவர் எப்படி வருகிறார் பாருங்கள்.. இவருக்கா நம் மகளைத் தருவது?என்னால் ஒப்புக் கொள்ளமுடியாது..

http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0239.html

மலரயன் புதல்வன் றன்னோர் மடந்தையை மணத்தின் நல்க
அலைபுனற் சடிலத் தண்ணல் அவன்றலை கொண்டான் என்பர்
நிலைமையங் கதனை யுன்னி நெஞ்சக மஞ்சு மெங்கள்
குலமகள் தனைய வற்குக் கொடுத்திட லெவனோ வென்றாள்.

அருகில் இருக்கும் பிரம்மன், விஷ்ணு, நாரதர் எடுத்துரைக்க – நடந்தது தக்ஷன் செய்த குற்றத்தின் வினைப்பயன். அதையும் மன்னித்து மகேசன் அவனை உயிர்ப்பித்து ( ஆட்டு தலையு்டன் ) விட்ட கதையை கூறி, உன் மகளுக்கு இவரே ஏற்ற கணவர் என்றும், ஏற்கனவே உள்ளதை கவர்ந்துவிட்டார் என்றும் கூறி சமாளித்து விட்டனர்.

முடிவில் திருமணம் சிறப்பாக நடை பெற்று அனைவரும் நலாமாக கிளை திரும்பினர். அடுத்து குமார சம்பவம் தான். …

குடவாயில் ஐயாவுக்கு மீண்டும் ஒரு பெரிய நன்றி எனினும் அவர் இந்த சிற்ப்பத்தை தனது நூலில் வேறு விதமாக விவரித்துள்ளார் . அதையும் விரைவில் பார்ப்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

மீண்டும் நம் நண்பர் புலித்தொப்பை – கொடும்பாளூர் மூவர் கோயில்

பொதுவாக புகழ் பெற்ற கலைச் சின்னங்களை பலரும் பார்க்க வருவர். அவைகளைப் பற்றி தேடினால், பக்கம் பக்கமாக பல பதிவுகள், ஆராய்ச்சிகள், புத்தங்கங்கள் என்று ஒரு பெரிய பட்டியலே கூகுளார் எடுத்துப் போடுவார். அப்படி இருக்க, இன்னும் வெளி வராதவை ஏராளம். சிற்பம் என்றால் மல்லை, ஓவியம் என்றால் அஜந்தா, கோயில் என்றால் தஞ்சை, மதுரை, சிதம்பரம், ஸ்ரீரங்கம் என்று இன்று முடிவு ஆகிவிட்டது. அப்படி இல்லமால், இன்றும் தங்கள் அழகை பொத்தி மறைத்து, மறைந்து நிற்கும் பொக்கிஷங்களை நாம் வெளிக் கொண்டு வர வேண்டும். அவற்றை பார்க்கும் போதே, எனது குலம் ஒரு மகத்தான குலம், எனது நாடு ஒரு வாழும் வரலாறு என்று நாம் மார்தட்டி, ஆழ் மனதில் ஒரு பெருமிதத்தோடு, ரோமங்களில் ஒரு மயிர் கூச்சலோடு, தலை தானாக நிமிர்ந்து பார்க்கும் ஆனந்தம் இருக்கிறதே, அதுவே பரம சுகம்!

அப்படி ஒரு உணர்வு, மூவர் கோயில் செல்லும் பொழுது எங்களுக்கு ஏற்பட்டது. சுற்றிலும் அமைதி ததும்பும், பச்சை பசேல் என்ற வயல் வெளி நிறம்பிய, ரம்மியமான கிராமத்தை தாண்டிச் சென்றோம். நெடு நெடு என்று கான்க்ரீட்டும் கண்ணாடியும் தினமும் பார்த்து சலித்த எங்களுக்கு இப்படி ஒரு அற்புதமான மாறுபட்ட சூழலில், தொலைவில் ஒரு விமானம் தென்பட்டது.

