ஓவியர்கள் அருங்காட்சியகத்திற்குச் சென்றால்

சிறு வயதில் பல முறை அருங்காட்சியகங்களுக்குச் சென்ற நினைவு. ஒவ்வொரு முறை திரும்பும் போதும், ஏதோ ஓர் ஏக்கம் தொடரும் – அந்த அற்புதக் கலைப்பொக்கிஷங்களை போல நம்மால் செய்ய இயலுமா? என்ற கேள்வி எழும். உடனே ஒரு காகிதம் எடுத்து, பார்த்தபடி வரைய யத்தனிப்பேன். இருந்தும் பல கோணங்களில் எண்ணங்கள் சிதறிப்போனதால் அப்போது ஆர்வம் இருந்தும் ஓவியக்கலையை வளர்க்க நேரம் கிடைக்கவில்லை. இன்றும் என் வீட்டில் எந்நேரமும் ஒன்றிரண்டு காலி கான்வாஸ்கள் எனது படைப்புக்காகக் காத்து நிற்கின்றன…

ஒருவேளை அதனால்தானோ என்னவோ ஓவியம் தீட்டும் நண்பர்கள் கிடைத்தால் அவர்களை மிகவும் தொந்தரவு செய்கிறேன் போல!!! அப்படிப் படாத பாடுபடும் நண்பர் தான் முரளி. அவர் மூலமாக ஓர் அற்புத ஓவிய முயற்சிக்கு அறிமுகம் கிடைத்தது.
ஓவியர்களின் ஒரு பட்டாளமே அருங்காட்சியகம் சென்றால்!!!!!
அதுவும் எழும்பூர் செப்புத்திருமேனிகள் பவனி…..
இவர்களது பார்வையில்…

இவர்கள் தங்களுக்கென “Chennai Weekend Artists” என்று ஒரு குழுமம் அமைத்துச் செயல்படுகின்றனர்.

இவர்களது படைப்புகளை ஒவ்வொன்றாகச் சிற்பங்களுடன் ஒப்பிட்டுப் போடலாம் என்று தான் துவங்கினேன் – ஆனால் அவர்களது கலையைக் கண்டவுடன் அவை மட்டுமே போதும் என்று நிறுத்திக்கொண்டேன்.
ஓவியர் பாலாஜி




ஓவியர் கணபதி சுப்ரமணியம்


ஓவியர். கார்முகிலன் செல்லக்கண்ணு

ஓவியர். முரளிதரன் அழகர்










ஓவியர். நித்யா




ஓவியர். சுபாஷ் ராவ்



ஓவியர் . அன்புச்செல்வி




இது போன்ற முயற்சிகள் இன்னும் பெருகவேண்டும் – குறிப்பாக அடுத்தத் தலைமுறைக்கு இவை செல்ல வேண்டும். இதற்காக அவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் சேர்ந்து இதைப் போன்று இன்னும் பல வரலாற்றுப் பொக்கிஷங்களைக் கலைக்கண்ணுடன் பார்க்க உதவி செய்யவேண்டும். இன்று குழந்தைகள் ஓவியம் என்றாலே இரண்டு மலைகளுக்கு நடுவே தோன்றும் ஆதவனை மட்டுமே வரையாமல், இவை போன்ற பல காட்சிகளைத் தங்களது தூரிகைகளைக் கொண்டும் தீட்டவேண்டும்.

For those interested to know more about the CWA:

CWA is a group of artists and art enthusiasts who sketch on location in and around Chennai during weekends. CWA meets every Sunday at a location of interest. Any media is encouraged, though we mostly tend to focus on traditional methods. CWA comprises people from all walks and stages of life. only thing that unites is a passion to draw, paint and appreciate art. We share our knowledge through regular “Mini talks”, which are short focused and well researched practical how-to’s on the various facets of art. All are welcome to join. We use the below groups to share information about upcoming events, photos, reports and works by members.
CWA is a not for profit group.

Operates at
FB:
Penciljammers:

Group mail: [email protected]
===============================================

Report for Museum meeting:
Penciljammers:
FB:


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஒரு குடைவரை – அதில் சிதைந்த ஓவியமும் உடையார் ராஜ ராஜ சோழர் பிறந்த நட்சத்திரமும் – திரு நந்திக்கரை

நண்பர் திரு. ஷங்கர் பல மாதங்களுக்கு முன் தான் குடைவரையில் பார்த்த ஒரு ஓவியத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவர் பெரிய அளவு படத்தை நேர்த்தியாக எடுத்து அனுப்பி வைத்திருந்தாலும் என்ன காரணத்தினாலோ அதை எடுத்துப் பார்க்க நேரம் அமையவே இல்லை. ஆனால் அதற்கு இப்படி ஒரு வேளை வரும் என்று நான் சற்றும் எதிர்ப்பாக்கவில்லை.

நண்பர் திரு. ராமன் அவர்கள் பழைய புத்தகக் கடை ஒன்றில் பழைய புகைப்படங்கள் இருப்பதாகவும், அவற்றைப் பார்த்தால் எனக்கு உதவும் போல தெரிகிறது என்றும் கூறினார். அது மட்டும் அல்லாமல் அதில் ஒன்றிரண்டை வருடி (ஸ்கான்) செய்தும் அனுப்பிவைத்தார். அதிலே ஒன்று அழகிய செப்புத் திருமேனி, மற்றொன்று புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் ஓவியப் படம், இரண்டுமே சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டவை!! இவற்றைப் பார்த்தவுடன் நிச்சயம் நமக்கு தேவை என்று அவரிடம் தெரிவித்தேன்.

சென்னை சென்ற சமயம் நானும், நண்பர் அரவிந்தும் அவற்றை ஒவ்வொன்றாக பார்த்து வந்த பொழுது, சில படங்களின் பின்புறத்தில் திரு நந்திக்கரை என்று பென்சிலால் எழுதிய எழுத்துக்கள் கண்ணில் பட்டன.

உடனே ஷங்கரை தொடர்பு கொண்டு சமீபத்தில் அவர் சென்ற பொழுது அவர் எடுத்து வந்த அத்தனைப் படங்களையும் கேட்டேன். அவரும் உடனே அனுப்பிவைத்தார். ( திரு நந்திக்கரை – கன்னியாக்குமரி மாவட்டம் – திருவட்டாரில் இருந்த சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவு – நாகர்கோயிலில் இருந்து நாற்பது கிலோமீட்டர் )

குடைவரையில் தற்போதைய உட்புறத் தோற்றம். (முதல் முறை அவர் படம் அனுப்பிய பொழுது பார்க்க முடியாததன் காரணம் இனி உங்களுக்கு புரியும்)

குடைவரையின் காலம் 8th CE ( அபிஷேக நீர் வெளியேறும் அமைப்பைக் கொண்டு இதன் காலம் நிர்ணயிக்கப்படுகிறது )

கைவசம் இருந்தும் நான் முதல் முறை காணத்தவறிய சுவர் ஓவியம்

பழைய புத்தகக் கடையில் கிடைத்தப் படங்களை பார்த்தவுடன் திறந்தன என் விழிகள்

அழகான விநாயகர் ஓவியம், மேலே ஒரு அருமையான கணம் ( பார்த்தால் காஞ்சி கைலாசநாதர் ஓவியங்களின் பாணியிலேயே உள்ளது ) இருந்தும் சுமார் அரை நூற்றாண்டு காலத்தில் நாம் இழந்திருப்பது …

மற்றுமொரு ஓவியம் இருந்தது, அதற்கான பொருத்தத்தையும் தேட கிடைத்தது…

இப்பொழுது படங்களை பாருங்கள்..

என்ன அழகான அருமையான ஓவியங்கள். இந்த பொக்கிஷங்களை முறையாக பாதுகாக்காமல் இப்படி அழிய விட்டு விட்டோமே!

மேலும் இரண்டு ஓவியங்கள் படங்களில் உள்ளன. அனால் தற்போது குடைவரையில் காணக் கிடைக்கவில்லை.

இங்கே சித்தரிக்கப்பட்டுள்ள காட்சி என்னவென்று தெரியவில்லை.

இந்த குடைவரையில் மேலும் ஒரு சரித்திர நிகழ்வின் முக்கிய தடயமும் உள்ளது.

உடையார் ஸ்ரீ இராஜ ராஜ சோழர் பிறந்தது ஐப்பசி சதயமா அல்லது சித்திரை சதயமா என்ற விவாதம் சில காலமாக உலவிக் கொண்டிருக்கிறது.

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள், தங்கள் திருவாரூர் நூலில் திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் உள்ள ஒரு கல்வெட்டைக் கொண்டு இதனை தெளிவு படுத்தி உள்ளார். அது திரு இராஜேந்திர சோழரின் கல்வெட்டு, அதில்

” நாம் பிறந்த ஆடி திருவாதிரையும்
நம் அய்யன் பிறந்தருளிய ஐப்பசி சதயமும் .. ”

10034
10031

என்று வருகிறது.

இந்த திரு நந்திக்கரை குடவரையில் உள்ள திரு ராஜ ராஜரின் கல்வெட்டு


185. On the east wall of the rock-cut iva shrine. Belongs to
the eighteenth year of Rajaraja I and records grant to the temple
for the celebration of a festival in Aippasi, Satabhisha, the birth-
day of the king. See Trav. Arch. Ser. t Vol. I, pp. 291-2.”

தான் பிறந்தது ஐப்பசி தான் என்று தெளிவு பட எடுத்துக் கூறுகிறது.

இந்த ஓவியத்தின் புகைப்படங்களுக்கு உரியவர் யார்? அவை எப்படி பழைய புத்தகக் கடைக்கு சென்றன என்பது தெரியவில்லை. யாரேனும் அறிந்திருந்தால் நிச்சயம் தொடர்பு கொள்ளவும்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பனைமலை பல்லவகால ஓவியம் உயிர் பெறுகின்றது. பாகம் 2

அனைவரும் சென்ற பதிவை பார்த்து பரவசமடைந்து அடுத்த பதிவுக்காக ஆவலாக எதிர்பார்த்து காத்து நிற்பது தெரிகிறது. ஆனால் அதற்கு முன்னர் நண்பர்திரு ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி. பதிவைப் படித்தவுடன் தன்னிடத்தில் இருந்த குறிப்பு ஒன்றில் இந்த அற்புத ஓவியத்தை கண்டுபிடித்தவரின் வர்ணனை இருப்பதை சுட்டிக்காட்டி நகல் எடுத்து எனக்கு அனுப்பி உள்ளார். ‘Art I Adore’ என்ற ஸ்ரீ அமல் கோஸ் அவர்களது நூலில் – ‘A book on art based on interviews with K. Ramamurty’ என்ற குறிப்பை படித்தவுடன் மெய் சிலிர்த்தது. நீங்களும் படியுங்கள்.

ஆரம்பமே படு சுவாரசீயம் – ஒரு ரசீது. இந்தியா சுதந்திரம் அடைந்து நான்கு ஆண்டுகள் பிறகு ஒரு தேதியில் – ஒரு அருமையான சுவரோவியத்தை முதல் முதலில் நகல் எடுத்து வேலை இல்லாத ஓவியனின் ரசீது.

” This is to certify that his Museum purchased from Shri K. Ramamurti, artist, a copy of the mural painting of the Pallava period from the temple at Panamalai. Mr. Ramamurti was the very first artist to copy this interesting mural.- Superintendent, Government Museum, Madras ”

ஆஹா. மேலும் தொடர்ந்தது அவரது வர்ணனை.

திரு ராமமூர்த்தி அவர்கள் ஒருநாள் ‘தி ஹிந்து ‘ நாளேட்டில், புதுச்சேரி ஆசிரமத்தில் தங்கி இருந்த அயல்நாட்டவர் ஒருவர் தான் பனைமலை மலையில் ஒரு கோயில் சுவரில் கண்ட சில கோடுகள் சிதைந்த பிரெச்கோ ஓவியமாக இருக்கக் கூடும், என்ற தகவலை படித்தார்.

உடனே ஆர்வம் அடைந்த அவர், தான் இதை வெளிக் கொணர்ந்தால் சரித்திரத்தில் இடம் பிடிக்கும் அபார கண்டுபிடிப்பாக இருக்கும் என்று எண்ணி உடனே புறப்பட தயார் ஆனார். எனினும் பயணத்துக்கு போதுமான பணம் அவரிடத்தில் இல்லை. தன மனைவியின் நகைகளை அடமானம் வைத்து பணம் திரட்டி அடுத்த நாள் காலை பனைமலைக்கு புறப்பட்டார்.

அங்கு சென்றதும் முதலில் ஒன்றுமே கிடைக்கவில்லை. சுற்றி சுற்றித் தேடியும் ஓவியச் சுவடுகள் எங்குமே தென்படவில்லை. ஆலய பூசாரிகளுக்கும் அப்படி ஒரு ஓவியம் அங்கு இருப்பதாக தெரியவில்லை. எனினும் ராமமூர்த்தி அவர்கள் மனம் தளராது தேடினார். இரவு அங்கேயே படுத்து காலையில் எழுந்து அடியடியாக தேடினார்.

பதினைந்து நாட்கள் தேடிய பின்னர், ஒரு செவிரில் சில எச்சங்கள் தெரிந்தன. அவற்றை உற்றுப் பார்க்கும் பொது ஒரு முகம் காட்சி தந்தது. சுதை பூச்சால் மறைந்து இருந்த கோடுகளை வெளிக்கொணர கவனமாக அவற்றை விலக்கினார். உள்ளே பனைமலை பார்வதி (உமையம்மை).

தனது குருநாதர் தேவிபிரசாத் அவர்கள் கற்றுக் கொடுத்த பாணியில், அப்படியே நகல் எடுத்தார். என்றும் காலத்தை வென்று அது நிற்க வேண்டும் என்று அதனை சென்னை அருகாட்சியகத்துக்க்கு கொடுத்தார்.

இந்த நூலிற்காக அவரைப் பேட்டி கண்டு அந்த கண்டுபிடிப்பு பற்றி வேறு ஏதாவது நினைவுக்கு வருகிறதா என்று கேட்ட பொது.

” அன்று நான் அந்த பனைமலை ஓவியத்தை கண்ட பொது அடைந்த, அந்த கணத்தில், நான் அடைந்த மகிழ்ச்சியை தவிர வேறு ஒன்றுமே நினைவில் இல்லை” என்றாராம்.