அதோ மூவர் கோயில், என்னடா இது மூவர் கோவில் என்று சொல்கிறீர்கள் ஆனால் இரண்டு கோபுரம்தான் தெரியுது என்கிறீர்களா! ஆமாம், இன்றைக்கு எஞ்சியது இரண்டு தான். மூன்றாவது அடிமட்டம் மட்டுமே உள்ளது. இந்த அற்புத கோயில் கட்டிய வள்ளல், கொடும்பாளூர் அரசர் இருக்குவேளாண் பூதி விக்கிரம கேசரி, அவரும் அவரது இரு தேவியரும், காளாமுக துறவிகளுடன் சேர்ந்து நிறுவினர் என்று கிரந்த லிபியில் கல்வெட்டு உள்ளது. கொடும்பாளூர் அரசர்கள் சோழர்களுக்கு துணைபுரியும் சிற்றரசர்களாக இருந்து வந்தனர். பூதி விக்கிரம கேசரி, இரண்டாம் பராந்தகர் (ஆமாம், உடனே பொன்னியின் செல்வன் நண்பர்கள் விழித்துக் கொள்வது தெரிகிறது. நமது ராஜ ராஜரின் தந்தையார் சுந்தர சோழர் தான்) காலத்தில் அவருக்கு கீழ்படிந்த சிற்றரசராக இருந்தார்.

தொலைவில் இருந்து பார்க்கும் பொழுது, சற்று சிறியதாக உள்ளதே, இதற்காகவா இவ்வளவு தூரம் வந்தோம் என்று நினைக்கத் தோன்றும். பொறுமை, இது சிறு கோயில் ஆனால் ஒரு அழகிய சிற்பக் கூடம்.

ஒருவேளை இந்த வாக்கியத்தை சுட்டிக்காட்டவே, இன்று மூவர் கோயிலில் இருக்கும் பல சிற்பங்களை விட்டு விட்டு, ஒரு சிறிய, எனினும் அரிய வடிவத்தை எடுத்துக் காட்டுகிறேன். இதில் எனக்கு ஒரு தனி லாபமும் உண்டு, காரணம் இது எனக்கு மிகவும் பிடித்த சிற்பம் !!

முதலில், அது எங்கே இருக்கிறது என்பதை பாருங்கள், பூத ரேகையில் தென்படுகிறதா?

இன்னும் அருகில் சென்று தேடுவோமா.

என்ன இன்னும் தெரியவில்லையா? பரவாயில்லை இதோ உங்களுக்கு சற்று உதவுகிறேன்.

என்ன அழகு இந்த குட்டி பூதம், அதுவும் அதன் தொப்பை! ஆமாம், நமது புலித்தொப்பை தான்.


இன்னுமா கண்டு பிடிக்க முடியவில்லை?


இன்றைக்கு குட்டி பூதம் சற்று கோபமாகவே இருக்கிறது!

விளையாட்டில்லை, பூத ரேகை விமானத்தை சுற்றிலும் இருக்கிறது. இரண்டாவது விமானத்தில் அவ்வாறே உள்ளது. எங்கும் குட்டி பூதங்கள் தான், ஒரே சேஷ்டை, லூட்டி அடிக்கின்றன. அப்படி இருக்க, ஒரே ஒரு முறை மட்டும் வரும் இந்த புலித்தொப்பை பூதத்தின் தனித்தன்மையின் காரணம் என்ன? அதுவும் நாம் இவரை முதன் முதலில் பகீரத பிரயத்தன சிற்பத்தில் மல்லையில் பார்த்தோம், பிறகு புள்ளமங்கை, ஸ்ரீனிவாச நல்லூர், இப்போது மூவர் கோயில். இப்படி அணைத்து இடங்களில் ஒரே ஒரு முறை மட்டும் சித்தரிக்கப்பட்டுள்ள இந்த பூதம் யார்?