இன்று அவர் எடுத்த நகல் இன்னும் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால் கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

மேலே செல்வதற்கு முன்னர், அந்த பல்லவ ஓவியனின் அபார கலை திறமையை நீங்கள் ஒரு ஓவியனின் கண்ணோட்டத்தில் ரசிக்க சில படங்கள். முகத்தின் வட்ட வடிவை கட்ட அவன் அந்த பச்சை நிறத்தை உபயோகிப்பதும் , நெற்றியிலிருந்து வளரும் மூக்கின் வடிவத்தை உணர்த்த வர்ணத்தை நீக்கி – அப்பப்பா அபாரம.

ஓவியத்தை வரைந்த ஓவியரை, ஆயிரம் ஆண்டுகள் பிறகு அதனை மீண்டும் வெளி கொண்டு வந்த நகல் எடுத்த ஓவியருக்கும் ஒரு பெரிய நன்றி கூறி, நமது தொடர்பணியை ஓவியர் திருமதி சுபாசினி அவர்களுடன் ஒப்படைக்கிறோம்.

அவர் கூறுகிறார்.

”பனைமலை உமையம்மையை வரைவது மிகவும் அருமையான அனுபவம். நமக்கு கிடைத்த மிச்சங்களை வைத்து அழிந்து போன பாகங்களைக் கற்பனை செய்து வரைவது மகிழ்ச்சிகரமாக இருந்தது. அதுவும் திரு விஜய் அவர்களின் உதவியுடன் இதற்கான மிக நேர்த்தியான புகைப் படங்கள் கிடைந்தன. அனைத்தையும் ஒன்று சேர்த்து உங்களுக்கு முழு ஓவியமாகப் படைக்கிறேன்.

அப்படி முழுதாக வரைந்த பின்னர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதை எடுத்துரைக்கவும் வார்த்தைகள் வரவில்லை.

அதில் மிகவும் பிடித்தது முதல் முதலில் வரைந்த கோடுகள். இந்த முறை அக்ரிலிக் வண்ணங்களை கொண்டு முயற்சி செய்தேன். படிப்படியாக வண்ணங்களைத் தீட்டி ஓவியத்தை வெளிக்கொண்டு வருவது பரிசுப் பொருளை பிரிப்பது போன்ற ஆர்வம் மற்றும் அனுபவம்.

ஒவ்வொரு கோடும் ஒரு புது அனுபவம், ஒரு கண்டுபிடிப்பு – சில கற்பனை. அவை அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து வந்த வடிவத்தை பல்லவ சுவரோவியம் போலவே முடிக்கவேண்டும் என்பது பெரும் சவாலாக இருந்தது.


ஓவியத்தை தீட்டும்போது படிப்படியாக படம் எடுத்து ரசித்தோம். நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

இதோ நிறைவு பெற்ற ஓவியம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பனைமலை பல்லவகால ஓவியம் உயிர் பெறுகின்றது. பாகம் 1

சிதைந்த பல்லவர் கால ஓவியங்களை அவற்றின் புராதன வசீகரத்துடன் வெளிக்காட்டும் முயற்சியில் இன்று மீண்டும் ஒரு பயணம். காஞ்சி கைலாசநாதர் ஆலயத்து சோமாஸ்கந்தர் ஓவிய பதிவுகளுக்கு – – பதிவு 1, பதிவு 2,. பதிவு 3, தாங்கள் அனைவரும் கொடுத்த வரவேற்பும் உற்சாகமும் எங்களை அடுத்து மீண்டும் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியம் ( ஓவியர் திரு மணியம் மற்றும் திரு மணியம் செல்வன் அவர்களின் வழித்தோன்றல் என்றால் சும்மாவா?) அவர்களின் உதவியுடன் இன்னும் ஒரு கடினமான அதே சமயத்தில் ஆனந்தமான பணியை மேற்கொண்டு உங்கள் முன் வருகிறோம்.

பொன்னியின் செல்வன் குழும நண்பர்களுடன் பனைமலை சென்று இரண்டு வருடங்கள் ஆகி விட்டன. எனினும் இன்றுவரை அதை பற்றிய பதிவை நான் இடவில்லை. சிற்பங்களை அவைகளுள் இருக்கும் அற்புத வடிவத்தை கண்டிப்பாக சரியான முறையில் வெளிக்காட்டினால் தான் முறையாக இருக்கும் என காத்திருந்தேன். ஆனால் இன்றும் பசுமையான நினைவுகள். செஞ்சி அருகே ஒரு சிறிய மலைதான் பனை மலை.

ஆஹா, மேலே ஏறும் போதே ராஜ சிம்ஹாபல்லவரின் ஆலயம் – தாளகிரீசுவரர்’.

ராஜ சிம்மர் என்றாலே விமானங்களின் அழகுதான் முதலில் நம்மை ஈர்க்கும். காலத்தை வெல்லும் கொள்ளை அழகு


அனால் இந்த பொக்கிஷம் முத்துச் சிப்பியை போல உள்ளே ஒரு அரிய முத்தை உள்ளடக்கி வைத்துள்ளது.

ராஜ சிம்மர் தனது காலத்தில் தனது படைப்புகளான ஆலயங்கள் அனைத்தையும் தலைமுதல் கால் வரை
ஓவியங்களை கொண்டு அழகுக்கு அழகு சேர்த்தார். இதனை நாம் முன்னரே காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் பார்த்தோம். இங்கேயும் அதே போல ஒரு காலத்தில் இருந்திருக்க வேண்டும். நமது துரதிஷ்டம், இன்று எங்கோ இங்கும் அங்கும் ஒரு சில இடங்களில் மட்டும் எச்சங்களே மிஞ்சி உள்ளன. ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல – தூரிகையின் ஒரு சில கோடுகளிலேயே பல்லவ ஓவியனின் கைத்திறன் நம்மை சொக்க வைக்கின்றது

விமானத்தின் உட்புறமோ, கருவரையிலோ இன்று ஓவியங்கள் எவையும் பிழைக்க வில்லை. எனினும், விமானத்தை சுற்றி வரும் பொது, வலது புறம் தரையில் இருந்து சுமார் நான்கு அடி உயரத்தில் சிவலிங்கத்தை கொண்ட ஒரு சிறு சன்னதி உள்ளது. மேலே ஏறுவதற்கு கொஞ்சம் கஷ்டப் பட வேண்டும். ஆனால் அதைக் கண்டும், அஞ்சி ஏறவில்லை என்றால் போச்சு!….அதனுள் தான் புதையல் உள்ளது.

ஏறிவிட்டீர்களா ? முதல் பார்வையில் ஒன்றுமே இல்லையே என்று நினைக்க வேண்டாம். வலது புறம் சுவற்றை நன்றாக பாருங்கள். கண்டிப்பாக தெனிந்தியாவில் இவளை போன்ற அழகி வேறெங்கும் இல்லை.

இன்னும் நன்றாக அருகில் சென்று பாருங்கள்.

உமை அம்மை – பார்த்த கணத்தில் நம்மை சொக்கி அடிக்கும் மதி வதனம். மேலே வர்ணிக்க வார்த்தைகள் வராது.