அடுத்த பதிவில் மற்ற அற்புத வடிவங்களையும் பார்ப்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

புல்லரிக்கும் புள்ளமங்கை அர்த்தநாரீஸ்வர கோலம் – திரு சதிஷ் அருண்

இன்றைக்கு நமது குழுவில் ஒரு புதிய நபர் வருகை / சேர்கை – ஒரு கலை ஆர்வலர் – இன்று தன் ரசனையை நம்முடன் முதன்முறையாக பகிர்கிறார். திரு சதிஷ் குமார் அருணாசலம் அவர்கள், தற்போது அமெரிக்காவில் கணிபொறி நிபுணராக பணிபுரயும் இவர் தான் புள்ளமங்கை சென்ற அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார். இனி திரு சதீஷ் அவர்கள்

இதுவரை விஜய் அவர்களின் படைப்புகளை படித்தவர்களுக்கு, புள்ளமங்கை கோயில் நன்கு பரிச்சயமாகி இருக்கும். புள்ளமங்கை ஒரு கலைப்பெட்டகம். 1000 ஆண்டுகளுக்கு முன் சிற்பிகள் உளியை கொண்டு செதுக்கிய அற்புத ஓவியங்கள். நம் கை விரல்களை அகட்டினால், கட்டை விரல் நுனியிலிருந்து சுண்டு விரல் நுனி வரை உள்ள அளவில் பல அற்புத சிற்பங்களை தன்னகத்தே கொண்டுள்ள புள்ளமங்கை கோயில் பார்க்கப் பார்க்க திகட்டாதது.

புள்ளமங்கையை நினைவுக்கு கொண்டுவர – கீழே உள்ளவரை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள்.

இங்குள்ள கை அளவு சிற்பங்கள் சிறப்பு மிக்கவை என்றாலும், இந்த தரவில் விமானத்தின் மீதுள்ள ஒரு அழகோவியத்தைப் பார்ப்போம்.

தாயே மூகாம்பிகே என்ற படத்தில் இளையராஜா அவர்கள் பாடிய ஜனனி ஜனனி பாடல், எனக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. அதில் வரும் வரிகள் –

“சதுர்வேதங்களும், பஞ்ச பூதங்களும், ஷண்மார்க்கங்களும், சப்த தீர்த்தங்களும், கொண்ட நாயகனின், குளிர் தேகத்திலே, நின்ற நாயகியே, இட பாகத்திலே.”

திருஞானசம்பந்தர், திருச்சிராப்பள்ளியில் அருளிய பதிகத்தில்,

“நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே” (தேவரம் 1.98.1)

(நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனை, தீயது ஒன்றேனும் இல்லாதவனை, மிக வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனை, பார்வதியை ஒரு பாகமாக உடையவனை, அவனது அருளாலன்றிச் சென்றடைய முடியாத வீடுபேறாகிய செல்வத்தை உடையவனை, சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளி யுள்ளவனைப் போற்ற என் உள்ளம் குளிரும். – நன்றி – www.thevaaram.org)

என்றும்,

அப்பர், திருகோடிகாவில் ஈசனை,

“பூணர வாரத் தானே புலியுரி யரையி னானே
காணில்வெண் கோவ ணம்முங் கையிலோர் கபால மேந்தி
ஊணுமோர் பிச்சை யானே யுமையொரு பாகத் தானே
கோணல்வெண் பிறையி னானே கோடிகா வுடைய கோவே” (4.51.5)

(கோடிகா உடைய தலைவன், வளைந்த பாம்பை மாலையாகப் பூண்டு புலித்தோலை இடையில் உடுத்து வெண்கோவணம் தரித்து, கையில் மண்டையோட்டை ஏந்தி, தாருகாவனத்துப் பெண்களைத் திருத்த உணவு கேட்டு பிச்சாண்டியாய் – பிச்சாண்டிவந்தவனை பார்வதிபாகனாய் குறுகிய வெள்ளிய பிறையைச் சூடியவனாய் உள்ளான். நன்றி – www.thevaaram.org )

என்றும் பாடுகிறார்கள். இப்படி பலரும் பாடிய ஈசனின், ஒரு அழகிய கோலத்தைத்தான் இப்பொழுது நாம் பார்க்கப் போகிறோம்.

என்ன கோலம் என்று ஊகித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆம், அர்த்தநாரீஸ்வரன் என்றும், அம்மையப்பன் என்றும், உமை ஒரு பாகன் என்றும், பல பெயர்களில் அழைக்கப்படும் கோலம்தான் அது.

ஒரு பாதி ஆண், மறு பாதி பெண் என்று தன் உடம்பில் சரி பாதியை உமைக்கு கொடுத்த ஈசனின் கோலம்தான் உமை ஒரு பாகன். இதன் புராணத்தை அறிய, இந்த சுட்டியை பாருங்கள்

இப்பொழுது, சிற்பத்தைப் பார்ப்போம்.


இடது பக்கம் பார்த்தால், பெண்மையின் மிளிர்வு.

வலது புறம் பார்தால், ஆண்மையின் கம்பீரம். ஒரே முகத்தில், இப்படி பெண்மையையும், ஆண்மையையும் ஒரு சேர கொணர்ந்த அந்த சிற்பியை என்னவென்று பாராட்டுவது?

டாக்டர் கலைக்கோவன் அவர்கள், ‘சோழ சிற்பிகள், உடல் கூறுகளை
(anatomy) நன்கு அறிந்தவர்கள்’ என கூறக்கேட்டிருக்கிறேன். இந்த சிற்பமும் அதற்கு சான்று.

அம்மையின் சிற்றிடையும், ஒய்யாரமாய் நிற்கும் பாங்கும், அப்பனின் திண்தோள்களும், கம்பீரமாய் ரிஷபத்தில் மீது சாய்ந்திருக்கும் கோலமும் ஒருங்கே நம் கண் முன் கொண்டு வந்த சிற்பி மறைந்த பின்னும், அவன் விட்டு சென்ற கலைப்பொக்கிஷம் இன்றும் நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

இந்த கலைப்பெட்டகத்தை வரலாறு (www.varalaaru.com) குழுமத்துடன் பார்க்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிட்டியது. விமானத்தின் மீது ஏறி அர்த்தநாரீஸ்வரனை பார்க்க, அங்கு இருந்த ஒரு கோயில் பெரியவர் ஏணி தந்து உதவினார். அவரே, நாங்கள் சிற்பங்களை ஆவலாய் பார்ப்ப்தை கவனித்துவிட்டு, விமானத்தின் மீதுள்ள சிற்பத்தை பார்க்க ஏணி கொண்டு வந்து கொடுத்தார். இருட்டும் வரை பார்த்து மகிழ்ந்துவிட்டு, இரயிலுக்கு நேரமாகிவிட்டதால் புறப்படும் பொழுது, அவருக்கு மனமார நன்றி கூறிவிட்டு அவரிடம் அவர் பெயரைக் கேட்டோம். அவர் பெயர் ஏற்படுத்திய புல்லரிப்பு, இரவு இரயில் புறப்பட்ட பின்பும் குறைய வில்லை. ஏனெனில் அவ்ர் தன் பெயர் ‘அம்மையப்பன்’ என்று கூறினார்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

மல்லையில் பிள்ளையார் சிற்பங்கள் இல்லை , இங்கு தவிர …

அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நண்பர் ஒருவர் நூறு இடுகைகள் ஆகியும் பிள்ளையார் பற்றி இன்னும் ஒன்று கூட இல்லையே என்றார். சரி, இன்று பிள்ளையார் பற்றி பார்ப்போம். வெறும் சிற்பம் மட்டும் அல்ல – தமிழ் நாட்டில் குறிப்பாக பல்லவ காலத்தில் பிள்ளையார் வழி பாடு பற்றி ஒரு அலசல்.

இது மல்லையின் பல புதிர்களில் ஒன்று – ஐம்பதுக்கும் மேலான சோமாஸ்கந்தர் ( உமா ஸ்கந்தா சகிதர் ) சிற்பங்கள் மல்லையில் இருந்தும் ( சரி அதை பற்றியும் ஒரு தனி மடல் எழுத வேண்டும் ) – எங்கும் ஆனை முகனைக் காணவில்லையே?