காலத்தின் கோலத்தில் பல இடங்களில் உடைந்தும் அழிந்தும் போன நிலையிலும், அந்த ஓவியனின் தூரிகை தீட்டிய கோடுகள், வண்ணங்கள் – அவை ஒன்று சேர்ந்து உமையின் முகத்தில் வெளிக்கொணரும் உணர்வு அலை, நிற்கும் நளினம். .

மிகவும் சிதைந்த நிலையில் இருப்பதால், ஓவியத்தில் பல இடங்களில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை – மேலே வண்ண குடை தவிர , இன்னொரு பக்கம் இருப்பது ஒரு பல்லவக் குடைவரைக் கோயிலின் தூண் போல தெரிகிறது.

வலது புறம் உமை இருக்க, நடு சுவரில் மிகவும் மெல்லிய ஓவியச் சுவடுகள் தெரிகின்றன.

அருகில் சென்று ஆராயும்போது அவை சிவபெருமான் முப்புரம் எரித்த பின்னர், மகிழ்ச்சியில் ஆடிய ஆளிதன்றிட (Alidhanrita) நடனம் என்று தெரிந்துக் கொண்டோம். இதை அடுத்த பதிவில் மேலும் காண்போம். ஆனால் இந்த வடிவம் ராஜ சிம்ஹரின் பல சிற்பங்களில் நாம் பார்க்க முடியும், காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் இதே போல சிவன் அவர் ஆட உமை பார்க்கும் காட்சி இருக்கிறது – “திரிபுராந்தகி சமேத திரிபுராந்தகாய நமஹ”

உமை ( திரிபுராந்தகி) இங்கும் பனை மலை போல இருப்பது நமக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

இவை அனைத்தையும் மனதில் கொண்டு, இந்த ஓவியத்தை சுபாஷினி வரையத் துவங்கினார்.

வண்ணங்கள் மெதுவாக தோன்றின.

போன முறை ஜகதீஷ் படங்களை தந்து உதவியது போலவே, இம்முறை திரு பிரான்க் ரோந்டோட் என்பவர் உதவினார். வெகு நாள் வரை பனைமலை ஓவியத்தின் நல்ல புகைப்படம் இணையத்தில் இல்லை, அப்போது திரு பிரான்க் அவர்களின் தலத்தில் நல்ல படங்களை கண்டு, நமது முந்தைய பதிவையும் என்ன செய்ய இந்த படங்கள் தேவை என்றும் விளக்கினேன். அவரும் உடனே படங்களை நமக்கு தந்து உதவினார். இவை நமக்கு மிகவும் உதவின – ஏனெனில், இவை பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படங்கள் – அதற்கு பின்னர் சில இடங்களில் ஓவியம் சிதைவு அடைந்துள்ளது !!

மேலும் பொன்னியின் செல்வன் குழு நண்பர்கள் சௌராப் , சாஸ்வத் , ஸ்ரீராம் , ஸ்ரீ என்று பலரும் தங்கள் படங்களை கொடுத்து உதவினர்.

மெதுவாக ஓவியம் வளர்ந்தது…

தொடரும்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத சித்திரங்கள்தான் ..ஆனால் !

இன்று நாம் பார்க்கவிருக்கும் வடிவங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாதவை போல முதலில் தோன்றும். அதற்கு முன்னர் நண்பர் திரு சதீஷ் அவர்கள் போட்டிருந்த ஓவியம் ஒன்றுடன் காஞ்சிப் பயணத்தை துவங்குவோம்.


சதீஷ் அவர்களின் தளம் !

சிலர் இயற்கையாகவே நேரில் இருப்பதை விட புகைப்படங்களில் பல மடங்கு அழகாக காட்சி அளிப்பர். அவர்களை ஆங்கிலத்தில் போடோசனிக் என்று அழைப்பார்கள். அதைப்போல ராஜசிம்ஹ பல்லவரின் மல்லை கடற்க்கரை கோயில், பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயம், மற்றும் காஞ்சி கைலாயநாதர் ஆலயம் – புகைப்படங்கள் எடுப்பதற்கென்றே கட்டி விட்டார் போலும். – அரைகுறை ஆர்வலருக்கே புகைப்படம் எடுத்து தள்ளும் வெறியைத்தரும் இவை – கைதேர்ந்த வல்லுனர்கள் பிடியில் சிக்கினால். இதோ நண்பர் ஆதி ஆர்ட்ஸ் கைவரிசை – இல்லை – கேமரா வரிசையை பாருங்கள்.



என்ன ஒரு அழகு – ஆயிரத்தி முந்நூறு ஆண்டுகளாக இன்னமும் நின்று சிறக்கும் பொக்கிஷம்.

அடுத்து இந்த வரிசையைப் பாருங்கள். .

அஜந்தா புத்தர் , மலை தவம் மற்றும் கைலாசநாதர் சோமாஸ்கந்தர் வடிவம் – மூன்றிக்கும் என்ன சம்பந்தம் ?

முன்னர் நாம் பார்த்த காஞ்சி சோமாஸ்கந்தர் ஓவியம் நினைவில் உள்ளதல்லவா ?

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் மூன்று

முதலில் இந்த ஓவியம் எங்கே உள்ளது என்று பார்ப்போ

படத்தில் அம்புக்குறி போட்டிருப்பது போல நேரே சென்று இடது பக்கம் திரும்பிப் பாருங்கள். நான்கு இடங்களில் மட்டும் சிதைந்த ஓவியங்கள் தெரியும். மற்ற இடத்தில சுமார் தான் !!


ஆனால் இந்த ஒரு இடம் மிகவும் முக்கியம். உள்ளே தலையை நுழைத்து வலது பக்கம் உற்று பாருங்கள்.


முதலில் வெறும் கருப்பு சாயம் போல தோன்றும் – சிறுது நேரம் கண்கள் வெளிச்சம் இல்லாமைக்கு பழகியதும் உள்ளே இன்றும் ஒட்டிக்கொண்டிருக்கும் பல்லவ கால ஓவியம் தெரியும்

இன்னும் அருகில் சென்று பார்ப்போம். இரு அழகிய கின்னரர்கள். அந்த பெண்மணி புல்லாங்குழல் வாசிக்கும் அழகு அற்புதம். பறவை போல கால்களும் , சிறகுகளும் இருப்பதை கவனியுங்கள்.

இப்போது மல்லை தவச் சிற்பம்.


இங்கேயும் அந்த தம்பதியினர் இருப்பதை பாருங்கள். அதே பறவை போல கால்களும் , சிறகுகளும் இருக்கின்றன. தெரிகின்றதா ?

சரி, இரண்டுமே பல்லவ காலத்தவை தான். ஆனால் இதே போல ஒன்று அஜந்தா ஓவியத்தில் உள்ளது, அதுவும் நீங்கள் பல முறை பார்த்த, ஏன் இந்த பதிவின் ஆரம்பத்தில் பார்த்த புத்தர் உருவத்திலும் உள்ளது என்றால் நம்புவீர்களா ?

சரி, இப்போது பாருங்கள்

(படங்களுக்கு நன்றி – An Album of Eighty-five Reproductions in Colour, Editor: A.Ghosh; Published by Archaeological Survey of India)


இப்போது தெரிகிறார்களா ?