ஒரு நிமிடம் – அதற்குள் உங்களில் பலர் கணேஷ ரதத்தை பற்றி மறுமொழி அளிக்க சென்றுவிடாதீர்கள். சற்று பொறுங்கள் – அந்த ரதம் செதுக்கப்பட்ட போது அது சிவ ஆலயம் – எப்படி அது மகனுக்கு வந்தது என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். ஒன்றொன்றாய் பார்ப்போம்.

பிள்ளையார் பட்டி குடவரை கோயில்களை விட்டு விட்டு ( அவை பற்றி பின்னர் பார்ப்போம் ) – தென்னகத்தில் முதல் முதல் பிள்ளையார் வழிபாடு பல்லவர் காலத்தில் துவங்குகிறது. அமரர் கல்கியின் சிவகாமியின் சபதத்தை படித்த அனைவருக்கும் இது நினைவிற்கு வரும். நரசிம்ம பல்லவன் பன்னிரண்டு ஆண்டுகள் படை திரட்டி தன் தந்தையை தோற்கடித்த புலிகேசியின் வாதாபி மீது படை எடுக்கிறான் – அதில் அவன் தளபதி பரஞ்சோதி அபாரமாக போர் புரிந்து ( 642 AD) புலிகேசியை வென்று வாதாபியை எரிக்கின்றனர். அப்போது வாதாபி நகரின் வாயிலில் இருந்த பிள்ளையார் சிலையை கண்டு பரஞ்சோதி அவரிடத்தில் வெற்றிக்கு வேண்டி – வெற்றி கண்ட பின் – அச்சிலைய எடுத்துக்கொண்டு தென்னகம் திரும்பி சிறுத்தொண்டராக மாறி – சிறுத்தொண்டர் என்ற நாயன்மார் ஆகிறார். அப்படி தென்னகம் வந்தவர் தான் வாதாபி பிள்ளையார் என்று ஒரு கருத்து உள்ளது.. .

ஆனால் இப்போது ஞானசம்பந்தர் பாடல் ஒன்றை பார்ப்போம்

சம்பந்தர் பாடல்

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

குறிப்புரை :
உமாதேவி பெண்யானையின் வடிவுகொள்ள, ஆண் யானையின் வடிவத்தைத் தாம்கொண்டு விநாயகப் பெருமான் அவதரிக்கத் திருவுள்ளம்பற்றிய இறைவன் வலிவலநகரான் என்கின்றது. பிடி – பெண்யானை. கரி – ஆண்யானை. வடிகொடு – வடிவத்தைக் கொண்டு. கடி கணபதி – தெய்வத்தன்மையுடைய விநாயகப் பெருமான். கொடைவடிவினர் – வள்ளற் பெருமக்கள்.

அப்பர் பாடல்

பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார்மனத் துள்ளே
கலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறும்
வலமேந் திரண்டு சுடரும் வான்கயி லாய மலையும்
நலமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை

பொழிப்புரை :
பலப்பலவிருப்பங்களை உடையவராய் அவற்றைச் செயற்படுத்தத்துடித்து விரையும் மக்களின் உள்ளத்தில் கலந்து பிறழச் செய்யும் கணபதியாகிய ஆண்யானையையும், இருளைப்போக்கும் வலிமை மிக்க சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு ஒளிகளையும், மேம்பட்ட கயிலை மலையையும், நன்மைகள் நிறைந்த கெடில நதித் தீர்த்தத்தையும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்ச வருவதும் இல்லை.

அப்படி என்றால் அவர்கள் காலத்திலேயே ஆனைமுகனின் வழிபாடு மற்றும் அவன் உமை ஈசனின் மைந்தன் என்றவை நிலை பெற்று விட்டன என்பதை அறிகிறோம். அப்படி என்றால் ?