உண்மையான கலைக்கு ஏது வேலி , வரம்பு ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

நான் இத்தனை காலம் காத்துவந்த பொக்கிஷம்

நாம் இது போன்ற சிதைந்த ஆலயங்கள் பல பார்த்துள்ளோம். இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் இப்படி தடுக்கி விழுந்தால் இரண்டு இருப்பதால் இவற்றின் மதிப்பை நாம் உணருவதில்லை. இதுவே வெளிநாடாக இருந்தால் தங்கள் பாரம்பரியத்தின் உன்னத வெளிப்பாடாக தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள். எனினும், இந்த புள்ளலூர் விமானம் மட்டும் ஏனோ கண்ணையும் சிந்தனையும் விட்டு விலக மறுத்தது.

சிதலமடைந்தும் கம்பீரமாக நிற்கும் விமானம் – புள்ளலூர்

சில நொடிகளே அங்கு கழித்தோம் – மாலை நேரம், வெளிச்சம் குறைந்துக்கொண்டு இருந்தது, மதிய உணவு சாப்பிடவில்லை !! அதற்கும் மேலாக முந்தைய இடத்தில வழியில் ஓடிய பாம்பு, அத்துடன் விமானம் இருந்த நிலைமை என்று பல காரணங்கள். இருந்தும் மனம் எதோ அடித்துக்கொண்டது. வந்த பின்னரும் பார்ப்பவர்கள் அனைவரிடத்திலும் அந்த கோயலின் நிலையை பற்றி சொல்லி தீர்த்தேன். அப்படி சொல்வதை கேட்டு நண்பர் திரு சந்திரசேகரன் ரீச் பௌண்டேஷன் உடனே சென்று பார்க்கிறேன் என்று உறுதி கூறினார். மனதில் அங்கு விமானத்தில் உள்ள சுதை உருவங்களின் நல்ல படங்கள் கிடைத்தால் இந்த கோயிலின் காலத்தை கணிக்க உதவும் என்பதே எனது நோக்கம்.


சந்திரா அவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று
திரு தியாக சத்யமூர்த்தி அவர்களையும் அழைத்துச் சென்றார். மேலே என்ன நடந்தது ?

மாலை எனக்கு சும்மார் நாலு மணி அளவில் குறுஞ்செய்தி
ஷங்கர் : ” ரீச் உள்ளே ஓவியங்கள் இருப்பதாக கூறுகின்றார்கள்”
நான் . ” எந்தக் கோயில் ?”
ஷங்கர் : புள்ளலூர் !
நான் : அங்கே எந்த கோயில்
ஷங்கர் : செங்கல் இடிந்த கோயில்.
நான் : இதோ அழைக்கிறேன் ….

சரி, இதை நாங்கள் எப்படி கவனிக்காமல் விட்டோம் ? நீங்களே பாருங்கள்.

இந்த சுவரில் தான் ஓவியங்கள் உள்ளன என்றால் நம்புவீர்களா ?

ஆமாம், இதில் தான் நான்கு உருவங்கள் உள்ளன. அருமையான அணிகலன்கள், மகுடங்கள் – ஏன் உற்றுப் பாருங்கள் கண் , புருவம் என்று அனைத்தும் மெதுவாக தெரிய வரும். யார் இவர்கள் ?

இதை விட பெரிய கேள்வி – இந்த ஆலயத்தின் காலம் என்ன. உள்ளே இருக்கும் இந்த ஓவியங்களின் காலம் என்ன ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சோழர் கால ஓவியங்கள் புத்தகம் -காத்திருந்தது வீண்போகவில்லை

ஏப்ரல் 9, 1931.

“காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் பிரெஞ்ச் ஆர்வலர் பேராசிரியர் ஜோவூ டுப்ரீயல் (Prof. Jouveau Dubreuil) பல்லவ கால ஓவியங்களைக் கண்டுபிடித்த ஆர்வம் அடங்கும் முன்னர், எனது பாக்கியம், இதுவரை யாரும் கண்டுபிடிக்காத சோழர்களின் ஓவியங்களை தஞ்சை பெரிய கோயிலில் நான் கண்டுபிடித்தேன்.

சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர், நான் எனது நண்பர் திரு T.V. உமாமகேஷ்வரம் பிள்ளையுடன் பெரிய கோயிலை தரிசிக்க சென்றேன். அப்போது சிறு எண்ணை விளக்கின் மங்கிய வெளிச்சத்தில், கருவறையை சுற்றி உள்ள வெளி பிரஹாரத்தின் சுவரில் சில ஓவியங்களின் சுவடுகள் தெரிந்தன.

ஆனால் நேற்று தான் ஒரு சிறு பெட்ரோமாக்ஸ் விளக்கின் பிரகாச ஒளியில் அந்த ஓவியங்களை மீண்டும் சென்று பார்த்தேன். அதன் வெளிச்சத்தில் தெரிந்த ஓவியங்களைப் பார்த்தவுடன் மனம் சற்று தளர்ந்தது – சோழர் காலத்து அற்புத ஓவியங்களின் ஒரே சான்றை கண்டுபிடிக்க எண்ணிய எனக்கு, தெரிந்தவை அவை அல்ல. ஓவியங்கள் சோழர் காலத்தை விட பல நூற்றாண்டுகள் பிந்தைய பாணியில் இருந்ததைக் கண்டு மனம் தளர்ந்தேன்.

இருந்தும், மேற்கு சுவரை அருகில் சென்று பார்வையிட்டேன், அப்போது மேல் பூச்சு உதிர்ந்த நிலையில் இருந்தது. தொட்டவுடன் பொடிப்பொடியாக விழுந்தது. ஆனால் அதன் பின்னால் இருந்த சோழர் கால அற்புத ஓவியத்தை வெளிக்காட்டியது. நெஞ்சம் படபடக்க முதல் முதலில் சோழர்களின் அற்புத ஓவியக்கலையின் ஒரே இருப்பிடத்தை கண்டுபிடித்த பெருமிதம் அடைந்தேன்.

S.K. கோவிந்தசுவாமி – தி ஹிந்து , ஏப்ரல் 11, 1931

ஹிந்து

சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன் துவங்கிய இந்த பயணம் – இன்று தான் அதன் நிறைவை அடைந்துள்ளது, நிறைவு என்று சொல்வதை விட புதிய துவக்கம் என்றே சொல்லத் தோன்றுகிறது. இந்த ஓவியங்களை இதுவரை கண்ணால் கண்டவர் சிலரே. சாமானியர்கள் இதுவரை ஆஹா ஓஹோ என்று புகழாரம் சூட்டும் வல்லுனர்களின் புகழாரத்தையும், எங்கோ இங்கும் அங்கும் மங்கிய ஒளியில் சிறு அளவில் நாளேடுகளில் வரும் படங்களை மட்டுமே பார்த்து மனதை தேற்றிக்கொண்ட காலம் மாறி, அனைவரும் கண்டு ரசிக்கும் வண்ணம் வந்துள்ளது – சோழர் கால ஓவியங்கள் நூல். தமிழ் நாடு அரசு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், முனைவர் ம. இராசேந்திரன் , ஓவிய ஒளிப்படக் கலைஞர் திரு ந. தியாகராசன், ஓவியர் திரு சந்துரு , திரு ராஜவேலு மற்றும் பலரின் அயராத உழைப்பினால் இந்தப் பொக்கிஷம் இன்று நம் கண்களின் முன்னே ஜொலிக்கிறது.

இந்த ஓவியங்களை பற்றிய நூல் பற்றி பல முறை நாளேடுகளில் படித்து ஆர்வத்துடன் பல காலம் காத்து நின்ற எனக்கு, நண்பர் திரு பத்ரி ( கிழக்கு பதிப்பகம்) முக நூலில் சிறு நூல் அறிமுகம் இட்டவுடன் ஆர்வம் தலைக்கு எட்டிவிட்டது. கூடவே பயம், அரசு வெளியீடு, உலகத்தரம் இருக்குமா, ஓவியங்களை சரியான முறையில் படம் எடுத்து இருப்பார்களா? தாள் நன்றாக இருக்குமா (ரூபாய் 500 தான் விலை!) – என்றெல்லாம் எண்ணம் சென்றது. இருந்தாலும் இரு நண்பர்களிடம் சொல்லி வைத்தேன். நண்பர் திரு. ராமன் அவர்கள் அனுப்பி வைத்தார். மூன்று வாரங்களுக்கு முன்னர் கையில் கிடைத்தது. பொதுவாக இந்த அளவு நூல் ஓரிரு நாட்களில் முடித்துவிடுவேன். எனினும் இந்த நூலில் ஒரு பக்கம் பார்க்க வாரங்கள் பல தேவைப்பட்டன. ஆஹா, என்ன அற்புதமான வடிவமைப்பு , அருமையான புகைப்படங்கள், அச்சிட்ட தாள் நல்ல உலகத்தரம், கூடவே பழம் வழுக்கி தேனில் விழுந்தவாறு ஒவ்வொரு புகைப்படத்துடன் அதன் கோட்டோவியம். ஓவியர் திரு மணியம் செல்வன் அவர்களை சென்ற வாரம் சந்திக்க நேர்ந்தது. அவரும் பார்த்து விட்டு பாராட்டினார். தனது தந்தை ஓவியர் திரு மணியம் அவர்கள் இதே சோழர் ஓவியங்களை வரைந்தார் என்றும், அவற்றையும் காட்டினார்.

அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். இது ஒரு சாம்பிள். புகழ் பெற்ற தக்ஷிணாமூர்த்தி ஓவியம்.

(சிறிய அளவு கோப்பைகளை மட்டுமே இட்டுள்ளேன். நூலில் இன்னும் அருமையாக உள்ளது!)

அடுத்து, கோட்டோவியம்.

இந்த ஓவியங்களில் இன்னும் ஆராய ஆயிரம் விஷயங்கள் உள்ளன. கண்டிப்பாக பலர் இந்த நூலின் உதவியுடன் அந்த ஆராய்ச்சிகளை செய்து முனைவர் பட்டம் பெறுவார்கள். உதாரணத்திற்கு இந்த ஓவியத்தின் இடது பக்கம் சற்று கவனியுங்கள்.

படத்தில் காட்டியுள்ளேன். அஷ்ட புஜ (எட்டு கைகள்) பைரவர் உருவம் தெரிகிறதா?

நூலின் உதவி இப்போது பாருங்கள்.

பார்த்தவுடன் பைரவர் உருவம் எங்கோ பார்த்த நினைவு. உடனே தேடி பார்த்தேன். முதலில் கிடைத்தது பெரிய கோயில் முன் வாயிலில் இருக்கும் க்ஷேத்ர பாலர் சிலை.

உருவ ஒற்றுமை இருந்தாலும், திரிசூலம் மாறி இருப்பதால் இந்த சிலை இல்லை.

அடுத்து தஞ்சை கலைக்கூடம் செப்புத் திருமேனி (படங்கள் திரு ராமன் மற்றும் என் தம்பி திரு பிரசன்னா கணேசன்)

அறிவுப்பு பலகை படி 11th C CE, திருவெண்காடு

இந்த சிலை பற்றி மேலும் படிக்க Bronzes of South India – P.R. Srinivasan (F.E. 1963, L.R. 1994 – Price Rs. 386), இந்த விவரங்கள் கிடைத்தன

வேலைப்பாட்டின் அடிப்படையில் இந்த பைரவர் சிலை நாம் முன்னர் பார்த்த ரிஷபவாகன சிலையின் காலத்தை ஒட்டி உள்ளது,

ரிஷபவாகன சிலை

ஆனால் இந்த சிலையில் பல புதிய பாணிகள் உள்ளன. இதுவரை நாம் இவற்றை சந்தித்தது இல்லை.

எட்டு கரங்களுடன் பைரவர், நேராக (வளைவுகள் இல்லாமல்) – அதாவது சாம பங்க முறையில் நிற்கிறார்.
மேலும் சிகை அலங்காரம் தலைக்கு மேலே ஒரு அலங்கார வடிவில் உள்ளது. ஒரு பக்கம் அரவமும், பிறை சந்திரனும், மறு பக்கம் மலரும் உள்ளன.

இரு காதுகளிலும் பத்ர குண்டலங்கள் உள்ளன. இந்த வடிவத்தின் ரௌத்திர குணம் தெரிய, புருவங்கள் இரண்டும் நெரிந்தவாறும், பிதுங்கிய கண்களும், கோரைப் பல்லுடனும் இருக்கிறார் பைரவர். எனினும் அந்தக் காலத்து ஸ்தபதிகள் கோர / ரௌத்திர வடிவங்களையும் அழகுடன் வடித்தனர். எனவே புருவம், கண்கள் , கோரைப் பல் எல்லாம் இருந்தும் சிலை பயங்கரமாகத் தோற்றம் அளிக்காமல் சற்று அமைதியாகவே அழகாக உள்ளது.

கழுத்தில் இருக்கும் மாலை, அதில் தொங்கும் அணிகலன், அனைத்தும் நாம் முன்னர் பார்த்த ரிஷப வாகன சிவன் சிற்பத்தை ஒட்டி உள்ளது. பின்னிய இரு இழைகளாக இருக்கிறது யக்ஞோபவீதம். ஒரு பெரிய மாலை – அதில் சிறு சிறு மண்டை ஓடுகள் – முண்ட மாலை.

கைகள் விசிறி போல விரிந்து இரு பக்கமும் உள்ளன. மிகவும் அழகாக சிலையுடன் இணையும் இவை அருமை. மேல் கையில் இருக்கும் நாக வளையல் இந்த சிலையின் தனித்தன்மை. இங்கே தான் நம் பெரிய கோயில் ஓவியத்தில் வரும் பைரவர் சிலையுடன் சிறு வித்தியாசம் தெரிகிறது.

மேல் வலது கை, மேல் இடது கை மற்றும் கீழ் இடது கை தவிர (அவை முறையே உடுக்கை, மணி மற்றும் ஓடு ஏந்தி உள்ளன) மற்றவை கடக முத்திரையில் உள்ளன.

இடுப்பில் இரு அரவங்கள் உள்ளன. மிகவும் அழகாக அவற்றை அணிகலன் போல உபயோகித்துள்ள சிற்பியின் திறமை அபாரம்.

இங்கே தான் நமக்கு துப்பு கிடைக்கிறது. ஓவியத்தில் ஒரே ஒரு பாம்பு தான் உள்ளது. அப்போது இந்த சிலை அந்த ஓவியத்தில் உள்ள சிலை அல்ல!!

நீண்ட பதிவை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இந்த நூலின் அருமை புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். கண்டிப்பாக வாங்கிப் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம். இதை இவ்வவளவு அழகாக வெளியிட்டு சரித்திரத்தில் இடம் பிடித்துள்ள அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சித்தன்னவாசல் – ஓவியக்கலையின் சிகரம் -பாகம் 2

சித்தன்னவாசல் ஓவியத்தை பற்றி முதல் பதிவை எழுதி பல மாதங்கள் ஆகி விட்டன. நண்பர்கள் பலரும் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் தாமதம் செய்யாமல் இதோ. (முதல் முறை தளத்திருக்கு வரும் வாசகர்கள் இந்த பதிவின் முதல் பாதியை படித்துவிட்டு இங்கு வரும்படி வேண்டுகிறேன். )

முதல் பாகம்

நண்பர் அசோக் உதவியுடன், பல நாட்கள் தவமிருந்து கிடைத்த புகைப்படங்கள். அசோக்கிடம் ஒரு கேமரா
ஒரு கணினி கொடுத்துவிட்டால் போதும். எந்த கடினமான இடத்திற்கும் சென்று திறம்பட படம் பிடித்து வந்துவிடுவார். அவர் மட்டும் இப்படி நமக்கு படங்களை தந்து உதவவில்லை என்றால், நாமும் சித்தன்னவாசல் போனேன் – எதையோ பார்த்தேன் என்று நடையை கட்டிக்கொண்டு போயிருப்போம்.

அந்த ஓவியங்களில் உள்ள காட்சிகளை, எப்படித்தான் அந்த ஓவியன், மேலே இருக்கும் சுவரில் , குடவரையில் உள்ள குறைவான வெளிச்சத்தில் , சாரம் கட்டி படுத்துக்கொண்டு தூரிகை கொண்டு தீட்டினானோ என்று மீண்டும் மீண்டும் வியக்கத் தோன்றுகிறது.

சென்ற பதிவில் பார்த்த குளம் காட்சியின் தொடர்ச்சி தான் இன்று. மூன்று பறவைகள், ஒரு மனிதன், ஏன் ஒரு யானை கூட இங்கே இருக்கிறது என்றால் – முதல் பதிவை கூர்ந்து கவனிக்க தவறியவர்கள் – நம்பமுடியுமா. கூடவே எங்கும் நீந்தும் மீன்கள் வேறு

கட்டம் கட்டி காட்டுகிறேன் – இப்போது தெரிகிறதா ?

சரி, சென்ற பதிவை போலவே, மற்ற இடங்களில் வண்ணம் இல்லாமல் இதோ

இப்போது தெரிகின்றனவா ? மேலே, இடது பக்கம், ஒரு பறவை கண் தெரிகிறதா ?

வலது பக்கம் ஒரு மீன் ?

அடுத்து இரு பறவைகள் மற்றும் மீன்கள்?

கோமணத்துடன் குளத்தில் இறங்கி பூக்களை பறிக்கும் வாலிபர் ?

கோட்டோவியம் இதோ !

வாலிபர் பறிக்கும் பூக்களில் ஒரு சுவாரசியமான விஷயம் இருக்கிறது. அதை முடிவில் பார்ப்போம், அடுத்து கம்பீர தந்தங்களை கொண்ட யானை.

அதனைச் சுற்றியும் மீன்களின் கூட்டம்

அடியிலும் இன்னும் நிறைய நீந்தும் மீன்கள்

நாம் கவனிக்க வேண்டிய விஷயம், குளத்தில் தாமரைப் பூக்களும் அல்லிப் பூக்களும் இருக்கின்றன. இவற்றை முறையே பறிக்கும் காட்சி அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது.


இரு மலர்களின் வேற்றுமையை மலர்களின் தண்டுகளில் காட்டியிருக்கிறான் ஓவியன். இதற்கு மீண்டும் ஒருமுறை மேலே இருக்கும் இரு மலர்களை அருகில் சென்று பார்ப்போம்.

இணையத்தில் கிடைத்த படங்கள் – தாமரை மற்றும் அல்லி மலர்களின் தண்டுகள்

அல்லித் தண்டு வழவழவென ஒரு மங்கையின் கரம் போல இருக்க, தாமரைத் தண்டோ முரடனின் கைகளை போல உள்ளன – பார்த்தீர்களா? இப்போது மீண்டும் ஓவியத்தை பாருங்கள்

என்ன அருமையான கலை – நமது ஓவியக்கலை !


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் மூன்று

கடந்த இரு பதிவுகளின் தொடர்ச்சியாய் இன்றும் நமது வாசகர்கள், முன் வரிசையில் அமர்ந்து, இந்த அற்புத ஓவியப் பயணத்தை நம்முடன் தொடர்கிறார்கள். இதுவரை பயணம் அருமையாக சென்றுக் கொண்டிருக்கிறது. காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் ராஜசிம்மன் காலத்து அரிய சோமஸ்கந்தர் ஓவியத்தின் சிதைந்த பகுதிகள் கொண்டு முழு ஓவியத்தையும் தீட்டும் நமது முயற்சி இன்றும் தொடர்கிறது.

இந்த ஓவியத்தின் நடு நாயகனான ஈசன் மீது முதலில் நாம் கவனம் செலுத்துவோம்.

அடுத்து உமை

உமையின் வடிவத்தை ஓவியத்தில் உற்றுப் பார்க்கும் பொது, அம்மை மஞ்சள் நிற மேலாடை அணிந்திருப்பது போல தெரிந்தது. மஞ்சள் பூசி உள்ளாரோ அல்லது மஞ்சள் நிற கச்சை அணித்து இருக்கிறாரோ ?

ஓவியத்திற்கு இப்போது வண்ணம் தீட்டுகிறோம். முதலில் மெல்லிய வண்ணம். உடல் வண்ணங்கள்.

மகேசன் வண்ணம் பெறுகிறார், நீலகண்டர் ஆயிற்றே !

உமை இன்னும் வண்ணம் ஏற்றி அழகு பெறுகிறார்.

அம்மை அப்பன் எப்படி ஒன்றாக அழகுபட காட்சி அளிக்க ஆரம்பிக்கின்றனர்.

கேயுரம் எனப்படும் மேல் கை பட்டை, மற்ற ஆபரணங்கள் என்று இன்னும் ஜொலிக்க ஆரம்பிக்கயார் மகேசன் .

ஆசனம், கணம் , தோழி என்று அனைவரும் வண்ணம் பூசப்படுகின்றனர்.

முடியும் தருவாயில், மீண்டும் ஒரு முறை நாம் எதையாவது விட்டு விட்டோமோ என்று ஓவியத்துடன் ஒத்துப் பார்க்கிறோம்.

அடடே, நான்முகனின் அஞ்சலி ஹஸ்தம் சரி செய்ய மறந்துவிட்டோமே.

ஈசனின் கை முத்திரைகள் சில சரியாக தெரியவில்லை, அதைப் பற்றி படிக்க, நாம் சோமஸ்கந்தர் பற்றி தொடரை ஆரம்பிக்க காரணமான திரு கிப்ட் சிரோமனி அவர்களது 1971 ஆம் ஆண்டு குறிப்பை மீண்டும் சென்று படித்தேன்

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_somaskanda.htm

சோமஸ்கந்தர் வடிவம் பற்றி அவர் சொல்லும்போது ராஜசிம்மன் காலத்திற்கு முந்தைய சோமஸ்கந்தர் கல் சிற்பம் பற்றி இவ்வாறு விவரிக்கிறார். ” சிவனின் நான்கு கைகளில், மேல் வலது கையில் ஒரு பாம்பை பிடித்து இருக்கிறார் ”

ராஜசிம்மன் காலத்து சோமஸ்கந்தர் வடிவத்தில் அவர் குறிப்பாக இந்த பாம்பை பற்றி ஒன்றும் கூறவில்லை. எனினும் பாம்பு கண்ணில் தென்படுகிறதா என்று தேடிப் பார்த்தோம்.

மேல் வலது கையில் ஒன்றும் தெரியவில்லை , ஆனால் கீழ் வலது கையின் அருகில்

படம் எடுத்து ஆடும் பாம்பு தெரிகிறதா ?

அத்துடன் நமது இந்த பயணம் முடிவுக்கு வருகிறது, மீண்டும் ஒரு முறை நாம் ரசிக்கும் வண்ணம் சலிக்காமல் வரைந்த ஓவியர் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்களையும், சரியான தருணத்தில் நல்ல படங்களை தந்து உதவிய இளம் நண்பர் திரு ஜகதீஷ் அவர்களையும் வாழ்த்தி , முடிவு பெற்ற ஓவியத்தை படைக்கிறேன்.

இந்த ஓவியப் பயணம் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். உங்கள் உற்சாக வரவேற்புடன் இன்னும் பல பணிகளை இது போலவே எடுத்து நிறைவேற்ற முயற்சிக்கிறோம்.இது ஒரு முயற்சி தான், பிழைகள், தவறுகள் ஏதேனும் இருந்தால் முதலில் மன்னிக்கவும் , பிறகு கண்டிப்பாக எடுத்துக் கூறவும்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் இரண்டு

முதல் பாகத்தை படித்து பலரும் அனுப்பிய நல்ல மறுமொழிகள் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. யாருமே சென்று காணாத இந்த பல்லவர் கால சுவர் ஓவியங்கள் இன்று புத்துயிர் பெற்று நம்முடன் பேசுவது போன்ற உணர்ச்சி பெறுகிறோம். இந்த பயணத்தில் நானும் ஓவியர் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்களும் பல புதிய விஷயங்களை தெரிந்துக்கொண்டோம். அதை அப்படியே உங்களுடன் பகிர்கின்றோம்.

நண்பர் திரு ஜகதீஷ், அவருக்கு மீண்டும் ஒரு நன்றி. அவர் தந்த படங்கள் எங்களுக்கு எந்த அளவிற்கு உதவியாக இருந்தது எனபது இந்த பதிவை படித்து முடித்தவுடன் புரியும். தக்க சமயத்தில் உதவினார் இந்த பதினோராவது வகுப்ப மாணவன்.

சென்ற பதிவில், படத்தில் யார் யார் இருக்கின்றனர், எங்கெங்கே என்று குறித்து விவரித்தோம் நாங்கள், இன்னும் அருகில் சென்று ஒவ்வொரு சிறு குறிப்புகளையும் பார்த்தோம். பூத கணம், எங்குமே முழுமையாக தெரியவில்லை. கொஞ்சம் கற்பனைத் திறனை கலந்து வரைந்து முடித்து விட்டார் ஓவியர்.

அருகில் இருக்கும் தோழி அப்படி அல்ல. நல்ல படம் இருந்தது, மேலே உமையின் ஆடையில் இருக்கும் வேலைப்பாடு கூட கிடைத்தது.


அடுத்து இருவருக்கும் நடுவில் ஏதாவது இருக்குமோ.அனைத்து ஓவியங்களிலும் இந்த பகுதியில் சிதைந்து விட்டது ( மொத்தம் நான்கு சுவர் ஓவியங்களை வைத்து நாம் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம் ) . சோமஸ்கந்தர் பற்றிய நமது தொடரை வாசிக்கும் நண்பர்கள், பொதுவாக சோமஸ்கந்தர் வடிவங்களில் தரையில் ஒரு கூஜா இருப்பதை கவனித்து இருப்பார்கள். இதோ இந்த மலை கடற்கரை கோயில் வடிவம் போல

அதனால் அதை நமது ஓவியத்திலும் போட்டுவிட்டோம்.

அடுத்து பிரம்மா. ஒரே ஒரு ஓவியத்தில் மட்டும், அவரது உருவம் தெரிகிறது. ( இரு கைகளையும் கூப்பி அஞ்சலி முத்திரையில் அவரை காட்டவேண்டும். மூன்றாம் பாகத்தில் திருத்தி விடுவோம் )

எப்படி அவரது மற்ற முகங்களை காட்டுவது என்று யோசிக்க, புள்ளமங்கை பிரம்மா நினைவுக்கு வந்தார்.
.

அவரை முன்மாதிரியாக வாய்த்த இந்த பிரம்மன் படத்தை வரைந்தாயிற்று.

விஷ்ணு உருவத்திற்கு இந்த நிலை இல்லை. ஒரு ஓவியத்தில் மிகவும் நல்ல நிலையில் இருப்பதால் எங்கள் பணி எளிதாயிற்று.

அடுத்து குழந்தை முருகன்.

முருகன் – அழகன். அதுவும் குழந்தை முருகன் என்றால் !! சரியாக வரவேண்டுமே.

அருகில் சென்று படங்களை பார்க்கும் பொது தான் நாங்கள் முதலில் நினைத்ததைப் போல ஆசனத்தின் கால்களில் சிங்க வடிவங்கள் இல்லை என்பது தெரிந்தது.

அடுத்து உமை.


ஈசன், இந்த வடிவத்தின் நடு நாயகன் – மிகவும் நேர்த்தியாக வரவேண்டும் என்பதால், இன்னும் கவனமாக படங்களை ஆராய்ந்தோம். குறிப்பாக அவர் கை முத்திரைகள். ( ஒரு குறிப்பு மிகவும் உதவியாக இருந்தது – அது என்ன வென்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்) . இடது மேல் கரம் இங்கே பாருங்கள்.

ஈசனின் மகுடம். நிறைய வேலைப்பாடுடன் இருந்ததால் மிகவும் கடினமாக இருந்தது.

குறிப்பாக மகுடத்தில் உள்ள ஒரு அணிகலன். இதுவரை நாங்கள் பார்க்காததாக இருந்தது. எனினும் அந்த வடிவம் நாம் முன்னரே எங்கோ பார்த்த வடிவம். அப்போது திரு நாகசாமி அவரது செப்புத்திருமேனி (Masterpieces of South Indian Bronzes)நூலில் ஒரு குறிப்பு கிடைத்தது. பல்லவர் கால செப்ப்புத்திருமேனி ஒன்றில் இரு மகர ஒப்பனை கொண்டு இந்த அணிகலன் உள்ளது என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

ஆம், அதே நம் ஓவியத்திலும்.


இப்போது ஒரு அளவிற்கு நமது ஓவியம் வந்து விட்டது. இன்னும் சிறு சிறு அமைப்புகளை சரி செய்து வண்ணம் பூசினால் முடிந்து விடும்.

அதற்கு, அடுத்த இறுதிப் பதிவு விரைவில் பார்ப்போம்.