சரி, மீண்டும் கணேஷ ரதம் வருவோம். ஆம், அதில் இருப்பது பிள்ளையார் விக்ரகம் தான். ஆனால் ( திரு சுவாமிநாதன் ஐயா அவர்களின் உதவிக்கு நன்றி ) . செம்பெர்ஸ் என்று ஆங்கிலேயர் மல்லை பற்றி விட்டு சென்ற குறிப்பு 1788 AD.

முதலில் கணேஷ ரதத்தில் ஒரு சிவ லிங்கமே இருந்தது, அதை மெட்ராஸ் ஆளுனர் ஹோபெர்ட் பிரபு எடுத்து சென்று விட்டார். அப்போது அதற்காக இருபது பாகொட மானியம் கிராமவாசிகளுக்கு அளித்தார். அவருக்கு அடுத்து வந்த ஆளுனர் கிளைவ் பிரபு நந்தியை எடுத்து சென்றார்

சரி, அப்போது பிள்ளையார் எப்படி வந்தார். அதற்க்கு திரு லக்ஸ்மையா அவர்களது குறிப்பு 1803 AD.

லிங்கத்தை XXXXX எடுத்து சென்றதால் , மக்கள் அருகில் இருந்த பிள்ளையாரை இந்த கோயிலினுள் வைத்தனர்

சரி, இன்னும் சிலருக்கு சந்தேகம் இருந்தால் – கணேஷ ரதத்தில் உள்ள கல்வெட்டை படிப்போம்.

நிறைய வரிகளைக் கொண்ட இந்த சமஸ்க்ருத கல்வெட்டின் ஐந்தாவது வரி ” சாம்பு (ஈசன் )னின் கோயிலான இதை நிறுவியவன் அத்யந்தகாமன் என்ற பட்டம் உள்ள அரசன், அவன் தனது எதிர் நாடுகளின் அரசர்களை வெற்றி கண்டு ரணஜெயன் என்ற பெயர் எடுத்தவன் “ அதிலேயே அந்த ஆலயத்தின் பெயரும் உள்ளது : “அத்யந்தகாம பள்ளவேஷ்வர க்ரஹ்ம்” (“பல்லவ அரசன் அத்யந்தகாமனின் சிவ ஆலயம் “).

அப்படி என்றால் இது நம்மை எங்கு இட்டு செல்கிறது – மல்லையில் உள்ள அனைத்து குடவரை கோயில்கள், ரதங்கள் , தனி சிற்பங்கள் – எதிலும் விநாயகர் வடிவம் இல்லை.

சரி, மல்லையை நிறுவிய பல்லவ மன்னன் யார் என்றே பல அறிஞர்களிடத்தில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. எனினும் மல்லை கடற்கரை கோயில் ராஜசிம்ம பல்லவனுடையது. நாம் முன்னரே மல்லை கடற்கரை கோயில் பற்றி பார்த்தோம்

மல்லை கடற்கரை கோயில்

இப்போது உங்கள் கவனிப்புத் திறனுக்கு மீண்டும் ஒரு போட்டி – இந்த படங்களில் ஆனை முகனைத் தேடுங்கள்

கண்டு பிடித்தீர்களா – அவருடன் பல பூத கணங்களும் உள்ளனர் – அதாவது பிள்ளையார் என்று தனி இடம் அவருக்கு இல்லை – இதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது ?

சிற்பம், வரலாறு என்ற துறைகளில் உங்கள் ஆர்வத்தைத் தூண்டுதலே இந்த தளத்தின் நோக்கம்- எனவே உங்கள் தேடலை துவக்கி – விடை அளிக்க நீங்கள் முயற்சி செய்யுங்கள்.

புதிய வருடம் துவங்கும் இந்த நல்ல தினத்தில் மல்லை கடற்கரைக் கோயில் விநாயகனின் சிற்பங்களுடன் உங்களை வாழ்த்தி விடை பெறுகிறோம். இந்த வருடம் உங்களுக்கு ஒரு நிறைவைத் தர அவனை வேண்டுகிறோம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment